சென்னை: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் 13 திட்டப் பகுதிகளில் ரூ.586.94 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கைலாசபுரம், மீனவர் குடியிருப்பு, செட்டித் தோட்டம் மற்றும் மீனாம்பாள் சிவராஜ் நகர் ஆகிய திட்டப் பகுதிகளின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 13 திட்டப் பகுதிகளில் ரூ.586.94 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்துவைக்க உள்ளார்.
இந்த குடியிருப்புகளில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், மின் இணைப்பு, சாலை வசதிகள் என அனைத்தும் முடிக்கப்பட வேண்டும்; அவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். முதல்வர் திறந்து வைத்தவுடனே வீடுகளை மக்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்த பெரியோர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டோருக்கு முதல் மற்றும் 2-வது மாடிகளை ஒதுக்க வேண்டும்.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வாரியத்தால் கட்டப்பட்டு பழுதடைந்த குடியிருப்புகளை புனரமைக்கும் திட்டத்தின் கீழ், ரூ.152.57 கோடி மதிப்பில் 51 ஆயிரம் குடியிருப்புகளை புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு இதுவரை 30,387 குடியிருப்புகள் பழுதுபார்த்து, புனரமைப்பு செய்து, புதுப்பொலிவு பெற்றுள்ளன. 20,613 குடியிருப்புகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு 2025-26-ல் ரூ.280 கோடி மதிப்பீட்டில் 137 திட்டப் பகுதிகளில் உள்ள 76,549 குடியிருப்புகளை பழுது நீக்கி, புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அனைவருக்கும் வீடு திட்டத்தில், 2014-2021 வரை ரூ.2,438 கோடி மதிப்பில் 27,668 குடியிருப்புகள் மட்டுமே கட்டப்பட்டன. ஆனால், 4 ஆண்டு திமுக ஆட்சியில் ரூ.5,343.16 கோடி மதிப்பில். 46,929 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் அன்சுல் மிஸ்ரா, இணை மேலாண்மை இயக்குநர் க.விஜயகார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.