• Thu. Sep 25th, 2025

24×7 Live News

Apdin News

லடாக்கில் என்ன பிரச்னை? வன்முறையைத் தூண்டியதாக சோனம் வாங்சுக் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு

Byadmin

Sep 25, 2025


சோனம் வாங்சுக்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, சோனம் வாங்சுக்

யூனியன் பிரதேசமான லடாக்குக்கு முழு மாநில அந்தஸ்து கோரி போராட்டம் நடத்தியவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நடந்த மோதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். 30 காவல்துறையினர் உட்பட குறைந்தது 59 பேர் காயமடைந்தனர்.

1989-ஆம் ஆண்டுக்குப் பிறகு லடாக்கில் நடந்த மிக மோசமான வன்முறைச் சம்பவம் இது எனக் கருதப்படுகிறது.

புதன்கிழமை வன்முறையைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், லடாக்கிற்கு முழு மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டவணையை நீட்டிக்கக் கோரி நடத்தி வந்த 15 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

வன்முறை காரணமாக லே நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை இரவு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், புதன்கிழமை நடந்த வன்முறைக்குச் சோனம் வாங்சுக்தான் காரணம் என்று குற்றம் சாட்டியது. உள்துறை அமைச்சகத்தின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வாங்சுக் இன்னும் பதிலளிக்கவில்லை.

லடாக் மக்களுக்கு முழு மாநில அந்தஸ்து மற்றும் ஆறாவது அட்டவணையை நீட்டிப்பது குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தில் சிலர் மகிழ்ச்சியாக இல்லை என்றும், அதனால் அதற்குத் தடை ஏற்படுத்துவதாகவும் மத்திய அரசு கூறுகிறது

உயர்மட்டக் குழுவின் அடுத்த கூட்டம் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறும் என்றும், செப்டம்பர் 25 மற்றும் 26- ஆம் தேதிகளில் லடாக்கின் தலைவர்களுடனான சந்திப்புகளும் திட்டமிடப்பட்டுள்ளன என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதன்கிழமை காலை என்ன நடந்தது?

தொலைவில் தீப் பற்றி எரியும் வாகனங்களிலிருந்து எழும் புகையின் பின்னணியில் மக்கள் நிற்கும் காட்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லேவில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு போராட்டக்காரர்கள் பல காவல்துறை வாகனங்களுக்குத் தீ வைத்தனர்.

புதன்கிழமை காலை, ஒரு இளைஞர்கள் குழு தீ வைப்பு மற்றும் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் பாஜக தலைமையகத்தை குறிவைத்துத் தாக்கினர் மற்றும் பல வாகனங்களை தீ வைத்து எரித்தனர்.

நிலைமையைக் கட்டுப்படுத்த நகர் முழுவதும் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படைகள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதாக அதிகாரிகள் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் குறைந்தது ஆறு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

துணை நிலை ஆளுநர் கவிந்தர் குப்தா, “இந்த சம்பவங்கள் ‘பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளன'” என்று கூறி, ‘நடந்தவை தன்னிச்சையான சம்பவங்கள் அல்ல, ஒரு சதியின் விளைவு’ என்றும் கூறினார்.

“இங்குள்ள சூழலைக் கெடுப்பவர்களை நாங்கள் விட்டு வைக்க மாட்டோம்” என்று அவர் கூறினார்.

முன்னதாக ஆகஸ்ட் 27, 1989-ஆம் ஆண்டில் லடாக் பெரிய வன்முறையைச் சந்தித்தது. அப்போது யூனியன் பிரதேச அந்தஸ்து கோரி நடந்த போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.

நிலைமை எப்படி மோசமடைந்தது?

போராட்டத்தின்  போது வன்முறையில் ஈடுபட்ட ஒரு போராட்டக்காரரைக் காவல்துறை கைது செய்த புகைப்படம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, வன்முறையின் போது ஒரு போராட்டக்காரரைக் காவல்துறை கைது செய்கிறது.

புதன்கிழமை காலை லடாக் தலைநகர் லேவின் தெருக்களில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடினர். நேரம் செல்லச் செல்ல, தீ மற்றும் கருப்பு புகை தூரத்திலிருந்து தெரிந்தது.

செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 15 பேரில் இருவரின் உடல்நிலை செவ்வாய்க்கிழமை மாலை மோசமடைந்ததை தொடர்ந்து, முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

“செரிங் ஆங்சுக் (72) மற்றும் தாஷி டோல்மா (60) ஆகிய இருவரின் உடல்நிலையும் மோசமடைந்ததால் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இது வன்முறைப் போராட்டங்களுக்கு உடனடித் தூண்டுதலாக இருந்திருக்கலாம்,” என்று சோனம் வாங்சுக் ஓர் ஆன்லைன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

வன்முறையைத் தொடர்ந்து, உண்ணாவிரதப் போராட்டம் நடந்த இடத்தில் மக்களை தூண்டிவிடும் வகையில் பேசியதாகக் காங்கிரஸ் தலைவர் மற்றும் கவுன்சிலர் புன்ட்சோக் ஸ்டான்சின் செபாக் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“வங்கதேசம், நேபாளம் போன்ற ஒரு சூழ்நிலையை இந்தியாவில் உருவாக்கும் நோக்கிலான காங்கிரஸ் கட்சியின் ‘மோசமான சதியின்’ ஒரு பகுதிதான் இந்த வன்முறை” என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.பி. மற்றும் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, “இன்று லடாக்கில் நடந்த சில போராட்டங்கள் ‘ஜென் Z’ தலைமையில் நடந்தது போல் சித்தரிக்க முயற்சி நடந்தது. ஆனால் விசாரணையில் அது ஜென் Z போராட்டம் அல்ல, காங்கிரஸ் போராட்டம் என்று தெரியவந்துள்ளது” என்றார்.

மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணை நீட்டிப்பு, லே மற்றும் கார்கிலுக்குத் தனி மக்களவைத் தொகுதிகள் மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு ஆகிய நான்கு கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ளனர்.

மத்திய அரசு என்ன சொன்னது?

லேவில் தேசியக் கொடியுடன் போராட்டம் நடத்தும் இளைஞர்கள்.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, லேவில் தேசியக் கொடியுடன் போராட்டம் நடத்தும் இளைஞர்கள்.

வன்முறைக்குப் பிறகு, மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை இரவு ஓர் அறிக்கையை வெளியிட்டது.

“லடாக்கிற்கு ஆறாவது அட்டவணை மற்றும் மாநில அந்தஸ்து கோரி சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இந்த விவகாரங்களில் லே மற்றும் கார்கில் ஜனநாயக கூட்டணியின் உச்ச அமைப்புடன் இந்திய அரசாங்கம் தீவிரமாக பேசி வருவது அனைவரும் அறிந்ததே. உயர்மட்டக் குழு, துணைக் குழு மற்றும் தலைவர்கள் மூலமாகப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இவை குறிப்பிடத்தக்க பலன்களை அளித்துள்ளன.”

“லடாக்கில் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு 45 சதவீதத்திலிருந்து 84 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கவுன்சில்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. போட்டி மற்றும் பார்கி மொழிகளுக்கு அலுவல் மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 1,800 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பும் தொடங்கப்பட்டுள்ளது.” என்று அந்த அறிக்கை கூறியது.

“ஆனால் அரசியல் சுயநலத்தால் தூண்டப்பட்ட சிலர், இந்த முன்னேற்றத்தில் திருப்தியடையவில்லை, அதனால் பேச்சுவார்த்தையை நாசப்படுத்த விரும்புகிறார்கள்” என்று அந்த அறிக்கை குற்றம்சாட்டியது.

“உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு பல தலைவர்களின் வேண்டுகோள்களை மீறி, அவர் அதைத் தொடர்ந்தார். அரபு எழுச்சி (Arab spring), நேபாளத்தின் ஜென் Z போராட்டங்களையும் உதாரணங்களாகக் காட்டி பொதுமக்களைத் தொடர்ந்து தவறாக வழிநடத்தினார்,” என்று அந்த அறிக்கையில் சோனம் வாங்சுக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“செப்டம்பர் 24-ஆம் தேதி, காலை 11:30 மணியளவில், வாங்சுக்கின் பேச்சுகளால் தூண்டப்பட்ட ஒரு கும்பல், உண்ணாவிரதப் போராட்டம் நடந்த இடத்தை விட்டு வெளியேறி, ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தையும், அரசு அலுவலகங்களையும் தாக்கியது. பிறகு அக்கும்பல் இந்த அலுவலகங்களுக்குத் தீ வைத்தது, பாதுகாப்புப் பணியாளர்களைத் தாக்கியது, மற்றும் ஒரு காவல்துறை வாகனத்தை எரித்தது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சோனம் வாங்சுக்கின் வேண்டுகோள்

லே நகரில் போராட்டக்காரர்கள் தீ வைத்த வாகனம் பற்றி எரியும் காட்சி

பட மூலாதாரம், Disney via Getty Images

படக்குறிப்பு, லே நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகம் முன்பு போராட்டக்காரர்கள் வாகனங்களுக்குத் தீ வைத்தனர்.

வன்முறையைப் பார்த்த சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டதாக அறிவித்தார். மேலும், இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

“இளைஞர்கள் வன்முறையை நிறுத்த வேண்டும். ஏனெனில் இது நமது இயக்கத்திற்குத் தீங்கு விளைவித்து, நிலைமையை மோசமாக்குகிறது” என்று அவர் கூறினார்.

“இது லடாக்கிற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் மிகவும் சோகமான நாள். ஏனென்றால், கடந்த ஐந்து ஆண்டுகளாக நாங்கள் பின்பற்றி வரும் பாதை அமைதியானதாக இருந்தது. நாங்கள் ஐந்து முறை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம், லேவிலிருந்து டெல்லிக்கு நடந்து சென்றோம், ஆனால் இன்று வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் காரணமாக அமைதியின் வழியில் நாம் சொல்ல வரும் விஷயம் தோல்வியில் முடியப்போவதாகத் தெரிகிறது” என்று வாங்சுக் கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை என்றால் என்ன?

அரசியலமைப்பின் பிரிவு 244 இன் கீழ் ஆறாவது அட்டவணை தன்னாட்சி நிர்வாகப் பிரிவுகளை உருவாக்குவதற்கு அனுமதியளிக்கிறது. அதாவது தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள். இவை மாநிலத்திற்குள் சட்டமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாகத்தில் குறிப்பிட்ட அளவு சுயாட்சியைக் கொண்டுள்ளன.

நிலம், காடு, நீர், விவசாயம், கிராம சபைகள், சுகாதாரம், காவல், திருமணம், விவாகரத்து, சமூக பழக்கவழக்கங்கள், சுரங்கம் போன்றவற்றில் சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை தன்னாட்சி மாவட்ட கவுன்சில்கள் உருவாக்கலாம்.

அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணை திரிபுரா, மேகாலயா, மிசோரம் மற்றும் அசாம் ஆகிய நான்கு வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பழங்குடிப் பகுதிகளின் நிர்வாகத்திற்கு பொருந்தும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin