பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
-
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
இந்திய நாடாளுமன்ற மக்களவையில் வியாழக் கிழமையன்று (ஏப்ரல் 3) அதிகாலையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 288 பேரும் எதிராக 233 பேரும் வாக்களித்திருந்தனர்.
தொடர்ந்து, வியாழக் கிழமையன்று (ஏப்ரல் 3) மாநிலங்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தொடர்பான வாக்கெடுப்பு நடந்தது. மறுநாள் அதிகாலை வரை நடந்த இந்த வாக்கெடுப்பில் ஆதரவாக 128 பேரும் எதிராக 95 பேரும் வாக்களித்தனர்.
மாநிலங்களவையில் அ.தி.மு.க-வுக்கு தம்பிதுரை, சி.வி.சண்முகம், சந்திரசேகரன், தர்மர் என 4 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் தர்மர் மட்டும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வருகிறார்.
மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தம்பிதுரை சந்தித்துப் பேசியிருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
தொடர்ந்து, அ.தி.மு.க-வின் நான்கு உறுப்பினர்களும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து வாக்களித்தனர்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மசோதாவை ஆதரித்து வாக்களித்தார். பா.ம.க தலைவர் அன்புமணி வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
மாநிலங்களவையில் வியாழக்கிழமை நள்ளிரவில் நடந்த வக்ஃப் சட்டத் திருத்தம் தொடர்பான விவாதத்தில் பேசிய அ.தி.மு.க எம்.பி, தம்பிதுரை, “தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முஸ்லிம் மக்கள் அதிகமாக வசிக்கின்றனர். அவர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அ.தி.மு.க உறுதியாக உள்ளது” எனக் கூறினார்.
நிர்மலா சீதாராமன் – தம்பிதுரை சந்திப்பை சுட்டிக் காட்டி பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம், “வக்ஃப் விவகாரத்தில் தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை பா.ஜ.க-வுக்கு அ.தி.மு.க தெரியப்படுத்தியிருக்கலாம்” எனக் கூறினார்.
பட மூலாதாரம், Facebook
‘நம்பிக்கையைப் பெறும் முயற்சி’
“சிறுபான்மை மக்களின் நலன்களைப் பாதிக்கும் சட்டத்தை ஆதரித்தால், காலத்துக்கும் சிறுபான்மையினர் பக்கம் வாக்கு கேட்டுச் செல்ல முடியாது என்பதால் இந்த மசோதாவை எதிர்த்து அ.தி.மு.க வாக்களித்துள்ளது” என அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, குடியுரிமை திருத்த மசோதாவுக்கு (சிஏஏ) அ.தி.மு.க ஆதரவு அளித்ததால், 2021 சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மையினர் வாக்குகள் அ.தி.மு.க-வுக்கு வராமல் போனதாக ஜென்ராம் தெரிவித்தார்.
குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக, மக்களவையில் அ.தி.மு.க எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் வாக்களித்தார். அதேபோல மாநிலங்களவையில் உள்ள 11 அ.தி.மு.க உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
“அதேநேரம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பிரிந்து 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை அ.தி.மு.க தனி அணியாக சந்தித்தாலும் சிறுபான்மை மக்களின் வாக்குகள் அ.தி.மு.க-வுக்கு வரவில்லை” என்கிறார் ஜென்ராம்.
பா.ஜ.க உடன் கூட்டணி சேர்ந்ததால் அ.தி.மு.க மீது சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை. மீண்டும் அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக அ.தி.மு.க வாக்களித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Facebook
“சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டாலும் பா.ஜ.க உடன் மீண்டும் கூட்டணி சேர்ந்தால் அ.தி.மு.க-வுக்கு எந்தப் பலனும் இல்லை. சிறுபான்மையினருக்கு எதிராக அ.தி.மு.க இல்லை என்பதைக் வெளிக்காட்டிக் கொள்வதற்காக எதிராக வாக்களித்துள்ளனர்” எனக் கூறுகிறார் பத்திரிகையாளர் கா.அய்யநாதன்.
இதுதொடர்பாக, அ.தி.மு.க முன்னாள் ஜெயக்குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது.
“நான் என்ன விளக்கம் அளித்தாலும் அது கிளைக் கதைகளை உருவாக்கும். இதுகுறித்துப் பேச விரும்பவில்லை” என்று மட்டும் பதில் அளித்தார்.
‘தவறாக பிரசாரம் செய்தனர்’ – அன்வர் ராஜா
பிபிசி தமிழிடம் பேசிய அ.தி.மு.க அமைப்புச் செயலாளரும் முன்னாள் வக்ஃப் வாரிய தலைவருமான அன்வர் ராஜா, “வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தி.மு.க அரசு தீர்மானம் கொண்டு வந்தது. அதை அ.தி.மு.க ஆதரித்தது. மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களித்துள்ளோம். இது எங்கள் கட்சியின் நிலைப்பாடு” எனக் கூறினார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை அ.தி.மு.க ஆதரித்தது குறித்து பேசிய அன்வர் ராஜா, “இந்த சட்டத்தால் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே அ.தி.மு.க ஆதரித்தது. ஆனால், இதை வைத்து எங்களுக்கு எதிராக சிலர் தவறாக பிரசாரம் செய்தனர். மக்களையும் நம்ப வைத்துவிட்டனர்” எனத் தெரிவித்தார்.
மத்திய நிதி அமைச்சரை தம்பிதுரை சந்தித்தது குறித்துப் பேசிய அன்வர் ராஜா, “அவர் வேறு ஒரு காரணத்துக்காக சந்தித்துள்ளார். அதற்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கும் தொடர்பில்லை” என்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
‘வெற்றிக் கூட்டணியாக இருக்காது’
“பா.ஜ.க உடன் அ.தி.மு.க கூட்டணி வைத்ததை மக்கள் ஏற்கவில்லை. அதனால் வெளியில் வந்தோம். அதன்பிறகு பிரதமர், உள்துறை அமைச்சர் தமிழகம் வந்தபோது நேரில் சென்று எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை” எனத் தெரிவித்தார் அன்வர் ராஜா.
அண்மையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மாநில நலனுக்காகவே எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசியதாக அவர் குறிப்பிட்டார்.
“கூட்டணி வேண்டுமா என்பதை பெரிய கட்சியான அ.தி.மு.க தலைமை முடிவெடுக்கும். கூட்டணிக்காக பா.ஜ.க தரப்பில் நெருக்கடி கொடுத்தாலும் அது வெற்றிக் கூட்டணியாக இருக்காது. பிறகு எப்படி பா.ஜ.க உடன் அ.தி.மு.க கூட்டணி உடன்பாட்டை வைத்துக் கொள்ளும்?” என்கிறார் அவர்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் பேசியது என்ன?
2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இடம் பெற்றது. தேர்தல் முடிவில் அ.தி.மு.க-வுக்கு 66 இடங்களும் பா.ஜ.க-வுக்கு 4 இடங்களும் கிடைத்தன.
சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பா.ஜ.க உடன் கூட்டணி வைத்ததை பிரதான காரணமாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் பேசி வந்தனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளேன். ஆனால், பா.ஜ.க உடன் கூட்டணி வைத்ததால் தொகுதியில் உள்ள நாற்பதாயிரம் சிறுபான்மையினர் ஓட்டுகள் எனக்கு விழவில்லை” என்றார்.
“பா.ஜ.க உடன் கூட்டணி வைத்ததால் பல தொகுதிகளில் நெருக்கடிகளை சந்தித்தோம். பா.ஜ.க உடன் அ.தி.மு.க கூட்டணி வைத்திருப்பதை மக்கள் விரும்பவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தியதால் கூட்டணியை முறித்துக் கொண்டோம்” எனவும் ஜெயக்குமார் பேசியிருந்தார்.
இதே கருத்தை முன்வைத்து ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நடந்த முதல் இடைத்தேர்தல் முடிவுக்குப் பின் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “அ.தி.மு.கவுக்கு வர வேண்டிய 42 ஆயிரம் சிறுபான்மை மக்களின் வாக்குகள் வரவில்லை” எனப் பேசினார்.
அந்தியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியபோது இவ்வாறாக அவர் குறிப்பிட்டார். மேலும், அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இருந்ததால் சிறுபான்மை சமூக மக்கள், தங்களின் வாக்குகளை மாற்றிப் போட்டுவிட்டதாகவும் அப்போது பேசினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு