மாடுகள் ஒன்றையொன்று தொடர்பு கொள்ளும் விதத்தால் கவரப்பட்டுள்ளார் டச்சு மொழியியலாளர் லியோனி கார்னிப்ஸ். ஆனால் இதை ஒரு மொழி என சொல்ல முடியுமா?
லுயோனி கார்னிப்ஸ் நீண்ட நேரத்திற்கு முன்பே தேநீர் இடைவேளை எடுத்திருக்க வேண்டும். சில்லென வீசிய இலையுதிர் கால காற்று சூடான பானத்தை இன்னும் பிடித்தமான ஒன்றாக மாற்றியது. ஆனால் கார்னிப்ஸ்-க்கு பணி மிகுதியாக இருந்தது. அவர் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஒரு சிறு பசுமாட்டுக் கூட்டத்துடன் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் இப்போது சென்றால், மீள்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் ஒன்றை இழந்துவிடுவார். கார்னிப்ஸும், அந்த பசுமாட்டுக் கூட்டமும் ஒரு மென்மையான பகிரும் கட்டத்தை எட்டிருந்தன. இதை அவர் “பசுவின் லயம்” என அழைக்கிறார்.
நெதர்லாந்தில் இருக்கும் மீர்டென்ஸ் இன்ஸ்டிடியூட்டில் கார்னிப்ஸ் ஒரு சமூக மொழியியலாளராக இருக்கிறார். இந்த நிறுவனத்தின் அலங்கார கதவுகள் வழியாக கடந்து செல்லும் அறிஞர்கள் பெரும்பாலும் டச்சு மொழி மற்றும் பண்பாட்டில் சிறப்பு தேர்ச்சி பெற்றிருப்பார்கள். மென்மையான குணம் கொண்ட கார்னிப்ஸ் கல்வியில் 1990-களில் பாராட்டுகளை பெற்றார். இன்றும் அவர் நெதர்லாந்தில் இருக்கும் பேச்சுவழக்குகளின் சொற்றொடரியலில் இருக்கும் வேறுபாடுகளை ஆய்வு செய்துகொண்டுதான் இருக்கிறார். ஆனால் அத்துடன் அவரது அண்மைக்கால ஆய்வுகள், இத்துறை வல்லுநர்கள் கூறுவதைப் போல ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல வருடங்களாக கார்னிப்ஸ் தனது கோடை விடுமுறையை ஒரு பண்ணையில்தான் கழித்துள்ளார். அங்கு ஒவ்வொரு மாட்டுக்கும் இருக்கும் தனித்தன்மை அவரை எப்போதும் கவர்ந்துள்ளது. மொழியியலாளர்கள் ஏன் விலங்குகளை ஆய்வு செய்வதில்லை என கேள்வி எழுப்பி தத்துவஞானி ஒருவர் எழுதிய கட்டுரையை அவர் படித்தார். அது அவரை ஆழமாக பாதித்தது. ஒரு மொழியியலாளர் ஆய்வு செய்யும் அளவு மாடுகளுக்கு புத்திசாலித்தனமும், சமூக பழக்கங்களும் இருந்ததாக கார்னிப்ஸ் நினைத்தார். டச்சு நாட்டவர் என்ற முறையில் சீஸ் மீது அதீத விருப்பம் கொண்ட ஒரு தேசத்தில் மாடுகள் கலாசார அடையாளங்களாக இருப்பது அவருக்கு தெரியும். எனவே அவர் தனது தொழில்முறை கவனத்தை மாடுகளின் பக்கம் திருப்பினார்.
மொழியை பயன்படுத்தும் ஆற்றல் நமது மேன்மையை காட்டுவதாக மனிதர்கள் பல நூற்றாண்டுகள் கருதி வந்திருக்கின்றனர். இதற்காக லோகோசெண்ட்ரிசம்( “வார்த்தை” அல்லது “காரணம்” எனப் பொருள்படும் கிரேக்க மொழியின் லோகோஸ் என்ற சொல்லிலிருந்து) அதாவது சொல்மையவாதம் என தனியாக ஒரு சொல்லே இருக்கிறது. அதாவது வார்த்தைகளை பயன்படுத்துபவர்கள் சிறப்புரிமை பெற்றவர்கள் என பொருள் பல மொழியியல் வல்லுநர்கள் நம்மை மனிதர்களாக்குவது மொழிதான் என கூறுகின்றனர். விலங்குகள் உறுமலாம், குரைக்கலாம் அல்லது கீச்சிடலாம், ஆனால் மொழி என சொல்லும்படி அவற்றிடம் ஏதும் கிடையாது என்பது அவர்களது கருத்து.
ஆனால் பண்ணை மாடுகளிடம் தாம் நடத்திய ஆய்வின் முலம் இந்த எண்ணத்தை கார்னிப்ஸ் பின்னுக்கு தள்ளிக் கொண்டிருக்கிறார். நாம் கருதியது போல் மொழியியலில் மனிதர்கள் அவ்வளவு தனித்துவம் மிக்கவர்கள் அல்ல என்பதை காட்ட 1960-களில் சிம்பன்சிகளிடம் ஜேன் குட்டால் நடத்திய ஆய்வு மற்றும் ரோஜர் பெய்ன் ஹம்பேக் திமிங்கிலங்கள் பதிவு ஆகியவற்றுடன் தொடங்கிய 50 ஆண்டுகால முயற்சியின் தொடர்ச்சிதான் இது.
பட மூலாதாரம், Henk van de Ven/ Leonie Cornips
மொழியியல் கட்டமைப்பை விலங்குகளுக்கு பொருத்தி பார்க்கலாம் என கார்னிப்ஸ் சொன்ன போது அவரது சகாக்கள் பலர் நம்பிக்கையற்றவர்களாக இருந்தார்கள்.
“மக்களுக்கு மொழி குறித்து தெளிவான எண்ணம் எதுவும் இல்லை என்பதுதான் பிரச்னை,” என்கிறார் அவர். “மொழியை பற்றி அவர்கள் பேசும் போது அவர்கள் எப்போதும் வாய்வழியாக வருவதை மட்டுமே குறிப்பிடுகிறார்கள்.”
ஆனால் மாடுகளின் வாழ்க்கையை 6 ஆண்டுகள் உற்றுநோக்கிய பின்னர், மொழி என்பதை வாய், உடல் மற்றும் சுற்றுப்புறம் என பல புலன்கள் சார்ந்த பல செயல்கள்தான் மொழி என புரிந்துகொள்ளவேண்டும் என கார்னிப்ஸ் கருதுகிறார். நான் மாடுகளுடன் உண்கிறேன், தொடுகிறேன், முத்தமிடுகிறேன், நடக்கிறேன், அணைக்கிறேன்,”என்கிறார் அவர்.
பெரும்பாலும் மாடுகளின் மொழி குறித்த ஆய்வு ஒலியின் மீது கவனம் செலுத்துகின்றன. உதாரணத்திற்கு 2015ல் நெதர்லாந்தில் மாடுகள் எழுப்பும் ஒலியின் சுருதிக்கும் அவற்றின் செயல்பாட்டுக்கும் தொடர்பு உள்ளதா என ஆய்வு நடத்தி, அவற்றின் நலனை முடிவு செய்வதற்கு இது ஒரு வழியாக இருக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. 2019-ல் ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் மாடுகளுக்கு தனித்தனியான குரல் இருப்பதாவும், அவை இந்த தனித்துவமான குரலை பல்வேறு சூழல்களில் பயன்படுத்துவதாகவும் தெரியவந்தது.
கார்னிப்ஸ் மற்றும் தனக்கு உதவ அவர் சேர்த்துக்கொண்ட விவசாயிகள் மாடுகள் எழுப்பும் ஒலிகளின் நீளம், இடைவேளை, மற்றும் தீவிரத்தை பதிவு செய்கின்றனர். ஆனால் மாடுகளுக்கிடையில் தகவல் பகிர்ந்துகொள்ளும் வழிமுறைகள் மீதும் அவர் கவனம் செலுத்துகிறார். அவரது நடைமுறைகள் அவ்வப்போது ஆய்வாளரின் கூர்நோக்கும் ஆற்றலை சார்ந்திருக்கும் எத்னோகிராபிக் எனப்படும் இனவரைவியல் முறைகளாக உள்ளன.
மாடுகள் எப்படி தகவலை பரிமாறிக்கொள்கின்றன என்பதை அறிய ஒலியுடன் சேர்த்து மாடுகளின் நடவடிக்கைகள் மற்றும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும் முறைகளையும் கார்னிப்ஸ் கூர்ந்து நோக்குகிறார். “மாடுகளை பொருத்தவரை மற்றொரு மாட்டை அறிந்துகொள்ள உடல் அவற்றிக்கு ஒரு கருவி,” என்கிறார் அவர். இதை புரிந்துகொண்டதால் கார்னிப்ஸ் மொழியை பற்றி குறைவாகவும் மொழியியல் நடைமுறைகள் பற்றி விரிவாகவும் பேசுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
உதாரணத்திற்கு மாடுகளில் லயத்தில் இணைவதற்கு மாடுகள் பின்பற்றும் விரிவான வரவேற்பு நடைமுறையை தாம் பின்பற்றவேண்டும் என்கிறார் கார்னிப்ஸ். இது உள்ளரங்கில் வளர்க்கப்பட்டு வெளிப்புற புல்வெளியில் மேலும் ஐந்து மாடுகளுடன் இணைப்பதற்காக கார்னிப்ஸ் கொண்டு வந்த பையட் எனும் காளை மாட்டிடம் வெளிப்படையாகவே தெரிந்தது.
“அவனை எப்போது பார்த்தாலும் நான் மகிழ்ச்சியடைவேன். அதனால் அதன் புல்வெளியில் நுழைந்தவுடன் நான் அவனருகே நடந்து சென்று அவனை உடனே தொட முயற்சிப்பேன்,” என்கிறார் கார்னிப்ஸ். அவர் அவ்விதம் செய்தபோது பையட் பின்வாங்கும்.
இதனால் சக மனிதரின் அந்தரங்கத்தை மதிப்பதுபோல், பையட்டின் அந்தரங்கத்தை மதிப்பது அவசியம் என்பதை கார்னிப்ஸ் படிப்படியாக புரிந்துகொண்டார். அவர் தனது கைகளை தனக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டு பையட்டுடன் பார்வையால் மட்டும் அவ்வப்போது மாற்றி மாற்றி தொடர்பு கொள்ள கற்றுக்கொண்டார். “இதற்கு எனக்கு கணிசமான நேரம் எடுத்துக்கொண்டது,” என்கிறார் அவர். “நான் மிகவும் முட்டாள்தனமாக இருந்தேன். அவற்றுடன் தொடர்பு கொள்வது எப்படி என்பதை அவை எனக்கு கற்றுத் தருகின்றன.” தான் ஒரு அவையொழுக்கத்தை கற்றுக்கொள்ளவேண்டியிருப்பதை கார்னிப்ஸ் தெரிந்துகொண்டார். பொறுமையும், கவனமும் இல்லாவிட்டால் நீங்கள் அதை பார்க்கமாட்டீர்கள் என்கிறார் அவர்.
மாடுகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் போதும் பொறுமை அவசியம். ஒரு பசு தனது கன்றை அழைக்கும் போது அந்த கன்று பதிலளிக்க சில சமயம் 60 விநாடிகள் வரை எடுத்துக்கொள்ளும். இடைப்பட்ட அவகாசம் உடல்மொழியால் நிறைந்துள்ளது. காதின் நிலையும், கழுத்தை நீட்டுவதும் மாடுகளின் மொழியில் ஒருங்கிணைந்த அங்கம் என ஆஸ்டிரியாவி நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. நமது காதை ஆட்டுவது பார்ட்டியில் செய்துகாட்டும் ஒரு வித்தையாக மனிதர்கள் நினைக்கிறார்கள். ஆனால் மாடுகளை பொருத்தவரை தொடர்புக்கு இது அடிப்படையாக தோன்றுகிறது. ஒரு மாட்டுடனான தொடர்பில் முதல் வாக்கியம் காதை ஆட்டுவதுடன் ஒரு பார்வை பரிமாற்றமாக இருக்கலாம்.
மிகவும் சிக்கலான தொடர்பு முறைக்காக ஆய்வு செய்யப்படும் ஒரே விலங்கு மாடுகள் மட்டுமல்ல. அமெரிக்காவின் நியூ ஹாம்ஷயர் பல்கலைக்கழகத்தில் கடல் ஒலி சூழலியலில் நிபுணராக இருக்கும் துணை பேராசியர் மிசெல் ஃபோர்நெட், திமிங்கலம், நீர்நாய் போன்ற உயிரினங்கள் மீது மனித எதிர்பார்ப்புகளை திணிப்பது பலனளிப்பதில்லை என்பதை கற்றுக்கொண்டிருக்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
மனிதர்கள் ஒலியை பயன்படுத்தும் முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் விலங்குகள் ஒலியை பயன்படுத்துகின்றன எனகிறார் அவர். “விலங்குகள் எப்படி தொடர்புகொள்கின்றன, எதற்காக அவை தொடர்புகொள்கின்றன் என்பதை புரிந்துகொள்வதற்கு நாம் முயற்சிப்பதானால் அவற்றின் கண்ணோட்டத்தை பின்பற்றுவது நமக்கு நல்லது,” என்கிறார் அவர்.
மனிதர்கள் அல்லாத உயிரினங்களிடையே நடக்கும் தகவல் பரிமாற்றத்தை விவரிக்க மொழி என்கிற வார்த்தையை ஃபோர்நெட் பயன்படுத்தவில்லை. ஆனால் விலங்குகளின் தகவல் பரிமாற்றத்தில் இருக்கும் நுணுக்கங்களுக்கு அவர் ஆழமான மரியாதை கொண்டிருக்கிறார். அவற்றின் முறை நமக்கு குறைவானதல்ல, ஆனால் வேறானது என்கிறார் ஃபோர்நெட்.
சூற்றுச்சூழலை பயன்படுத்தும் விதம் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இருக்கும் ஒரு வேறுபாடு. மாடுகளின் தகவல் தொடர்பு மனிதர்களோடு ஒப்பிடுகையில் அவற்றின் சூழலை சார்ந்திருப்பதாக கார்னிப்ஸ் கண்டறிந்தார். ஒரு மந்தையில் சில மாடுகள் உணவு நேரத்தில் மற்ற மாடுகளுடன் தொடர்பு கொள்ள இரும்பு வேலியில் தங்களது உடலால் மோதுவதை அவர் கவனித்தார். இது ஒருவகையான மொழியாக அவர் கருதுகிறார். ஒரு கொட்டகையில் நுழையும்போது அது சுவர்களுடன் இருக்கிறதா அல்லது திறந்த பக்கங்களுடன் இருக்கிறதா என்பதைப் பொறுத்து மாடுகளின் செயல்பாடு இருந்ததை அவர் கவனித்தார். வெவ்வேறு பண்ணைகளில் மாடுகள் வெவ்வேறு சூழல்களில் இருப்பதால் அவற்றிற்கு மொழியை வெளிப்படுத்த தனித்தனியான வாய்ப்புகளை வழங்குவதாக அவர் கருதுகிறார். வெவ்வேறு பேச்சுவழக்குகள் இருப்பதைப் போல், மாடுகளும் சூழலுக்கு ஏற்ப மாறுபட்ட மொழியியலை பின்பற்றுவதாக அவர் வாதிடுகிறார்.
மற்ற வீட்டு விலங்குகளைப் போல், வேறொரு இனமான மனிதர்களுடன் தொடர்புகொள்ளும் சவால்களை மாடுகள் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. “பெரும்பாலான விவசாயிகளுக்கு மாடுகளின் லயம் குறித்து தெரிவதில்லை,”என்கிறார் கார்னிப்ஸ். பால் தரும் மந்தைகள் உணவு உட்கொள்ளும் இடம், பால் கறக்கும் இடம் மற்றும் மேய்ச்சல் இடம் என தொடர்ந்து மாற்றப்படுகின்றன. ஒரு மாடு தினசரி வழக்கத்தை கற்றுக்கொள்ளாவிட்டாலோ, பால் தராவிட்டாலோ அது இறைச்சிக்கூடத்திற்கு அனுப்பப்படுகிறது. மாடுகளுக்கு அறிவில்லை என மக்கள் நினைப்பது அவரை அதிர்ச்சி கொள்ள செய்கிறது.
பட மூலாதாரம், Getty Images
“ஒரு கறவை மாடாகும்போது, அவற்றிற்கு அதிக அளவு தொடர்பு ஆற்றல் தேவை. ஏனென்றால் விவசாயி தாங்கள் என்ன செய்யவேண்டும் என விரும்புகிறார் என அவை புரிந்து கொள்ள வேண்டும். இது சுலபமல்ல,” என்கிறார் அவர்.
பல்வேறு பதிவுகளை ஆய்வு செய்து விவசாயி தங்களுடைய தேவைகளை புரிந்துகொண்டதும் மாடுகள் தங்களது தொடர்பை எளிமைப்படுத்தி கொள்ளும் என்பதை கார்னிப்ஸ் காட்டியுள்ளார். சொல்வதை கேட்டு நடப்பதற்கு ஏற்ப அவற்றின் அறிவை மாற்றுவதற்கு பதில் வீட்டு விலங்குகள் வனவிலங்குகளை விட அதிக தொடர்பு திறன்களை வளர்த்துகொள்ளும் கட்டாயத்திற்குள்ளாக்கப்படுவதாக கார்னிப்ஸ் கருதுகிறார்.
கறவை மாடுகள் விரிவான தொடர்பு முறைகள் இருந்தால், விலங்குகள் உலகில் பிற சிறந்த தொடர்பாற்றல் கொண்ட ஹம்பேக் திமிங்கலம் உள்ளிட்ட விலங்குகளுடன் ஒப்பீட்டளவில் எப்படி இருக்கின்றன என்ற கேள்வியை கேட்கத் தோன்றுகிறது. திமிங்கலத்தின் பாடலில் உள்ள விரிவான ஒலிகளை கார்னிப்ஸ் போற்றுகிறார். செட்டாசியன் இனங்களில் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு ஒலிகளை உருவாக்கும் விலங்குகளில் ஹம்பேக் திமிங்கலங்கள் இருக்கின்றன. அவை நெடுந்தொலைவுக்கு அப்பால் தொடர்பு கொள்ளும் ஆற்றலும் கொண்டிருக்கின்றன.
ஆனால் மாடுகளிடம் இருக்கும் சில திறன்கள் திமிங்கலங்களிடம் இல்லை என கார்னிப்ஸ் சுட்டிக்காட்டுகிறார். ஒரு திமிங்கலத்தின் காதுகள் மாடுகளின் காதுகளைப் போல் அசைக்கக் கூடியவையாக இல்லை, என்கிறார் அவர். அவற்றிற்கு கால் குளம்புகளும் இல்லை. “திமிங்கலங்களால தங்களது உடலால அதிகம் வெளிப்படுத்த முடியாது,” என்கிறார் கார்னிப்ஸ்.
விலங்குகளின் தொடர்பு கொள்ளும் ஆற்றலை வரிசைப்படுத்த முயற்சிப்பது சரியானது அல்ல என்கிறார் போர்நெட். மாடுகளையும், திமிங்கலங்களையும் ஒப்பிடும்படி அவரிடம் நான் கேட்டபோது “நீங்கள் தேடுவதற்கு விடை கிடையாது,” என அவர் பதிலளித்தார்.
பட மூலாதாரம், Getty Images
பல பாரம்பரிய மொழியியல் வல்லுநர்கள் மனிதர்கள் அல்லாத விலங்கினங்களுக்கு மொழியை குறிப்பிட இன்னமும் தயக்கம் காட்டுகின்றனர். அமெரிக்காவின் மாண்டானா பல்கலைக்கழகத்தில் மொழியியல் பேராசிரியராக இருக்கும் லியோரா பார்-எல் விலங்குகளின் மொழி என்பதற்கு எதிராக இல்லை. ஆனால் மொழி என்பதின் விளக்கத்தில் மாடுகளை சேர்ப்பதன் மூலம் நாம் பெறப்போவது என்ன அல்லது இழப்பது என்ன என்ற கேள்வியை எழுப்புவது பொருத்தமானது என கருதுகிறார்.
“மனிதர்களின் மொழியில் தனித்துவமான ஏதோ ஒன்று இருக்கிறது என்பதை நாம் இழந்துவிட வாய்ப்பு உள்ளது,” என்கிறார் அவர். உதாரணமாக மனித மொழியில் நம்பமுடியாத அளவு புதுமைகளுக்கு வாய்ப்பு உள்ளது. ஷேக்ஸ்பியரின் படைப்புகளை எண்ணிப் பாருங்கள். அது எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்வுகளை குறிக்கலாம், மொழிக்கு என ஒரு விளக்கம் இருக்கும் போது அதன் மீதே அது கவனம் செலுத்தலாம்.
ஆனால் கார்னிப்ஸை முதன்முதலில் ஊக்குவித்த கட்டுரையையும், 2018-ல் வெளியான அனிமல் லாங்வேஜ் என்ற நூலையும் எழுதிய ஈவா மெய்ஜெர் இதைப்போன்ற கூற்றுகள் சுயநிறைவை தரும் என வாதிடுகிறார்.”மொழி என நாம் பார்ப்பது, பிற விலங்குகளின் மொழியை தவிர்த்துவிட்டு வளர்க்கப்பட்டுள்ளது,” என்கிறார் அவர்.
உண்மையில் மொழியை மற்றவர்களுக்கு மறுக்கும் வகையில் தான் அதற்கன விளக்கத்தை நாம் தருகிறோம். மக்களுக்கு அவர்களது மொழியை மறுப்பது தொடர்பான அடக்குமுறையின் நீண்ட வரலாற்றை மெய்ஜெர் சுட்டிக்காட்டுகிறார். விலங்குகளின் மொழியை அங்கீகரிப்பது அவற்றை புரிந்துகொள்ள புதிய கருவிகளை நமக்கு தருவதுடன், தொடர்ந்து பேணத் தகுந்த வழியில் பூமியில் வாழ்வது எப்படி என கற்றுக்கொள்ளவும் உதவக் கூடும் என அவர் நம்புகிறார்.
ஆனால் கார்னிப்ஸோ தமது பணிக்கு மையப் புள்ளியாக விலங்குகள் உரிமையை வைக்கவில்லை. அவர் மொழியியல் துறையை விரிவுபடுத்துவதில் குறியாக உள்ளார். ஆனால் இதன் உள்ளார்ந்த அர்த்தங்கள் புறந்தள்ள முடியாதவையாக இருக்கின்றன. மாடுகளுக்கு நாம் எண்ணியதைவிட விரிவான சமூக வாழ்க்கை இருக்கக்கூடும். அவரது ஆய்வு மேலும் ஆய்வு செய்வதற்கான பல்வேறு பாதைகளை காட்டுகின்றன. தனித்துவமான கால்நடை சமுதாயங்கள் மற்றும் பண்பாட்டில் மொழியின் பங்களிப்பு என்ன? மாடுகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து எவ்விதம் திட்டமிடமுடியும்? ஒவ்வொரு தலைமுறைக்கிடையில் அறிவை கடத்த அவற்றால் மொழியை பயன்படுத்த இயலுமா?
இந்த கேள்விகளுக்கான பதில்கள், விலங்குகளின் பல்வேறு வாழ்க்கைகளை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதை மாற்றக்கூடும். உலகில் வசிக்கும் பாலூட்டிகளின் எடையில் 96% மனிதர்களாலும் வீட்டுவிலங்குகளாலும் நிறைந்துள்ளது. கால்நடைகள், ஆடுகள், கோழிகள் போன்றவை என்ன சொல்கின்றன என்பதை புரிந்துகொள்ளுதல் அவற்றுடனான உறவை மேம்படுத்த உதவுவதுடன், விலங்குகளுக்கு மேலும் நல்ல வாழ்வைத் தரவும் உதவும்.
விஷயங்கள் வேகமாக மாறுவதற்கு வாய்ப்பு குறைவு என கார்னிப்ஸுக்கு தெரியும். இருப்பினும், விலங்குகளுக்கு மொழி இருக்கிறது என்ற கருத்துரு கல்வி இதழ்களில் அண்மைக்காலமாக அதிகமாகியிருப்பதை அவர் கவனித்திருக்கிறார்.
பல்வேறு அணுகுமுறைகளை வெளிக்கொணர மொழியியல் ஒரு கருவியாக இருக்க முடியும் என அவர் நம்புகிறார். “வீட்டு விலங்குகளை வேறுபட்ட கோணத்தில் பார்க்கலாம் என மற்றவர்களுக்கு காட்டுவதுதான் எனது முக்கிய குறிக்கோள், என்கிறார் அவர்.