ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவிற்கு சென்ற ஒரு கொகுசு கப்பல், அதில் பயணித்த மூதாட்டி ஒருவரை அங்கேயே விட்டுவிட்டு கிளம்பிவிட்டது. அதன் பிறகு அந்த மூதாட்டி தீவில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
லிசார்ட் தீவிற்கு பயணிகளை அழைத்துச் சென்ற ‘கோரல் அட்வென்ச்சர்’ என்ற கப்பலில் 80 வயதான சுசான் ரீஸ் பயணித்துள்ளார். இது குறித்துப் பேசியுள்ள சுசான் ரீஸின் மகள், “கப்பல் நிர்வாகத்தின் கவனக்குறைவு மற்றும் அவர்களுக்கு அடிப்படை அறிவு இல்லாததே” தனது தாயின் மரணத்திற்குக் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து ‘கோரல் அட்வென்ச்சர்’ கப்பலின் ’60 நாள்’ பயணம் நிறுத்தப்பட்டுள்ளது.
“சுசான் ரீஸின் துயர மரணம் மற்றும் அதற்கு முன்னர் கப்பலில் கண்டறியப்பட்ட இயந்திர சிக்கல்கள் காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோரல் அட்வென்ச்சர் கப்பலில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு இந்த விஷயம் புதன்கிழமை அன்று தெரிவிக்கப்பட்டது” என கப்பல் நிறுனவனமான கோரல் எக்ஸ்பெடிஷன்ஸ்-இன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஃபைஃபீல்ட் தெரிவித்துள்ளார்.
“பயணிகளுக்கு டிக்கெட்டிற்கான முழுப் பணமும் திரும்ப வழங்கப்படும் என்றும், தனி விமானங்கள் மூலம் பயணிகளை திருப்பி அனுப்புவதற்கான பணிகளை கோரல் எக்ஸ்பெடிஷன்ஸ் நிறுவனம் ஒருங்கிணைத்து வருவதாகவும்” அவர் ஒரு அறிக்கை மூலம் கூறியுள்ளார்.
பட மூலாதாரம், Supplied
படக்குறிப்பு, சுசான் ரீஸ்
என்ன நடந்தது?
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (அக்டோபர் 26) கிரேட் பேரியர் ரீஃபில் உள்ள லிசார்ட் தீவில் உயிரிழந்த நிலையில் சுசான் ரீஸ்-இன் உடல் கண்டெடுக்கப்பட்டது.
அதற்கு முந்தைய நாள் சனிக்கிழமையன்று, அவர் தனது சக பயணிகளுடன் தீவில் நடைபயணம் மேற்கொண்டிருந்தார். ஆனால் சில மணிநேரங்களுக்குப் பிறகு கப்பல் புறப்பட்டபோது அதில் அவர் இல்லை என்பதை யாரும் அறியவில்லை.
கோரல் அட்வென்ச்சர் கப்பல், தீவில் இருந்து கிளம்பும்போது “என் அம்மா இல்லாமல் கிளம்பியது என்ற செய்தி அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிப்பதாக” உயிரிழந்தவரின் மகளான கேத்தரின் ரீஸ் கூறியுள்ளார்.
தனது தாய் சுறுசுறுப்பானவர், ஆரோக்கியமானவர், தோட்டப் பராமரிப்பில் ஆர்வமுள்ளவர் மற்றும் காட்டுப்பகுதிகளில் நடப்பதில் ஆர்வம் கொண்டவர் என்று அவர் விவரித்தார்.
“எங்களுக்குச் சொல்லப்பட்ட சில விஷயங்களிலிருந்து, கவனக்குறைவு மற்றும் அடிப்படை அறிவு இல்லாததே இந்த சம்பவத்திற்கு காரணம் என தெரிகிறது,” என்று அவர் கூறினார்.
பட மூலாதாரம், Coral Expeditions
ஆஸ்திரேலியாவைச் சுற்றிப்பார்க்க 60 நாள் பயணமாக கோரல் அட்வென்ச்சர் கப்பல் இந்த வார தொடக்கத்தில் கெய்ர்ன்ஸ் நகரத்திலிருந்து புறப்பட்டது. இதில் பயணித்த நியூ செளத் வேல்ஸைச் சேர்ந்த சுசான் ரீஸ், இந்தப் பயணத்தின் முதல் நிறுத்தமான லிசார்ட் தீவில் இருந்தபோது உயிரிழந்துள்ளார் என்று தெரிகிறது.
பல்லாயிரக்கணக்கான டாலர்களை செலுத்தி இந்தக் கப்பலில் பயணிக்கும் பயணிகள், ஒரு நாள் பயணத்திற்காக பிரத்யேக தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பயணிகளுக்கு மலையேற்றம் அல்லது ஸ்நோர்கெல்லிங் என இரண்டு விருப்பத்தெரிவுகள் இருந்தன.
தீவின் மிக உயரமான சிகரமான குக்ஸ் லுக்கிற்கு சுசான் நடந்து செல்ல முடிவு செய்து மலையேற்றக் குழுவில் சேர்ந்தார். இருப்பினும் அவருக்கு ஓய்வு தேவைப்பட்டதால் குழுவிடமிருந்து பிரியும் சூழல் ஏற்பட்டது.
“காவல்துறை அளித்த தகவலில் இருந்து நாங்கள் புரிந்துகொண்டது என்னவென்றால், அன்று வெப்பம் அதிகமாக இருந்துள்ளது, மலை ஏறும் போது அம்மாவின் உடல்நிலை சரியில்லாமல் போனது,” என்று கேத்தரின் கூறினார்.
“அவரை தனியாக கீழே செல்லும்படி கூறியிருக்கின்றனர். பின்னர் கப்பல் கிளம்பும்போதும் பயணிகளின் எண்ணிக்கையை கணக்கிடாமல், அம்மாவை விட்டுவிட்டு சென்றுள்ளனர்.”
“இதில் ஏதோ ஒரு கட்டத்தில், அல்லது பிறரிடமிருந்து பிரிந்த சிறிது நேரத்திலேயே, தனியாக இருந்த அம்மா இறந்துவிட்டார்.”
“அம்மாவின் உயிரைக் காப்பாற்ற நிறுவனம் என்ன செய்திருக்க வேண்டும் என்பது விசாரணையில் தெரியவரும்” என்று நம்புவதாக கேத்ரின் கூறினார்.
ஆஸ்திரேலிய கடல்சார் பாதுகாப்பு ஆணையம்(Amsa), இந்த மரணம் குறித்து விசாரித்து வருவதாகவும், கப்பல் பணியாளர்களைச் சந்தித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 9:00 மணிக்கு காணாமல் போன மூதாட்டி குறித்து கப்பலின் கேப்டன் முதலில் தகவல் தெரிவித்ததாக Amsa செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
தகவல் கிடைத்த சில மணி நேரத்தில், பயணியைத் தேடி தேடல் குழு ஒன்று தீவுக்குத் சென்றது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தேடும் முயற்சிகள் நிறுத்தப்பட்டாலும், பின்னர் ஒரு ஹெலிகாப்டர் திரும்பி வந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சுசானே ரீஸ்-இன் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
புதன்கிழமை (அக்டோபர் 29) அன்று பேசிய, கோரல் எக்ஸ்பெடிஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் ஃபைஃபீல்ட், “சுசானே ரீஸ்-இன் மரணத்திற்கு நிறுவனம் ‘மிகவும் வருந்துவதாகவும்’, ரீஸ் குடும்பத்திற்கு தங்கள் ஆதரவை வழங்குவதாகவும்” கூறினார்.
“குயின்ஸ்லாந்து காவல்துறை மற்றும் பிற அதிகாரிகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம், அவர்களின் விசாரணைக்கு உதவுகிறோம். விசாரணை முடியும் வரை நாங்கள் எந்தவிதக் கருத்துகளையும் கூற முடியாது” என்று மார்க் ஃபிஃபீல்ட் கூறினார்.
நிறுவனத்தின் வலைத்தளத்தின்படி, கோரல் அட்வென்ச்சர் கப்பல் 46 பணியாளர்களுடன் 120 விருந்தினர்கள் பயணிக்கும் வசதி கொண்டது. இது ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் உள்ள தொலைதூரப் பகுதிகளை அணுகுவதற்காக வடிவமைக்கப்பட்டது.
இந்தக் கப்பலில் பகல்நேர சுற்றுலாக்களுக்காக பயணிகளை அழைத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் ‘டெண்டர்ஸ்’ எனப்படும் சிறிய படகுகள் பொருத்தப்பட்டுள்ளன.
இது போன்ற சம்பவங்கள் அரிதானவை என்றும், மேலும் பயணக் கப்பல்களில் எந்தப் பயணிகள் ஏறுகிறார்கள் அல்லது இறங்குகிறார்கள் என்பதைப் பதிவு செய்யும் அமைப்புகள் உள்ளன என்றும் பயண வலைத்தளமான செய்ல்அவேஸ்-இன் (Sailawaze) ‘க்ரூஸ்’ பிரிவு ஆசிரியர் ஹாரியட் மாலின்சன் பிபிசியிடம் தெரிவித்தார்.
“பயணக் கப்பல் நிறுவனங்கள் இந்த நடைமுறைகளை மிகவும் தீவிரமாக நடைமுறைப்படுத்துகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. தற்போது நடைபெற்ற சம்பவம் மிகவும் அதிர்ச்சியூட்டும் ஒன்று என்றாலும், இது அரிதான நிகழ்வாகும்” என்று மாலின்சன் கூறினார்.