பட மூலாதாரம், Getty Images
அது 1950-ஆம் ஆண்டு மார்ச் மாதம்.
‘ரேடியோ பாகிஸ்தானின்’ செய்தி வெளியான சில நிமிடங்களில், கராச்சியில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்து டெல்லிக்கு அவசர அழைப்பு வந்தது.
அந்த அழைப்பில், அப்போதைய இந்திய உள்துறை அமைச்சர் சர்தார் படேலுடன் ஒரு அவசர விஷயத்தைப் பற்றி விவாதிக்க இந்திய தூதர் ஸ்ரீ பிரகாஷ் காத்திருந்தார்.
“லயக் அலி விடுவிக்கப்பட்டாரா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் பிரகாஷ்.
“இல்லை,” என்று பதிலளித்தார் படேல்.
ஆனால், கராச்சியில் நடந்த ஒரு அதிகாரப்பூர்வ இரவு விருந்தில் லயக் அலி கலந்து கொண்டதாக ரேடியோ பாகிஸ்தான் செய்தி வெளியிட்டது என்று பிரகாஷ் கூறினார்.
அப்போதும் இந்திய அரசாங்கத்திற்கு என்ன நடந்தது என்பது புரியவில்லை.
நிஜாமின் அரசின் கடைசி பிரதமராக மிர் லயக் அலி பணியாற்றினார். ‘ஆபரேஷன் போலோ’ முடிந்தபின், இந்தியப் படைகள் அவரை ஹைதராபாத்தின் பேகம்பேட்டையில் வீட்டுக் காவலில் வைத்தன. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பிலிருந்து தப்பி அவர் தனது குடும்பத்துடன் நாட்டின் எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் சென்றுவிட்டார்.
“அவர் தப்பித்தது இந்திய அரசாங்கத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியிருந்தாலும், உலகின் பிற பகுதிகளுக்கு அது ஒரு வேடிக்கையான நிகழ்வாகவே தோன்றியது,” என்று ஹைதராபாத் வரலாற்றாசிரியரும், ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் தலைமைச் செயலாளருமான நரேந்திர லூதர் தனது Hyderabad: A Biography நூலில் எழுதியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
பொறியியல் பட்டம் பெற்ற மிர் லயக் அலி பின்னர் வெற்றிகரமான தொழிலதிபராக உயர்ந்தார். அவருக்கு அரசியலில் ஓரளவு ஆர்வம் இருந்தாலும், முழுமையான அரசியல் வாழ்க்கையைத் தேர்வு செய்ய அவர் விரும்பவில்லை.
‘ட்ராஜெடி ஆப் ஹைதராபாத் ‘ என்ற தனது புத்தகத்தில், நிஜாம் அரசாங்கத்திலும் பாகிஸ்தான் அமைச்சரவையிலும் சேர வந்த முந்தைய அழைப்புகளை நிராகரித்ததாக லயக் அலி எழுதுகிறார்.
ஆனால் கடைசி நிஜாம் மிர் உஸ்மான் அலி கானின் அழுத்தத்தால் 1947 நவம்பர் 30 அன்று லயக் அலி நிஜாம் அரசின் பிரதமராகப் பதவியேற்றார்.
‘ஆபரேஷன் போலோ’ முடியும் வரை, அதாவது 1948 செப்டம்பர் 17 வரை, அவர் சுமார் பத்து மாதங்கள் அந்தப் பொறுப்பில் இருந்தார்.
நிஜாம் அரசு வீழ்ச்சியின் விளிம்பில் இருந்த கடினமான சூழ்நிலையில் அவர் பிரதமராகப் பணியாற்றினார்.
இந்தியாவுடன் எந்த சூழ்நிலையிலும் நேரடி மோதலை தவிர்க்க வேண்டும் என்றும், நல்லுறவை உருவாக்க முயற்சிகள் தேவை என்றும் லயக் அலி எண்ணினார். இதுபற்றி தானும் நிஜாமும் ஒரே கருத்தைக்கு கொண்டிருந்ததாக லயக் அலி கூறியுள்ளார்.
அதே நேரத்தில், பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னாவுடன் நல்லுறவைப் பேணியிருந்தார். நிஜாமுடன் சேர்ந்து, ஹைதராபாத் சுதந்திர நாடாக இருக்க பாகிஸ்தான் உதவும் என லயக் அலி நம்பினார்.
பட மூலாதாரம், Getty Images
செப்டம்பர் 19, 1948 முதல் வீட்டுக் காவல்
ஹைதராபாத் பிரச்னையை ஐநா பாதுகாப்பு கவுன்சில் வரையிலும் கொண்டு சென்றவர் லயக் அலி. ஒரு பிராந்தியச் சிக்கல் உலகளவில் பேசப்படும் அளவுக்கு அவர் செயல்பட்டார்.
ஆனால், பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் தொடங்குவதற்கு முன்பே ‘ஆபரேஷன் போலோ’ முடிவுக்கு வந்துவிட்டது. ஹைதராபாத் ஒரு சுதந்திர நாடாக மாறும் என்ற அவரது கனவு நிறைவேறவில்லை.
1948 செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் லயக் அலி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அந்தக் காவல் ஒன்றரை ஆண்டுகள் நீடித்தது. இறுதியில், ஒரு நாள் காவலர்கள் கவனிக்காத தருணத்தைப் பயன்படுத்தி, அவர் தனது குடும்பத்துடன் எல்லையைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் சென்றார்.
“அன்று மாலை ஒரு ராணுவ அதிகாரி வந்து, மறுநாள் காலை என்னை அழைத்துச் செல்வதாகச் சொன்னார். ‘துப்பாக்கிச் சூடு நடத்த துருப்புகள் தயார் தானே?’ என்று நான் புன்னகையுடன் கேட்டேன்.
“மறுநாள் காலை, ராணுவ வாகனங்கள் என் வீட்டைச் சூழ்ந்தன. ஆனால் யாரும் உள்ளே நுழையவில்லை. நாள் முழுவதும் அதே சூழல் நிலவியது. மாலை அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். ஒருவேளை அது பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். மாதங்கள் கடந்தும் எனக்கு எதுவும் ஆகவில்லை. இறுதியில், ஒருநாள் தற்செயலாக, நான் தப்பிக்க முடிந்தது,” என்று லயக் அலி தனது ‘ட்ராஜெடி ஆப் ஹைதெராபாத் ‘ (Tragedy of Hyderabad) என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
பட மூலாதாரம், https://liberationhyderabad.org/gallery/operation-polo
கராச்சியில் லயக் அலி
ஹைதராபாத் வரலாற்றை விரிவாக ஆராய்ந்து எழுதிய நரேந்திர லூதர், லயக் அலி எவ்வாறு எல்லையைத் தாண்டி தப்பினார் என்பதைக் ‘ஹைதராபாத் வாழ்க்கை வரலாறு’ (‘Hyderabad Biography’) என்ற தனது நூலில் பதிவு செய்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பு அமலுக்கு வந்த பிறகு, தான் விடுவிக்கப்படுவோம் என்று லயக் அலி நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை.
அவரது வீட்டுக்குள் வந்து செல்லும் நபர்கள் மீதான பாதுகாப்புச் சோதனைகள் முன்பை விட தளர்ந்திருந்தன. இதனால் குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை வெளியேற்ற திட்டமிட்டனர்.
விமான நிலையங்களில் வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் ஆவணங்களைச் சரிபார்க்கும் செயல்முறையை அவர்கள் ஆய்வு செய்து, பாகிஸ்தானுக்குச் செல்லத் தேவையான ஆவணங்களைத் தயாரித்தனர்.
சில நாட்களுக்குப் பிறகு, லயக் அலி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அவரது மனைவி அடிக்கடி ஜன்னல்களில் திரைச்சீலைகள் பொருத்தப்பட்ட காரில் வெளியே சென்று அவருக்கு சிகிச்சை மற்றும் மருந்து வாங்கி வந்தார். இவை அனைத்தும் லயக் அலியை சில நாட்களில் வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கான ஏற்பாடாக இருந்தது.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, நெருங்கிய உறவினரின் திருமணம் விரைவில் நடக்கவிருக்கிறது என்ற சொல்லி, சில நாட்கள் வீடே பாடல், நடன நிகழ்ச்சிகளால் நிறைந்து இருந்தது.
இறுதியாக, 1950-ஆம் தேதி மார்ச் 3-ஆம் தேதி மருத்துவரிடம் மருந்து வாங்கச் செல்லும் காரில் தனது மனைவியின் இடத்தில் அமர்ந்து, லயக் அலி வீட்டுக் காவலிலிருந்து தப்பினார்.
பின்னர் குல்பர்கா ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் நண்பருடன் மும்பை சென்றடைந்தார். அங்கிருந்து ‘குலாம் அகமது’ என்ற புனை பெயரில், சாதாரண பயணியாக கராச்சிக்குச் செல்லும் விமானத்தில் ஏறினார்.
மறுநாள், லயக் அலியின் குழந்தைகள் ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதாகக் கூறி, நம்பள்ளியில் இருந்து மும்பைக்கு ரயிலில் புறப்பட்டனர்.
அதேநேரத்தில், லயக் அலியின் மனைவி, லயக் அலி வீட்டில் இருப்பதாகவும், அவரது தலையை ஒரு போர்வையால் மூடி, அவருக்கு மருந்து கொடுத்து, அவருக்கு சிகிச்சை அளித்ததாகவும் பாதுகாப்பு காவலர்களை நம்ப வைத்ததாக நரேந்திர லூதர் தனது “ஹைதராபாத் வாழ்க்கை வரலாறு (Hyderabad Biography)” என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
பட மூலாதாரம், https://liberationhyderabad.org/gallery/operation-polo
ஒன்றிணைந்த அரசியலமைப்பின் விதிகள்
மூன்றாவது நாளில், லயக் அலியின் மனைவி, துணியால் மறைக்கப்பட்ட கார் ஒன்றில் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டார். ஆனால் வழியிலேயே கார் பழுதடைந்து, ஓட்டுநர் தள்ளிக்கொண்டிருந்தார்.
அச்சமயம், அந்தப் பாதையில் சென்ற அப்போதைய காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) ஜெட்லி, இந்தக் காட்சியை கண்டு அவருக்கு உதவுவதற்காக தனது வாகனத்திலிருந்து இறங்கியதாக நரேந்திர லூதர் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
பின்னர், ஹைதராபாத் விமான நிலையத்தை வந்தடைந்த லயக் அலியின் மனைவி, அங்கிருந்து மும்பை சென்றார்.
அங்கு அவர்களது குழந்தைகளைச் சந்தித்து, பின்னர் கப்பலில் கடல் வழியாக கராச்சியை அடைந்தது லயக் அலியின் குடும்பம்.
இந்நேரத்தில், வீட்டுக் காவலை மீறிய குற்றச்சாட்டில் லயக் அலியின் சகோதரியும், அவரது அரபு பணியாளர் ஒருவரும், வேறு 10 பேரும் கைது செய்யப்பட்டனர்.
ஹைதராபாத்தில் முன்பிருந்த நிஜாம் அரசு இயற்றியிருந்த சட்டங்களின் கீழ் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், நிஜாம் அரசு ஒழிக்கப்பட்டு அதன் சட்டங்களும் ரத்து செய்யப்பட்டதால், இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கத்தக்கது அல்ல என்று அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
1950-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில், இந்திய அரசியலமைப்பின் பிரிவு 22 அடிப்படையில் லயக் அலி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தது சட்டவிரோதமானது என்றும், அவரை விடுவித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் அல்ல என்றும் தீர்ப்பளித்தது.
இந்திய அரசியலமைப்பின் புதிய விதிகள், லயக் அலி மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் மீதான வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வழிவகுத்தன.
பாகிஸ்தானுக்குச் சென்ற லயக் அலி, அங்குள்ள அரசாங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த ஹைதராபாத் மக்களின் நலனுக்காக, கடைசி நிஜாமின் நிதியுதவியுடன் கராச்சியில் அமைக்கப்பட்ட ஹைதராபாத் அறக்கட்டளையின் செயல்பாடுகளிலும் அவர் ஈடுபட்டார் எனக் கூறப்பட்டது.
பின்னர் 1971-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி நியூயார்க் நகரில் மரணமடைந்த லயக் அலி, மதீனாவில் அடக்கம் செய்யப்பட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு