படக்குறிப்பு, இந்த நகையின் மதிப்பு சுமார் 19 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 17 லட்சம் ரூபாய்) இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.கட்டுரை தகவல்
நியூசிலாந்தில் வைர நகையைக் களவாட முற்பட்டபோது அதை வாயில் போட்டு விழுங்கிய நபரிடம் இருந்து நகை மீட்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஃபேபர்ஜி எக் லாக்கெட் எனப்படும் இந்த நகையின் மதிப்பு சுமார் 19,300 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 17 லட்சம் ரூபாய்) இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நகை இயற்கையான முறையில் மீட்கப்பட்டதாகவும் மருத்துவத் தலையீடு தேவைப்படவில்லை என்றும் காவல்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர்.
கடந்த வாரம் மத்திய ஆக்லாந்தில் உள்ள பேட்ரிஜ் ஜூவல்லர்ஸ் நகைக் கடையில் திருட முயன்ற 32 வயது நபரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். அப்போது அவர் தான் திருடிய அலங்காரப் பேழையை (locket) வாய்க்குள் போட்டு விழுங்கிவிட்டார்.
அந்த நகையில் 66 வெள்ளை வைரங்கள் மற்றும் 15 நீலமணிக் கற்கள் இடம்பெற்றிருந்ததாக நகை தயாரிப்பாளரின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் 18 கேரட் தங்கத்தால் ஆன மினியேச்சர் ஆக்டோபஸ் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அவர் மீது திருட முயன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவு, அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
“அவர் போலீஸ் காவலில் இருப்பதால் அவரைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது,” என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நகையின் பெயரான ஆக்டோபசி எக், 1983ஆம் ஆண்டு அதே பெயரில் வெளியான ஜேம்ஸ் பாண்ட் படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு வைக்கப்பட்டுள்ளது. அந்தப் படம், ஃபேபர்ஜி எக் திருட்டை மையமாக வைத்துதான் எடுக்கப்பட்டிருக்கும்.
உலக அளவில் பிரபலமான ஃபேபர்ஜி ஜூவல்லர்ஸ் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவில் தோற்றுவிக்கப்பட்டது.
ரத்தினங்கள் மற்றும் மதிப்புமிக்க உலோகங்களால் செய்யப்பட்ட முட்டை வடிவிலான நகைகளுக்கு இவை பிரபலமானவை.
அந்த அலங்காரப் பேழை, ஃபேபர்ஜிக்கு திருப்பி அனுப்பப்படும் என பேட்ரிஜ் ஜூவல்லர்ஸ் தெரிவித்துள்ளதாக ரேடியோ நியூசிலாந்து செய்தி கூறுகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் டிசம்பர் 8ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார்.
இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரிகை பிபிசி பார்வையிட்டது. அதன்படி, அவர் அதே நகைக் கடையில் நவம்பர் 12ஆம் தேதி ஐ-பேட் ஒன்றைத் திருடியதாகவும் மற்றுமோர் இடத்தில் 100 நியூசிலாந்து டாலர் மதிப்பிலான பொருட்களைத் திருடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.