ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி)கட்சியின் தேசியத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், தனது மூத்த மகனும் எம்.எல்.ஏ.வுமான தேஜ் பிரதாப் யாதவை கட்சியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கியுள்ளார்.
தனது மூத்த மகனின் (தேஜ் பிரதாப்) “செயல்பாடுகள், பொது நடத்தை மற்றும் பொறுப்பற்ற செயல்கள் எங்கள் குடும்ப விழுமியங்கள் மற்றும் மரபுகளுக்கு ஏற்ப இல்லை” என்று ஞாயிற்றுக்கிழமையன்று லாலு பிரசாத் யாதவ் தனது சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சனிக்கிழமையன்று, தேஜ் பிரதாப் யாதவின் பேஸ்புக் கணக்கிலிருந்து ஒரு படம் வெளியிடப்பட்டது. இருப்பினும், அந்த புகைப்படம் சில மணி நேரங்களுக்குப் பிறகு நீக்கப்பட்டது.
இந்த நிலையில், தனது சமூக ஊடக கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும், எடிட் செய்யப்பட்ட புகைப்படம் மூலம் தன் மீது அவதூறு பரப்பப்படுவதாகவும் சனிக்கிழமை இரவு தனது எக்ஸ் பக்கத்தில் தேஜ் பிரதாப் யாதவ் பதிவிட்டார்.
பிகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தேஜ் பிரதாப்பின் தம்பியுமான தேஜஸ்வி யாதவ், “தேஜ் பிரதாப் ஒரு முதிர்ந்த நபர். அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான முடிவுகளை எடுக்க அவருக்கு உரிமை உண்டு” என்று கூறியுள்ளார்.
லாலு பிரசாத் யாதவ் என்ன சொன்னார்?
இனிமேல் தேஜ் பிரதாப் யாதவ் கட்சியிலும் குடும்பத்திலும் ஒரு அங்கமாக இருக்க மாட்டார் என லாலு பிரசாத் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டார்
”மூத்த மகனின் செயல்பாடுகள், பொது நடத்தை மற்றும் பொறுப்பற்ற செயல் ஆகியவை குடும்ப விழுமியங்கள் மற்றும் மரபுகளுக்கு ஏற்ப இல்லை. எனவே நான் அவரை கட்சியிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் வெளியேற்றுகிறேன். இனிமேல், அவருக்கு கட்சியிலும் குடும்பத்திலும் எந்தப் பங்கும் இருக்காது. அவர் கட்சியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கப்படுகிறார்” என்று லாலு பிரசாத் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.
”தனிப்பட்ட வாழ்க்கையின் நல்லது கெட்டது பற்றி அவருக்கு தெரியும். அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ள விரும்புவோர் தங்கள் சொந்த விருப்பப்படி முடிவெடுக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, லாலு யாதவ் தனது மகன் தேஜ் பிரதாப் யாதவை கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கியுள்ளார்.
தேஜஸ்வி யாதவ் என்ன சொன்னார்?
தேஜ் பிரதாப் யாதவின் தம்பியும் பிகார் எதிர்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவும் இது குறித்து பேசியுள்ளார்.
” கட்சித்தலைவரும் என் தந்தையுமான லாலு பிரசாத் யாதவ் எடுத்த முடிவுடன் உடன்படுகிறோம். அரசியலும் குடும்பமும் வெவ்வேறு. அவர் என் மூத்த சகோதரர். தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக அவர் எடுத்த முடிவுகள் அவருக்கே உரியது” என ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய தேஜஸ்வி யாதவ் கூறினார்.
சனிக்கிழமை நடந்த சம்பவம் குறித்து ஊடகங்கள் மூலம் தான் அறிந்ததாகத் தேஜஸ்வி யாதவ் கூறினார்.
“அவர் வாழ்க்கையில் என்ன செய்கிறார் என்பது எங்களுக்குத் தெரியாது. ஊடகங்கள் மூலமாகத்தான் இதைப் பற்றி நாங்கள் அறிந்தோம்” என்று அவர் கூறினார்.
தேஜ் பிரதாப் தொடர்பான லாலுவின் முடிவு குறித்து அவரது சகோதரி ரோகிணி ஆச்சார்யாவும் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார் .
“தங்கள் மனசாட்சியைக் கைவிட்டு, ஒழுக்கமான நடத்தை மற்றும் குடும்ப கௌரவத்தின் எல்லைகளைத் திரும்பத் திரும்பத் தாண்டும் தவறை செய்பவர்கள், தங்களைத் தாங்களே விமர்சனத்திற்கு ஆளாக்குகிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த முடிவில் தனது தந்தையுடன் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தேஜ் பிரதாப் யாதவ் மற்றும் தேஜஸ்வி யாதவ்
தேஜ் பிரதாப் யாதவ் யார்?
பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவியின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ். தேஜ் பிரதாப் யாதவ் பிகாரின் முன்னாள் அமைச்சர் ஆவார்.
2015 ஆம் ஆண்டில், தேஜ் பிரதாப் யாதவ் பிகாரின் மஹுவா சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பிறகு, நிதிஷ் குமார் தலைமையிலான அரசில் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரானார்.
2020 ஆம் ஆண்டு, அவர் ஹசன்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2022 ஆம் ஆண்டில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளத்துடன்
கூட்டணி அமைத்தபோது, தேஜ் பிரதாப் யாதவ் மீண்டும் நிதிஷ்குமார் அரசாங்கத்தில் சுற்றுச்சூழல் அமைச்சரானார்.
தேஜ் பிரதாப் யாதவ் சர்ச்சைகள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தேஜ் பிரதாப் யாதவ் பிகாரின் முன்னாள் அமைச்சர் ஆவார்.
தேஜ் பிரதாப் யாதவ் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல.
இந்த ஆண்டு, ஹோலி பண்டிகையின்போது தேஜ் பிரதாப்பின் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது . இந்த வீடியோவில், தேஜ் பிரதாப் போலிஸ் காவலரான தீபக் குமாரை நடனமாடச் செல்கிறார்.பின்னர் காவலர் தீபக் குமார் இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த வீடியோ வைரலான பிறகு, தேஜ் பிரதாப் குறித்து பாஜக கேள்விகளை எழுப்பியதுடன் லாலு பிரசாத் யாதவையும் குறிவைத்தது.
ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் கூட்டணிக் கட்சியான காங்கிரசும் இந்த வீடியோவைக் கண்டித்தது..
தேஜ் பிரதாப் லாலுவின் மூத்த மகன், ஆனால் அவர் அவரது அரசியல் வாரிசு அல்ல என்பது 2020 பிகார் சட்டமன்றத் தேர்தலின்போது தெளிவானது.
ஆனால் தேஜ் பிரதாப் கட்சியில் குறிப்பிடத்தக்க அந்தஸ்து இல்லாதது குறித்து அடிக்கடி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி, தனது முக்கியத்துவத்தைப் பற்றி கூறி வந்தார்
2019 மக்களவைத் தேர்தலுக்குச் சற்று முன்பு, தேஜ் பிரதாப் யாதவ், ‘லாலு ராப்ரி மோர்ச்சாவை’ அமைப்பதாக அறிவித்தார் . இருப்பினும், அவர் ராஷ்ட்ரிய ஜனதா தளத்திலிருந்து பிரிந்து செல்லவில்லை. ஆனால் அவர் ஜெகனாபாத் மற்றும் ஷிவ்ஹர் மக்களவைத் தொகுதிகளில் தனது வேட்பாளர்களை நிறுத்துவதாக அறிவித்திருந்தார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, “என்னை முட்டாள் என்று கருதுபவர்கள் முட்டாள்கள்” என்று அவர் கூறியிருந்தார். அவரது கருத்து கட்சியில் பிளவு இருப்பதைக் காட்டியது.
“நான் கிருஷ்ணர், தேஜஸ்வி அர்ஜுனன். கிருஷ்ணர் இல்லாமல் அர்ஜுனனால் எதையும் சாதிக்க முடியாது” என்று இந்த ஆண்டு பாட்னாவில் நடந்த மாநில அளவிலான கட்சிக் கூட்டத்தில் கூறியிருந்தார் தேஜ் பிரதாப்.
தேஜஸ்வி முதல்வர் வேட்பாளராக இருப்பதில் தனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று தேஜ் பிரதாப் கடந்த காலங்களில் கூறியிருந்தார். ஆனால் தான் ஒரு கிங்மேக்கராக இருப்பேன் எனவும் அவர் கூறியிருந்தார்.