0
இலங்கை பாடசலைகள் கால்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து ஸ்ரீலங்கன் ஸ்போர்ட்ஸ் ரிவி ஏற்பாடு செய்துள்ள லைவ்போய் கிண்ணத்துக்கான 20 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் விளையாட ஸாஹிரா கல்லூரியும் ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரியும் தகுதிபெற்றுள்ளன.
இதற்கு முன்னோடியாக சிட்டி லீக் திடலில் வெள்ளிக்கிழமை (07) காலை நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் கேட்வே அணியை 5 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் ஸாஹிரா வெற்றிகொண்டது.
அப் போட்டியின் முதலாவது ஆட்டநேர பகுதியில் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்டன.
போட்டியின் 5ஆவது நிமிடத்தில் எம்.கே.எம். கதீம் கோல் முதலாவது கோலை போட்டு ஸாஹிராவை முன்னிலையில் இட்டார்.
ஆனால், 8 நிமிடங்கள் கழித்து கேட்வே வீரர் யூ. ஷக்கில் கோல் நிலையை சமப்படுத்தினார்.
அதன் பின்னர் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்டன.
எனினும், இடைவேளை நெருங்கிக்கொண்டிருந்தபோதும், இடைவேளைக்குப் பின்னரும் 4 நிமிட இடைவெளியில் 3 கோல்களைப் போட்ட ஸாஹிரா போட்டியில் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது.
போட்டியின் 45ஆவது நிமிடத்தில் எம்.கே.எம். ஹிப்னியும் 47ஆவது நிமிடத்தில் எஸ். உஸ்மானும் 49ஆவது நிமிடத்தில் எம்.கதீமும் கோல்களைப் புகுத்தினர்.
அதன் பின்னர் 75ஆவது நிமிடத்தில் ஸாஹிராவின் 5ஆவது கோலை எம்.ஏ.எச். அஹமத் போட்டார்.
ஹமீத் அல் ஹுசெய்னி வெற்றி
இதே மைதானத்தில் பிற்பகல் நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் றோயல் கல்லூரியை எதிர்த்தாடிய ஹமீத் அல் ஹுசெய்னி 3 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மிகவும் அற்புதமான வியூகங்களுடன் விளையாடிய ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரி வீரர்களின் பந்து நகர்த்தல், பரிமாற்றம் என்பன மிகத் திறமையாக இருந்தது.
போட்டியில் முழுமையான ஆதிக்கம் செலுத்திய ஹமீத் அல் ஹுசெய்னி ஆட்டத்தின் முதலாவது பகுதியில் பல கோல் போடும் வாய்ப்புகனை கோட்டை விட்டது.
எனினும் 38ஆவது நிமிடத்தில் எம்.பஸ்லான் தலையால் முட்டி முதலாவது கோலைப் போட்டு அணியை இடைவேளையின்போது 1 – 0 என முன்னிலையில் இட்டார்.
இடைவேளைக்குப் பின்னர் எம். அர்ஹம் 52ஆவது நிமிடத்திலும் எம். பஸாம் 85ஆவது நிமிடத்திலும் கோல்களைப் போட்டு ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரியை வெற்றி அடையச் செய்தனர்.
இறுதிப் போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (09) பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னர் 3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் கேட்வே – றொயல் அணிகளுக்கு இடையிலான போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.