• Wed. Apr 1st, 2026

24×7 Live News

Apdin News

லெஜன்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் இசை – எக்சன் டீசர் வெளியீடு

Byadmin

Apr 1, 2026


இந்திய வணிகத் துறையில் உச்சத்தில் இருக்கும் முன்னணி தொழிலதிபரான லெஜன்ட் சரவணன் அதிரடி எக்சன் நாயகனாக நடித்திருக்கும் ‘லீடர்: திரைப்படத்தின் இசை மற்றும் எக்சன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘லீடர் ‘ திரைப்படத்தில் லெஜெண்ட் சரவணன், பாயல் ராஜ் புத், ஆண்ட்ரியா, பேபி இயல், ஷாம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். அதிரடி எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை – எக்சன் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு,  சத்ய ஜோதி டி ஜி தியாகராஜன், தனஞ்செயன் , இயக்குநர் கே. பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் லெஜன்ட் சரவணன் பேசுகையில், ” தி லெஜன்ட் படத்திற்குப் பிறகு இது என்னுடைய இரண்டாவது படம். ‘லீடர்’ திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மூன்றாம் திகதி பட மாளிகையில் வெளியாகிறது.

இந்தப் படத்தின் கதை என்னவென்றால் ஒரு அப்பாவியான அப்பாவும் , பிள்ளையும் அவர்கள் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். திடீரென்று அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய கேங்ஸ்டர் கும்பல் ஒன்று நுழைகிறது.

அதற்கு பிறகு நடக்கும் விடயங்களை இயக்குநர்-  இன்றைய இளைய தலைமுறையினருக்கு பிடிக்கும் வகையில் நேர்த்தியாகவும் அழகாகவும் புதிதாகவும் எல்லோருக்கும் பிடிக்கும் வகையிலும் இயக்கியிருக்கிறார் .‌

இந்த படத்தில் குத்துப் பாடல்கள் கிடையாது. ஆனால் இந்த படத்தில் கதையுடன் பயணப்படுவது போல் பாடல்கள் இருக்கிறது. அதற்கான வரிகளும் இருக்கிறது. இசையமைப்பாளர் ஜிப்ரான் மிகப் பிரமாதமாக இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தை பார்த்த தனுஷ், வெற்றிமாறன் போன்றோர் படம் பிரம்மாண்டமானதாக இருக்கிறது என்று பாராட்டு தெரிவித்தார்கள். இந்தத் திரைப்படம் ஜெயிலர்- விக்ரம் – லியோ-  போன்ற மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஏனெனில் அதற்குள்ள தகுதி அனைத்தும் இந்த லீடர் படத்தில் இருக்கிறது.

இந்த படத்தை ரசிகர்கள் பார்த்தவுடன் புரிந்து கொள்வார்கள். குடும்பத்துடன் அனைவரும் தியேட்டருக்கு வந்து படத்தை பாருங்கள். உங்களுக்கு 100% இந்த திரைப்படம் திருப்தி அளிக்கும் ” என்றார்.

By admin