• Sat. Feb 8th, 2025

24×7 Live News

Apdin News

லசந்தவின் மகள் அனுப்பிய கடிதத்தை பார்த்து வேதனையடைந்தேன் | பிரதமர் ஹரிணி

Byadmin

Feb 8, 2025


லசந்தவின் மகளான அஹிம்சா விக்கிரமதுங்க அனுப்பிவைத்த கடிதம் எனக்கு கிடைத்தது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை பார்த்து வேதனையடைந்தேன். அதிகளவில் கரிசணை கொண்டுள்ளேன். பதில் கடிதம் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். லசந்த விக்கிரமசிங்கவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் என்றும் உறுதியாகவே இருக்கிறோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வெள்ளிக்கிழமை (7) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வின்போது படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அரசாங்க தரப்புக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் மற்றும் லசந்த விக்கிரமதுங்க படுகொலை  விசாரணைகள் தொடர்பில் சிவில் தரப்பினர் முன்னெடுத்துள்ள போராட்டங்கள் குறித்து உரையாற்றிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கூறுகையில்,

படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்க தொடர்பில் பத்திரிகைகளில் பிரதான செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு சட்ட மாஅதிபர் திணைக்களம் பொறுப்புக்கூற வேண்டும். தேசிய மக்கள் சக்தியின்  தேர்தல் விஞ்ஞாபனத்தில் லசந்த விக்கிரமசிங்க உட்பட  பல படுகொலைக்கான நீதி தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தை  அடிப்படையாகக் கொண்டு தற்போது பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. சட்டமா அதிபர் திணைக்களத்தில் சிறந்த அதிகாரிகள் உள்ளார்கள். இருப்பினும் ஒருசில பிரச்சினைகள் காணப்படுகின்றன. படுகொலை செய்யப்பட்ட  லசந்த விக்கிரமதுங்க விவகாரம் தேசிய பிரச்சினையாகவே பார்க்கப்படுகிறது. ஆகவே  இவ்விடயம் தொடர்பில் முழு  நாள் விவாதத்தை  நடத்த வேண்டும். ஏனெனில், இவ்வாறான பிரச்சினைகள் இனி தோற்றம் பெறக் கூடாது என்றார்.

இதற்கு எழுந்து பதிலளித்த  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமசிங்கவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் என்றும் உறுதியாகவே இருக்கிறோம்.

லசந்தவின் மகளான அஹிம்சா  விக்கிரமதுங்க அனுப்பிவைத்த கடிதம்  எனக்கு கிடைத்தது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை பார்த்து வேதனையடைந்தேன். அதிகளவில் கரிசணை கொண்டுள்ளேன். பதில் கடிதம் அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.

நீதிமன்றம், சட்ட மாஅதிபர் திணைக்களம் நீதியை நிலைநாட்டுவதற்காகவே செயற்படுகிறது. அதற்கான சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்கும்.

சட்ட மாஅதிபர் திணைக்களத்தில்  சிறந்த அதிகாரிகள் உள்ளார்கள். இருப்பினும்  திணைக்களம்  ஒரே போக்கில் செயற்படுகிறது. இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.

தற்போதைய நிலைவரம் குறித்து ஜனாதிபதி சட்ட மாஅதிபருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அவசியமாயின், புதிய விசாரணைகளை மேற்கொள்ளவும், சாட்சியம் திரட்டவும் ஆலோசிக்கப்படும். அதற்கான வலியுறுத்தலை சட்ட மாஅதிபரிடம் முன்வைப்பேன்.

சட்ட மாஅதிபர் திணைக்களம் அரசியல் பிடிக்குள் சிக்குப்படாமல் இருப்பதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும் என்பதை குறிப்பிட்டுக்கொள்கிறேன் என்றார்.

The post லசந்தவின் மகள் அனுப்பிய கடிதத்தை பார்த்து வேதனையடைந்தேன் | பிரதமர் ஹரிணி appeared first on Vanakkam London.

By admin