பட மூலாதாரம், Getty Images
இந்திய உயர் ஆணையரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று, வங்கதேசத்தின் தேசியக் குடிமக்கள் கட்சியின் தெற்குப் பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹஸ்னத் அப்துல்லா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஹஸ்னத் அப்துல்லா குமில்லா-4 தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
புதன்கிழமை குமில்லாவின் தேபித்வாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஹஸ்னத் அப்துல்லா, டெல்லியில் உள்ள வங்கதேச உயர் ஆணையரை இந்திய வெளியுறவுத் துறை நேரில் அழைத்து விளக்கம் கேட்டதற்கு ஆட்சேபனை தெரிவித்தார். “இந்தியாவின் இந்த நிலைப்பாட்டிற்கு நாம் கடும் எதிர்வினையாற்றி இருக்க வேண்டும். ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் அளித்து வருவதால், இந்திய உயர் ஆணையரை நமது நாட்டை விட்டு வெளியேற்றி இருக்க வேண்டும்,” என்றார்.
புதன்கிழமை டாக்காவில் உள்ள இந்திய உயர் ஆணைத்தின் பாதுகாப்பு குறித்து தனது கவலையைத் தெரிவிக்க, டெல்லியில் உள்ள வங்கதேச உயர் ஆணையரை ரியாஸ் ஹமிதுல்லாவை அழைத்து இந்திய வெளியுறவுத் துறை விளக்கம் கேட்டிருந்தது.
இந்தியாவுடனான இருதரப்பு உறவுகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று ஹஸ்னத் கூறினார்.
அவர் கூறுகையில், “இந்தியா வங்கதேசத்திற்கு அதே மரியாதையைக் காட்டினால் மட்டுமே, வங்கதேசமும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் எல்லைகளை மதிக்கும். நீங்கள் ‘கண்டதும் சுடுவது’ என்ற கொள்கையை நம்பினால், நாங்கள் ஏன் ‘கண்டதும் வணக்கம் செலுத்துவது’ என்ற கொள்கையைப் பின்பற்ற வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.
சமீப மாதங்களில், வங்கதேசத் தலைவர்கள் இந்தியாவுக்கு எதிராக இத்தகைய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.
புதன்கிழமை இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், “வங்கதேசத்தில் சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் குறித்து தீவிரவாத அமைப்புகள் பரப்பும் பொய்யான கருத்துகளை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம். இந்தச் சம்பவங்கள் குறித்து இடைக்கால அரசு முறையான விசாரணை நடத்தவில்லை என்பதும், இது தொடர்பாக இந்தியாவுடன் எந்தவொரு உறுதியான ஆதாரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதும் துரதிர்ஷ்டவசமானது,” என்று தெரிவித்தது.
பட மூலாதாரம், @hasnat2471
வங்கதேசத்தில் இந்தியா குறித்த அதிருப்தி
இந்தியாவுக்கு எதிரான ஹஸ்னத் அப்துல்லாவின் ஆக்ரோஷமான போக்கு குறித்து வங்கதேச திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் அரிஃபா ரஹ்மான் ரூமா கூறுகையில், முகமது யூனுஸ் தீவிரவாதிகளை ஊக்குவித்து வருவதாகத் தெரிவித்தார்.
இந்திய உயர் ஆணையரைவெளியேற்ற வேண்டும் என்று ஹஸ்னத் பேசும் வீடியோ கிளிப்பை அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“வங்கதேசம் ஆபத்தான முறையில் கட்டுப்பாட்டை இழந்து வருகிறது. இந்திய உயர் ஆணையரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று ஹஸ்னத் அப்துல்லா பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். பொறுப்புள்ள எந்தத் தலைவரும் இத்தகைய அறிக்கையை வெளியிட மாட்டார்கள். ஹஸ்னத் போன்ற தீவிரவாத மற்றும் வன்முறைச் சித்தாந்தம் கொண்டவர்களும் அவர்களின் ஆதரவாளர்களுமே உண்மையில் இப்போது முகமது யூனுஸை ஆதரிக்கும் ஒரே சக்தியாக மாறியுள்ளனர்,” என அரிஃபா ரஹ்மான் ரூமா எக்ஸ் தளத்தில் எழுதியிருந்தார்.
“அண்டை நாட்டு உயர் ஆணையரை வெளியேற்றுவோம் என்று யூனுஸின் தலைவர்கள் பொதுக்கூட்டங்களில் வெளிப்படையாக கூறும் ஒரு நாட்டில், சாதாரண மக்கள் இரவும் பகலும் தங்களை எவ்வளவு பாதுகாப்பற்றவர்களாக உணர்கிறார்கள் என்பது தெளிவாகிறது. இத்தகைய வங்கதேசத்தில் சாதாரண குடிமக்கள் இப்போது தங்கள் உயிரைப் பற்றியோ, சொத்துக்களைப் பற்றியோ பாதுகாப்பாக உணரவில்லை. இந்த நிதர்சனமான உண்மை, நாட்டில் சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியல் நிதானம் முற்றிலும் சீர்குலைந்துள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.”
பட மூலாதாரம், @sajeebwazed
ஷேக் ஹசீனாவின் மகன் கூறியது என்ன?
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாஜித் ஜாய், ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு மின்னஞ்சல் மூலம் அளித்த பேட்டியில், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஓர் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தின் தற்போதைய நிலைமை இந்தியாவுக்கு அச்சுறுத்தலை அதிகரித்து வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார். 54 வயதான வாஜித் அமெரிக்காவில் வசிக்கிறார்.
வங்கதேச இடைக்கால அரசுடன் பாகிஸ்தானுக்கு நெருக்கம் அதிகரித்து வருவதாக தோன்றுவது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸிடம் சஜீப் வாஜித் கூறுகையில், “இது இந்தியாவுக்குக் கடும் கவலையை ஏற்படுத்த வேண்டிய விஷயமாகும். எங்களது அவாமி லீக் அரசு இந்தியாவின் கிழக்கு எல்லைகளை அனைத்துப் பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்தும் பாதுகாப்பாக வைத்திருந்தது. அதற்கு முன்பு, இந்தியாவுக்குள் கிளர்ச்சியைத் தூண்டுவதற்கான ஒரு தளமாக வங்கதேசம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது,” என தெரிவித்தார்.
“இப்போது அதே நிலை மீண்டும் திரும்பும். யூனுஸ் அரசு நாட்டில் ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் பிற இஸ்லாமியக் கட்சிகளுக்குக் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை வழங்கியுள்ளது. வங்கதேசத்தில் இஸ்லாமியக் கட்சிகளுக்கு ஒருபோதும் ஐந்து சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைத்ததில்லை. அனைத்து முற்போக்கு மற்றும் தாராளவாதக் கட்சிகளுக்குத் தடை விதித்து, ஒரு முறைகேடான தேர்தலை நடத்தி, இஸ்லாமியத் தீவிரவாதிகளை ஆட்சியில் அமர்த்த யூனுஸ் முயற்சிக்கிறார்,” என்றார்.
வங்கதேச இடைக்கால அரசும் இந்தியாவிடம் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கவில்லை.
வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஆலோசகர் முகமது தௌஹீத் ஹுசைன், 1971 விடுதலைப் போரில் வங்கதேசத்தின் பங்களிப்பை இந்தியா தொடர்ந்து குறைத்து மதிப்பிட்டு வருவதாகப் புதன்கிழமை குற்றம் சாட்டினார்.
வங்கதேச விடுதலைப் போராட்ட வீரர்களின் பங்களிப்பு இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை என்று தௌஹீத் ஹுசைன் வலியுறுத்தினார்.
விஜய் திவஸ் அன்று அனுப்பப்பட்ட வாழ்த்துச் செய்தி குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தௌஹீத், கொல்கத்தாவில் இந்த நாள் “ஈஸ்டர்ன் கமாண்ட் டே” என்று தனியாகக் கொண்டாடப்படுகிறது என்றும், இது இந்தியா இதைத் தனது ஆயுதப் படைகளின் வெற்றியாகப் பார்ப்பதைக் காட்டுகிறது என்றும் கூறினார்.
தௌஹீத் ஹுசைன் கூறுகையில், “பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றது உண்மைதான். ஆனால் வங்கதேசத்தில் கிடைத்த வெற்றியின் பின்னணியில், உள்ளூர் மக்களின் எதிர்ப்பு பாகிஸ்தானிய ராணுவத்தை பலவீனப்படுத்தாமல் இருந்திருந்தால், இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் நீண்ட காலம் பிடித்திருக்கும் என்பதை எனது புத்தகத்தில் நான் குறிப்பிட்டுள்ள இந்திய நிபுணர்களே ஒப்புக்கொள்கிறார்கள். உயிர்ச்சேதமும் அதிகமாக இருந்திருக்கும்,” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
விடுதலைப் போரில் இந்தியாவின் பங்கு குறித்து கேள்வி
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா பதவியிலிருந்து அகற்றப்பட்ட பிறகு, வங்கதேசம் உருவானதில் இந்தியாவின் பங்கு குறித்த விவாதங்கள் அதிகம் எழுந்துள்ளன. வங்கதேசத்தின் பல தலைவர்கள் இந்தியாவின் பங்கு குறித்துக் கேள்வி எழுப்புகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வங்கதேச தேசியவாதக் கட்சியின் நிலைக்குழு உறுப்பினர் மிர்ஸா அப்பாஸ் கூறுகையில், “இந்தியா வங்கதேசத்தை உருவாக்கவில்லை. நாங்கள் வங்கதேசத்தை விடுவித்தோம். இந்தியா பாகிஸ்தானைத் துண்டித்தது, அது அவர்களின் சுயநலத்திற்காகச் செய்யப்பட்டது, எங்களுக்காக அல்ல,” என்று கூறியிருந்தார்.
ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தபோதும், 1971 போர் என்பது விடுதலைப் போரா அல்லது இந்தியா-பாகிஸ்தான் போரா என்ற விவாதம் அங்கு நடந்தது.
பாகிஸ்தான் இதை இந்தியாவுடனான போர் என்று அழைக்கிறது. அதை வங்கதேசத்தின் விடுதலைப் போர் என்று அது அழைப்பதில்லை. இந்தியாவின் பாடப்புத்தகங்களிலும் இது இந்தியா-பாகிஸ்தான் போராகவே பார்க்கப்படுகிறது, ஆனால் இதை வங்கதேச விடுதலைப் போர் என்று அழைப்பதில் இந்தியாவுக்கு ஆட்சேபனை ஏதுமில்லை.
2021-இல் டிசம்பர் 6 அன்று, அப்போதைய வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் ஏ.கே. மோமென், வங்கதேச தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில் இந்தியாவுடனான தூதரக உறவுகள் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நிகழ்ச்சியில் தனது கட்சியின் நிலைப்பாட்டை முன்வைத்தார்.
“பாகிஸ்தான், வங்கதேச விடுதலைப் போரை இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போராகக் காட்ட முயற்சிக்கிறது. ஆனால் இது வங்கதேசத்தின் விடுதலைப் போர், இதில் இந்தியா உதவியது. டிசம்பர் 6-ஆம் தேதி இந்தியா வங்கதேசத்தை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரித்தது,” என்று மோமென் கூறினார்
1971 போரை பாகிஸ்தான் மேற்கத்திய முனையிலிருந்து தொடங்கியது. அதன் பின்னரே இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி போரில் ஈடுபட முடிவு செய்தார்.
பட மூலாதாரம், Getty Images
ஷேக் ஹசீனா எதிர்ப்பு என்பது விடுதலைப் போருக்கு எதிரானதா?
ஜூலை 2024-இல் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம் வங்கதேசத்தின் விடுதலைப் போருக்கு எதிராகவும் செல்வது போல் தெரிந்தது.
போராட்டக்காரர்கள் விடுதலைப் போரின் பல அடையாளங்களைத் தாக்கினர். வங்கதேசத்தின் நிறுவனர் முஜிபுர் ரஹ்மானின் இல்லமும் தாக்கப்பட்டது. மறுபுறம் பாகிஸ்தானுடனான உறவில் நெருக்கம் அதிகரித்தது.
வங்கதேச விடுதலைப் போருக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இருந்ததாகக் குற்றம் சாட்டப்படும் ஜமாத்-இ-இஸ்லாமி, இப்போது ஒரு முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்து வருகிறது. ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பும் வங்கதேசத்தில் இந்தியாவின் பங்கு குறித்துக் கேள்வி எழுப்பி வருகிறது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வங்கதேசத்தின் ‘புரொதோம் ஆலோ’ செய்தி இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் ஷஃபிகுர் ரஹ்மான் கூறுகையில், “1971-இல் எங்களது நிலைப்பாடு கொள்கை சார்ந்தது. நாங்கள் ஒரு சுதந்திர நாட்டை விரும்பியது இந்தியாவின் நலனுக்காக அல்ல,” என்றார்.
“யாரோ ஒருவரின் மூலம் அல்லது ஒருவரின் ஆதரவுடன் நமக்குச் சுதந்திரம் கிடைத்திருந்தால், அது ஒரு சுமையை இறக்கி வைத்துவிட்டு மற்றொரு சுமையின் கீழ் சிக்கியது போலிருந்திருக்கும். கடந்த 53 ஆண்டுகளாக வங்கதேசத்திற்கு இது உண்மையாகவில்லையா? ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஒரு குறிப்பிட்ட நாடு விருப்பமில்லை என்பதைக் கேட்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏன் ஏற்பட வேண்டும்? ஒரு குறிப்பிட்ட நாடு விரும்பாவிட்டால் ஒரு குறிப்பிட்ட கட்சி ஆட்சிக்கு வர முடியாது. ஒரு சுதந்திர நாட்டின் அடையாளம் இதுதானா? வங்கதேச இளைஞர்கள் இப்போது இதையெல்லாம் கேட்க விரும்புவதில்லை,” என்றார்.

ஜூலை 2024-இல் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம் வங்கதேச விடுதலைப் போருக்கு எதிராக மாறிவிட்டதா?
பிரபல அறிஞரும் ‘சென்டர் ஃபார் பாலிசி டயலாக்’ அமைப்பின் நிறுவனருமான ரஹ்மான் சோபானிடம் வங்கதேசத்தின் ஆங்கிலச் செய்தி இணையதளமான ‘புரொதோம் ஆலோ’ இந்தக் கேள்வியைக் கேட்ட போது அவர், “ஜூலை மாதப் போராட்டம் ஜனநாயகத் தோல்வி மற்றும் அநீதியான ஆட்சியால் தூண்டப்பட்டது,” என்று தெரிவித்தார்.
“விடுதலைப் போரின் எதிர்ப்பாளர்கள் இந்தப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். விடுதலைப் போரின் எதிர்ப்பாளர்கள் நீண்ட காலமாக நமது அரசியலில் இருந்து வருகின்றனர். அவர்கள் இந்தப் போராட்டத்தில் ஊடுருவி, ஒருவேளை அதன் திசையைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கும் வகித்திருக்கலாம். சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான மக்கள் எழுச்சிகளில் இது பெரும்பாலும் நடப்பதுதான்.”
“வங்கதேச இடைக்கால அரசில் இவர்களின் எழுச்சி தெளிவாகத் தெரிகிறது. தேர்தலில் இவர்களுக்கான வாய்ப்புகள் வலுவாக உள்ளன. 1971-இல் பாகிஸ்தான் ராணுவத்துடன் தங்களுக்கு இருந்த வரலாற்று ரீதியான ஒத்துழைப்பை புதிய முறையில் விளக்க அவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறார்கள். அரசியல் சாதுர்யம் கொண்ட தலைவர்களின் தலைமையில், விடுதலைப் போர் குறித்த அவர்களின் நிலைப்பாடு கவனமாக முன்வைக்கப்படும். இருப்பினும், 1971-இல் தங்களது பங்கை பூசி மொழுகி மறைக்க முயற்சிப்பது அவர்களின் உத்தியின் ஒரு அங்கமாகவே இருக்கும்,” என்று ரஹ்மான் சோபான் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு