0
லிவர்பூல் எஃப்சி பிரீமியர் லீக் வெற்றியை கொண்டாட நடைபெற்ற பேரணியின் போது, ரசிகர் கூட்டத்திற்குள் கார் செலுத்தி பயங்கரமான தாக்குதலை நடத்திய 54 வயதான பால் டாய்லுக்கு 21 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு மே 26ஆம் திகதி நடந்த இந்தச் சம்பவத்தில், வீதியில் பெருமளவு ரசிகர்கள் திரண்டிருந்ததால் ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடு “எந்த வகையிலும் புரிந்துகொள்ள முடியாதது” என தண்டனை வழங்கிய நீதிபதி கடுமையாக விமர்சித்தார்.
எவர்ட்டன் அணியின் ரசிகரான டாய்ல், லிவர்பூல் ரசிகரான தனது நண்பர் டேவ் கிளார்க் மற்றும் அவரது குடும்பத்தினரை பேரணியைப் பார்ப்பதற்காக நகர மையத்திற்கு அழைத்துச் செல்ல ஒப்புக்கொண்டிருந்தார்.
நண்பர்களை இறக்கிவிட்ட பின்னர், பிற்பகல் 1.35 மணியளவில் வீடு திரும்பும் போது, அவர் மிகுந்த கோபத்துடன் வாகனத்தை ஓட்டி, பிற வாகனங்களை ஆபத்தான முறையில் முந்திச் சென்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மாலை 5.29 மணியளவில் நண்பர்களை மீண்டும் அழைத்துச் செல்ல நகர மையத்திற்குத் திரும்பிய டாய்ல், வழியிலேயே பல வாகனங்களை முந்திச் சென்று, சிவப்பு போக்குவரத்து விளக்கையும் மீறிச் சென்றார். மாலை 5.54 மணியளவில் டேல் வீதிக்கு வந்த அவர், தவறான பாதையில் ஓட்டி, பாதசாரிகளுக்கு மிக அருகில் சென்றதுடன், மக்கள் கூட்டமாக இருந்த போதும் தொடர்ந்து ஹார்ன் அடித்துச் சென்றார்.
அவரது ஓட்டுதலைக் கண்டு அச்சமடைந்த ஒருவர், தனது குழந்தையை பாதுகாப்பாக நகர்த்த முயன்றபோது, காரின் பம்பரில் காலை வைத்தார். இதற்கு டாய்ல் கடும் கோபத்துடன் கத்தினார். அதன் பின்னர், போக்குவரத்தைத் திசைமாற்ற வைக்கப்பட்டிருந்த கூம்புகளைத் தாண்டி, நேரடியாக கூட்டத்திற்குள் கார் செலுத்தினார்.
டாய்ல் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல், தாக்குதல் மேற்கொள்ளுதல் மற்றும் வேண்டுமென்றே கடுமையான உடல் காயங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 31 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார். கைது செய்யப்பட்டபோது, தனது செயல்கள் “பலரின் வாழ்க்கையை அழித்துவிட்டது” என அவர் பொலிஸாரிடம் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.