வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும் அது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்று மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதால், தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 5.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகியுள்ளது.
இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடகிழக்கு திசையில் மணிக்கு 25 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று காலை 5.30 மணிக்கு கிழக்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் மேல் நிலவுகிறது.
அதாவது லட்சத்தீவிலிருந்து 340 கி.மீ வடமேற்கிலும், கோவாவிலிருந்து 430 கி.மீ தென்மேற்கிலும் கர்நாடகவாலிருந்து 480 கி.மீ மேற்கிலும் நிலை கொண்டுள்ளது.
இது அரபிக் கடலில் மேலும் வடக்கு வடகிழக்கு திசையில் அடுத்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து நகரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இன்று எங்கெல்லாம் மழை?
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மதியம் 1 வரையிலான முன்னெச்சரிக்கை படி, லேசான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 5 மி.மீ முதல் 15 மி.மீ வரையிலான மிதமான மழை பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து 55 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், இரவு முதல் வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் வெளியேற்றப்படும் நீரும் அதிகரித்துள்ளது.
கடந்த 20-ம் தேதி பிற்பகலில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதனைத் தொடர்ந்து அணைக்கு வரும் நீர் வரத்து முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
நேற்று மாலை காவிரியில் வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிப்பதால் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர், இரவு 11.00 மணி முதல் 45,000 கன அடியிலிருந்து 55,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 22,500 கன அடியும், எல்லிஸ் உபரி (16 கண் மதகு) வழியாக 32,500 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது