படக்குறிப்பு, காலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மானுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் புதன்கிழமை டாக்கா சென்றடைந்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் சுமுகமான சூழல் இல்லாத நிலையில் அமைச்சரின் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டாக்காவில் காலிதா ஜியாவின் மகனும் வங்கதேச தேசியவாதக் கட்சியின்( பிஎன்பி) நிர்வாகத் தலைவருமான தாரிக் ரஹ்மானை எஸ். ஜெய்சங்கர் சந்திக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
மற்றொரு புறம், பாகிஸ்தான் தனது நாடாளுமன்ற சபாநாயகர் அயாஸ் சாதிக்கை அஞ்சலி செலுத்துவதற்காக டாக்காவுக்கு அனுப்பியுள்ளது.
கடந்த 17 ஆண்டுகளாக பிரிட்டனில் வசித்து வந்த காலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் வங்கதேசம் திரும்பிய ஐந்து நாட்களுக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமை அன்று காலிதா ஜியா காலமானார்.
ஜெய்சங்கரின் இந்தப் பயணம், வங்கதேசத்துடனான இந்தியாவின் வருங்கால உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒரு வழியாகக் கருதப்படுகிறது.
இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபல், ஜெய்சங்கரின் இந்தப் பயணத்தை ஒரு சிறந்த ராஜ்ஜீய முயற்சி என்று வர்ணித்துள்ளார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) வலுவான நிலையில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
எனவே, பிப்ரவரிக்கு பிறகு வங்கதேசத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்பவர்களுடன் இந்தியா நல்லுறவைப் பேணுவது மிகவும் அவசியமானதாகிறது.
முன்னதாக, 2024 டிசம்பரில் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி டாக்கா சென்று, இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வங்கதேசம் முயற்சித்து வருகிறது.
இந்தியா மென்மையான நிலைப்பாட்டை முன்னெடுக்கிறதா?
பிரதமர் நரேந்திர மோதியும் காலிதா ஜியாவின் மறைவுக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காலிதா ஜியா நோய்வாய்ப்பட்டிருந்தபோது, அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளுக்கு உதவ முன்வருவதாக பிரதமர் மோதி தெரிவித்திருந்தார். இதற்காக பிஎன்பி கட்சி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்திருந்தது.
இந்தியா நீண்டகாலமாக வங்கதேச அவாமி லீக் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனாவுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. காலிதா ஜியாவின் பதவிக்காலத்தை விட ஷேக் ஹசீனாவின் பதவிக்காலத்திலேயே இந்தியாவுடனான உறவு மிகவும் சிறப்பாக இருந்தது.
பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் அவாமி லீக் கட்சி போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், வங்கதேச அரசியலில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைக் கொண்டு இந்தியா தனது உறவை மேம்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
இரு நாடுகள் இடையிலான உறவில் நிலவும் தற்போதைய கசப்பைக் குறைப்பதற்கான ஒரு வழியாக இந்தியா இப்போது பிஎன்பி கட்சியை பார்க்கிறது.
இதன் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த பிஎன்பி தலைவரும் முன்னாள் பிரதமருமான காலிதா ஜியா ஆற்றிய பங்கை பிரதமர் நரேந்திர மோதி தனது இரங்கல் பதிவில் நினைவுகூர்ந்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
மேலும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், காலிதா ஜியாவுக்கு அஞ்சலி செலுத்த டாக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, காலிதா ஜியா மற்றும் ஷேக் ஹசீனா
இந்தியாவிற்கு முன் உள்ள வாய்ப்புகள் என்ன?
வங்கதேசத்தின் அரசியல் கலாசாரம் இந்தியாவின் பிற அண்டை நாடுகளிலிருந்து வேறுபட்டது என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
டிசம்பர் 27 அன்று முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபலின் பாட்காஸ்டில் வங்கதேசத்திற்கான இந்தியாவின் முன்னாள் தூதர் பங்கஜ் சரண் பங்கேற்றுப் பேசினார்.
அதில், “வங்கதேசத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சி, தங்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகளுடன் பேசக்கூடாது என்றும் வலியுறுத்துகிறது. இந்தச் சூழலில், பிஎன்பி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம், உறவுகளை மேம்படுத்தும் தனது விருப்பத்தை இந்தியா வெளிப்படுத்துகிறது” என்று கூறினார்.
மேலும், “வங்கதேசத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடந்தால் அது இந்தியாவிற்கு சாதகமாக இருக்கும்” என்று பங்கஜ் சரண் கபில் சிபலிடம் கூறினார்.
காலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் வங்கதேசத்திற்குத் திரும்பியது, அவர் அதிகாரத்தைக் கைப்பற்றும் பாதையை நோக்கி வந்துள்ளார் என்பதைக் காட்டுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பட மூலாதாரம், @hamidullah_riaz
“வங்கதேசத் தேர்தலில் அவாமி லீக் போட்டியிடாமல் இருப்பது இதுவே முதல் முறை. வங்கதேச தேசியவாதக் கட்சி(பிஎன்பி) மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த முறை அது ஜமாத்துடன் கூட்டணி அமைக்கவில்லை. வேறு சில அமைப்புகளுடன் சேர்ந்துள்ளது. தேசிய குடிமக்கள் கட்சி, ஜமாத்-இ-இஸ்லாமியுடன் கூட்டணி அமைத்துள்ளது” என்று பங்கஜ் சரண் கூறினார்.
பாகிஸ்தானுக்கான இந்திய முன்னாள் தூதர் டி.சி.ஏ. ராகவன் அதே நிகழ்வில் பேசுகையில், “வங்கதேச தேசியவாதக் கட்சி முன்னிலை பெறுவதை சிலர் பார்க்கிறார்கள். எனவே அக்கட்சியை அதிகாரத்திற்கு வராமல் தடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். எனவே, வங்கதேசத்தில் தேர்தல் நியாயமாக நடப்பதே அந்நாட்டிற்கு நல்லது,” என்றார்.
“வங்கதேசத்தில் இந்தியாவிற்குப் பெரும்பாலும் குறைந்த தேர்வுகள்தான் கிடைத்துள்ளன, ஆனால் அவற்றில் ‘சிறந்ததை’ நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். 1971 பற்றியோ அல்லது பாகிஸ்தானின் பங்கு பற்றியோ நாம் அதிகம் யோசித்துக் கொண்டிருந்தால், இந்திய-வங்கதேச உறவில் நம்மால் முன்னேற முடியாது. வங்கதேசத்தில் நடக்கும் ஒவ்வொரு மாற்றத்திற்கும் இந்தியா அவசரமாக எதிர்வினையாற்றக் கூடாது மற்றும் அங்கு ‘பாகிஸ்தான் ஸ்கிரிப்ட்’ அமல்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
“இந்தியாவும் வங்கதேசமும் கலாசார ரீதியாக மிகவும் நெருக்கமானவை. வங்கதேசத்தில் உள்ள அரசாங்கம் இந்தியாவிற்கு எதிரானதாக மாறினாலும், இந்த தொடர்பை உடைக்க முடியாது. எனவே, இந்த அம்சத்தை மனதில் கொண்டு வங்கதேசத்தில் நாம் முன்னேற வேண்டும்” என்று பாட்காஸ்டில் பேசிய பத்திரிக்கையாளர் ஜெயந்த பட்டாச்சார்யா கூறினார்.
மேலும், ”ஜமாத்-இ-இஸ்லாமி கூட்டணியுடன் வங்கதேசத் தேர்தலில் களமிறங்குவது இந்தியாவுக்கு கவலைக்குரிய விஷயமாக இருக்கும். ஏனெனில், இந்தியாவை நோக்கிய அவர்களின் நிலைப்பாடு இதுவரை சாதகமாக இல்லை. தங்களை சீர்திருத்திக் கொண்டதாக ஜமாத்-இ-இஸ்லாமி கூறினாலும், அதைப் பற்றி உறுதியாக எதையும் கூற முடியாது” என்று தெரிவித்தார்.