பட மூலாதாரம், Aman
-
- எழுதியவர், அமன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள அவத் நவாப் முகமது அலி ஷாவால் கட்டப்பட்ட கட்டடத்திற்கு, அவரது வம்சாவளியைச் சேர்ந்த 90 வயதான ஃபயாஸ் அலி கான் வருகிறார்.
வெள்ளை நிற குர்தா அணிந்திருக்கும் ஃபயாஸ் அலி கான், தனக்கு பாத்தியப்பட்ட ஒன்பது ரூபாய் எழுபது காசு ஓய்வூதியத்தைப் பெற இங்கு வந்துள்ளார். வயது மூப்பால் தளர்ந்திருக்கும் அவர், நடக்க சிரமப்படுகிறார், கைகள் நடுங்குகின்றன, ஆனால் அவரது கண்கள் பிரகாசமாக ஒளிர்கின்றன.
வசீகா என அறியப்படும் இந்த ஓய்வூதியமானது, அவத் நவாப்களுடன் தொடர்புடையவர்களுக்கு வழங்கப்படுகிறது. பாரசீக மொழியிலிருந்து வந்த வசீகா என்ற சொல்லின் பொருள், ‘எழுதப்பட்ட ஒப்பந்தம்’.
நவாபின் பரம்பரையினருக்கு வசீகாவின் படி ஓய்வூதியம் கொடுக்கும் இந்த பாரம்பரியம் நவாப்களுக்கும் கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையிலான ஒப்பந்தங்களிலிருந்து உருவானதாகும்.
மிகக் குறைந்த அளவிலான இந்த ஓய்வூதியம் ஏன் இன்றும் அவத் நவாப்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படுகிறது? அதன் பின்னணியைத் தெரிந்துக் கொள்வோம்.
இந்தியாவை ஆண்ட கிழக்கிந்திய கம்பெனிக்கு அவத் நவாப்கள் அவ்வப்போது கடன் கொடுத்தனர் மற்றும் பணத்தை டெபாசிட் செய்தனர். அதில் கிடைக்கும் வட்டி அவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கிழக்கிந்திய கம்பெனியுடன் அவர்கள் ஒப்பந்தம் செய்துக் கொண்டனர்.
1857-ஆம் ஆண்டு நடைபெற்ற போரைத் தொடர்ந்து, 1874-இல் கிழக்கிந்திய கம்பெனி கலைக்கப்பட்டது. அதற்கு ஏழு தசாப்தங்களுக்குப் பிறகு, 1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்றது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியபோதிலும், ஓய்வூதியம் வழங்கும் இந்த பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது.
அவத் தவிர, கேரளா, ராஜஸ்தான் போன்ற நாட்டின் வேறு சில பகுதிகளில், முன்னாள் சமஸ்தானங்களுடன் தொடர்புடைய குடும்பங்கள் இன்றும் இத்தகைய ஓய்வூதியங்களைப் பெற்று வருகின்றன.
பட மூலாதாரம், Aman
ஓய்வூதிய பாரம்பரியம் மற்றும் அதன் ஆரம்ப கட்டங்கள்
அரச குடும்பத்தைச் சேர்ந்த ஃபயாஸ் அலி கான், 13 மாதங்களுக்குப் பிறகு தனது ஓய்வூதியத்தை பெற வந்துள்ளார், எனவே அவருக்கு மொத்தமாக 130 ரூபாய் ஓய்வூதியம் கிடைத்துள்ளது.
“எங்கள் கொள்ளுத் தாத்தா, கொள்ளு பாட்டி காலத்திலிருந்தே இந்த ஓய்வூதியத்தை நாங்கள் பெற்று வருகிறோம். ஓய்வூதியத் தொகை மிகவும் குறைவாக இருப்பதால், அதனைப் பெற வருடத்திற்கு ஒருமுறை தான் வருகிறேன்” என அவர் கூறுகிறார்.
வயது முதிர்ச்சி காரணமாக ஃபயாஸ் தனியாக வர முடியாது. அவரது மகன் ஷிகோஹ் ஆசாத் அவரை அழைத்துச் சென்றுள்ளார்.
“வருத்தமான விஷயம் என்னவென்றால், ஹுசைனாபாத் அறக்கட்டளையிலிருந்து ரூ.9.70 பெறுவதற்காக காரில் அப்பாவை அழைத்து வர வேண்டியுள்ளது. பெட்ரோலுக்கு மட்டும் 500 ரூபாய் செலவாகிறது. ஓய்வூதியத் தொகையை அதிகரித்துக் கொடுக்குமாறு பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம், ஆனால் எங்கள் கோரிக்கையை இதுவரை ஏற்கப்படவில்லை” என்று ஷிகோஹ் கூறுகிறார்.
ஓய்வூதியம் விநியோகிக்கும் நடைமுறை 1817-இல் தொடங்கியது. இது பற்றி வரலாற்றாசிரியர் முனைவர் ரோஷன் தகீ விளக்குகிறார், “அவாத் நவாப் ஷுஜா-உத்-தௌலாவின் மனைவி பஹு பேகம், தனது உறவினர்களுக்கும் அவருடன் தொடர்புடையவர்களுக்கும் மாதாந்திர ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், கிழக்கிந்திய கம்பெனிக்கு இரண்டு தவணைகளில் சுமார் நான்கு கோடி ரூபாய் வழங்கினார்” இது அறங்காவலரின் உயில் (Trustee’s will) என்று அழைக்கப்படுகிறது.
“சுதந்திரத்தின் போது, பஹு பேகம் கொல்கத்தா ரிசர்வ் வங்கியில் சுமார் 30 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்திருந்தார். இந்தத் தொகை முதலில் கான்பூர் ரிசர்வ் வங்கிக்கு மாற்றப்பட்டது, இப்போது தோராயமாக 26 லட்சம் ரூபாய் லக்னோ சிண்டிகேட் வங்கியில் உள்ளது. இதன் வட்டியில் இருந்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது” என்று உத்தரபிரதேச அரசாங்கத்தின் உயில் அதிகாரியான எஸ்.பி. திவாரி தெரிவித்தார்.
பட மூலாதாரம், Aman
நவாப்களின் கடன்களும் தற்போதைய அமைப்பும்
பஹூ பேகத்திற்குப் பிறகும் கூட, நவாப்கள் வெவ்வேறு காலங்களில் கிழக்கிந்திய கம்பெனிக்கு கடன்களை வழங்கினார்கள்.
“நவாப் வஜீர் காஜியுதீன் ஹைதர் மற்றும் அவரது மகன் நவாப் நசிருதீன் ஹைதர் ஆகியோர் கிழக்கிந்திய கம்பெனிக்கு தோராயமாக நான்கு கோடி ரூபாயை ‘நிரந்தரக் கடன்’ (Perpetual Loan) என்ற பிரிவில் வழங்கினார். இதன் பொருள் உண்மையான தொகை ஒருபோதும் திரும்பப் பெறப்படாது, ஆனால் அதன் வட்டி அவர்களின் வாரிசுகளுக்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கும் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து செலுத்தப்படும்” என்று வரலாற்றாசிரியர் முனைவர் ரோஷன் தகீ கூறுகிறார்.
வசீகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஓய்வூதிய கையேட்டின்படி, நசிருதீன் ஹைதரின் வாரிசு மன்னர் முகமது அலி ஷா, பிரிட்டிஷ் கருவூலத்திற்கு 12 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்திருந்தார்.
சுதந்திரத்திற்குப் பிறகும் கூட, லக்னோவில் சுமார் 1,200 பேர் இன்னும் ஓய்வூதியங்களைப் பெற்று வருகின்றனர். இதற்காக லக்னோவில் உள்ள பிக்சர் கேலரி என்ற இடத்தில் இரண்டு அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன: அதில் ஒன்று ஹுசைனாபாத் அறக்கட்டளைக்கு உரியது. மற்றொன்றில் உத்தரபிரதேச அரசாங்கத்தின் நவாப்களுக்கான ஓய்வூதியத் துறை இயங்குகிறது.
அரசு அலுவலகத்திலிருந்து வரும் ஓய்வூதியங்கள் இப்போது நேரடியாக வங்கிக் கணக்குகளுக்கு ஆன்லைனில் அனுப்பப்படுகின்றன. ஆனால், ஹுசைனாபாத் அறக்கட்டளை ஓய்வூதியத்தை ரொக்கமாக செலுத்தும் பாரம்பரியத்தைத் தொடர்கிறது. இரண்டு அலுவலகங்களும் சேர்ந்து, ஆண்டுதோறும் சுமார் 5,60,000 ரூபாய் மதிப்புள்ள ஓய்வூதியத் தொகையை விநியோகிக்கின்றன.
பட மூலாதாரம், Aman
இரண்டு அலுவலகங்களில் இருந்தும் ஓய்வூதியம் பெறுபவர்களும் பலர் இருக்கின்றனர், ஆனால் மொத்தத் தொகை ஒருவருக்கு பத்து ரூபாய் கூட இருக்காது. வழக்கறிஞரான ஷாஹித் அலி கானின் தாத்தா, நவாப் முகமது அலி ஷாவின் அமைச்சராக இருந்தவர்.
“எனக்கு கிடைக்கும் இரண்டு ஓய்வூதியங்களில் ஒன்று காலாண்டிற்கு 4.80 ரூபாய், மற்றொன்று மாதந்தோறும் 3.21 ரூபாய் மதிப்புள்ளது” என்று ஷாஹித் கூறுகிறார்.
இவ்வளவு சிறிய தொகையை பெறுவது பற்றி கூறும் ஷாஹித், “இந்த ஓய்வூதியத்தை பணத்தால் அளவிட முடியாது, அது கோடிக்கணக்கான ரூபாய்கள் கொட்டிக் கொடுத்தாலும் அதற்கு ஈடாகாத எங்களுடைய அடையாளம். இங்கு ஒரு சிலருக்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது.”
ஓய்வூதியத் தொகை சிறியதாக இருந்தாலும், அதை நவாப்களின் சின்னமாகவும் கௌரவமாகவும் கருதுவதால், வாரிசுகள் அதைப் பெற வருகிறார்கள்.
ஷாஹித் ஓய்வூதியத்தை வரப்பிரசாதம் என நினைக்கிறார். “நான் வருடத்திற்கு ஒரு முறை, முஹர்ரமுக்கு பதினைந்து முதல் இருபது நாட்களுக்கு முன்பு ஓய்வூதியத்தை பெற வருகிறேன். கிடைக்கும் ஓய்வூதியப் பணத்தை முஹர்ரமுக்குப் பயன்படுத்திக் கொள்கிறேன். ஏனெனில், அவ்வப்போது வந்து பணத்தை வாங்கினால், அதனை செலவிட்டு விடுவோம். வேறு எதற்கும் இந்தத் தொகையிலிருந்து ஒற்றை காசு செலவளித்தாலும், நான் குற்றவாளியாகிவிடுவேன்” என ஷாஹித் கருதுகிறார்.
“ஓய்வூதியத் தொகை, எங்களுடைய எந்த செலவுக்கும் போதாது. வீட்டுச் செலவுக்கோ, ஏன், குழந்தைகளுக்கு செலவுக்கு கொடுக்கக்கூட போதாது. ஆனால் எங்கள் மூதாதையர்கள் இங்கு ஆட்சி செய்தார்கள் என்பது எங்களுக்கு பெருமை கொடுக்கும் விஷயம். ஓய்வூதியமாக ஒற்றை காசு கிடைப்பதாக இருந்தாலும், அதற்கு ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியிருந்தாலும் சரி, நாங்கள் வந்து பெற்றுக் கொள்வோம்” என்று ஷிகோஹ் ஆசாத் கூறுகிறார்.
நவாப்களின் வாரிசுகளுக்கான ஓய்வூதியத்தைப் பெற வெளிநாட்டிலிருந்தும் பலர் வருகிறார்கள். “என்னுடைய உறவினர் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்து, இரண்டு வருடங்களுக்கான ஓய்வூதியத்தை ஒன்றாக பெற்றுச் சென்றார்” என்கிறார் ஷிகோஹ். “அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலிருந்தும் ஓய்வூதியத்தைப் பெறுவதற்காக பலர் வருகின்றனர்.”
ஓய்வூதியம் பெறும் பலர் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இல்லை. முகமது அலி ஷாவின் வாரிசு என்று கூறிக் கொள்ளும் எழுபது வயதான எஜாஸ் ஆகா, “எங்களிடம் பல உயில்கள் இருந்தன, ஆனால் கஷ்டத்தில் இருந்தபோது, அவற்றில் சிலவற்றை உறவினர்களுக்கு விற்றுவிட்டோம். இப்போது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பத்தொன்பது ரூபாய் எண்பது காசு மதிப்புள்ள ஓய்வூதியம் மட்டுமே எங்களுக்குக் கிடைக்கிறது, அதை நாங்கள் காணிக்கைகளுக்குப் பயன்படுத்துகிறோம்” என்று கூறுகிறார்.
பரம்பரை அடையாளம்
பட மூலாதாரம், Aman
குறைந்துவரும் ஓய்வூதியத் தொகை, குறையும் ஆர்வம்
ஓய்வூதியம் இவ்வளவு குறைவாக இருப்பதற்கான காரணத்தை வரலாற்றாசிரியர் முனைவர் ரோஷன் தகீ உதாரணத்துடன் விளக்குகிறார்.
“ஒரு நவாப் ஐநூறு ரூபாய் ஓய்வூதியம் பெறுபவராக இருந்தார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு ஐந்து மகன்கள் இருந்தால், நவாப் இறந்த பிறகு, அந்த ஓய்வூதியம் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் நூறு ரூபாய் கிடைக்கும். இந்த வழியில் ஓய்வூதியத் தொகை என்பது தலைமுறை தலைமுறையாகக் குறைந்து கொண்டே வந்தது. ஆறாவது-ஏழாவது தலைமுறைக்குள், சிலருக்கு ஐந்து ரூபாய் என்றால், சிலருக்கு பத்து ரூபாய் என ஓய்வூதியத்தொகை குறைந்துவிட்டது. இரண்டாவது காரணம், முன்பு கால் கிலோ அளவிலான வெள்ளி நாணயங்களில் வழங்கப்பட்ட ஓய்வூதியத்திற்குப் பதிலாக ரூபாயில் ஓய்வூதியம் கொடுக்கத் தொடங்கியபோது, தொகை கணிசமாகக் குறைந்துவிட்டது.”
“நவாப்களின் காலத்திலிருந்தே நான்கு சதவீத வட்டியில்தான் ஓய்வூதியம் பெற்று வருகிறோம், ஆனால் தற்போது வங்கி வட்டி கணிசமாக அதிகரித்துள்ளது” என்று ஃபயாஸ் அலி கான் கூறுகிறார்.
ஓய்வூதியத் தொகையின் மதிப்பு குறைவாக இருப்பது குறித்து தற்போது குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. ஷாஹித் அலி கான் கூறுகையில், “ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டுமென போராட்டம் நடந்து வருகிறது. இந்த விஷயத்தில் தனிப்பட்ட முறையில் நான் உயர் நீதிமன்றத்திற்குச் செல்கிறேன். ஏன் முன்புபோல் வெள்ளி நாணயங்களில் ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை என்பது குறித்த வாதத்தை நாங்கள் முன்வைப்போம். வெள்ளியில் வழங்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் அந்தத் தொகையை தற்போதைய வெள்ளியின் விலைக்கு சமமாக வழங்க வேண்டும்.”
சுமார் 170 ஆண்டுகளுக்குப் பிறகும், ஓய்வூதியம் அவத் நவாப்களுக்கு இன்னும் விநியோகிக்கப்படுகிறது, ஆனால் அதற்கான ஆர்வம் குறைந்துவிட்டது. மசூத் அப்துல்லாவின் குடும்பத்தினர் பழைய நாட்களை நினைவு கூர்கின்றனர். “முன்னர், ஓய்வூதியம் பெற வருவதே கோலாகலமாக இருக்கும். ஒரு கண்காட்சி நடப்பது போல் இருந்தது. பல்வேறு வகையான சர்பத்கள் விற்கப்பட்டன. கோடையில், பல்வேறு பழங்களின் ஜூஸ் மற்றும் தர்பூசணி சர்பத் கிடைக்கும். குளிர்காலத்தில், காஷ்மீரி தேநீர் கிடைத்தது. ஓய்வூதியம் பெறுபவர்கள், குதிரை வண்டி, டோங்கா என பல்வேறு வாகனங்களில் வருவார்கள். அந்த காலத்தில் நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, முக்காடு போட்ட பெண்களுக்காக, ரிக்ஷாக்கள், டோங்காக்கள் என பல்வேறு வாகனங்களில் திரைச்சீலைகள் கட்டப்பட்டிருக்கும், இப்போது அப்படி இல்லை.”
பழைய காலங்களை நினைவு கூர்ந்து ஃபயாஸ் அலி கூறுகிறார், “முன்பு ஓய்வூதியம் விநியோகிக்கும் இடம் கண்காட்சித் திடல் போல இருந்தது என்று என் தந்தை கூறுவார். பல்வேறு வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படும், அது ஒரு சந்தை போல இருந்தது. உணவு மற்றும் பானங்கள் கிடைத்தன, நூற்றுக்கணக்கான ஓய்வூதியக்காரர்கள்,பிக்சர் கேலரியில் கூடுவார்கள். இப்போது அந்த சூழல் மாறிவிட்டது.”
இன்றும் அரசாங்கம் நவாப்களுக்கான ஓய்வூதியத்தை விநியோகிப்பது குறித்து உத்தரபிரதேச சிறுபான்மை நலத்துறை அமைச்சர் தானிஷ் அன்சாரி இவ்வாறு கூறுகிறார். “அவாத் நவாப்களின் காலத்திலிருந்தே ஓய்வூதிய பாரம்பரியம் தொடர்கிறது. இன்றும் கூட, நவாப் குடும்பத்துடன் தொடர்புடையவர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இதற்காக அரசாங்கத்திடம் கார்பஸ் நிதி ஒன்று உள்ளது, அரசாங்கத்தின் சில கொள்கைகளின்படி ஓய்வூதியங்கள் விநியோகிக்கப்படுகின்றன.”
சிலர் இதனை நிலப்பிரபுத்துவ சகாப்தத்தின் எஞ்சியிருக்கும் அடையாளமாகக் கருதி, இன்றைய காலகட்டத்தில் அவற்றுக்கு எந்தவித பொருளோ, பொருத்தமோ இல்லை என கருதுகின்றனர்.
ஆனால், ‘ஓய்வூதியம் என்பது வெறும் பணத்தைப் பற்றியது மட்டுமல்ல, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்குறுதியும், எளிதில் புறக்கணிக்க முடியாத மரியாதையும்’ என்று ஓய்வூதியத்தை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு