தயாரிப்பு : லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ்
நடிகர்கள்: லெஜன்ட் சரவணன், லால், பாயல் ராஜ்புத், ஆண்ட்ரியா, பேபி இயல், ஷாம், சந்தோஷ் பிரதாப், பாகுபலி பிரபாகர், விடிவி கணேஷ், அறந்தாங்கி நிஷா, ஆதித்ய கதிர், ஜார்ஜ் மரியன் மற்றும் பலர்.
இயக்கம்: ஆர் எஸ் துரை செந்தில் குமார்
மதிப்பீடு: 2.5/5
தமிழக மக்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கு சுற்றுலா பயணியாக செல்லும் உலக தமிழர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான தொழிலதிபர் லெஜன்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் என்பதால்… படமாளிகைக்கு அவரது திரை தோற்றத்தை காண ஆவலுடன் சென்றனர். அவர்களின் எதிர்பார்ப்பு மகிழ்ச்சியை அளித்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள தூத்துக்குடி துறைமுகத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு சொகுசு வாகனங்களை பழுது நீக்கி தரும் நிலையம் ஒன்றினை தங்கப்பழம் (விடிவி கணேஷ்) என்பவர் நடத்தி வருகிறார். இவரிடம் சொகுசு வாகனங்களுக்கான பழுதுகளை நீக்கி தரும் பொறியாளராக சக்திவேல் (லெஜன்ட் சரவணன்) என்பவர் பணியாற்றுகிறார். இவர் பணிநிமித்தம் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு நாளாந்தம் சென்று வருவதால்… அத்துறைமுகத்தின் அனைத்து பகுதிகளும் அவருக்கு அத்துபடியாக தெரிய வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி துறைமுகத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக காவல்துறை அதிகாரியான இந்திரா சத்தியமூர்த்தி (ஆண்ட்ரியா) அவதானிக்கிறார். இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக சக்திவேலின் உதவியை நாடுகிறார்.
சக்திவேல் முதலில் மறுப்பு தெரிவிக்க… வேறு வழி இல்லாமல் இந்திரா – சக்திவேலின் வாரிசான ஐரின் (பேபி இயல்) எனும் பெண் பிள்ளையை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, உதவுமாறு கேட்க… சக்திவேல் இந்திராவிற்கு உதவ தொடங்குகிறார். தூத்துக்குடி துறைமுகத்தில் சட்டவிரோத காரியங்களை செய்து வரும் சால்ட் (பாகுபலி பிரபாகர்) என்பவரின் நிழல் நடவடிக்கைகளை பற்றிய முக்கிய விடயங்களை சக்திவேல், இந்திராவிடம் பகிர்ந்து கொள்கிறார். இந்நிலையில் அப்பகுதிக்கு புதிய காவல்துறை அதிகாரியாக பொறுப்பேற்கும் பக்தவச்சலம் (ஷாம்) இவ்விடயத்தில் ஆர்வம் காட்டி நடவடிக்கை எடுக்க தொடங்குகிறார். இந்த தருணத்தில் தான் அவர் சக்திவேல் என்பவர் யார் என்று தெரிய வருகிறது. அவர் பொன் மாறன் (லெஜன்ட் சரவணன்) என்ற பெயரில் இந்திய உளவுத்துறையில் பணியாற்றிய அதிரடியான அதிகாரி என்பதும், அவருக்கு மீரா (பாயல் ராஜ்புத்) என்றொரு மனைவியும் இருக்கிறார் என்பதும் இவர்களின் பிள்ளை தான் ஐரீன் என்பதும் தெரிய வருகிறது.
மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க தன் பிள்ளையை பாதுகாத்து பத்திரமாக மீட்டு வருவதற்காக சக்திவேல் என்ற பெயரில் தூத்துக்குடிக்கு வருகை தந்திருப்பார் என்ற விடயமும் தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன? தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சட்டவிரோத பொருள் என்ன? அதனால் ஏற்படும் பாதிப்பு என்ன? அதை கைப்பற்ற துடிப்பது ஏன்? இத்தகைய சட்டவிரோத செயல்கள் எதனால் நடைபெறுகிறது? என்பது போன்ற விவரங்களை பரபரப்பாக தெரிவிப்பது தான் இப்படத்தின் கதை.
முதல் பாதியில் மெதுவாகவும் கலாட்டாவாகவும் காமெடியாகவும் தொடங்கும் திரைக்கதை செல்லச் செல்ல வேகம் எடுக்கிறது. ஒரு புள்ளியில் சக்திவேல் Vs சால்ட் என்று மாறும் போது திரைக்கதை சூடு பிடிக்கிறது. அதன் பிறகு சக்திவேலின் பின்னணியை விவரிக்கும் போது திரைக்கதை வழக்கமான மாஸான மசாலா கதைக்கு திரும்புகிறது. இதில் இயக்குநரின் புத்திசாலித்தனமான சில சுவாரசியமான திருப்பங்கள் தான் ரசிகர்களை தொடர்ந்து லீடரை பார்க்க அனுமதிக்கிறது.
இதில் முதலில் பாராட்டப்பட வேண்டியவர் பல கோடிகளுக்கு அதிபதியாகவும் தொழில்துறையில் உச்சத்தில் இருக்கும் தொழிலதிபரான லெஜன்ட் சரவணன் – கலை மீதும் திரைப்படத்தின் மீதும் அந்த குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் மீதும் நம்பிக்கை வைத்து அதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார். அவருடைய இந்த ஆர்வத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு அவருக்கு பாராட்டு தெரிவிக்கிறார்கள். அவருடைய முதல் படத்தை விட இந்தப் படத்தில் நடிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். கதாபாத்திரத்தை தோளில் நேர்த்தியாக சுமந்திருக்கிறார். இதற்காக இயக்குநரையும் பாராட்டலாம்.
வழக்கமான பழக்கமான கதை என்றாலும்… அதில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும்.. அதனை சின்னச்சின்ன சுவாரசியமான ட்விஸ்ட்களால் மறக்கடிக்க செய்து படைப்பை ரசிக்க வைக்கிறார் இயக்குநர்.
‘முத்தைத்திரு பக்தி…’ பாடல் திரையில் ஒலிக்கும் போது ரசிகர்கள் கரவொலி எழுப்புகிறார்கள். பின்னணி இசையிலும் ஜிப்ரான் தனி கவனத்தை ஈர்க்கிறார். ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் இயக்குநருக்கு முழு ஆதரவை வழங்கி அவரது கற்பனையை வளப்படுத்தி இருக்கிறது.
ஆண்ட்ரியா, ஷாம், சந்தோஷ் பிரதாப், லால், விடிவி கணேஷ், பாயல் ராஜ்புத், என ஒவ்வொரு நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களில் தோன்றி, இயக்குநரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறார்கள்.
படத்தில் இடம் பிடித்திருக்கும் சண்டை காட்சிகள் எக்சன் பிரியர்களுக்கு மிகப்பெரிய விருந்து. இதனால் சண்டை பயிற்சி இயக்குநரையும் பாராட்டலாம்.
The post லீடர் | திரைவிமர்சனம் appeared first on Vanakkam London.