வனுவாட்டூ 80க்கும் மேற்பட்ட தீவுகளை உடைய ஒரு நாடாகும். இந்த நாடு ஒரு காலத்தில் ‘நியூ ஹெப்ரைட்ஸ்’ என்று அழைக்கப்பட்டது. இத்தீவுகள் 1980-ஆம் ஆண்டு, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் அடைந்தது.
பிரபல தொழிலதிபர் லலித் மோதி, வனுவாட்டூ நாட்டின் குடியுரிமை பெற்றதால் இந்த நாடு செய்திகளில் இடம்பிடித்தது. ஆனால், இதன் பிறகு லலித் மோதிக்கு வழங்கப்பட்ட குடியுரிமையை திரும்பப் பெறுவதாக அந்நாட்டின் பிரதமர் அறிவித்தார்.
லலித் மோதிக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வனுவாட்டூ நாட்டின் பிரதமர் ஜாதம் நாபட் உத்தரவிட்டதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
“லலித் மோதிக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டை ரத்து செய்யும் செயல்முறையை உடனடியாகத் தொடங்க குடியுரிமை துறை ஆணையருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்”, என்று பிரதமர் ஜாதம் நபாட் கூறியுள்ளார்.
“லலித் மோடியின் பாஸ்போர்ட் விண்ணப்பம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது, அப்போது, எந்த குற்றத்துக்கான ஆதாரமும் கிடைக்கவில்லை”
2009 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் தொலைக்காட்சி உரிமங்கள் தொடர்பான ஒப்பந்தத்தின் விதிகளை மீறியதாக லலித் மோதி மீது விசாரணை நடத்தப்பட்டது. 2010 ஆம் ஆண்டு மே மாதத்தில், அவர் லண்டனுக்குச் சென்றார். இதையடுத்து அப்போது ஐபிஎல்-இன் தலைவராக இருந்த லலித் மோதியை, பிசிசிஐ அந்த பதவியிலிருந்து நீக்கியது.
லலித் மோதி, தனது இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க விரும்பி லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்த தகவலை இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
உரிய விதிகள் மற்றும் நடைமுறைகளின் கீழ் இந்த விண்ணப்பம் ஆராயப்படும் என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியிருந்தார்.
“லலித் மோதி வனுவாட்டூ நாட்டின் குடியுரிமையைப் பெற்றுள்ளார் என்பதையும் நாங்கள் அறிந்துள்ளோம். சட்டப்படி அவர் மீதான வழக்கை நாங்கள் தொடர்வோம்” என்றார்.
லலித் மோதி தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடான வனுவாட்டூவின் குடியுரிமையை பெற்றுள்ளார் என்பதை அவரது வழக்கறிஞர் மஹ்மூத் அப்தியும் உறுதிப்படுத்தினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, லலித் மோதி
வனுவாட்டூ நாடு எங்கே இருக்கிறது?
இந்த நாடு 80 சிறிய தீவுகளின் தொகுப்பாகும். பெரும்பாலான தீவுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் சில தீவுகளில் சமீபத்தில் தீப்பிழம்புகள் வந்த, மிண்டும் தீப்பிழம்புகள் வர வாய்ப்புள்ள எரிமலைகளும் உள்ளன. வனுவாட்டூவின் பெரும்பகுதி மலைகளால் ஆனது.
மேலும் இங்கு வெப்பமண்டல மழைக்காடுகள் அதிகமாக காணப்படுகின்றன. இந்தப் பகுதி பூகம்பங்கள் மற்றும் பேரலைகளுக்கு ஆளாகின்றது. 2015 ஆம் ஆண்டில், இந்த நாடு ‘பாம்’ புயலால் பாதிக்கப்பட்டது.
இந்த புயலால் வனுவாட்டூ நகரில் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த நாட்டின் தீவுகளில் வாழும் பெரும்பாலான மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். இவர்களின் முக்கிய வாழ்வாதாரம் விவசாயம் ஆகும்.
பழைய பழக்கவழக்கங்களையும், உள்ளூர் மரபுகளையும் இன்னும் மக்கள் பின்பற்றி வருகின்றனர். பெண்களின் சமூக அந்தஸ்து பொதுவாக ஆண்களை விட குறைவாகவே உள்ளது. மேலும் அவர்களுக்கு கல்விக்கான வாய்ப்புகளும் குறைவாகவே இருக்கின்றது.
பஞ்ஜீ ஜம்பிங்
தற்போது, உலகின் பிரபலமான சாகச விளையாட்டாக பஞ்ஜீ ஜம்பிங் இருக்கிறது. இந்த விளையாட்டு வனுவாட்டூவில் உள்ள ஒரு மத சடங்கில் இருந்து ஈர்க்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
பஞ்ஜீ ஜம்பிங் போல தோற்றமளிக்கும் இந்த சடங்கு ‘நங்கோல்’ என்று அழைக்கப்படுகிறது.
1990களில் இருந்து வனுவாட்டூவின் அரசியல், நிலையற்றதாகவே உள்ளது. இந்த காலகட்டத்தில், பல சர்ச்சைக்குரிய கூட்டணி அரசாங்கங்கள் உருவாக்கப்பட்டன. மேலும் அந்நாட்டின் பிரதமர்கள் அடிக்கடி மாறினார்.
பட மூலாதாரம், Getty Images
வனுவாட்டூ சிறப்பம்சங்கள்
தலைநகரம்: போர்ட் விலா
பரப்பளவு: 12,189 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை: 3,07,800
மொழிகள்: பிஸ்லாமா, ஆங்கிலம், பிரெஞ்சு
மக்களின் ஆயுட்காலம்: 68 ஆண்டுகள் (ஆண்) 72 ஆண்டுகள் (பெண்)
வனுவாட்டூ வின் தலைவர் யார்?
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், நிகேனிகே வுரோபராவு வனுவாட்டூவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தாலிஸ் ஒபேட் மோசஸ் என்பவருக்கு பிறகு அவர் அதிபராக பொறுப்பேற்றார்.
அவர் ஒரு தொழில்முறை தூதரக அதிகாரி. அவர் பல தூதரக மற்றும் அரசாங்க பதவிகளை வகித்துள்ளார்.
இந்த நாட்டில், அதிபர் பதவி ஒரு சம்பிரதாய பதவியாக கருதப்படுகிறது.
இந்த நாட்டின் பிரதமர் இஸ்மாயில் கல்சாகோ ஆவார். 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு, நவம்பர் மாதத்தில் அப்போதைய பிரதமர் பாப் லாஃப்மேனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதன் பின்னர் இஸ்மாயில் கல்சாக்கோ பிரதமராக நியமிக்கப்பட்டார்.
வனுவாட்டூவில் உள்ள ஒரே தொலைக்காட்சி சேனல், ரேடியோ பிரான்ஸ் ஓவர்சீஸ் (RFO) உதவியுடன் அமைக்கப்பட்டது. இந்த சேனல் பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழியில் ஒளிபரப்பப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், நிகேனிகே வுரோபராவு வனுவாட்டுவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வனுவாட்டூவின் வரலாறு என்ன?
இந்த நாட்டில், முதன் முதலில் மனித நாகரீகம் கிமு 500 இல் தொடங்கியதாக கருதப்படுகிறது. 1606 ஆம் ஆண்டு, ஐரோப்பிய பயணிகள் முதல் முறையாக இந்த தீவுகளை அடைந்தனர். 1774 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் ஆய்வாளர் கேப்டன் குக் இந்த தீவுகளுக்கு ‘நியூ ஹெப்ரைட்ஸ்’ என்று பெயரிட்டார்.
1800களின் முற்பகுதியில், ஆயிரக்கணக்கான வனுவாட்டூ மக்கள் கடத்தப்பட்டு பிஜி நாட்டின் கரும்பு மற்றும் பருத்தி தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். அவர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்துக்கும் அதிக எண்ணிக்கையில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
1906 ஆம் ஆண்டில், பிரிட்டன் மற்றும் பிரான்ஸின் கூட்டுக் கட்டுப்பாட்டின் கீழ் வனுவாட்டூ நாடு வந்தது. 1980 ஆம் ஆண்டில், இது ஒரு சுதந்திர நாடாக மாறியது.