0
அமெரிக்கா – லாஸ் ஏஞ்சல்ஸில் மீண்டும் காட்டுத்தீ பரவியமையால் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இதே பகுதியில் சமீபத்தில் தான் இரண்டு மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், தற்போது மீண்டும் காட்டுத்தீ பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
காட்டுத்தீ கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குள் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது. மேலும், தீ அதிக இடங்களுக்கு பரவும் என்று தெரிகிறது.
புதிதாக பரவி வரும் காட்டுத்தீ காரணமாக சாண்டா கிளாரிட்டா அருகில் அமைந்துள்ள ஏரியை சுற்றி வசிக்கும் 31 ஆயிரம் பேரை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹியூஸ் தீ என்று அழைக்கப்படும் புதிய தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் துறையைச் சேர்ந்த ராபர்ட் ஜென்சன் வலியுறுத்தினார்.
ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் தீ பரவிய இடத்தில் தண்ணீர் மற்றும் தீயை தடுக்கும் மருந்துகளை தீயில் ஊற்றிவருகின்றன.
லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி தீயணைப்புத் துறை மற்றும் ஏஞ்சல்ஸ் தேசிய வனப்பகுதியைச் சேர்ந்த குழுவினரும் தரையில் இருந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.