காரைக்குடி: வக்பு வாரிய திருத்த மசோதவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அனைவருமே இந்து விரோதிகள் என பாஜக மூத்த தலைவர ஹெச்.ராஜா தெரிவித்தார்.
காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றம் என்பது புரளியே. தமிழக பாஜக தலைவர் யார் என்பது குறித்து தலைமை தான் முடிவு செய்யும். பாஜகவில் இருமுறை தலைவராக இருக்கலாம். அமைப்பு தேர்தல் நடத்த கிஷன்ரெட்டி வரவுள்ளார்.
பிரதமருக்கு கடிதம் எழுதியே தமிழக முதல்வர் ‘பெட்டிஷன் பார்டி’ ஆகிவிட்டார். வக்பு வாரிய திருத்த மசோதவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அனைவருமே இந்து விரோதிகள் தான். இதை எதிர்ப்போருக்கு வருகிற 2026 தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர். அடுத்த தலைமுறையை நாசப்படுத்துகிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
அதனால் திமுக ஆட்சி நீடித்தால் அடுத்த தலைமுறைக்கு ஆபத்து தான். திமுக அரசை அகற்றுவதே ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக கடமை. தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது என்றே பிரச்சாரம் செய்வோம். கச்சத்தீவு பிரச்சினைக்கு முழு காரணம் காங்கிரசும், திமுகவும் தான். கச்சத்தீவை மீட்பதை பாஜக ஆதரிக்கிறது. இலங்கையிடம் பேசாமல் எதுவும் செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.