0
பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தி ராஜா சாப் ‘ எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இயக்குநர் மாருதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி ராஜா சாப்’ எனும் திரைப்படத்தில் பிரபாஸ் , சஞ்சய் தத், பொமன் இரானி, நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரீத்தி குமார், ரோஹித், ஜரினா வஹாப், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். கொமடி ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி ஜி விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்கு பற்றினர்
படத்தைப் பற்றி நாயகனான பிரபாஸ் பேசுகையில், ” இந்தத் திரைப்படம்- பாட்டி பேரனுக்கு கதை சொல்லும் கதையாகும். ஹாரர் கொமடி திரைப்படமாக இருந்தாலும்.. உணர்வுபூர்வமான படமாகவும் இருக்கும் ” என்றார்.
இதனிடையே தமிழ் மொழியில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் முன்னோட்டம் – ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவதுடன், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.