பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜஸ்விந்தர் சித்து
- பதவி, பிபிசி ஹிந்திக்காக
-
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தனது 35வது வயதில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரங்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் ஒரு நாள் போட்டிகளுடைய எதிர்காலம் குறித்துக் கேள்விகள் எழுப்பப்படும் நேரத்தில் ஸ்மித்தின் இந்த முடிவு வெளிவந்துள்ளது.
தற்போது, இந்தியாவில் வளர்ந்து வரும் திறமையான இளம் கிரிக்கெட் வீரர்களைக் கொண்ட பெரிய படை ஒன்று தயாராக உள்ளது. இந்நிலையில், அவர்களில் எத்தனை பேருக்கு 2027 உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்கும் என்பதே தற்போதைய கேள்வி.
நிச்சயமாக இந்தக் கேள்வி தேர்வாளர்களுக்கும் இருக்கும்.
“வெள்ளை பந்து வடிவத்தில் மற்ற நாடுகளுக்கு உள்ள பிரச்னை என்னவெனில், இந்திய அணியின் தற்போதைய அணியைப் போலவே மற்றுமொரு அணி எந்த நேரத்திலும் விளையாடத் தயாராக உள்ளது. என் பார்வையில், சாம்பியன்ஸ் டிராபி இந்தியாவுக்கு சொந்தமானது” என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் புதன்கிழமை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
அணியில் மாற்றத்திற்காக காத்திருக்கும் இளைஞர்கள்
வயதும், மாற்றுத் தேர்வாக இளைய கிரிக்கெட் வீரர்கள் இருப்பதும் மூத்த வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு சவாலாக மாறியுள்ளது. அணியில் மாற்றம் வருவதற்காக ஒரு தலைமுறை முழுவதும் காத்திருக்கிறது என்பது தெளிவாகப் காணப்படுகிறது.
அந்த வரிசையில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் பெயர்கள் இல்லை. ஆனால் ரவீந்திர ஜடேஜாவும் முகமது ஷமியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ரோஹித் சர்மாவின் பயிற்சியாளர் தினேஷ் லாட் கூறுகையில், “ரோஹித் நிச்சயமாக 2027 உலகக் கோப்பையில் விளையாட விரும்புவார் என்று நான் நம்புகிறேன். அவர் ஒரு முறை உலகக் கோப்பையை வெல்ல விரும்புவார்.
தற்போது அவரது ஆட்டத்தில் எந்தக் குறையும் இல்லை. இதன் பொருள் அவர் அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாட விரும்புகிறார். ஆம், அவர் முன்பைவிட மிகவும் எச்சரிக்கையாக விளையாடுகிறார்” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
ரோஹித் இதைச் செய்ய மாட்டார் என்று தினேஷ் லாட் நம்புகிறார். “ரோஹித், விமர்சனங்களுக்கு அஞ்சி ஆட்டத்தை விட்டு வெளியேறும் நபர் இல்லை. அவர் ஒரு போராளி. அவர் இப்போது அதிக ரன்களை எடுத்து வருகிறார். முதல் பத்து ஓவர்களில் அவரது பங்களிப்பு பயனுள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
அவர் தனது ஆட்டத்தில் என்ன மாற்றங்களைச் செய்திருந்தாலும், அணியின் நலனை மனதில் கொண்டு அதைச் செய்துள்ளார். அவர் இன்னும் அணியின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார் என்பது தெளிவாகிறது” என்று அவர் தெரிவித்தார்.
பிசிசிஐ ஒரு பெரிய முடிவை எடுக்கலாம்
பட மூலாதாரம், Getty Images
பிசிசிஐ மூத்த வீரர்கள் தொடர்பாக ஒரு பெரிய முடிவை எடுப்பது குறித்து ஏற்கெனவே மறைமுகமாகக் கூறியுள்ளது.
இதனால்தான் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட மோசமான தோல்விக்குப் பிறகு, ஜனவரியில் ரஞ்சி கோப்பையில் விளையாடும்படி வீரர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. 2027 உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய அணி சுமார் 20 ஒருநாள் போட்டிகளில் விளையாட வேண்டும்.
இதுபோன்ற சூழ்நிலையில், வரவிருக்கும் தொடரில் மூத்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், இளைஞர்கள் எத்தனை போட்டிகளில் விளையாடுவார்கள் என்ற கேள்வி எழுகிறது.
இப்போது அவர்களால் போட்டிகளில் விளையாட முடியவில்லை என்றால், உலகக் கோப்பைக்கு முன்பு தேர்வாளர்கள் அவர்களது திறமைகளை எவ்வாறு மதிப்பிடுவார்கள்?
சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு இந்திய அணியில் மாற்றங்கள் வரலாம்
பட மூலாதாரம், Getty Images
இந்த ஆண்டு நவம்பர் மாதம் விராட் கோலிக்கு 37 வயது ஆகிறது. அவர் 301 ஒருநாள் போட்டிகளிலும் 123 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ரோஹித் சர்மா அல்லது விராட் கோலியிடம் இருந்து எந்த அறிக்கையும் இதுவரை வரவில்லை. ஆனால் சாம்பியன்ஸ் கோப்பைக்குப் பிறகு இது நடக்கக் கூடும் என்று இந்திய அணியின் நிபுணர்கள் நம்புகின்றனர்.
உள்நாட்டு கிரிக்கெட்டில் 110 போட்டிகளில் 2.29 என்ற சராசரியுடன் 378 விக்கெட்டுகளை வீழ்த்திய உத்தர பிரதேச முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் வின்ஸ்டன் ஜைதி, முகமது ஷமியின் வெற்றியை மிக நெருக்கமாகக் கண்டுள்ளார்.
“நிச்சயமாக வயது ஒரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, ஆனால் அவர் பந்தை நன்றாக வீசுகிறார், அதை நகர்த்தவும் செய்கிறார். அவரது பந்துவீச்சை நான் உன்னிப்பாகக் கவனித்துள்ளேன். அவருக்கு இன்னும் பலம் உள்ளது. அவர் இன்னும் ஒரு வருடம் விளையாட வேண்டும். அவர் உடல் தகுதியுடன் இருந்தால், உலகக் கோப்பையிலும் விளையாட வேண்டும்” என்றார்.
முகமது ஷமிக்கு 34 வயதாகிறது. அவர் இதுவரை அனைத்து வடிவங்களிலும் 44,644 பந்துகளை வீசியுள்ளார். பல முறை காயம் காரணமாக அவர் அணியிலிருந்து விலகி இருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியில் உள்ள மிகப்பெரிய திறமையாளர்கள் குழு
இந்திய அணி தற்போது திறமையான வீரர்களைக் கொண்டுள்ளது. உலகக் கோப்பைக்கு முன்பு இவர்களைப் பரிசோதிக்கத் தவறுவது பெரிய பிழையாக மாறக்கூடும்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
- இவர் ஒரு தொடக்க பேட்ஸ்மேன். திறமையுடன் கூடிய பொறுமை அவரது சிறப்பு.
- இவரது திறமை ஆஸ்திரேலிய ஊடகங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.
ருதுராஜ் கெய்க்வாட்
- பேட்ஸ்மேனான ருதுராஜூக்கு, அவரது நுட்பமே பலம்.
- எந்த வரிசையிலும் நம்பிக்கையுடன் விளையாடும் திறன் அவரிடம் உள்ளது.
திலக் வர்மா
- மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான திலக் வர்மா, மிடில் ஓவர்களில் நம்பிக்கையுடன் விளையாடும் திறனைக் கொண்டுள்ளார்.
- மேலும் அனைத்து வகையான ஷாட்களையும் திறமையாகக் கையாளும் திறன் கொண்டவராகவும் உள்ளார்.
ஷிவம் துபே
- ஆக்ரோஷமாக பேட்டிங் செய்யும் திறன் கொண்டவர் ஷிவம் துபே.
- மேலும், அணியின் ரன் கணக்கைத் தக்க வைப்பது அவரது பலம்.
பட மூலாதாரம், Getty Images
நிதீஷ் ரெட்டி
- இந்திய அணிக்கு கிடைத்துள்ள புதிய வீரரான இவர், ஒரு ஆல்ரவுண்டர்.
- அவருக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் நன்றாக விளையாடி நம்பிக்கை அளிக்கிறார்.
ஆயுஷ் படோனி
- மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக, வலுவாக விளையாடும் திறன் கொண்டவர்.
- போட்டிக்கு ஏற்ப விளையாடும் திறனும் அவரிடம் உள்ளது.
இஷான் கிஷான்
- ஒரு விக்கெட் கீப்பராகவும், ஆக்ரோஷமான பேட்ஸ்மேனாகவும் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
- இந்தியாவுக்காகப் பல முக்கியமான இன்னிங்ஸ்களையும் இஷான் விளையாடியுள்ளார்.
டி-20 அணிகளில் இருந்து அதிக திறமையாளர்களைக் காணலாம்
பட மூலாதாரம், Getty Images
இந்திய கிரிக்கெட் அணிக்கு பலம் சேர்க்க இந்த வீரர்கள் மட்டும் இல்லை.
இந்திய அணியின் டி20 அணிகளைப் பார்த்தால், அதிலிருந்து பல வீரர்கள் ஒருநாள் போட்டிகளின் அணிக்கும் தகுதியானவர்களாக இருக்க முடியும்.
ஷ்ரேயாஸ் ஐயர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் போன்ற டி20 அணி உறுப்பினர்களால், பலருக்குப் பதிலாகவும் விளையாட முடியும்.
அடுத்த உலகக் கோப்பைக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணி, ஓர் இளம் அணியைக் கொண்டிருப்பது நல்ல விஷயம்தான். ஆனால் இது தேர்வாளர்களுக்கும் தலைவலியாகவே உள்ளது.
ஆனால் இப்போது கேள்வி என்னவென்றால், தேர்வாளர்கள் அடுத்த உலகக் கோப்பைக்கு நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுடன் செல்கிறார்களா அல்லது அடுத்த தலைமுறையை நம்புகிறார்களா என்பதுதான்.
அதைத் தெரிந்துகொள்வது மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு