• Fri. Jan 31st, 2025

24×7 Live News

Apdin News

ரூ.20-க்கு சிக்கன் பிரியாணி விற்கும் கடை – உணவு பாதுகாப்புத் துறை திடீர் சோதனை | Food Safety Department sudden inspection in 20rs biryani shop at thoothukudi

Byadmin

Jan 29, 2025


தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.20-க்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், அதன் தரம் குறித்து உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை நடத்தினர். தூத்துக்குடி நகரில் உள்ள ஒரு கடையில் ரூ.20-க்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு விற்பனை செய்யப்படும் பிரியாணியின் தரத்தை பரிசோதனை செய்ய வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறைக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ச.மாரியப்பன் தலைமையில், அந்த துறை அலுவலர்கள், தூத்துக்குடி டேவிஸ்புரம் பகுதியில் உள்ள 20 ரூபாய் பிரியாணி கடையின் தயாரிப்புக் கூடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வில், பிரியாணிக்குப் பயன்படுத்திய கோழி இறைச்சியில் எந்தவிதமான துர்நாற்றங்களோ, வேற எவ்விதமான இயல்புக்கு புறம்பான அம்சங்களோ கண்டறியப்படவில்லை. இருப்பினும், அதிலிருந்து உணவு மாதிரி எடுத்து, பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தயாரிக்கப்பட்ட பிரியாணியும் மாதிரி எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உணவு பகுப்பாய்வு அறிக்கை பெறப்பட்டவுடன் தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்தார்.

அதேவேளையில், உணவு தயாரிப்புக்கூடம் மிகவும் அசுத்தமாகவும், சமைக்கும் பகுதியில் பூனை, நாய் போன்ற பிராணிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்ததாலும், வாங்கிய மூலப்பொருட்கள் மற்றும் விற்பனை செய்த உணவுப் பொருட்களுக்கு உரிய பில்கள் இல்லாததாலும், உணவு பகுப்பாய்வு அறிக்கைகள் இல்லாததாலும், சமையலறை பாதுகாப்பற்று இருப்பதாலும், பொது சுகாதார நலனை முன்னிறுத்தி, அந்த உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமைத்தை இடைக்கால ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டு, அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உணவு தயாரிப்புக் கூடத்தை சீர் செய்ய முன்னேற்ற அறிவிப்பு வழங்கப்பட்டு, அவற்றை சரி செய்த பின்னர் சம்பந்தப் பட்ட வணிகருக்கு உணவகத்தை இயக்க அனுமதி வழங்கப்படும். மேலும், பிரியாணி பொட்டலத்தில் சிக்கன் துண்டுகள் சிதைந்த துகள்களாக இருப்பதால், ‘சிக்கன் பிரியாணி’ என்ற வாசகம் நுகர்வோரைத் தவறாக வழிநடத்தும் என்பதால், இதுகுறித்தும், இக்கடைக்கு சிக்கன் விற்பனை செய்த நிறுவனத்திடமும் விசாரணை மேற்கொண்டு, தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அலுவலக வாட்ஸ்அப் எண்ணுக்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ பொது மக்கள் புகார் அளிக்கலாம் என மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்துள்ளார்.



By admin