2025-ஆம் ஆண்டின் வக்ஃப் திருத்தச் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு தடை விதித்திருக்கும் உச்ச நீதிமன்றம், முழுமையான தடையை விதிக்க மறுத்திருக்கிறது. இதனை அரசியல் கட்சிகள் பலவும் வரவேற்றுள்ளன. ஆனால், இஸ்லாமிய அமைப்புகளைப் பொறுத்தவரை நீதிமன்றம் அனுமதித்திருக்கும் சில பிரிவுகள் பாரபட்சமாக இருப்பதாக குற்றம்சாட்டுகின்றன.
இஸ்லாமிய மத தொண்டுக்காக அளிக்கப்படும் வக்ஃப் சொத்துகள் தற்போது 1995-ஆம் ஆண்டின் வக்ஃப் சட்டத்தின்படி நிர்வகிக்கப்படுகின்றன. இந்தச் சட்டத்தை திருத்தும் வகையில் மத்திய அரசு ஒரு திருத்தச் சட்டத்தை 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
சமத்துவமின்மையை நீக்குவது, பாலின சமத்துவத்தை அறிமுகம் செய்வது, மாநில வக்ஃப் வாரியங்களில் பல்வேறு இஸ்லாமியப் பிரிவனருக்கும் பிரதிநிதித்துவம் தருவது உள்ளிட்ட நோக்கங்களோடு இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதாக மத்திய அரசு கூறியது.
இந்தச் சட்டம் வக்ஃப் சொத்துகளை பதிவு செய்வது, தணிக்கை செய்வது, கணக்குகளை கண்காணிப்பது தொடர்பான விதிகளை வகுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளித்தது. வக்ஃப் தீர்ப்பாயங்கள் வழங்கும் தீர்ப்புகளை எதிர்த்து, 90 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தை நாடவும் இந்தச் சட்டம் அனுமதித்தது.
இந்தச் சட்டம் கடந்த ஏப்ரல் மாதத் துவக்கத்தில் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. உடனடியாக இந்தச் சட்டத்திற்கு இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் வழங்கப்பட்டது.
ஆனால், இந்தச் சட்டத்திற்கு இஸ்லாமியர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், முஸ்லிம்களின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கம் கொண்டது என்றும் கூறி, 100க்கும் மேற்பட்ட மனுக்கள் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
தலைமை நீதிபதி பி.ஆர். கவய் தலைமையிலான அமர்வு, மே மாதம் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இந்த வழக்கை விசாரித்தது. இந்த வழக்கில் செப்டம்பர் 15-ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு இஸ்லாமியர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது
உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?
உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் இந்தச் சட்டத்தை முழுமையாகத் தடை செய்ய மறுத்துவிட்டது. ஆனால், சட்டத்தின் சில அம்சங்களுக்கு தடை விதித்தது. சட்டத்தின் சில வரம்புகளைக் குறைத்தது.
அதன்படி, மாநில வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கை மூன்றை தாண்டக் கூடாது என்றும், மத்திய வக்ஃப் கவுன்சிலில் இந்த எண்ணிக்கை நான்கை தாண்டக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
மேலும், வக்ஃப் சொத்து என அறிவிக்கப்பட்ட ஒரு சொத்து அரசுக்கு சொந்தமானதா, இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கும் பிரிவுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஒருவர் வக்ஃபுக்கு சொத்தை அளிப்பதற்கு முன்பாக ஐந்தாண்டுகள் இஸ்லாமியராக இருந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விதிகளை மாநில அரசுகள் வகுக்கும்வரை இந்தத் தடை நீடிக்கும்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 15ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது
காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தத் தீர்ப்பை வரவேற்றன. அதே நேரத்தில், சிறுபான்மை விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் இந்தத் தீர்ப்பை வரவேற்றிருக்கிறார்.
இந்தத் தீர்ப்பு வக்ஃப் சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் ஆவணங்களை டிஜிட்டல்மயமாக்குவது, சொத்துகளை மேம்படுத்துவது, வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவருவது போன்ற நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், இஸ்லாமிய அமைப்புகளைப் பொறுத்தவரை இந்தத் தீர்ப்பு குறித்து எச்சரிக்கையுடனேயே கருத்துகளை தெரிவித்துவருகின்றன.
இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய இஸ்லாமியர்களின் இறையியல் மன்றமான ஜமியத் உலாமா இ ஹிந்த், தீர்ப்பு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளது. இருந்தபோதும், இந்தச் சட்டம் நீக்கப்படும்வரை தங்களது ஜனநாயகப் போராட்டம் தொடரும் என்றும் கூறியிருக்கிறது.
அதேபோல, அகில இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம், மனுதாரர்களின் முக்கியமான கோரிக்கையை நீதிமன்றம் பெருமளவு ஏற்றுக் கொண்டிருப்பதாக கூறியுள்ளது. இருந்தபோதும், தீங்கு ஏற்படுத்தக்கூடிய வேறு சில பிரிவுகளைத் தொடர அனுமதித்திருப்பதாக அதிருப்தி தெரிவித்திருக்கிறது.
“இறுதித் தீர்ப்புக்கு முன்பாக மாநில அரசுகள் வக்ஃப் சொத்துகளை பறிமுதல் செய்யலாம்”
இந்தச் சட்டத்தில் நீதிமன்றம் தொடர அனுமதித்திருக்கும் பிரிவுகள் குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய அமைப்புகளும் அதிருப்தி தெரிவித்திருக்கின்றன.
“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளை விதிகளை மீறும் பல பிரிவுகளுக்கு தடை விதிக்கப்படாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது” என்கிறார், இந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா.
பட மூலாதாரம், Jawahirullah MH/X
படக்குறிப்பு, வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா
“பயன்பாட்டின் வழியே வந்த வக்ஃபாக இருந்தாலும் (Waqf by User), ஆவணங்களும் தேவை என்ற விதியை நீக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது மிகுந்த அச்சத்திற்குரியதாக இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் கருத்து காரணமாகப் பல நூற்றாண்டு காலத்திற்கு முன்பு உருவாக்கப்பட்டு, தற்போதும் பயன்படுத்தப்பட்டு வரும் பள்ளிவாசல்கள், அடக்கஸ்தலங்களுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்கிறார் ஜவாஹிருல்லா.
மேலும், முந்தைய சட்டத்தில் இருந்த முஸ்லிம் அல்லாதோர் வக்ஃப் செய்யலாம் என்று அனுமதித்த 104வது பிரிவு, ஆக்கிரமிக்கப்பட்ட வக்ஃப் சொத்துகளை மீட்கக் காலவரையறை சட்டம் 1963 (Limitation Act) பொருந்தாது என்ற 107வது பிரிவு, நாட்டை விட்டு வெளியேறியவர்களின் வக்ஃப் சொத்து குறித்த சிறப்புப் பிரிவுகளைக் கொண்ட 108வது பிரிவு ஆகியவை புதிய சட்டத்தில் இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“இது குறித்து உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் ஏதும் குறிப்பிடவில்லை. இதன் காரணமாக, இறுதித் தீர்ப்பு வருவதற்கு முன்பாக, சில மாநில அரசுகள் வக்ஃப் சொத்துகளை பறிமுதல் செய்யக்கூடும்” என்கிறார் எம்.ஹெச். ஜவாஹிருல்லா.
“உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்கள் தாகத்தைத் தீர்க்கும் மதுர நீராக இருக்கும் என நினைத்தோம். ஆனால், அது கானல் நீராகிவிட்டது” என்கிறார் தமிழ்நாடு ஜாமா அத்துல் உலமா சபையின் துணைச் செயலாளர் இலியாஸ் ரியாஜி.
மேலும், ஒருவர் ஐந்து ஆண்டுகள் இஸ்லாமியராக இருந்தால்தான் வக்ஃப் அளிக்க முடியும் என்ற விதியை நீக்கவில்லை என குறிப்பிடும் அவர், மாறாக, யார் இஸ்லாமியர் என்பது குறித்த விதிகளை வகுக்கச் சொல்கிறது என்கிறார்.
“ஷரியத்தைப் பொறுத்தவரை, ஒருவர் ‘வணக்கத்திற்கு உரியவன் அல்லா ஒருவனே’ என்று ஏற்றுக்கொண்டாலே அவர் முஸ்லிம். இதை எப்படி ஏற்க முடியும்?” என்கிறார் இலியாஸ் ரியாஜி.
புதிய சட்டத் திருத்தத்தில் ஒருவர் வக்ஃப் செய்வதற்கு (சொத்தை அளிப்பதற்கு) 5 ஆண்டுகள் இஸ்லாத்தைப் பின்பற்றி வந்துள்ளார் என்பதை நிரூபிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்த விதியை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. இருந்தபோதும் அது போதுமானதல்ல என்கிறார் ஜவாஹிருல்லா.
“வக்ஃப் செய்யத் தகுதியுள்ள இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம் யார் என்பது பற்றிய விதிகளை மாநில அரசுகள் வகுக்கும் வரை அந்தத் தடை நீடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இது மாநில அரசுகளுக்கு இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம் என்பவர் யார் என்பதை வரையறை செய்யும் உரிமையைத் தருகின்றது. இதன் மூலம் மாநில அரசுக்கு விருப்பமான முஸ்லிம்கள் மட்டுமே வக்ஃப் செய்ய இயலும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது” என்கிறார் ஜவாஹிருல்லா.
மேலும், மத்திய வக்ஃப் குழுமத்தின் 22 உறுப்பினர்களில் அதிகபட்சம் 4 பேர் இஸ்லாமியரல்லாதவர்களாக இருக்கலாம் என்றும், மாநில வக்ஃப் வாரியங்களில் உள்ள 11 உறுப்பினர்களில் அதிகபட்சம் 3 பேர் இஸ்லாமியரல்லாதவர்களாக இருக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இது குறித்தும் கேள்வியெழுப்புகிறார்கள் இஸ்லாமியத் தலைவர்கள்.
“இந்து சமய அறநிலையத்துறையிலோ, சீக்கியர்களின் குருத்துவாரா நிர்வாகத்திலோ அம்மதத்தைச் சேராதவர்கள் உறுப்பினர்களாக ஆக முடியாத நிலையில், வக்ஃப் வாரியத்தில் மட்டும் முஸ்லிமல்லாத உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது பாரபட்சமானது” என்கிறார் ஜவஹிருல்லா.
“இஸ்லாமியரல்லாதவர்களும் வக்ஃப் அளித்திருக்கும்போது, அந்தச் சொத்தை நிர்வகிப்பதில் அவர்களுக்கும் பங்குண்டுதானே என்கிறார்கள். இந்துக் கோவில்களிலும் இந்து அல்லாதவர்கள் காணிக்கை செலுத்துகிறார்கள். அப்படியானால், அங்கும் நிர்வகிக்கும் உரிமையை பிற மதத்தினருக்கு தருவார்களா? மேலும், இனிமேல் இஸ்லாமியரல்லாதவர்கள் சொத்துகளை வக்ஃப் அளிக்க முடியாது எனும்போது, எதற்காக இஸ்லாமியரல்லாதவர்கள் வக்ஃப் நிர்வாகத்தில் இருக்க வேண்டும்?” எனக் கேள்வி எழுப்புகிறார் இலியாஸ்.
இந்த வழக்கின் இறுதி விசாரணை நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் நடக்கவிருக்கிறது. அந்தத் தருணத்தில் இது தொடர்பான வாதங்களை முன்வைக்க இஸ்லாமிய அமைப்புகள் முடிவுசெய்திருக்கின்றன.