பெரும்பான்மையான லெபனான் மக்கள் போர் நிறுத்தத்தை மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் எதிர்நோக்கிக் காத்திருந்தனர். ரோமில் நடைபெற்ற மத்திய கிழக்கு மாநாட்டில் என்னுடன் கலந்துகொண்ட ஒரு முக்கிய லெபனான் ஆய்வாளர், திட்டமிடப்பட்ட போர்நிறுத்த நாள் நெருங்கி வருவதால் பதற்றத்தில் தன்னால் தூங்க முடியவில்லை என்றார்.
“எனது குழந்தைப் பருவத்தில் நான் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்த கிறிஸ்துமஸ் மாலை வேளையை இந்த உணர்வு நினைவுபடுத்தியது. போர் நிறுத்த நாளை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.”
லெபனான் மக்களின் இந்த நிம்மதிக்கான காரணத்தைப் புரிந்து கொள்வது எளிது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் 3,500க்கும் மேற்பட்ட லெபனான் மக்கள் கொல்லப்பட்டனர். அதுபோன்ற நிகழ்வுகள் இன்னும் சற்றுக் காலத்திற்கு இருக்காது என்பதே இந்த மக்களின் நிம்மதிக்குக் காரணம்.
போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு, நாட்டைவிட்டு வெளியேறி மக்கள் அதிகாலையிலேயே தங்கள் பைகளை கார்களில் ஏற்றிக் கொண்டு, இன்னும் இடிந்த நிலையில் இருந்த தங்கள் வீடுகளுக்குத் திரும்ப விரைந்தனர்.
அவர்களில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கை காரணமாக வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டவர்கள். தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர் மற்றும் பல்லாயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டன.
ஆனால் இஸ்ரேலில், இந்தப் போர் நிறுத்த நடவடிக்கை பற்றிச் சிலர் வேறுவிதமான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளனர். ஹெஸ்பொலாவை அழிக்கும் வாய்ப்பை இஸ்ரேல் இழந்துவிட்டதாகச் சிலர் நினைக்கின்றனர்.
இஸ்ரேலின் அரசாங்க தலைவர்கள் அதிருப்தி
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வடக்கு இஸ்ரேலில் உள்ள உள்ளூர் அரசாங்கத் தலைவர்களைச் சந்தித்தார். அந்தப் பகுதிகளில் இருந்து ஏறக்குறைய 60,000 பொதுமக்கள் தெற்குப் பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர், இந்தப் பகுதிகள் கைவிடப்பட்ட நகரங்களாக (ghost towns) மாறின.
இஸ்ரேலிய ஊடகமான Ynet, இந்தச் சந்திப்பில் வாக்குவாதம் ஏற்பட்டதாக செய்தி வெளியிட்டது.
“உள்ளூர் அதிகாரிகள் சீற்றமடைந்தனர். லெபனானில் உள்ள எதிரிப் படைகள் மீதான ராணுவ அழுத்தத்தை இஸ்ரேல் தளர்த்துவது குறித்துச் சில உள்ளூர் அதிகாரிகள் அதிருப்தி அடைந்தனர். பொது மக்கள் மீண்டும் வீடு திரும்புவதற்கான நடவடிக்கையை விரைவுபடுத்தவில்லை என்பதே அவர்களின் சீற்றத்திற்குக் காரணம்” என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்லைக்கு அருகிலுள்ள மாவட்டமான கிரியாத் ஷுமோனாவின் மேயர், ஒரு செய்தித்தாளுக்குக் கொடுத்த பேட்டியில், போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுமா என்பதில் சந்தேகம் இருப்பதாகவும், தெற்கு லெபனானில் இஸ்ரேல் ஓர் இடையக மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
இஸ்ரேலின் சேனல் 12 நியூஸ் என்ற செய்தி ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பு ஒன்றில், போர் நிறுத்த நடவடிக்கைக்குத் தற்போது கலவையான எதிர்வினைகள் வருகின்றன. போர் நிறுத்தத்தை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என இரு சாரார் உள்ளது தெரிய வந்துள்ளது.
கருத்துக் கணிப்பில் பாதிப் பேர் ஹெஸ்பொலா தோற்கடிக்கப்படவில்லை எனக் கருதுகின்றனர். 30% பேர் போர் நிறுத்தம் ஏற்படுவது சந்தேகமே என்று நினைத்தனர்.
`இதற்கு முன்னரும் போர்நிறுத்தம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது’
செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில், நியூயார்க்கில் நடந்த ஐ.நா பொதுச் சபையில், ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டனின் தூதர்கள் தற்போது நடைமுறையில் உள்ளதைப் போன்ற ஒரு போர் நிறுத்தம் விரைவில் எட்டப்படும் என்று நம்பினர்.
லெபனானில் போரை முடிவுக்குக் கொண்டுவர 2006இல் நிறைவேற்றப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1701 விதிகளின் கீழ், போரில் ஈடுபடும் அனைத்துத் தரப்பினரும் போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்வார்கள் எனத் தோன்றியது. எல்லையில் இருந்து ஹெஸ்பொலா வெளியேறினால், ஐ.நா அமைதிப்படை மற்றும் லெபனான் ராணுவம் களமிறக்கப்படும், இஸ்ரேலிய ராணுவம் படிப்படியாக வெளியேறும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், அன்றைய தினம், பிரதமர் நெதன்யாகு ஐ.நா. மேடையில் ஏறி, இஸ்ரேலின் தாக்குதல் எந்த வகையிலும் நிறுத்தப்படாது என ஆவேச உரை நிகழ்த்தினார்.
நியூயார்க் ஹோட்டலில், நெதன்யாகுவின் அதிகாரப்பூர்வ புகைப்படக்காரர், ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை படுகொலை செய்ய பிரதமர் உத்தரவிட்ட அந்தத் தருணத்தை படம்பிடித்தார்.
அந்தப் புகைப்படத்தில், மற்ற உயர்மட்ட அதிகாரிகளும் நெதன்யாகுவுடன் இருந்தனர். பிரதமர் அலுவலகம் இந்தப் புகைப்படத்தை வெளியிட்டது. இந்தப் புகைப்படங்கள் அமெரிக்க ராஜதந்திரத்தை இஸ்ரேல் வேண்டுமென்றே புறக்கணித்ததைப் பிரதிபலிப்பது போல் இருந்தது.
ஹசன் நஸ்ரல்லாவின் மரணம் ஹெஸ்பொலாவுக்கு விழுந்த பெரிய அடியாக இருந்தது. அடுத்த சில வாரங்களில், இஸ்ரேலிய படைகள் ஹெஸ்பொலாவின் ராணுவ அமைப்புக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தின.
இஸ்ரேல் நினைத்தால் இப்போதும் ஹெஸ்பொலா மீது தாக்குதல் நடத்த எல்லையைத் தாண்டி ஏவுகணைகளை ஏவ முடியும். ஆனால் இஸ்ரேலுக்கு ஹெஸ்பொலா முன்பைப் போல மிகபெரிய அச்சுறுத்தலாக இல்லை.
நெதன்யாகுவின் அறிக்கை
`ராணுவ வெற்றி’ என்று இந்தச் சூழலைக் கருதிய பிரதமர் நெதன்யாகு, மேலும் சில காரணங்களுக்காகவும் போர் நிறுத்தத்திற்கு இப்போதுதான் சரியான நேரம் என்று நம்பினார்.
லெபனானில் இஸ்ரேலுக்கு தேவையான பகுதிகள், காஸா பகுதி மற்றும் பிற ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனிய பகுதிகளைவிட குறைவாகவே உள்ளன. இஸ்ரேல் தனது வடக்கு எல்லையில் இருந்து ஹெஸ்பொலாவை விரட்டிவிட்டு எல்லை நகரங்களுக்குக் குடிமக்களைத் திருப்பி அனுப்ப விரும்புகிறது.
ஹெஸ்பொலா தாக்குதலுக்குத் தயாராகி வருவதாக சந்தேகம் எழுந்தால் ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்று அமெரிக்காவிடம் இருந்து இஸ்ரேல் ஒப்புதல் பெற்றது.
போர் நிறுத்தத்திற்கான சரியான நேரம் இது என்பதற்கான காரணங்களைப் பட்டியலிட்டு பதிவு செய்யப்பட்ட அறிக்கையை நெதன்யாகு வெளியிட்டார். லெபனான் தலைநகரம் பெய்ரூட்டின் அடித்தளத்தை இஸ்ரேல் அசைத்துவிட்டதாக பிரதமர் கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், ‘நமது ராணுவம் சற்று நிம்மதிப் பெருமூச்சு விடலாம், அதன் பலத்தை மேம்படுத்ததும் வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளதாக’ நெதன்யாகு குறிப்பிட்டார்.
கூடுதலாக, காஸா மற்றும் லெபனான் இடையிலான உறவுகளை இஸ்ரேல் துண்டித்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி, ஹமாஸ் இந்தப் போருக்குள் நுழைந்த மறுநாளே, மறைந்த ஹசன் நஸ்ரல்லா வடக்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார் மற்றும் காஸாவில் போர் நிறுத்தம் ஏற்படும் வரை தாக்குதல் தொடரும் என்றும் கூறினார்.
காஸாவில் உள்ள ஹமாஸ் இப்போது அதிக அழுத்தத்திற்கு உள்ளாகும் என்று நெதன்யாகு கூறியுள்ளார். காஸா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல் மீண்டும் விரிவடையும் என பாலத்தீனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நெதன்யாகு ‘இரானிய அச்சுறுத்தல்’ என்று குறிப்பிட்டதற்கு வேறு காரணங்கள் உள்ளன.
ஹெஸ்பொலாவை தாக்குவது என்பது இரானை தாக்குவதாகும். இஸ்ரேலின் எல்லையில் அச்சுறுத்தலை ஏற்படுத்த இரான் ஹெஸ்பொலாவை உருவாக்கியது. கூட்டாளிகள் மற்றும் பினாமிகளால் உருவாக்கப்பட்ட அதன் பாதுகாப்பு வலையமைப்பிற்கு `ஹெஸ்பொலா’ எனப் பெயரிட்டது, மேலும் ஹெஸ்பொலா இரானின் தற்காப்புப் படைகளில் மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறியது.
இரான் போர் நிறுத்தத்தை விரும்புவது ஏன்?
பல தாக்குதல்களில் இருந்து உயிர் பிழைத்த ஹெஸ்பொலாவின் தலைவர்களைப் போலவே, இரானிய ஆதரவாளர்களும் போர் நிறுத்தத்தை விரும்பினர்.
ஹெஸ்பொலாவின் காயங்களை ஆற்றுவதற்கு ஓய்வு தேவை. இரான் புவிசார் அரசியல் போர்ச் சூழலை நிறுத்த வேண்டும். இரானின் `எதிர்ப்புக் கூட்டணியால்’ (axis of resistance) இனி ஒரு தடுப்பாக இயங்க முடியாது. நஸ்ரல்லாவின் படுகொலைக்குப் பிறகு இஸ்ரேல் மீது இரானின் ஏவுகணைத் தாக்குதல் முன்னதாக இரானுக்கு ஏற்பட்ட சேதத்தைச் சரிசெய்யத் தவறியது.
லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை மட்டுமல்ல, இரான் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் தடுப்பதற்காக, இரண்டு நபர்கள் ஹெஸ்பொலாவை உருவாக்கினார்கள்.
முதல் நபர், ஜனவரி 2020இல் பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட இரானிய புரட்சிகர காவல் படையின் குட்ஸ் படையின் தளபதி காசிம் சுலைமானி.
டொனால்ட் டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தின் முடிவில் வெள்ளை மாளிகையில் தனது இறுதி வாரங்களில் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
மற்றொரு நபர், ஹசன் நஸ்ரல்லா, பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
கடந்த 2006 போரின் முடிவில் இருந்து கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக, ஹெஸ்பொலா மற்றும் இரானின் தடுப்பு உத்தி (deterrence strategy) இஸ்ரேலின் தாக்குதல்களைச் சமப்படுத்தியுள்ளது. ஆனால் அக்டோபர் 7 தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்தன.
இஸ்ரேல் தனது எதிர்கால தாக்குதலுக்கு எந்தக் கட்டுப்பாடும் விதிக்க வேண்டாம் என முடிவு செய்தது. இஸ்ரேலின் மிக முக்கியக் கூட்டாளியான, மிக முக்கியமான நட்பு நாடான அமெரிக்கா, அது தொடர்ந்து ஆயுதங்களை வழங்குவதற்கோ அல்லது பயன்படுத்துவதற்கோ கிட்டத்தட்ட எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை.
இரானும் நஸ்ரல்லாவும் எதார்த்தத்தைப் பார்க்கத் தவறிவிட்டனர். இஸ்ரேலின் மாற்றத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏறக்குறைய ஓராண்டாக, அவர்கள் வலுக்கட்டாயமாக ஆட்சேபனை அடிப்படையிலான போரை நடத்தும் முயற்சியில் இஸ்ரேலிடம் வெற்றி பெற்றனர்.
செப்டம்பர் 17 அன்று இஸ்ரேல் அதிலிருந்து விடுபட்டது, அதன் உளவுத்துறையினர் ஹெஸ்பொலாவை ஏமாற்றி சிறிய குண்டுகள் பொருத்தப்பட்ட பேஜர்களை விற்றனர்.
இந்தச் சம்பவம் ஹெஸ்பொலாவை தடுமாற வைத்தது. ஹெஸ்பொலா இரானின் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் பதிலடி கொடுக்கும் முன், இஸ்ரேல் ஒரு மிகப்பெரிய வான் தாக்குதலையும் நடத்தியது.
நஸ்ரல்லா மற்றும் அவரது முக்கிய நிர்வாகிகள் பலரை இஸ்ரேல் கொன்று அவர்களின் ஆயுதக் கிடங்கையும் அழித்தது. பின்னர், தெற்கு லெபனானை ஆக்கிரமித்து லெபனான் எல்லைக் கிராமங்களையும் ஹெஸ்பொலாவின் நிலத்தடி வலையமைப்பையும் பெருமளவில் அழித்தது.
டிரம்ப், காஸா, எதிர்காலம்
லெபனானில் போர் நிறுத்தம் வந்தாலும், காஸாவில் போர் நிறுத்தம் வருவது மிகவும் குறைவு. ஏனெனில், காஸா பகுதி முற்றிலும் வேறு.
எல்லைப் பாதுகாப்பு மற்றும் இஸ்ரேலிய பணயக்கைதிகள் போன்ற விவகாரத்தைவிட காஸாவில் நடக்கும் போர் அதிக தாக்கங்களைக் கொண்டுள்ளன.
இது பழிவாங்கும் உணர்வுகளை உள்ளடக்கியது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் பிழைப்பு ஆபத்தில் உள்ளது. மேலும் நெதன்யாகு ஆட்சி பாலத்தீனிய சுதந்திரத்தை முற்றிலுமாகச் சிதைத்து அவர்களைப் பழிவாங்க முயல்கிறது.
லெபனானில் போர் நிறுத்தம் மிக உறுதியான நிலையில் இல்லை. இது, ராணுவ பலத்தை மேம்படுத்த வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட இடைவெளி.
ஒப்புக்கொள்ளப்பட்ட 60 நாள் போர் நிறுத்த காலம் முடிவடைந்த பின்னர், டொனால்ட் டிரம்ப் ஓவல் அலுவலகத்திற்குத் திரும்பியிருப்பார். லெபனானில் போர் நிறுத்தம் செய்ய விரும்புவதாக அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் கூறியிருந்தாலும், அதற்கான சரியான செயல் திட்டம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
டிரம்ப் என்ன தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று மத்திய கிழக்குப் பிராந்தியமே காத்திருக்கிறது. 1972இல் அதிபர் நிக்சனின் திடீர் சீனப் பயணத்தைப் போலவே டிரம்ப் இரானுக்கு செல்லக்கூடும் என்று சிலர் நம்புகின்றனர்.
‘இரு நாடு தீர்வு’ (இஸ்ரேலும் சுதந்திர பாலத்தீனும் இணைந்து வாழ்வதற்கான திட்டம்) என்ற அமெரிக்காவின் வெற்றுத் திட்டத்தைக்கூட டிரம்ப் கைவிடக்கூடும் என மற்றொரு தரப்பினர் கவலைப்படுகின்றனர்.
இது ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனியப் பகுதிகளான மேற்குக் கரை மற்றும் வடக்கு காஸா பகுதிகளை இஸ்ரேல் சேர்த்துக்கொள்ள வழிவகுக்கும்.
ஆனால் உண்மை என்னவெனில் மத்திய கிழக்கு அதன் அடிப்படை அரசியல் பிளவுகளை எதிர்கொண்டு தீர்க்கும் வரை, இன்னும் பல தலைமுறைகள் போர் மற்றும் வன்முறை மரணத்திலிருந்து அந்த பிராந்தியம் தப்பிக்க முடியாது. இதில், இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்துக்கும் இடையிலான மோதல்தான் மிகப்பெரிய பிளவை கொண்டுள்ளது.
பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும், பெரும்பாலான இஸ்ரேலியர்களை போலவே, ராணுவ வெற்றியின் மூலம் தங்கள் எதிரிகளை வெல்ல முடியும் என்று நம்புகிறார்கள்.
மத்திய கிழக்கின் அதிகாரச் சமநிலையை இஸ்ரேலுக்கு சாதகமாக மாற்றுவதற்காக அமெரிக்காவின் தடையின்றி பலத்தை நெதன்யாகு தீவிரமாகப் பயன்படுத்துகிறார்.
அரேபியர்களும் யூதர்களும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த ஒரு மோதலில் ராணுவ வெற்றி மூலம் அமைதியை மீண்டும் நிலை நாட்டலாம் என்று பலமுறை கனவு கண்டுள்ளனர். ஒவ்வொரு தலைமுறையும் அதை முயல்கிறது, ஆனால் வெற்றி பெறவில்லை.
அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தாக்குதலின் பேரழிவுகரமான விளைவுகள், பாலத்தீனியர்களின் சுயநிர்ணய உரிமையைத் தொடர்ந்து மறுக்கும் அதே வேளையில் மோதலை நிர்வகிக்க முடியும் என்ற இஸ்ரேலின் கூற்றைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தியது. லெபனானில் போர் நிறுத்தம் என்பது ஓர் இடைநிறுத்த நடவடிக்கை மட்டுமே. இது எந்த வகையிலும் தீர்வாகாது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு