லெபனானைச் சேர்ந்த ஆயுதக் குழுவான, ஹெஸ்பொலாவுடனான சண்டையை தற்காலிகமாக நிறுத்துவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து விவாதிக்க இஸ்ரேலிய அமைச்சரவை இன்று கூடுகிறது.
அதன்படி, முதலில் 60 நாட்களுக்கு போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்றும், லெபனானில் இருந்து இஸ்ரேலிய படைகள் திரும்பப் பெறப்படுவதும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும் என்றும் செய்தி ஊடகங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரத்தில், ஹெஸ்பொலா அமைப்பு, சர்வதேச எல்லைக்கு வடக்கே 30 கி.மீ (18 மைல்) தொலைவில் உள்ள லிட்டனி ஆற்றின் தெற்குப் பகுதியில் இருந்து அதன் படைகளை திரும்பப் பெறும். அதற்குப் பதிலாக அங்கு லெபனிய ராணுவப் படைகள் நிறுத்தப்படும்.
திங்களன்று, இந்த போர்நிறுத்த உடன்பாடு முடிவுசெய்யும் தருணம் நெருங்கிவிட்டது என்று சர்வதேச விவகாரங்களுக்கான அதிகாரிகள் கூறிய பின்னரும், இருதரப்புக்கும் இடையே கடுமையான சண்டை தொடர்ந்தது.
தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 31 பேர் கொல்லப்பட்டனர் என்று லெபனான் அதிகாரிகள் தெரிவித்தனர், அதேபோல ஹெஸ்பொலா அமைப்பும் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட்டுகளை ஏவியுள்ளது.
ஒப்பந்தத்தில் உள்ளது என்ன?
செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தின் போது இஸ்ரேலிய அமைச்சர்கள் இந்த ஒப்பந்தம் குறித்து முடிவெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஹாரெட்ஸ் (இஸ்ரேலிய செய்தித்தாள்) தெரிவித்துள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி முகமை, ஒரு மூத்த இஸ்ரேலிய அதிகாரி கூறியதை மேற்கோள் காட்டி, “இந்த சந்திப்பின் நோக்கம், ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை அங்கீகரிக்க வேண்டும் என்பதே” என்று கூறியது.
லெபனானின் நீண்ட கால நட்பு நாடுகளான அமெரிக்காவும் பிரான்சும் உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, நான்கு மூத்த லெபனான் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தொலைக்காட்சி ஊடகமான ‘சேனல் 12’-இன் படி, இந்த ஒப்பந்தத்தில் பின்வருவன அடங்கியுள்ளன.
- பரஸ்பர சண்டை நிறுத்தம்
- லெபனானில் 60 நாட்கள் வரை இஸ்ரேலியப் பாதுகாப்பு படைகளின் (IDF) இருப்பு
- இஸ்ரேலிய பாதுகாப்புப் படை திரும்பப் பெறப்படும் போது, அந்த இடத்தில் லெபனான் ராணுவத்தை நிலைநிறுத்துவது.
- தெற்கு லெபனானில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ‘Buffer Zone’ (இருதரப்பை பிரிக்கும் ஒரு நடுநிலைப் பகுதி) ஏதும் இல்லாமல் இருப்பது.
- போர் நிறுத்த அமலாக்கத்தை கண்காணிக்க அமைக்கப்பட்ட 5 நாடுகள் குழுவுக்கு அமெரிக்கா தலைமை தாங்குவது.
- லெபனான் அரசாங்கம், அந்த நாட்டின் ஆயுதக் கொள்முதல் மற்றும் உற்பத்தியை மேற்பார்வையிட வேண்டும்.
இதைத் தவிர, ஹெஸ்பொலா அமைப்பு இந்த உடன்பாட்டை மீறுவதாகக் கருதப்பட்டால், லெபனானை தாக்குவதற்கு இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது என்பதை அங்கீகரித்து அமெரிக்கா ஒரு கடிதத்தை வெளியிடும்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முடிவு என்ன?
தற்போது வரை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த ஒப்பந்தத்திற்கு ‘கொள்கையளவில்’ மட்டுமே ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. லெபனான் நாடாளுமன்ற துணை சபாநாயகர் எலியாஸ் பௌ சாப், ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம், “நெதன்யாகு தனது மனதை மாற்றிக் கொண்டால் ஒழிய, போர் நிறுத்தத்திற்கு வேறு கடுமையான தடைகள் ஏதும் இல்லை” என்று கூறியுள்ளார்.
திங்கட்கிழமை (25-11-2024) மாலை, இது குறித்துப் பேசிய பிரான்ஸ் அரசு, ‘இந்தப் பேச்சுவார்த்தைகளில் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், இஸ்ரேலும் ஹெஸ்பொலாவும், இந்த வாய்ப்பை விரைவாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றும் வலியுறுத்தியது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, “அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான முழுமையான சூழல் அமையவில்லை என்றாலும் கூட, ஏறக்குறைய அதை நெருங்கிவிட்டோம்” என்று கூறினார்.
ஆனால் இஸ்ரேலின் (தீவிர வலதுசாரி) தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர் போர் நிறுத்தத்திற்கு எதிராக பேசியுள்ளார்.
“முழுமையான வெற்றி கிடைக்கும் வரை இஸ்ரேல் போரைத் தொடர வேண்டும் என்றும், இந்த ஒப்பந்தத்தை தடுத்து நிறுத்துவதற்கு இன்னும் காலம் அவகாசம் உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.
லெபனான் அதிகாரிகள் எந்த போர் நிறுத்த உடன்பாடும் ஐ.நா. பாதுகாப்புக் குழு தீர்மானம் 1701-இன் விதிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள அதிகாரப்பூர்வமற்ற எல்லையான ‘ப்ளூ லைன்’ (Blue line) மற்றும் இஸ்ரேலுடனான எல்லையில் இருந்து 30 கி.மீ (18 மைல்கள்) தூரத்தில் உள்ள லிட்டனி நதிக்கும் இடையே உள்ள பகுதிகளில் இருந்து ஹெஸ்பொலா குழுவினர் மற்றும் அதன் ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று தீர்மானம் கூறுகிறது.
இந்த விதிமுறை ஒருபோதும் முழுமையாக மதிக்கப்படவில்லை என்று இஸ்ரேல் கூறுகிறது. அதே நேரத்தில், லெபனான் வான் பரப்பில் இஸ்ரேல் ராணுவ விமானங்கள் செல்வது உட்பட இஸ்ரேலின் விதிமீறல்களை லெபனான் சுட்டிக்காட்டுகிறது.
காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் நிலை
இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பலனளிப்பதாகத் தோன்றினாலும், காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு பல மாதங்களாக முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன.
இந்த மாதம், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் மத்தியஸ்தராக செயல்படுவதில் இருந்து கத்தார் விலகியது.
கடந்த ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி ஹமாஸூக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஹெஸ்பொலா ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதனால் லெபனானிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் துவங்கியது.
ஹெஸ்பொலா தாக்குதல்களால் வடக்கு இஸ்ரேலில் இருந்து புலம்பெயர்ந்த சுமார் 60,000 மக்களை, மீண்டும் அந்தப் பகுதிக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்பதே இஸ்ரேலின் முடிவாக உள்ளது.
இஸ்ரேல் கடந்த செப்டம்பரில், ஹெஸ்பொலா அமைப்புக்கு எதிரான போரில் மிகப்பெரிய நடவடிக்கைகளை தொடங்கியது. அந்த அமைப்பின் உள்கட்டுமானம் மற்றும் ஆயுதங்களின் பெரும்பகுதியை அழித்தது, அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் பிற மூத்த தலைவர்களைக் கொன்றது.
லெபனான் அதிகாரிகளின் கூற்றுப்படி, 2023, அக்டோபர் முதல் லெபனானில் 3,750க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் குறைந்தது 15,600 பேர் காயமடைந்துள்ளனர். பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு