லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்திற்கு மேற்கில் உள்ள பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியின் சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்கள், ஜனவரி 7ஆம் தேதி காலையில் தங்கள் வீடுகளுக்கு எதிரே உள்ள மலைகளில் இருந்து புகை எழுவதைக் காணத் தொடங்கினர்.
அப்பகுதியில் அதிவேகமாக தீ பரவத் தொடங்கியது.
ஏற்கெனவே 10 ஏக்கர் அளவில் பரவத் தொடங்கிய காட்டுத்தீ, கிட்டத்தட்ட 25 நிமிடங்களில் 200 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் பரவியது.
அடுத்த சில மணிநேரங்களில் வீடுகள், திரையரங்குகள், உணவகங்கள், கடைகள், பள்ளிகள் என எல்லா இடங்களையும் தீ சூழ்ந்து கொண்டது. ஜனவரி 9ஆம் தேதி அதிகாலையில், பாலிசேட்ஸ் பகுதியில் இருந்து தொடங்கிய தீ, சுமார் 17,234 ஏக்கர் பரப்பளவு வரை பரவியது.
அதைத் தொடர்ந்து லாஸ் ஏஞ்சலிஸ் பகுதி முழுவதும் மற்ற தீப் பிழம்புகள் வெடித்தன.
இது லாஸ் ஏஞ்சலிஸின் வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்துகளில் ஒன்றாக மாறியது என்று அக்குவெதர் ( AccuWeather) நிறுவனத்தின் தலைமை வானிலை ஆய்வாளர் ஜோனாதன் போர்ட்டர் கூறுகிறார். இந்தத் தீயால் ஏற்பட்ட சேதத்தின் ஆரம்ப மதிப்பீடு 52-57 பில்லியன் டாலர் என அறியப்படுகிறது.
மிகத் தீவிரமாகவும் அதிவேகமாகவும் தீ பரவியதற்கான ஐந்து காரணங்கள் என்ன? இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.
விரைவான எரிபொருள் வளர்ச்சி
எல் நினோவுடன் தொடர்புடைய 2024ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் ஏற்பட்ட அதீத மழைப்பொழிவு, மிகப்பெரிய அளவிலான தீ விபத்துகளுக்கு வழிவகுத்ததாக அறியப்படுகிறது.
பொதுவாக, மழை பெய்வது எரிந்துகொண்டிருக்கும் நெருப்புக்கு மோசமான விஷயமாக கருதப்படுகிறது. தீ எரியும்போது மழை பெய்வது தீப்பிழம்புகளைக் கட்டுப்படுத்தவும் அணைக்கவும் உதவுகிறது,” என்கிறார் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் தீயணைப்பு அறிவியல் ஆய்வாளரான ரோரி ஹாடன்.
ஆனால், காட்டுத்தீ ஏற்படுவதற்கு முந்தைய காலத்தில் மழை பெய்யும்போது தாவரங்கள் நன்கு வளர்ந்துவிடும். அவை காட்டுத்தீயிற்கு நல்ல எரிபொருளாகிவிடுகின்றன.
“மழைக்காலத்தில் தாவரங்கள் நன்கு வளர்ந்த பிறகு, வறண்ட பருவநிலையில் அவை காய்ந்துவிடும். அதனால் காட்டுத்தீ ஏற்படும்போது அவை நல்ல எரிபொருளாகச் செயலாற்றுகின்றன. அது தீயை மேலும் தீவிரமாக்கும்” என்று விளக்குகின்றார் ஹாடன்.
கடந்த 2024இல் நிலவிய ஈரமான மற்றும் அதைத் தொடர்ந்து வந்த வறண்ட பருவநிலை “காட்டுத்தீ பரவுவதற்கான சரியான சூழ்நிலையை” உருவாக்கியதாக பிரிட்டனின் சுற்றுச்சூழல் மற்றும் நீரியல் மையத்தின் காட்டுத்தீ விஞ்ஞானி மரியா லூசியா ஃபெரீரா பர்போசா ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
மிகவும் ஈரமான பருவநிலையில் இருந்து மிகவும் வறண்ட காலநிலைக்கு மாறுவது “ஹைட்ரோக்ளைமேட் விப்லாஷ்” என்று அழைக்கப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து, உலகளவில் 31 முதல் 66 சதவீதம் வரை ஹைட்ரோகிளைமேட் விப்லாஷ் எனப்படும் இந்த காலநிலை மாற்றத்தின் ஆபத்து அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று கண்டறிந்துள்ளது.
சான்டா அனா எனும் ‘ஹேர் டிரையர்’ காற்று
லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் பலத்த காற்று வீசியதால் தீயின் போக்கு தீவிரமடைந்தது. பலத்த காற்று, லாஸ் ஏஞ்சலிஸின் மேற்கில் உள்ள மலைப் பகுதிகளில் தொடங்கிய தீப்பிழம்புகளை வேகமாக நகரும் காட்டுத்தீயாக மாற்றியது.
இந்த காட்டுத்தீ வறண்ட தாவரங்கள் வழியாக நகர்ந்து இறுதியில் சான்டா மோனிகாவுக்கு அருகிலுள்ள பசிபிக் பாலிசேட்ஸின் சுற்றுப்புறத்தை மூழ்கடித்தது. காற்று அடிக்கடி சூடாகவும் வறண்டதாகவும் இருக்கும் என்பதால் தாவரங்களில் உள்ள ஈரப்பதம் வெளியேற அந்தத் தன்மை காரணமாக இருக்கலாம்.
ஹாடனின் கூற்றுப்படி, “தீ பரவுவதற்குக் காரணமாகும் ஒரு பொருள், எரிக்கத் தேவைப்படும் ஒரு பொருள் மற்றும் காற்றில் இருந்து பெறப்படும் ஆக்ஸிஜன்” ஆகியவை காட்டுத்தீ பரவுவதற்கு மூன்று முக்கியக் காரணிகளாகும்.”
“ஆனால், இந்தக் குறிப்பிட்ட தீயின் தீவிரம் கலிஃபோர்னியா பாலைவனத்தில் இருந்து வரும் அதிவேகக் காற்றால் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தீப்பிழம்புகளின் பரவல் கணிசமாக அதிகரித்தது” என்று தீ பரவிய விதம் குறித்து ஹேடன் விவரித்தார்.
வலுவான மற்றும் வறண்ட சான்டா அனா அல்லது ஃபோன் காற்று எதிர்பாராத விதமாக காட்டுத்தீயை ஏற்படுத்தலாம்.
“இந்தக் காற்று மிக மிக அதிகமாக வறண்ட தன்மை கொண்டவை. அவை அதிவேகமாக நகர்வதால், தீ வேகமாகப் பரவுவது எளிதாகிறது” என்று ஹேடன் குறிப்பிடுகிறார்.
மேலும் பேசிய அவர், “நூறு மைல் [160 கிமீ/ம] வேகத்தில் காற்று வீசுவதை நாங்கள் பார்த்துள்ளோம். அது தீப்பிழம்புகளை தீவிரப்படுத்தி, நிலப்பரப்பு முழுவதும் தீ வேகமாகப் பரவ வழி செய்கிறது” என்று அதன் காரணத்தை விளக்கினார் ஹேடன்.
சில சந்தர்ப்பங்களில், காற்றுப் புயல்கள் தீ ஏற்படக் காரணமாக இருக்கலாம். பலத்த காற்றால் மின்கம்பிகள் இடிந்து விழும்போது, மின் கம்பிகள் உலர்ந்த தாவரங்களின் மீது விழுந்து தீ பரவ வாய்ப்பாக அமைகிறது.
தீப்பிழம்புகள்
இந்தக் காற்று தீயைப் பரப்புவது மட்டுமல்லாமல், தீப்பிழம்புகளையும் எடுத்துச் செல்கிறது.
ஹேடனின் கூற்றுப்படி, இந்த தீப்பிழம்புகள் எரியக்கூடிய பொருட்களின் மீது பரவும்போது, அந்த இடங்களிலும் புதிதாக தீ பற்றிக்கொள்ளும் அபாயம் இருக்கும். ஆகவே காட்டுத்தீயால் ஏற்படும் இழப்புகளுக்கு முதன்மைக் காரணமாக, தீப்பிழம்புகள் உள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது.
“சாலைகள் அல்லது கட்டடங்கள் உள்ள வழியில் தீப்பிழம்புகள் வருகின்றன. ஆனால் எதுவும் இந்த தீப்பொறிகளை நிறுத்தாது, அவை தொடர்ந்து பயணிக்கின்றன” என்கிறார் ஹேடன்.
எரியும் தாவரங்களில் இருந்து தீப்பிழம்புகளை எடுக்கும் காற்று அவற்றை முன்னோக்கிக் கொண்டு செல்கிறது. இந்தப் பிழம்புகள் ஒரு சில மீட்டர்கள் முன்னதாகவே தீப்பிடித்து, புதிய பொருட்களைப் பற்ற வைக்கலாம் அல்லது பல மைல்கள் பயணித்து, தொலைவில் உள்ள புதிய இடத்தில் தீ பரவலைத் தூண்டலாம்.
“பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணிக்கும் தீப்பிழம்புகள், வீடுகளைச் சுற்றியுள்ள பிளவுகளில் அல்லது அலங்காரத் தாவரங்களில் இறங்குவது மற்றும் வீடுகளை எரிக்கத் தொடங்குவது பற்றிய செய்திகள்” உள்ளதாகவும் ஹேடன் குறிப்பிடுகிறார்.
ஒரு வீட்டில் தீப்பிழம்பு தீயை ஏற்படுத்தினால், தீயணைப்புத் துறையினர் அதை அணைக்க முடியும். “ஆனால் பிரச்னை என்னவென்றால், பல்லாயிரக்கணக்கான வீடுகள் பெரும்பாலும் இந்தத் தீப்பிழம்புகளால் ஒரே நேரத்தில் பற்ற வைக்கப்படுகின்றன. பின்னர் ஒவ்வொரு வீடும் அதிக தீப்பிழம்புகளை உருவாக்குகிறது” என்று ஹேடன் கூறுகிறார்.
“எனவே இந்த தீப்பொறிகள் காற்றினால் கொண்டு செல்லப்படுவதால் தொடர் விளைவுகள் என்றழைக்கப்படும் டோமினோ விளைவை உருவாக்குவதாக” விளக்குகிறார் ஹேடன்.
தீப்பிழம்புகள் சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்பதோடு மட்டுமின்றி, அது பயணிக்கும் பாதையில் உள்ள மக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
பிபிசியின் அமெரிக்க பங்குதாரரான சிபிஎஸ் நியூஸிடம், “தீப்பிழம்பு ஒரு சுழல் போல் இருந்தது, அங்கு ஆக்சிஜனே இல்லை” என்று அந்தச் சம்பவத்தை விவரித்தார் அலெக் கெல்லிஸ். தீயினால் அவரது காதலியின் வீடும் பாதிக்கப்பட்டுள்ளது.
“எனது காரை அடைந்து தப்பிக்க முடியாத அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாக இருந்தது” என்கிறார் அலெக் கெல்லிஸ்.
மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள்
இந்தப் பகுதியின் மலைப்பாங்கான நிலப்பரப்பு காட்டுத்தீயால் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
இதனால், “தீ மிக வேகமாக மேல்நோக்கிப் பரவும்,” என்று ஹேடன் குறிப்பிடுகிறார்.
“பள்ளத்தாக்குகள், மலைகள் போன்ற நிலவியல் அம்சங்கள், தீயின் தீவிரமான செயல்பாடுகளை அதிகரிக்கலாம். இவ்வாறான நிலவியல் அமைப்புகள், பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் தீயணைப்பு முறைகளைப் பயனற்றதாக மாற்றும் சூழ்நிலைகளை உருவாக்கலாம். அதனால் நேரடியாக தீயை எதிர்த்துப் போராடுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகிவிடும்” என்கிறார் ஹேடன்.
இந்த நிலவியல் அமைப்பு, தீ பரவும் அபாயத்தை அதிகரிப்பது மட்டுமின்றி, தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறுவதை மேலும் கடினமாக்குகிறது. பாலிசேட்ஸ் பகுதியில் உள்ள சாலைகள், குறுகிய மலைப்பாதையில் அமைந்துள்ளதால், அங்கிருந்து வெளியேற முயலும் மக்களுக்குக் கூடுதல் சவால்கள் உள்ளன.
காலநிலை மாற்றம்
காட்டுத்தீ விபத்துகள் ஏற்பட்ட இந்தக் குறுகிய காலத்திற்குள், காலநிலை மாற்றம் தீ விபத்துகளுக்கு எவ்வளவு தூரம் பங்களித்தது என்பதை நிர்ணயிப்பது மிக விரைவான செயல் என்றாலும், உலகளவில் மோசமான காட்டுத்தீ ஏற்பட, காலநிலை மாற்றம் குறிப்படத் தகுந்த காரணமாக உள்ளது.
அதிகளவில் காட்டுத்தீ விபத்துகள் ஏற்படுவதற்கு வானிலை மாற்றம் வழிவகுத்து வருகிறது. மேலும் காலநிலை மாற்றம் இந்தச் சூழலை மிகவும் கடுமையானதாக மாற்றுவதாக பிபிசி செய்திக்காக மாட் மெக்ராத் தெரிவிக்கிறார்.
காலநிலை மாற்றம் என்பது வெப்பநிலை அதிகரிப்பது மட்டுமல்ல. மாறாக வானிலை உச்சநிலைகளால் ஏற்படும் கடுமையான விளைவுகளையும் உள்ளடக்கியதுதான் என்று ஹேடன் கூறுகிறார்.
“காலநிலை மாற்றம் என்பது வானிலை வெப்பமடைவது போன்று, வலுவான காற்று மற்றும் அதிக மழை போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளை உருவாக்குவதும் ஆகும்.
மறுபுறம் இது தாவர வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். இதன் விளைவாக, நாம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை எதிர்கொள்கிறோம். வானிலை வெப்பமாகவும் வறண்டதாகவும் மட்டுமின்றி ஈரமாகவும் காற்றாகவும் உருமாறுகிறது. இந்த மாற்றங்களின் கலவையே எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களை வடிவமைக்கும்,” என்று ஹேடன் விளக்குகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.