பட மூலாதாரம், AFP
1911-ல் மோனாலிசா ஓவியம் திருடப்பட்ட பிறகு, லூவர் அருங்காட்சியகத்தில் மிகப்பெரிய கொள்ளைச் சம்பவம் தற்போது நடந்துள்ளது.
பிரான்சின் கலைப் பொருட்களை கொள்ளைக் கும்பல்கள் குறிவைப்பது அதிகரித்துள்ள இந்த நேரத்தில், பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை இச்சம்பவம் எழுப்புகிறது.
பிரான்சின் புதிய உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ், ஞாயிற்றுக்கிழமை காலை அப்போலோ கேலரிக்குள் நுழைந்த கும்பல் தொழில்முறை நுட்பம் வாய்ந்தவர்கள் என்றார்.
அவர்கள் தெளிவாகத் திட்டமிட்டு, முன்கூட்டியே “இந்த இடத்தை நன்கு ஆய்வு” செய்திருந்தனர். எளிமையான ஆனால் செயல்திறன் வாய்ந்த திட்டத்தை பயன்படுத்தினர். வெறும் 7 நிமிடங்களில் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர்.
அந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் ஒரு டிரக் வாகனத்தை பயன்படுத்தியது.
இதில், பொருட்களை உயர்த்தும் இயந்திரம் (elevating platform) பொருத்தப்பட்டிருந்தது, இதேபோன்ற இயந்திரத்தை இடமாற்று நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. நான்கு கொள்ளையர்கள் வாகனத்தில் பொருத்தப்பட்ட இயந்திர ஏணியைப் பயன்படுத்தி செய்ன்(Seine) நதிக்கு அருகே உள்ள பால்கனி வழியாக அருங்காட்சியகத்தின் அப்போலோ காட்சி கூடத்தை அடைந்தனர்.
அங்கு ஜன்னல் வழியாக டிஸ்க் கட்டர் (disc-cutter) மூலம் உள்ளே நுழைந்தனர்.
ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்ட அந்தக் கேலரியில், அவர்கள் நேராக பிரான்சின் கிரீட நகைகளை வைத்திருந்த இரண்டு காட்சிப் பெட்டிகளை நோக்கிச் சென்றனர்.
1789 புரட்சிக்குப் பிறகு, பிரான்சின் பெரும்பாலான அரச நகைகள் காணாமல் போனது அல்லது விற்கப்பட்டன. சில முக்கிய பொருட்கள் மட்டுமே மீட்கப்பட்டன.
ஆனால் இந்தப் பெட்டிகளில் இருந்த பெரும்பாலான பொருட்கள் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. குறிப்பாக நெப்போலியன் மற்றும் அவரது மருமகன் மூன்றாம் நெப்போலியன் ஆகியோரின் அரச குடும்பங்களுடன் தொடர்புடையவை.
பட மூலாதாரம், Louvre Museum
எட்டு நகைகள் கொள்ளை
கிரீடங்கள், சங்கிலிகள், காதணிகள் மற்றும் ப்ரூச்சுகள் உள்ளிட்ட எட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதில், நெப்போலியனின் மனைவி பேரரசி மேரி-லூயிஸ், அவரது மைத்துனி ஹாலந்து ராணி ஹார்டென்ஸ், 1830 முதல் 1848 வரை ஆட்சி செய்த பிரான்சின் கடைசி மன்னர் லூயிஸ்-பிலிப்பின் மனைவி ராணி மேரி-அமெலி மற்றும் 1852 முதல் 1870 வரை ஆட்சி செய்த மூன்றாம் நெப்போலியனின் மனைவி பேரரசி யூஜினி ஆகியோரின் பொருட்கள் அடங்கும்.
பேரரசி யூஜினியின் கிரீடம் ஒன்றும் திருடப்பட்டது, ஆனால் திருடர்கள் அதைக் கீழே விட்டுவிட்டதால், அது அருங்காட்சியகத்துக்கு அருகில் சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டது.
கலாசார அமைச்சகத்தின் அறிக்கையின்படி, அலாரம் சரியாக வேலை செய்தது. அப்போலோ கேலரியிலோ அல்லது அருகிலோ இருந்த ஐந்து ஊழியர்கள் விதிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்புப் படையை உடனடியாகத் தொடர்பு கொண்டு, பார்வையாளர்களைப் பாதுகாத்தனர்.
அந்தக் கும்பல் தங்கள் லாரிக்கு தீ வைக்க முயன்றது, ஆனால் ஒரு அருங்காட்சியக ஊழியரின் விரைவான நடவடிக்கையால் அது தடுக்கப்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
மோனாலிசா போன்ற உலகப் புகழ்பெற்ற ஓவியங்கள் உள்ள இடத்திலிருந்து சில அடிகள் தூரத்தில் உள்ள கேலரியில்தான் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.
ஆனால் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களுக்குக் காரணமாக உள்ள கும்பல்கள் உலகப் புகழ்பெற்ற ஓவியங்களைத் திருடுவதில்லை. ஏனெனில் அவற்றை வெளிப்படையாகக் காட்சிப்படுத்தவோ விற்கவோ முடியாது. அதற்குப் பதிலாக, அவர்கள் எளிதாக பணமாக்கக்கூடிய பொருட்களையே விரும்புகிறார்கள். அதில் நகைகள் முதலிடத்தில் உள்ளன.
அந்த நகைகள் வரலாற்று அல்லது கலாசார ரீதியாக எவ்வளவு மதிப்பு வாய்ந்ததாக இருந்தாலும், கிரீடங்கள் அல்லது தலையில் அணியும் நகைகள் (diadems) போன்றவற்றை எளிதில் துண்டுகளாகப் பிரித்து விற்கலாம். பெரிய வைரங்களை கூட வெட்டி விற்கலாம்.
இவற்றின் இறுதி விலை அசல் கலைப்பொருளின் மதிப்பை விட குறைவாக இருந்தாலும் கூட, அதுவும் அதிகமான தொகையாகத்தான் இருக்கும்.
சமீபத்தில் பிரான்சில் நடந்த இரண்டு அருங்காட்சியகக் கொள்ளைச் சம்பவங்களை தொடர்ந்து பிரான்ஸ் கலாசார அமைச்சகம் உருவாக்கிய பாதுகாப்புத் திட்டம் நாடு முழுவதும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
பட மூலாதாரம், Louvre Museum
கடுமையான பாதுகாப்பு
“பிரெஞ்சு அருங்காட்சியகங்கள் பாதிக்கப்படக்கூடியவை என்பதை நாங்கள் நன்கு அறிவோம்,” என்கிறார் உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனெஸ்.
செப்டம்பர் மாதத்தில், பாரிஸின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் 600,000 யூரோ மதிப்புள்ள தங்கம் (கனிம வடிவில்) திருடப்பட்டது. இது கறுப்புச் சந்தையில் எளிதாக விற்கப்பட்டிருக்கலாம்.
அதே மாதத்தில், ஒரு காலத்தில் சீனப் பொருட்களுக்குப் பெயர் பெற்ற லிமோஜஸ் நகரிலுள்ள அருங்காட்சியகத்திலிருந்து, 6 மில்லியன் யூரோ மதிப்புடைய பீங்கான் பொருட்கள் திருடப்பட்டன. இந்தக் கொள்ளை ஒரு வெளிநாட்டு நபருடைய உத்தரவின் பேரில் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
லூவர் அருங்காட்சியகத்தில் உலகம் முழுவதும் பிரபலமான ஆயிரக்கணக்கான கலைப்பொருட்கள் உள்ளன. மேலும், பரவலாக அறியப்படாத ஆனால் கலாசார ரீதியாக மிக முக்கியமான பொருட்களும் உள்ளன.
பட மூலாதாரம், Getty Images
ஆனால் அதன் 230 ஆண்டுகால வரலாற்றில், திருட்டுச் சம்பவங்கள் மிகக் குறைவாகவே நடந்துள்ளன. அங்கு நடைமுறையில் உள்ள கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள்தான் அதற்குக் காரணம்.
மிகச் சமீபத்திய திருட்டுச் சம்பவம் 1998-ல் நடந்தது.
19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கலைஞர் காமில் கோரோட்டின் ‘லு கெமின் டி செவ்ரெஸ்’ (செவ்ரெஸுக்குச் செல்லும் பாதை) என்ற ஓவியம், யாரும் கவனிக்காதபோது சுவரில் இருந்து எடுக்கப்பட்டு, இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
லூவர் அருங்காட்சியகத்தில் நடந்த மிகப் பிரபலமான திருட்டு 1911-ல் நடைபெற்றது. அப்போது, லியோனார்டோ டா வின்சியின் லா ஜோகோண்டே (மோனாலிசா) ஓவியம் திருடப்பட்டது. குற்றவாளி இரவு முழுவதும் ஒரு அலமாரியில் ஒளிந்திருந்தார். மறுநாள் காலை, யாரும் கவனிக்காதபோது, ஓவியத்தை அதன் சட்டகத்திலிருந்து எடுத்து, தனது மேலங்கியில் போர்த்தி, கையில் வைத்து வெளியே நடந்து சென்றார்.
பின்னர், அவர் ஒரு இத்தாலிய தேசியவாதி என்பது தெரியவந்தது. அவர் மோனாலிசாவை இத்தாலிக்கு திரும்பக் கொண்டு செல்ல விரும்பினார். 1914-ல் ஓவியம் இத்தாலியில் மீட்கப்பட்டு, லூவருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
ஆனால் தற்போதைய கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை புலனாய்வாளர்கள் விரைவாகக் கண்டுபிடிக்கவில்லை என்றால், அது போன்று நிகழ வாய்ப்பில்லை.
ஏனென்றால், அந்தக் கும்பலின் முதல் இலக்கு திருடிய நகைகளை உடனே பிரித்து விற்பதுதான். அதைச் செய்வது அவர்களுக்கு ஒரு கடினமான காரியமும் அல்ல.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு