சென்னை: “வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக கேரளா, கர்நாடகாவைப் போன்று தமிழக சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்,” எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசால் முன்மொழியப்பட்ட வக்பு சட்டத் திருத்த மசோதா 2024-ஐ எதிர்த்து, கேரளா மற்றும் கர்நாடகா அரசுகளைப் போலவே, தமிழக சட்டமன்றத்தில் ஒரு தனித் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது. இந்த மசோதா, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமைகள், மதச்சார்பின்மை, மாநிலங்களின் அதிகாரங்கள் மற்றும் ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால் தமிழக அரசு இந்த கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
வக்பு சட்டத்திருத்த மசோதா மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும், அரசியலமைப்பின் மதச்சார்பின்மைக் கோட்பாட்டை மீறுவதாகவும் கூறி கேரள சட்டமன்றம், அக்டோபர் 14, 2024 அன்று, இந்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஒருமித்த தீர்மானத்தை நிறைவேற்றியது. அதேபோல் இந்த வக்பு திருத்த மசோதா, மாநிலங்களின் சுயாட்சியைப் பாதிப்பதாகவும், வக்பு சொத்துக்களின் மீதான மத்திய அரசின் அதிகப்படியான கட்டுப்பாடு ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கூறி கர்நாடக சட்டமன்றம், மார்ச் 19, 2025 அன்று, இந்த மசோதாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது.
கேரளா மற்றும் கர்நாடகா மாநில அரசுகளின் இந்த நடவடிக்கைகள் மாநில அரசுகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும், சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்யவும் எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கைகளாகும். கேரளா மற்றும் கர்நாடக அரசுகள் சிறுபான்மை சமூக மக்களின் குரலைப் பிரதிபலிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், தமிழக அரசும் இதேபாதையைப் பின்பற்ற வேண்டும். தமிழக அரசு, தனது மதச்சார்பற்ற பாரம்பரியத்தையும், சமூக நீதிக்கான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் வகையில், இந்த மசோதாவுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.
வக்பு விவகாரம், அரசியலமைப்பின் ஒருங்கிணைந்த பட்டியலில் உள்ளது. எனவே, மாநில அரசுகளின் கருத்துக்களைப் புறக்கணித்து மத்திய அரசு தன்னிச்சையாக சட்டம் இயற்றுவது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 26, மத சமூகங்களுக்கு தங்கள் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையை வழங்குகிறது. ஆனால், இந்த மசோதா வக்பு வாரியங்களின் சுயாட்சியைப் பறித்து, அரசு அதிகாரிகளின் கட்டுப்பாட்டை அதிகரிக்கிறது. சிறுபான்மை முஸ்லிம் சமூகம், இந்த மசோதாவை தங்கள் மீதான தாக்குதலாக உணர்கிறது. அவர்களின் நியாயமான அச்சங்களுக்குச் தமிழக அரசு செவிசாய்க்க வேண்டும்.
ஆகவே, வக்பு சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும், இந்த மசோதாவுக்கு எதிராகவும், தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசு ஒரு தனித் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.