• Tue. Oct 21st, 2025

24×7 Live News

Apdin News

லூவர் அருங்காட்சியகத்திலிருந்து பிரான்ஸ் அரச நகைகள் கொள்ளை; 7 நிமிடத்தில் 8 நகைகள் களவு!

Byadmin

Oct 21, 2025


பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள லூவர் (Louvre) அருங்காட்சியகத்தில் இருந்து விலைமதிப்பற்ற பிரான்ஸ் அரச நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

பட்டப்பகலில் 7 நிமிடத்தில் 8 நகைகள் இவ்வாறு களவாடப்பட்டன. கொள்ளையர்கள் தப்பியோடும்போது, கற்கள் பதித்த கிரீடத்தைக் கீழே போட்டுவிட்டுச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொள்ளைக்குப் பிறகு லூவர் அருங்காட்சியகம் மூடப்பட்டுள்ளது. குற்றவாளிகளைப் பிடித்து நகைகளை மீட்க அனைத்தும் செய்யப்படுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை பிரான்ஸ் பொலிஸார் தேடி வருகின்றனர். இதற்காக 60 பேர் கொண்ட குழு விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

உலகிலேயே மிக அதிகமானோர் செல்லும் அருங்காட்சியகம் Louvre ஆகும். உலகின் பிரபலமான மோனா லிசா (Mona Lisa) ஓவியமும் அங்குதான் உள்ளது. இங்கு கொள்ளை இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை, Louvre அருங்காட்சியகத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பிரான்ஸ் அரச நகைகள் மீண்டும் கிடைக்காமல் போகலாம் என்று அந்நாட்டுச் சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையடித்தவர்களைப் பிடித்துவிட்டாலும் அந்த விலைமதிப்பற்ற நகைகளை மீட்பது மிகவும் கடினமாக இருக்கும் என்று அவர்கள் ராய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

அவை சிறிய நகைகளாக வெட்டப்பட்டுவிட்டால் அசல் மீண்டும் கிடைக்கவே கிடைக்காது என்று கலைப்பொருள் திருட்டு குறித்த நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தக் கொள்ளைச் சம்பவம், நேற்று முன்தினம் (19) இடம்பெற்றுள்ளதுடன், கொள்ளையடித்தவர்கள் அதிகப் பயிற்சிபெற்றுள்ளவர்கள் என்று கூறப்படுகிறது.

தற்போது Louvre அருங்காட்சியக பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

By admin