மதுரையைச் சேர்ந்தவரான ரோபோ சங்கர் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர். உடற்கட்டு பயிற்சியிலும் ஆர்வம் கொண்ட இவர், இதற்கான போட்டிகளிலும் பங்கெடுத்ததாக அவரது நண்பர்கள் கூறுகின்றனர். உடலில் பெயிண்ட் பூசிக் கொண்டு ரோபோ போன்று நடனமாடியதால் சங்கர் என்ற பெயருடன் ரோபோ என்ற பட்டம் இணைந்து கொண்டது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் இடம் பெற்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். பிரபல நடிகர்கள் போன்று பேசி மிமிக்ரி செய்ததால் பிரபலமடைந்த இவர், இதனைத் தொடர்ந்து சினிமா படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.
2005ம் ஆண்டு கற்க கசடற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இதன் பின்னர் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்தாலும், விஜய் சேதுபதியின் ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படம் இவருக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது.
இதன் பின்னர் தனுஷூடன் இவர் நடித்த மாரி திரைப்படத்திலும், இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது. இதன் பின்னர் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார்.
ரோபோ சங்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் “திரைக்கலைஞர் ரோபோ சங்கர் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் துவங்கி, சின்னத்திரை – வண்ணத்திரை என விரிந்து, தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர் ரோபோ சங்கர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் – கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் படப்பிடிப்பின் போது திடீரென மயங்கி விழுந்த ரோபோ சங்கர் பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அவர் வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார். வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Facebook
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகர் தனுஷ் இரவு, அவரது வீட்டுக்கு நேரில் சென்று ரோபோ சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நடிகர் தனுஷின் ‘மாரி’ திரைப்படத்தில் ரோபோ சங்கர் நடித்த காட்சிகள் கவனத்தை ஈர்த்தன.
பட மூலாதாரம், Facebook
நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல் ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் ரோபோ சங்கருக்காக சிறு கவிதை ஒன்று எழுதி தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார். “ரோபோ புனைப்பெயர் தான் என் அகராதியில் நீ மனிதன் ஆதலால் என் தம்பி போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ?” என்று பதிவிட்டுள்ளார். ரோபோ சங்கரின் பேரக் குழந்தைக்கு அவர் பெயர் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பட மூலாதாரம், X/@ikamalhaasan
நடிகை ராதிகா சரத்குமார், “எப்போதும் அனைவரையும் சிரிக்க வைக்கும் நபர், கடுமையாக உழைப்பவர், அவர் மறைந்தது பெரும் இழப்பு” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகை சிம்ரன், ” லட்சக்கணக்கான பேரிடம் சிரிப்பை வரவழைத்தவர். அவரது மறைவு மிகுந்த துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
பட மூலாதாரம், X/@realradikaa
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் அவரது மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுருந்தார். அவருடன் ஞாயிற்றுக்கிழமை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், ஆனால் இப்போது அவர் இல்லை என்பது சோகமாகவும் அதிர்ச்சியாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், X/@varusarath5
ரோபோ சங்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நடிகர் கார்த்தி, ” நாம் எடுக்கும் மோசமான முடிவுகள் காலப்போக்கில் நமது உடல்நலத்தை எப்படி பாதிக்கிறது என்று பார்க்கும் போது மனம் வலிக்கிறது. நல்ல திறமையை விரைவில் இழந்துவிட்டோம்” என்று பதிவிட்டுள்ளார்.
பட மூலாதாரம், X/@Karthi_Offl
தனது’ வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற திரைப்படத்தில் ரோபோ சங்கர் பேசிய பிரபலமான வசனத்தை குறிப்பிட்டு, அவர் நினைவில் கொள்வதாக நடிகர் விஷ்ணு விஷால் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், X/@TheVishnuVishal
நடிகர் சிம்பு, நடிகரும் இயக்குநருமான வெங்கட் பிரபு உள்ளிட்ட திரைத்துறையினர் பலரும், அவருடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உடன் பணியாற்றிய கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் அவருடன் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும், நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு சுந்தரும் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். நடிகர்கள் ராகவா லாரன்ஸ், கவின், சாந்தனு, அருண் விஜய், மஹத் ராகவேந்திரா, விமல், ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் பாலாஜி மோகன், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.