பட மூலாதாரம், X/@SimranbaggaOffc
ரோபோ சங்கர் மிகக் குறைவான திரைப்படங்களிலேயே நடித்திருந்தாலும், தான் ஏற்ற பாத்திரங்களுக்கு வித்தியாசமான நடிப்பைக் கொடுத்து கவனிக்க வைத்தவர். குழந்தைகளாலும் ரசிக்கப்பட்டவர்.
தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களுக்கு என ஒரு நீண்ட பட்டியல் உண்டு. சினிமா தமிழ் பேச ஆரம்பித்த சில ஆண்டுகளிலிருந்தே நகைச்சுவை நடிகர்களின் ஆதிக்கமும் துவங்கியது. காளி என். ரத்தினத்தில் துவங்கி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நகைச்சுவை நடிகர் முன்னணியில் இருந்தாலும் இதற்கடுத்தடுத்த நிலையில் இருந்து, ரசிகர்களை சிரிக்க வைத்த நடிகர்களின் பட்டியல் மிகவும் பெரியது. அந்தப் பட்டியலில் இணையக்கூடியவர்தான் ரோபோ சங்கர்.
12 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியானது ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம். விஜய் சேதுபதி, ஸ்வாதி ரெட்டி, நந்திதா, பசுபதி, அஸ்வின், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் முக்கியப் பாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தில் ரோபோ சங்கருக்கு ஒரு சின்ன ரோல். கட்டப் பஞ்சாயத்து செய்யும் பசுபதியின் தலைமை அடியாளாக வருவார். அறிமுக காட்சியில் பசுபதி போன் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு அடியாளாக பின்னால் நின்றுகொண்டிருப்பார் ரோபோ சங்கர். பசுபதிக்குத்தான் ஃபோகஸ் இருக்கிறதென்றாலும், அந்தக் காட்சியில் ரோபோ சங்கரைக் கவனிக்காதவர்கள் இருக்கவே முடியாது. ஒரு நொடிகூட அவரது உடல் சும்மா இருக்காது. ஏதோ ஒன்றைச் செய்துகொண்டேயிருப்பார். பசுபதி போன் பேசி முடித்துவிட்டு, ஒரு பிரச்சனையைத் தீர்க்க தன்னிடம் வந்திருக்கும் பட்டிமன்ற ராஜாவுடன் பேச ஆரம்பிப்பார். இரண்டு பேரும் சீரியஸாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால், படம் பார்ப்பவர்களின் கவனம் முழுவதும் ரோபோ சங்கர் மீதுதான் இருக்கும். ஓரமாக நின்றபடியே ஏதையோ செய்துகொண்டேயிருப்பார் ரோபோ சங்கர்.
பிறகு திடீரென சுகர் மாத்திரையை பசுபதியின் வாயில் திணித்து தண்ணீரைக் குடிக்கச் செய்துவிட்டு, காலரைத் தூக்கிவிட்டுக்கொள்வார். பஞ்சாயத்து நடக்கும்போது ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி, “குமுதாவோட எல்லா படமும் செல்போன்ல இருக்கு” என்பார். அடுத்த ஃப்ரேமில் ரோபோ சங்கர் காட்டும் பாவனை, அபாரமாக இருக்கும். பிறகு அந்தப் படங்களைப் பார்க்க அவர் ஆர்வம் காட்டாததுபோல, ஆர்வம் காட்டுவதை மிக நுணுக்கமாகச் செய்திருப்பார். இந்த ஒட்டுமொத்தக் காட்சியிலும் பசுபதி, விஜய் சேதுபதி, பட்டிமன்ற ராஜா ஆகிய மூன்று பேர்தான் முக்கியப் பாத்திரங்கள். ஆனால், பார்ப்பவர்களின் மனதைக் கவர்வதென்னவோ ரோபோ சங்கர்தான்.