படக்குறிப்பு, ரேகா குப்தா தலைநகர் டெல்லியின் 4வது பெண் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்
பாஜகவில் முதல்முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றுள்ள ரேகா குப்தா டெல்லியின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, ரேகா குப்தாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இவருடன் பர்வேஷ் வர்மா, ஆஷிஷ் சூத், மன்ஜிந்தர் சிங் சிர்ஸா, ரவிந்தர் இந்த்ரஜ், கபில் மிஸ்ரா, பங்கஜ் சிங் ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். பிரதமர் நரேந்திர மோதி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
ரேகா குப்தா டெல்லியின் நான்காவது பெண் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு முன்பு, சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித், ஆதிஷி ஆகியோர் டெல்லி முதல்வராகப் பதவி வகித்துள்ளனர்.
முன்னதாக பாரதிய ஜனதா கட்சியின் டெல்லி அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி சட்டமன்றக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு அவரது பெயர் அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் மேற்பார்வையாளராகப் பங்கேற்ற பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத், செய்தியாளர்கள் முன்னிலையில் ரேகா குப்தாவின் பெயரை அறிவித்து, “பிரவேஷ் வர்மா, சதீஷ் உபாத்யாய், விஜேந்திர குப்தா ஆகியோர் ரேகாவின் பெயரை முன்மொழிந்தனர். ஒன்பது பேர் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்” என்றார்.
“பிரதமர் நரேந்திர மோதி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, வீரேந்திர சச்தேவா, ரவிசங்கர் பிரசாத் மற்றும் கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள்” என்று ரேகா குப்தா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ரேகா குப்தாவின் பின்னணி
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ஷாலிமார் பாக் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் பந்தனா குமாரியை சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரேகா குப்தா தோற்கடித்தார்.
முன்னதாக, அதே சாலிமார் பாக் தொகுதியில், 2020இல் நடைபெற்ற தேர்தலில் ரேகா குப்தா சிறிய வாக்கு வித்தியாசத்தால் தோல்வியைத் தழுவியிருந்தார். மேலும் டெல்லி மாநகராட்சி கவுன்சிலராகவும், டெல்லி பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவராகவும் அவர் இருந்துள்ளார்.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, டெல்லி பல்கலைக்கழகத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ரேகா குப்தா, 1996ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் (DUSU) தலைவரானார்.
டெல்லி தேர்தல் வெற்றிக்குப் பிறகு, முதல்வர் பதவிக்கு விவாதிக்கப்பட்ட பெயர்களில் ரேகா குப்தாவின் பெயரும் இருந்தது.
பல ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ரேகா குப்தாவை முதல்வராக அறிவிப்பதன் மூலம், பாஜக பெண்களையும் வைஷ்ய சமூகத்தையும் ஈர்க்க முடியும்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய ரேகா குப்தா, 1996ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் (DUSU) தலைவரானார். பின்னர் 2007ஆம் ஆண்டில், டெல்லியின் பிதாம்புராவின் (வடக்கு) கவுன்சிலரானார்.
மேலும் டெல்லி பாஜக மகிளா மோர்ச்சாவின் பொதுச் செயலாளராகவும் ரேகா குப்தா இருந்துள்ளார். 2004 முதல் 2006 வரை, பாரதிய ஜனதா கட்சியின் யுவ மோர்ச்சாவின் தேசிய செயலாளராகவும் பதவி வகித்துள்ளார் ரேகா குப்தா.
தனிப்பட்ட வாழ்க்கை
பட மூலாதாரம், Rekha Gupta
படக்குறிப்பு, ரேகா குப்தா தனது கல்லூரி நாட்களில் எடுத்த இந்தப் புகைப்படத்தில், அவருடன் அல்கா லாம்பாவும் இருக்கிறார்.
கடந்த 1974ஆம் ஆண்டு ஹரியாணாவின் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள ஜூலானாவில் பிறந்த ரேகா குப்தா, தனது இளம் வயதிலேயே ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தில் (ஆர்.எஸ்.எஸ்) இணைந்துள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.காம் மற்றும் எல்.எல்.பி பட்டம் பெற்ற அவர், 1998ஆம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த மனிஷ் குப்தாவை மணந்தார்.
தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவரது அறிக்கையின்படி, 2023-24 நிதியாண்டில் ரேகா குப்தாவின் மொத்த வருமானம் ₹6,92,050 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே காலகட்டத்தில், அவரது கணவர் மணீஷ் குப்தாவின் வருமானம் ₹97,33,570 எனத் தெரிவித்துள்ளனர்.
வாழ்த்து தெரிவித்துள்ள பிற தலைவர்கள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், ரேகா குப்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லியின் முன்னாள் முதல்வர் ஆதிஷி ஆகியோர் ரேகா குப்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியின் இரு தலைவர்களும் டெல்லியின் வளர்ச்சிக்காக புதிய முதல்வருக்கு முழு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
அரவிந்த் கேஜ்ரிவால் தனது எக்ஸ் பக்கத்தில், “ரேகா குப்தா டெல்லி முதல்வராகப் பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகள். டெல்லி மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்.
டெல்லி மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்கான ஒவ்வொரு பணியிலும் நாங்கள் அவருக்கு ஆதரவளிப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, முதலமைச்சர் பதவிக்கான போட்டியாளர்களில் பிரவேஷ் வர்மாவின் (வலது) பெயரும் பரிசீலிக்கப்பட்டு வந்தது.
மேலும், “டெல்லியின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ரேகா குப்தாவுக்கு வாழ்த்துகள். டெல்லி ஒரு பெண்ணால் வழிநடத்தப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. டெல்லி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறேன். டெல்லியின் வளர்ச்சிக்கு ஆம் ஆத்மி கட்சியின் முழு ஆதரவையும் நீங்கள் பெறுவீர்கள்” என்று ஆதிஷி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“பெண்களின் மரியாதைக்கு பாஜக மிகப்பெரிய முன்னுரிமை அளிக்கிறது. சட்டமன்றத் தலைவராகவும், டெல்லி முதல்வராகவும் பொறுப்பேற்றதற்கு ரேகா குப்தாவுக்கு வாழ்த்துகள்” என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் திவாரி ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
அவருக்கு வாழ்த்து தெரிவித்த பாஜக எம்பி பன்சூரி ஸ்வராஜ், “சட்டமன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதற்கு ரேகாஜிக்கு வாழ்த்துகள். பிரதமரின் தலைமையில், ரேகா ஜி டெல்லியில் வளர்ச்சிக்கான ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்குவார் என்பதை நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.