பட மூலாதாரம், Getty Images
இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் இடம்பெற்றுள்ளார்கள். இருவரும் சுப்மன் கில் தலைமையின் கீழ் விளையாட உள்ளனர்.
ரோஹித் சர்மா நீக்கம் பற்றி பிசிசிஐ தேர்வு குழுவின் தலைவர் அஜித் அகர்கரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது 2027 ஒருநாள் உலக கோப்பையை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்
இந்த முடிவு பற்றி ரோஹித் சர்மா தற்போது வரை எந்தக் கருத்தும் தெரிவிக்காத நிலையில் சமூக ஊடகங்களில் யூகங்கள், விமர்சனங்கள், ஆதரவுகள் என விவாதிக்கப்பட்டு வருகின்றன.
கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள சுப்மன் கில், “ஒருநாள் உலக கோப்பைக்கு முன்பாக 20 போட்டிகள் உள்ளன. 2027-ல் தென் ஆப்ரிக்காவில் நடக்கவுள்ள உலக கோப்பை தொடரை வெல்வது தான் எங்களின் மிகப்பெரிய இலக்கு.” எனத் தெரிவித்தார்.
ரோஹித் சர்மா, அஜித் அகர்கர் இடையே என்ன நடந்தது?
பட மூலாதாரம், Gareth Copley/Getty Images
ரோஹித் சர்மாவிடம் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டதா என்கிற கேள்விக்குப் பதிலளித்த அகர்கர், அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு முன்பாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது என்றார்.
கேப்டன்சி முடிவுக்கு ரோஹித்தின் எதிர்வினை பற்றிய கேள்விக்கு, “அது எனக்கும் ரோஹித்துக்கும் இடையிலான உரையாடல். அதனைப் பொதுவெளியில் தெரிவிக்க விருப்பமில்லை.” எனத் தெரிவித்தார்.
எதிர்கால திட்டத்தின் ஒரு அங்கமாக புதிய கேப்டனுக்கு தன்னை அந்தப் பொறுப்பில் நிரூபித்துக் கொள்ள போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டியது முக்கியமானது என்றும் கூறினார்.
“அடுத்த உலக கோப்பைக்கு இரண்டு ஆண்டுகள் உள்ளன. அதற்குள் புதிய கேப்டன் அணியுடன் கூடுதல் நேரம் செலவழித்து திட்டங்களை மேற்கொள்ள போதுமான வாய்ப்பு கிடைக்கும். அதனால் தான் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.” என்கிறார் அகார்கர்.
ஒவ்வொரு வடிவத்திற்கும் (டெஸ்ட், ஒருநாள், டி20) வெவ்வேறு கேப்டன்கள் இருப்பது எளிதல்ல எனக் கூறும் அவர், “அது திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளைக் கடுமையாக்குகிறது. ரோஹித் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். ஆகவே, ஒருநாள் கேப்டன்சியையும் இளம் வீரர்களிடம் கொடுக்கலாம் என தேர்வாளர்கள் எண்ணினர்.” எனத் தெரிவித்தார்.
ரோஹித் சர்மா 2023 ஒருநாள் உலக கோப்பை இறுதி போட்டிக்கு இந்திய அணியை வழிநடத்திச் சென்றார். இந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை அவர் வென்று கொடுத்தார். அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கும் முடிவு எளிதானது அல்ல என்பதை அகர்கர் ஒப்புக்கொள்கிறார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறுவது என்ன?
பட மூலாதாரம், Gareth Copley/Getty Images
ரோஹித் சர்மா நீக்கப்பட்டது தனக்கு ஆச்சரியமளித்ததாக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சாம்பியன்ஸ் டிராபி வென்ற அவருக்கு ஆஸ்திரேலியாவில் அணியை வழிநடத்த தகுதியுள்ளது என்றும் கூறினார்.
இந்த முடிவு பற்றி ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் ஹர்பஜன் பேசியதாக பிடிஐ செய்தி முகமை கூறுகிறது.
“சுப்மன் கில்லுக்கு வாழ்த்துக்கள். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியை சிறப்பாக வழிநடத்துகிறார். தற்போது மேலும் ஒரு பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ரோஹித்தின் இடத்தில் சுப்மன் கில் வைக்கப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறந்த சாதனைகளை கொண்ட வீரர் ரோஹித்.”
“ரோஹித்தை கேட்பனாக பார்க்காமல் இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் ரோஹித்தை அணியில் தேர்வு செய்கிறீர்கள் என்றால் அவரை கேப்டன் ஆக்குங்கள், ஏனென்றால் சமீபத்தில் தான் அவர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்துள்ளார். இந்தத் தொடரில் அவர் கேப்டனாக இருந்திருக்க வேண்டும். அணி தேர்வாளர்கள் 2027 ஒருநாள் உலக கோப்பையைப் பற்றி யோசிக்கிறார்கள் என்றால் அதற்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது.” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா பெரிய தொடர்களுக்கு முன்பாக ரோஹித் சர்மாவுக்கு போதிய நேரம் வழங்கப்பட்டதைப் போல சுப்மன் கில்லுக்கும் வழங்கப்படுவது சரியே என்கிறார்.
“ரோஹித் 2022 டி20 உலககோப்பையில் கேப்டனாக இருந்தார், அதே போல் 2024 உலக கோப்பையிலும் கேப்டனாக இருந்தார். உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப அணியைக் கட்டமைக்குமாறு அவரிடம் கூறப்பட்டது. நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் எடுக்கப்பட்டார்கள், முடிவாக கோப்பை கிடைத்தது. அதன் பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது. ரோஹித் சர்மாவுக்கு போதிய நேரம் வழங்கினீர்கள். ரோஹித் சர்மாவுக்கு நேரம் வழங்கப்பட்டால் சுப்மன் கில்லுக்கும் நேரம் வழங்கப்பட வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
இந்திய அணியின் முன்னாள் உதவி பயிற்சியாளரான அபிஷேக் நாயர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசுகையில், இந்த முடிவு பற்றி ரோஹித்தும் தேர்வாளர்களும் பேசிக் கொள்வது முக்கியமானது எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “என்னைப் பொருத்தவரை, தேர்வாளர்கள் ரோஹித் சர்மாவிடம் பேசினார்களா என்பது மட்டுமே முக்கியமானது. ரோஹித் சர்மாவும் தேர்வாளர்களும் கில்லுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என ஒப்புக்கொண்டால், இது சரியே. இதற்கான பதிலை ரோஹித் சர்மா மட்டுமே கொடுக்க முடியும். ஒரு கேப்டனாக அவர் 2027 உலக கோப்பைக்கு தயாராகி வந்தார். எனவே இதைப்பற்றி உரையாடல் நடைபெற்றிருக்கும் என்றும், இந்த முடிவில் ரோஹித்தும் தேர்வாளர்களும் ஒப்புக் கொண்டிருப்பார்கள் என்றும் நம்புகிறேன்.” எனத் தெரிவித்தார்.
பிசிசிஐ மீது எழுப்பப்படும் கேள்விகள்
பட மூலாதாரம், Getty Images
முன்னாள் வீரர்கள் மற்றும் வல்லுநர்களைக் கடந்து இந்த முடிவு சமூக ஊடகங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
விஷால் என்பவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில், “5 ஐபில் கோப்பைகள் மற்றும் பல வருட கடின உழைப்பிற்கு மும்பை இந்தியன்ஸ் கொடுத்தது என்ன? அவமரியாதையும் துரோகமும் தான். 2 தொடர் ஐசிசி கோப்பைகளும் பல வருட வெற்றிகளுக்கும் பிசிசிஐ கொடுத்தது என்ன? அவமரியாதையும் துரோகமும் தான்.” எனப் பதிவிட்டுள்ளார்.
தனய் என்பவர், “ரோஹித் சர்மாவை கேப்டன்சியிலிருந்து நீக்கியதற்கு பிசிசிஐ ஒரு காரணம் கொடுங்கள்.” என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் சிலர் பிசிசிஐயின் முடிவை நியாயப்படுத்தியும் பேசுகின்றனர்.
‘கில் தி வில்’ (‘Gill The Will’) என்கிற கணக்கில், “ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு சுப்மன் கில்லை தற்போது கேப்டன் ஆக்கியதற்கு நீங்கள் (ரோஹித் சர்மா ரசிகர்கள்) அனைவரும் சோகமாக இருப்பீர்கள் என எனக்குத் தெரியும். நீங்கள் கில்லை விமர்சிப்பதற்கு முன்பாக ஒன்றை யோசியுங்கள். விராட் கோலிக்குப் பிறகு ரோஹித் சர்மா கேப்டன் ஆன போது நீங்கள் முழுமையாக அவரை ஆதரித்தீர்கள் தானே? தற்போது அதே மரியாதை சுப்மன் கில்லுக்கும் வழங்கப்பட வேண்டும். கேப்டனான சிறந்த நினைவுகளைத் தந்ததற்கு நன்றி ரோஹித் சர்மா!” எனப் பதிவிடப்பட்டுள்ளது.
பாவ்னா என்பவர், “சுப்மன் கில்லுக்கு வாழ்த்துகள். ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா இடத்தை நிரப்புவது எளிதான காரியம் அல்ல. அவர் மிகப்பெரிய பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார், அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது கில்லுக்கு மிகப்பெரிய பொறுப்பாக இருக்கும்.” என எழுதியுள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 19, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 29 முதல் நவம்பர் 8 வரை நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு