நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வியாழக்கிழமை உயிரிழந்தார். மதுரையில் மேடைக் கலைஞராக தனது பயணத்தை தொடங்கி, வெள்ளித்திரை வரை உயர்ந்தவர் ரோபோ சங்கர்.
சின்ன கதாபாத்திரங்களிலும் மக்கள் மனதில் இடம் பிடிக்கும் வண்ணம் தன் திறமையை வெளிப்படுத்தியவர் ரோபோ சங்கர். அவருடைய நெருங்கிய நண்பர்கள் அவருடனான தங்கள் நட்பைப் பற்றியும், தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துக் கொண்டனர்.
விஜய் டிவி பிரபலமான மதுரை முத்துவும் ரோபோ சங்கரும் 27 ஆண்டுகள் நண்பர்களாக இருந்துள்ளனர்.
“மதுரையில் பெருங்குடி என்ற இடத்தில் உள்ள எஸ்.என். கல்லூரியில் வரலாறு படித்தார். அவரது வரலாறு தற்போது சென்னை பெருங்குடியில் முடிந்துவிட்டது. இன்று எனது பிறந்த நாள். ‘தம்பி, பிறந்த நாள் வாழ்த்துகள், எங்க இருக்க’ என்று அவரிடமிருந்து அழைப்பு வந்திருக்க வேண்டும். ஆனால் நான் அவருக்கு இரங்கல் செய்தி சொல்லும் நிலைமையாகிவிட்டது” என்று பிபிசி தமிழிடம் பேசிய போது தனது வேதனையை வெளிப்படுத்தினார் மதுரை முத்து.
கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக ரோபோ சங்கருடன் பயணித்த மதுரை முத்து, அவரது ஆரம்ப கால நாட்களை நினைவு கூர்ந்தார்.
“அவர் படித்த கல்லூரிக்கு அருகில் உள்ள கல்லூரியில் நான் படித்தேன். அவர் எனக்கு ஒரு ஆண்டு சீனியர். எங்கள் கல்லூரிக்கு பல முறை மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்துள்ளார். அப்போது முதலே அவரை தெரியும். உடலில் சாயம் பூசிக் கொண்டு மேடையில் நடிப்பார். பல மணி நேரங்கள் உடலில் சாயத்துடன் காத்திருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். கல்லூரிகள் மட்டுமல்லாமல் எத்தனையோ கிராமங்களில் மேடை ஏறி மக்களை சிரிக்க வைத்துள்ளார். அவரை போன்ற கடுமையான உழைப்பாளியை பார்க்க முடியாது” என்று ரோபோ சங்கர் குறித்து வியந்து பேசுகிறார்.
2005-ஆம் ஆண்டு விஜய் டிவியில் தொடங்கிய ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர்கள் ரோபோ சங்கரும், மதுரை முத்துவும்.
“அந்த நிகழ்ச்சியின் மூலம் சற்று ஊடக வெளிச்சம் கிடைத்த பிறகு, பல்வேறு இடங்களில் மேடை நிகழ்ச்சிகளுக்கான வாய்ப்புகள் கிடைத்தன. நானும் அவரும் ஒன்றாக அரசுப் பேருந்தில் பயணித்த நாட்கள் உண்டு. சிறிய மேடை, பெரிய மேடை என்ற பாகுபாடே அவரிடம் கிடையாது. 100 பேர் மட்டுமே இருந்தாலும், அவர்களையும் சிரிக்க வைப்பார்.” என்று தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார் மதுரை முத்து.
பட மூலாதாரம், MaduraiMuthu
படக்குறிப்பு, மதுரை முத்து
“கமலுடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்”
மேலும் பேசிய மதுரை முத்து, ரோபோ சங்கர் பன்முகத்திறமைக் கொண்டவர் என்று கூறினார்.
” உடல் மொழியைக் கொண்டு மக்களை சிரிக்க வைத்தவர் அவர். நல்ல மிமிக்ரி கலைஞராவார். யாருடைய குரலையும் அவர் பேசுவார். உடல் மொழி ஒருவரை மாதிரியும், குரல் மற்றொருவரை மாதிரியும் செய்து, மிமிக்ரியில் புதுமையை கொண்டு வந்தார். கேப்டன் விஜயகாந்த் போன்று பேச அவரால் மட்டுமே முடியும், அவரது உடல் மொழியும் அப்படியே செய்து காட்டுவார். அதனாலேயே நாங்கள் அவரை ‘மினி கேப்டன்’ என்று விளையாட்டாக அழைப்பதுண்டு.” என்கிறார்.
உடல் குறித்து அதிக கவனம் செலுத்தியவர் 46 வயதில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறுகிறார்.
“மதுரையில் மதுரா கோட்ஸ்-ல் தினம் ரூ.20 சம்பளத்துக்கு வேலை பார்த்தார். அப்போது அதில் பத்து ரூபாயை ஜிம் மற்றும் தனது உடற்பயிற்சிக்கான செலவுக்காக எடுத்து வைப்பார். மிஸ்டர் மெட்ராஸ், மிஸ்டர் மதுரை ஆகிய பட்டங்களை பெற்றவர்” என்கிறார்.
“அவர் தீவிர கமல் ரசிகர். கமலஹாசனுடன் இணைந்து ஒரு படம் நடிக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது. அது நிறைவேறவில்லை என்பது வருத்தமாக உள்ளது” என்றும் மதுரை முத்து கூறினார்.
பட மூலாதாரம், roboshankar
படக்குறிப்பு, ”கமலஹாசனுடன் இணைந்து ஒரு படம் நடிக்க வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது.”
“மீண்டு வருவார் என்று நினைத்தேன்”
தொலைக்காட்சி நட்சத்திரம் தங்கதுரை ரோபோ சங்கருடன் தனது 12 ஆண்டு கால உறவு குறித்து பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.
“அவர் மேடையில் நடித்த போது, அந்த நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்து வியந்திருக்கிறேன். அபாரமான கலைஞராக இருந்தார். எந்தவொரு குரலாக இருந்தாலும் அவர் பேசிக் காட்டுவார். புதிதாக வரும் குரல்களையும் பழகிக் கொண்டு, தன்னை புதுப்பித்துக் கொண்டே இருந்தார். நான் பார்த்து வியந்த நபருடன், சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நிறைய கற்றுக் கொடுப்பார், எந்த குரலை எப்படி பேசலாம் என்று ஆலோசனை கொடுப்பார். எந்த வித அலட்டலும் இல்லாத மிகவும் எளிமையான நபர்” என்றார் தங்கதுரை.
பட மூலாதாரம், Thangadurai
படக்குறிப்பு, ரோபோ சங்கருடன் தொலைக்காட்சி பிரபலம் தங்கதுரை
ரோபோ சங்கருடனான பணி அனுபவம் குறித்து பேசுகையில், “சில சமயம் ‘பிரியாணியும் சிக்கனும் வாங்கியிருக்கிறேன், வா’ என்று கேரவனிலிருந்துக் கொண்டு அழைப்பார். ‘பார்ட்னர்’ என்ற திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து நடித்தேன். எனது கதாபாத்திரத்தின் பெயர் அன்னதானம், அவரது கதாபாத்திரத்தின் பெயர் சமாதானம். இப்படி காம்போவாக நடித்தோம். யூனிட்டில் உள்ள அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார். ஒரு முறை கேரளாவுக்கு படப்பிடிப்புக்கு சென்றிருந்தோம். அதிகாலையில் அனைவருக்கும் முன்பாக எழுந்து, “ரெடி ரெடி, எழுந்திரு வா” என்று உற்சாகமாக நாளை தொடக்கி வைப்பார்.” என்றார்.
கடந்த சில காலம் முன்பு ரோபோ சங்கர் உடல்நலம் குன்றி பின்பு சீராகி வந்தார்.
“அதே போன்று மீண்டும் வந்துவிடுவார் என்று தான் நினைத்தோம். இன்னும் இரண்டு நாட்களில் பேரனுக்கு காது குத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார். அதற்குள் இப்படியாகும் என்று யாரும் எதிர்ப்பார்க்கவில்லை” என்கிறார் தங்கதுரை.
பட மூலாதாரம், roboshankar
படக்குறிப்பு, நடிகர் தனுஷ் உடன் ரோபோ சங்கர்
“என் ஆயுளில் பாதி நீ எடுத்துக் கொள்”
” என்னுடைய ஆயுளில் பாதி உனக்கு தருகிறேன் என்று கூறியிருந்தேன்” என்று தனது இரங்கலை தெரிவிக்கும் போது பேசியிருந்தார் நடிகர் தாடி பாலாஜி.
ரோபோ சங்கர் தனக்கு செய்த உதவிகளை நினைவு கூர்ந்த தாடி பாலாஜி, “கஷ்டம் என்று யார் சொன்னாலும் உடனே உதவி செய்வார். நான் கஷ்டப்பட்ட போது எனக்கு உதவி செய்துள்ளார். என் உட்பட அந்த குடும்பங்கள் அனைவருக்கும் இது பெரிய இழப்பு. உடல் நலன் குன்றி பின்பு மீண்டும் வந்த போது, இரவும் பகலும் ஓடி ஓடி உழைத்தார். இவ்வளவு கடுமையாக உழைத்தவரை ஏன் கடவுள் இவ்வளவு சீக்கிரம் எடுத்துக் கொண்டார் என்று புரியவில்லை.”என்றார்
”நேற்று காலையில் தான் அவரது மகளிடம் பேசினேன், அவரைப் பற்றி விசாரித்தேன். தேவைப்பட்டால் நேரில் வருகிறேன் என்று கூறினேன். அப்பா நன்றாக இருப்பதாக அவர் கூறினார். அதற்குள் எல்லாரையும் விட்டுச் செல்வார் என்று நினைக்கவில்லை. எங்கள் வீட்டு ரேஷன் அட்டையில் அவர் பெயர் இருக்காது, ஆனால் எங்கள் குடும்பத்தில் ஒருத்தர். மிகவும் அன்பு செலுத்தக் கூடியவர். படப்பிடிப்பின் போது உணவு இல்லை என்றால், வீட்டில் இருந்து உணவை சமைத்து மனைவி பிரியங்காவை கொண்டு வர சொல்வார். அவரும் எங்களுக்காக கொண்டு வருவார். அந்த விசயத்தில் அவர் சின்ன விஜயகாந்த் என்றே கூறலாம். ” என்று தெரிவித்திருந்தார் தாடி பாலாஜி.
ரோபோ சங்கர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் வையாபுரி, “சினிமா, மேடை நிகழ்ச்சிகளில் வருவதற்கு முன்பிருந்தே எனக்கு அவரை தெரியும். இவ்வளவு ஊடகங்கள் இல்லாத காலத்திலேயே உடலில் அந்த அலுமினியத்தை பூசிக் கொண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனது திறமையை மட்டுமே கொண்டு மக்கள் மனதில் நின்றவர் ” என்றார்.