ஆட்டத்தின் 88வது நிமிடம் அது. 2-3 என்ற கோல் கணக்கில் பின் தங்கியிருந்த அணிக்கு, பெனால்டி பாக்ஸ்க்கு வெளியே ஃபீரி கிக் வாய்ப்பு கிடைத்தது.
துளியும் தவறின்றிச் செயல்பட்டு தோல்வியைத் தவிர்க்க வேண்டிய கட்டாயம் அந்த வீரனிடம் இருந்தது.
ஆயிரக்கணக்கான ரசிகர்களின் இதயத் துடிப்பு அதிகரித்த அந்தத் தருணத்தில் ஆழ்ந்து மூச்சை இழுத்து விடுகிறான் அந்த வீரன்.
எதிரில் நிற்கும் ஆறு தடுப்பாட்ட வீரர்களையும் ஏமாற்றி வளைந்து சென்று, கோல் கீப்பரை கடந்து யாராலும் தொட முடியாதபடி அந்தப் பந்து வலைக்குள் நுழைந்து கோலானது.
அடுத்த நொடி ஓடிச்சென்று காற்றில் பறந்தபடி 180 டிகிரி சுற்றித் தரையிறங்கும்போது தனது இரண்டு கைகளையும் மேலிருந்து கீழே இறக்கி ஸ்பானிஷ் மொழியில் ‘ஷ்ஷியூ’ என்று சொல்லித் தனது கொண்டாட்டத்தை நிறைவு செய்த அந்தத் தருணம் நவீன கால்பந்து தருணங்களில் முக்கியமானவற்றில் ஒன்று. இது ஆதிக்கம் மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்று கால்பந்து வர்ணனையாளர்கள் கூறுவார்கள்.
ஸ்பெயின் அணிக்கு எதிராக அந்த கோலை அடித்தவர், போர்ச்சுகல் அணியின் கேப்டனும், முன்கள ஆட்டக்காரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ.
கடந்த 2018ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அடித்த அந்த கோல், ரொனால்டோவின் கிளாசிக் கோல்களில் ஒன்று.
‘GOAT’ போட்டி
ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 5ஆம் தேதி போர்ச்சுகல் வீரர் ரொனால்டோவின் பிறந்த நாளின்போதும், ஜூன் 24ஆம் தேதி அர்ஜென்டினா வீரர் லியோனெல் மெஸ்ஸி பிறந்த நாளின்போதும் சமூக ஊடகங்களில் முக்கியமான ஒரு விவாதம் கிளம்பும்.
கால்பந்து உலகில் தற்போது விளையாடி வரும் முக்கியமான இந்த இரண்டு வீரர்களில் யார் சிறந்த வீரர் என்பதுதான் அந்த விவாதம். கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்(GOAT – Greatest of All of Time) யார் என்பதை இருவரது ரசிகர்களும் புள்ளி விவரங்களை முன்வைத்து விவாதம் செய்வார்கள்.
கேரளாவை சேர்ந்த ஜோஸ் மேத்யூவுக்கு, ரொனால்டோதான் ‘கோட்’. “முன்கள ஆட்டக்காரரான ரொனால்டோதான் உலகிலேயே 923 கோல் அடித்து இன்னும் விளையாடி வரும் ஒரே வீரர். அதனால் அவரைவிடச் சிறந்த கால்பந்து வீரர் யாரும் இல்லை” என்கிறார் அவர்.
ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மெஸ்ஸி ரசிகரான தாரிணி, இதற்குப் பதிலடி கொடுக்கும் தரவுகளை முன்வைக்கிறார்.
“ரொனால்டோவுக்கு அடுத்தபடியாக தேசிய அணிக்காகவும், கிளப் அணிகளுக்காகவும் விளையாடி மெஸ்ஸி 850 கோல்கள் அடித்துள்ளார். அத்துடன் 379 முறை அசிஸ்ட் செய்து மற்றவர்கள் கோல் அடிக்கவும் மெஸ்ஸி உதவியுள்ளார். ஆனால் ரொனால்டோவின் அசிஸ்ட் கவுன்ட் 257 மட்டுமே. அவரைவிட இரண்டு வயது இளையவரான மெஸ்ஸியால் அடுத்த சீசனுக்குள் ரொனால்டோவின் கோல் சாதனையை முறியடிக்க முடியும்” என்கிறார் தாரிணி.
இதைவிட நுணுக்கமான பல தரவுகளை முன்வைத்து உலகம் முழுவதும் உள்ள இருவரது ரசிகர்களும் யார் சிறந்த வீரர் என்று விவாதிக்கின்றனர்.
இருவரில் யார் GOAT என்ற விவாதம் எழுந்தபோது ரொனால்டோ பற்றி, லியோனல் மெஸ்ஸி சொன்ன வார்த்தைகள் இவை.
“கிறிஸ்டியானோ உடனான போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்தது, அது வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். இதை இருவரது ரசிகர்களும் விரும்புகின்றனர். அவர் எப்போதும் என்னை ஒரு சிறந்த வீரராக இருக்கத் தூண்டினார், நானும் அவருக்கு அப்படி ஒரு தூண்டுதலாக இருந்தேன் என்று நினைக்கிறேன்.”
செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களான ChatGPT, Deepseak AI ஆகிய தேடுபொறிகளிடம் யார் சிறந்த கால்பந்து வீரர் என்ற கேள்வியைக் கேட்டபோது, “மெஸ்ஸி, ரொனால்டோ இருவருமே சிறந்தவர்கள். ஆனால் சில தரவுகளின் அடிப்படையில், ரொனால்டோவைவிட மெஸ்ஸி இந்தப் பந்தயத்தில் முந்துகிறார்” என்று இரண்டும் ஒரே மாதிரியான பதிலை அளித்தன.
அதற்கு அடித்தளமாக இரண்டு சாட்பாட்களும் சுட்டிக்காட்டிய தரவுகளில் ஒன்று பேலோன் டோர் விருதின் எண்ணிக்கை. ஆனால் மற்றொன்று மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வென்ற கால்பந்து உலகக்கோப்பையைச் சுட்டிக்காட்டியது.
உலகக்கோப்பை எனும் அங்கீகாரம்
ஆம், தனது 18 வயது முதல் போர்ச்சுகல் அணிக்காக முன்கள ஆட்டக்காரராகத் தொடங்கி அணியின் கேப்டன் பொறுப்பு வரை பல்வேறு விதங்களில் பங்கு வகித்துள்ள கிறிஸ்டியானோவுக்கு, ஃபிஃபாவின் உயரிய கோப்பையான உலகக்கோப்பை மட்டும் கைக்கு எட்டவில்லை.
போர்ச்சுகல் அணிக்காக யூரோ கோப்பை உள்படப் பல கோப்பைகளை ரொனால்டோ வென்றுள்ளார். ஆனால் அந்த அணியால் தற்போது வரை உலகக்கோப்பையை வெல்ல முடியாதது ரொனால்டோவின் சாதனை மகுடத்தை முழுமை அடையச் செய்யாமல் உள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு மொராக்கோ அணிக்கு எதிராக நடந்த உலகக்கோப்பை காலிறுதிப் போட்டியில் மாற்று வீரராகக் களமிறங்கி மிகச் சொற்ப நேரமே விளையாடிய ரொனால்டோ கோல் எதுவும் அடிக்காமல் ஆட்டம் முடிவடைந்தது.
போர்ச்சுகல் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அரையிறுதிக்கு முன்னேறியது. கண்களில் கண்ணீருடன் 37 வயதான ரொனால்டோ ஆடுகளத்தில் இருந்து வெளியேறினார்.
அடுத்த உலகக்கோப்பை வரை ரொனால்டோ தேசிய அணியில் விளையாடுவாரா என்று விளையாட்டு விமர்சகர்கள் கேள்வியெழுப்பும் நிலையில், ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு இன்னும் நிறைவேறாமல் உள்ளது.
உலகையே வியக்க வைக்கும் வகையில், முன்கள ஆட்டத்தால் எதிரணியைத் தடுமாறச் செய்தாலும், சொந்த நாட்டு மக்களுக்காக கால்பந்து உலக்கோப்பையை அவரால் வெல்ல முடியாமல் இருப்பதில் அவரது ரசிகர்களுக்கு சற்று வருத்தம்தான்.
கேரளாவை சேர்ந்த அருண்லால் பிபிசியிடம் பேசும்போது, உலகின் தலைசிறந்த வீரர் ரொனால்டோ என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் தனக்கு இல்லை என்றார். அதோடு, “உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணியின் வெற்றிக்கு மெஸ்ஸி மட்டுமின்றி டி மரியா, எமி மார்ட்டினஸ் என நட்சத்திரப் பட்டாளமே உதவியது. ஆனால் போர்ச்சுகல் அணியில் ரொனால்டோ மீது அழுத்தம் அதிகமாக உள்ளது. ஒரு தனி நபரால் உலகக்கோப்பையை வெல்ல முடியாது,” என்றார்.
தொலைக்காட்சி நேர்காணல்
இந்த ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி தனது 40 வயதை நிறைவு செய்யும் ரொனால்டோவை, எல் சிரிங்கீதோ எனும் ஸ்பானிய தொலைக்காட்சி நேர்காணல் கண்டது.
“உங்களுக்கு வேண்டுமானால் மெஸ்ஸி, மாரடோனா, பீலே ஆகியோரைப் பிடிக்கலாம். அவர்கள் சிறந்த வீரர்கள் என்று கூறலாம். ஆனால் உலகிலேயே நான்தான் முழுமையான கால்பந்து வீரன்,” என்றார் ரொனால்டோ.
அந்த நேர்காணலின்போது, அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் தான் முன்னிலையில் இருப்பதாக அவர் கூறினார். “தலையில் முட்டி கோல் அடிப்பது, ஃபிரீ கிக், இடது காலால் கோல் அடிப்பது என கால்பந்தின் அனைத்து அம்சங்களிலும் நான் சிறந்து விளங்கிறேன். என்னைவிடச் சிறந்த ஒரு வீரரை நான் பார்த்தில்லை. இதை என் இதயத்தில் இருந்து கூறுகிறேன்” என்று கூறியிருந்தார்.
அதோடு, தன்னால் இன்னும் சில காலம் வரை கால்பந்து விளையாட முடியும் என்றும், ஆயிரம் கோல்களை விரைவிலேயே அடிக்கப் போவதாகவும் ரொனால்டோ அந்த நேர்காணலில் கூறியிருந்தார்.
ஃபிட்னஸ் மீதான காதல்
கால்பந்து விளையாடும் பெரும்பாலான வீரர்கள் பலரும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தாலும், ரொனால்டோவின் உடல் அமைப்பை நிர்வகிப்பது குறித்து கால்பந்து உலகை அறிந்தவர்களுக்கு அது எவ்வளவு கடினமானது என்று தெரியும்.
ரொனால்டோவின் மனைவி ஜார்ஜினா அவரைப் பற்றி இப்படிச் சொன்னார்: “விடுமுறைக்காக வீட்டுக்கு வரும்போதுகூட காலையில் தூங்கி எழுந்து பார்க்கும்போது அவர் ஜிம்மில் பயிற்சி மேற்கொண்டிருப்பார். பல நேரங்களில் என்னையும் அவருடன் உடல் பயிற்சி செய்ய வலியுறுத்துவார். ஆனால் அவரின் வேகத்திற்கு என்னால் ஈடுகொடுக்க முடியாது.”
தற்போது சௌதியின் அல்-நாசர் அணிக்காக நடுகளத்தில் இருந்து பந்தைக் கடத்திக் கொண்டு முன்களத்திற்குச் செல்லும் அவரது ஓட்டத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் எதிரணி தடுப்பாட்ட வீரர்கள் பல நேரங்களில் திணறுகின்றனர்.
கடந்த ஆண்டு யூரோ கோப்பையில் விளையாடும்போது ஓர் ஆட்டத்தில் கோல் அடிக்க மணிக்கு 32.7 கி.மீ வேகத்தில் அவர் ஓடினார்.
“கிறிஸ்டியானோ ஓர் இயந்திரம் போலச் செயல்படுவார். அவர் இந்த வயதிலும் வேகத்தையும் வலிமையையும் தக்க வைத்துக் கொள்வது ஆச்சரியமானது. அவர் ஒரு ஓட்டப்பந்தய வீரராக இருந்திருந்தால் நிச்சயம் அதிலும் சிறந்து விளங்கியிருப்பார்.”
ரொனால்டோவின் ஃபிட்னஸ் குறித்து இப்படிக் கூறியவர், ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்ற தடகள வீரரான உசைன் போல்ட்.
சௌதி அரேபியாவும் ரொனால்டோவும்
இங்கிலிஷ் பிரீமியர் லீக், லா லிகா, சீரி ஏ என இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி என ஐரோப்பிய கிளப்புகளில் விளையாடி வந்த கிறிஸ்டியானோ, சௌதி அரேபியாவின் ப்ரோ லீக்கில் விளையாட வருவார் என யாருமே எதிர்பார்க்காத நிலையில், 2022 உலகக்கோப்பை முடிந்ததும் ஒப்பந்தமானார்.
ஐரோப்பாவின் மேஜர் லீக்கில் விளையாடிய வீரர் ஆசியாவில் கால்பந்து விளையாட வந்தபோது, “ஐரோப்பிய கால்பந்தில் நான் வெற்றிபெற நினைத்த அனைத்தையும் பெற்றது எனது அதிர்ஷ்டம். ஆசியாவில் எனது அனுபவத்தைப் பெற இது சரியான தருணம் என்று உணர்கிறேன்,” என்றார் ரொனால்டோ.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அல் நாசர் அணியில் ரொனால்டோ விளையாடி வரும் நிலையில், சௌதி ப்ரோ லீக்கில் 64 கோல்களும், பிற போட்டிகளையும் சேர்த்து அல் நாசர் அணிக்காக 87 கோல்களை அவர் அடித்துள்ளார்.
இதில் 2023-24 சீசனில் மட்டும் சௌதி அல் நாசர் அணிக்காக 35 கோல்களை அடித்து முன்னிலையில் உள்ளார் ரொனால்டோ. அவரின் வருகைக்குப் பிறகு மேலும் சில ஐரோப்பிய வீரர்கள் சௌதி ப்ரோ லீக்கில் விளையாட வெவ்வேறு அணிகளில் ஒப்பந்தமாகியுள்ளனர்.
சௌதி அரேபியா மட்டுமின்றி, கத்தார், துபை போன்ற பிற மத்திய கிழக்கு நாடுகளிலும் ரொனால்டோவின் வருகைக்குப் பிறகு கால்பந்து விளையாட்டின் மீதான் ஆர்வம் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார், சௌதியில் ஆசிரியராக பணியாற்றும் சாஜித் அகமது.
“நான் பணியாற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மத்தியில் கால்பந்து விளையாட்டு மீதான ஆர்வம் கடந்த இரண்டு ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. கால்பந்தை முழுநேரமாக விளையாட தொழில்முறை வாய்ப்புகளும் இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்துள்ளது. இதன் பின்னணியில் ரொனால்டோவின் வருகை இருப்பதை நிச்சயம் என்னால் புறந்தள்ள முடியாது,” என்று பிபிசியிடம் பேசும்போது தெரிவித்தார்.
ஐரோப்பிய கால்பந்து கிளப்புகளை ரொனால்டோ விளையாடி வரும் சௌதியுடன் ஒப்பிட்டுப் பலரும் விமர்சித்து வந்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபையில் நடைபெற்ற ஒரு விருது விழாவில் பேசிய ரொனால்டோ, பிரான்ஸின் லீக் 1 கால்பந்து தொடரைவிட சௌதியின் கால்பந்து தொடர் சிறந்தது. ஆசியாவின் கடினமான தட்பவெப்ப சூழலுக்கு நடுவே விளையாடுவது சவாலாக இருந்தாலும், சௌதி ப்ரோ லீக்கில் இருக்கும் திறமையான வீரர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர்,” என்றார்.
நாற்பது வயதை ரொனால்டோ நிறைவு செய்திருக்கும் நிலையில், 2026ஆம் ஆண்டு அமெரிக்கா, மெக்சிக்கோவில் நடக்கவுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அவர் விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் நிலவுகிறது. கோப்பை வென்று ‘தான் GOAT’ என்பதை ரொனால்டோ உலகுக்குப் பறைசாற்ற வேண்டும் என்று அவருக்கு எழுதியிருந்த பிறந்தநாள் வாழ்த்தில் ஒரு ரசிகர் தனது விருப்பத்தைப் பகிர்ந்திருந்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு