பட மூலாதாரம், @ChiefAdviserGoB
வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாகிஸ்தான் நேஷனல் அசெம்ப்ளி சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக்கிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கை குலுக்கியதாக பாகிஸ்தான் நேஷனல் அசெம்ப்ளி கூறியுள்ளது.
இருவரும் கைகுலுக்கும் புகைப்படத்தை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கீழவையான பாகிஸ்தான் நேஷனல் அசெம்ப்ளி தனது எக்ஸ் சமூக ஊடகத் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மே 2025 மோதலுக்குப் பிறகு இந்தியாவின் முதல் “உயர்மட்டத் தொடர்பு முயற்சி” இது என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
காலிதா ஜியாவின் இறுதிச் சடங்குக்கு முன்னதாக சில சர்வதேசத் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது, இந்திய வெளியுறவு அமைச்சர் முன்வந்து பாகிஸ்தான் நேஷனல் அசம்ப்ளி சபாநாயகருடன் கைகுலுக்கியதாக வங்கதேசத்தின் முன்னணி நாளிதழான ‘புரோதோம் அலோ’ கூறியுள்ளது.
எஸ். ஜெய்சங்கர், காலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மானுடனான தனது சந்திப்பு குறித்த புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார், ஆனால், அயாஸ் சாதிக்குடனான சந்திப்பு பற்றி அவர் எதையும் குறிப்பிடவில்லை.
வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா, நீண்ட கால உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை தனது 80வது வயதில் காலமானார்.
ஜெய்சங்கர் மற்றும் அயாஸ் சாதிக் ஆகியோரின் புகைப்படம் வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்திலும் பதிவிடப்பட்டுள்ளது.
அந்தப் புகைப்படங்களுடன் உள்ள பதிவில், “புதன்கிழமை டாக்காவில் நடைபெற்ற வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் இறுதிச் சடங்குக்கு முன்னதாக, பாகிஸ்தான் நேஷனல் அசெம்ப்ளி சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டார்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நேஷனல் அசெம்ப்ளி கூறியது என்ன?
பட மூலாதாரம், @NAofPakistan
பாகிஸ்தான் நேஷனல் அசெம்ப்ளி, ஜெய்சங்கர் மற்றும் சர்தார் அயாஸ் சாதிக் கைகுலுக்கும் புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது.
அதில், “வங்கதேச நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்த போது, மறைந்த பேகம் காலிதா ஜியாவுக்காக வைக்கப்பட்டிருந்த இரங்கல் குறிப்பேட்டில் தனது கருத்துகளைப் பதிவு செய்ய வந்திருந்த நேஷனல் அசெம்ப்ளி சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக்கை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் முனைவர் எஸ். ஜெய்சங்கர் சந்தித்துக் கைகுலுக்கினார்,” என்று எழுதப்பட்டது.
மேலும் அந்தப் பதிவில், “பல்வேறு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த உரையாடல் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போது, முனைவர் எஸ். ஜெய்சங்கர் தன்னை சபாநாயகரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டதுடன், அவரைத் தமக்குத் தெரியும் என்றும் கூறினார்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பேச்சுவார்த்தை, நிதானம் மற்றும் ஒத்துழைப்பின் அவசியத்தை பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது,” என்று நேஷனல் அசெம்ப்ளி எழுதியுள்ளது.
பாகிஸ்தான் ஊடகங்களில் கைகுலுக்கல் பற்றிய விவாதம்
பட மூலாதாரம், @NAofPakistan
ஜெய்சங்கர் மற்றும் சாதிக் இடையிலான இந்த ‘சந்திப்பை’ பாகிஸ்தானிய செய்தித்தாள்கள் முக்கியத்துவத்துடன் வெளியிட்டுள்ளன.
“இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாகிஸ்தான் நேஷனல் அசெம்ப்ளி சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக்குடன் புதன்கிழமை டாக்காவில் ஒரு சிறிய சந்திப்பை நடத்தினார். மே மாதம் நடந்த ராணுவ மோதலுக்குப் பிறகு இரு போட்டி நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையே நடந்த முதல் சந்திப்பு இதுவாகும்,” என்று பாகிஸ்தான் செய்தித்தாள் தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.
“இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் டாக்காவுக்குச் சென்றிருந்தனர்,” என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
“அங்கு இருந்த அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜெய்சங்கர், சாதிக்கின் இருக்கைக்கு அருகில் சென்று கை குலுக்கினார், அதற்கு பாகிஸ்தான் சபாநாயகர் புன்னகையுடன் பதிலளித்தார். இருவரும் சுருக்கமாகப் பேசிக்கொண்டதுடன், ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டனர். முறையான பேச்சுவார்த்தைகள் எதுவும் நடந்ததாகத் தகவல் இல்லை”என்று அந்த செய்தித்தாள் கூறுகிறது.
“மே 2025-இல் இரு அணுஆயுத நாடுகளுக்கு இடையே நடந்த நான்கு நாள் மோதலுக்குப் பிறகு, இந்திய மற்றும் பாகிஸ்தானிய உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையே நடந்த முதல் நேரடி சந்திப்பு இது,” என்று ‘தி எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன்’ எழுதியுள்ளது.
“இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து முடங்கியுள்ளன, மேலும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை. சர்வதேச மற்றும் பிராந்திய நிகழ்வுகளில் இரு தரப்பினரும் ஒன்றாகத் தோன்றினாலும், டாக்காவில் புதன்கிழமை நடந்த சுருக்கமான மற்றும் முறைசாரா பேச்சுவார்த்தைகள், முறையான ஈடுபாடு இன்னும் இல்லாததையே அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன,” என்று அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தானின் முன்னணி நாளிதழான ‘தி நியூஸ்’, நேஷனல் அசெம்ப்ளியால் வெளியிடப்பட்ட ஜெய்சங்கர் மற்றும் சாதிக்கின் புகைப்படங்களைப் பகிர்ந்து, “நேஷனல் அசெம்ப்ளி சபாநாயகர் சாதிக், வங்கதேசத்துக்ற்கான தனது அரசுமுறைப் பயணத்தின் போது புதன்கிழமை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்தார். மே மாதம் இரு அணுஆயுத அண்டை நாடுகளுக்கு இடையே நடந்த 87 மணி நேர மோதலுக்குப் பிறகு நடந்த முதல் உயர்மட்டச் சந்திப்பு இதுவாகும்,” என்று எழுதியுள்ளது.
மேலும் அந்த நாளிதழ், “மே மாதம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த குறுகிய கால ராணுவ மோதலைத் தொடர்ந்து பதற்றம் அதிகமாக உள்ளது. 2025 ஆசியக் கோப்பையின் போது, இந்திய வீரர்கள் தங்கள் பாகிஸ்தானிய வீரர்களுடன் கைகுலுக்க மறுத்ததாகக் கூறப்பட்டபோது, இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான அரசியல் பதற்றம் கிரிக்கெட் மைதானத்திலும் எதிரொலித்தது,” என்று குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தானின் மற்றொரு முன்னணி நாளிதழான ‘டான்’ , இந்தச் சந்திப்பு குறித்துச் செய்தி வெளியிட்டுள்ளது.
“நேஷனல் அசெம்ப்ளி சபாநாயகர் அயாஸ் சாதிக் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் புதன்கிழமை டாக்காவில் கைகுலுக்கினர், மே மாதம் நடந்த ராணுவ மோதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மற்றும் இந்திய அதிகாரிகளுக்கு இடையிலான முதல் உயர்மட்டத் தொடர்பாகும்,” என்று அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
வங்கதேச செய்தித்தாள்களிலும் விவாதம்
பட மூலாதாரம், PROTHOM ALO
வங்கதேசத்தின் முன்னணி நாளிதழான ‘புரோதோம் அலோ’, ஜெய்சங்கர் மற்றும் சாதிக் இடையிலான இந்தச் சந்திப்பு குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.
“தெற்காசிய நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள், முன்னாள் பிரதமரும் பி.என்.பி தலைவருமான காலிதா ஜியாவுக்குத் தங்களது இறுதி மரியாதை செலுத்த டாக்காவில் சந்தித்தனர். இந்திய மற்றும் பாகிஸ்தானியப் பிரதிநிதிகள் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர்,” என்று அந்த நாளிதழ் எழுதியுள்ளது.
“பாகிஸ்தான் நேஷனல் அசெம்ப்ளி சபாநாயகர் அயாஸ் சாதிக் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகிய இருவரும் முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவுக்குத் தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்த டாக்கா வந்திருந்தனர்.”
மேலும் அந்த நாளிதழ், “புதன்கிழமை ஜியாவின் இறுதிச் சடங்குப் பிரார்த்தனைகளுக்கு முன்னதாக, அஞ்சலி செலுத்துவதற்காக ஜாதியா சங்கத் பவனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு சிறப்பு அறையில் ஆறு சார்க் நாடுகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடினர். அந்த அறையில் நேபாள வெளியுறவு அமைச்சர் பால நந்தா சர்மா, பூட்டான் வெளியுறவு அமைச்சர் டி.என். துங்கியல், மாலத்தீவு அதிபரின் சிறப்புத் தூதரும் உயர்கல்வி அமைச்சருமான அலி ஹைதர் அகமது மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரும் இருந்தனர்,” என்று குறிப்பிட்டுள்ளது.
“ஒரு கட்டத்தில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் முன்வந்து சர்தார் அயாஸ் சாதிக்குடன் கைகுலுக்கினார். இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர்,” என்று ‘புரோதோம் அலோ’ எழுதியுள்ளது.
ஜெய்சங்கருக்கும் அயாஸ் சாதிக்கிற்கும் இடையிலான கைகுலுக்கல் குறித்து வங்கதேசத்தின் ஆங்கில செய்தித்தாள் நியூ ஏஜ் ஒரு செய்தியையும் வெளியிட்டுள்ளது.
“மானிக் மியா அவென்யூவில் இறுதிச் சடங்கு நடைபெறுவதற்கு முன்னதாக, ஜாதியா சங்கத் வளாகத்தில் சர்தார் அயாஸ் சாதிக், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டார்,” என்று ‘நியூ ஏஜ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
இதனை வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
“அதிகாரப்பூர்வ புகைப்படம் ஒன்றில் அயாஸ் சாதிக்கும் ஜெய்சங்கரும் கைகுலுக்கிக் கொள்வதைக் காண முடிகிறது. மே மாதம் இரு அண்டை நாடுகளுக்கும் இடையே நடந்த ராணுவ மோதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான முதல் உயர்மட்டத் தொடர்பு இது எனக் கருதப்படுகிறது. இறுதிச் சடங்குகளுக்கு முன்னதாக, மூன்று முறை பிரதமராக இருந்த காலிதா ஜியாவின் மறைவு குறித்து பி.என்.பி செயல் தலைவர் தாரிக் ரஹ்மானிடம் சாதிக் மற்றும் ஜெய்சங்கர் தங்களது இரங்கலைத் தெரிவித்தனர்.”
“மறைந்த காலிதா ஜியாவுக்காக வைக்கப்பட்டிருந்த இரங்கல் குறிப்பேட்டில் தனது கருத்துகளைப் பதிவு செய்ய பாகிஸ்தான் தேசிய சபை சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் வங்கதேச நாடாளுமன்றத்திற்கு வந்தபோது, பல நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சபாநாயகரை அணுகிக் கைகுலுக்கினார்.
இந்தத் தகவல் பாகிஸ்தான் நேஷனல் அசெம்ப்ளியின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகதளமான ‘எக்ஸ்’-இல் பகிரப்பட்டுள்ளது,” என்று ‘நியூ ஏஜ்’ எழுதியுள்ளது.
இந்தியாவின் முன்முயற்சியா?
பட மூலாதாரம், @DrSJaishankar
காலிதா ஜியாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக எஸ். ஜெய்சங்கர் டாக்கா சென்றிருந்தது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பிரதமர் மோதியின் கடிதம் ஒன்றையும் தாரிக் ரஹ்மானிடம் வழங்கினார். இந்தக் கடிதத்தில், காலிதா ஜியாவின் மறைவுக்குப் பிரதமர் மோதி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோதியின் கடிதம் குறித்து, தெற்காசிய அரசியலை உன்னிப்பாகக் கவனிக்கும் ஆய்வாளர் மைக்கேல் குகல்மேன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “மோதியின் இரங்கல் கடிதத்தை, ஜியாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் ஒரு சாதாரண நடவடிக்கையாக மட்டும் பார்க்கக் கூடாது. தேர்தலுக்குப் பிறகு பி.என்.பி தலைமையிலான அரசாங்கத்துடன் (ரஹ்மான் பிரதமராக வாய்ப்புள்ள நிலையில்) இணைந்து செயல்பட இந்தியா தயாராக உள்ளது என்பதற்கான அடையாளமாகவும் இதைப் பார்க்க வேண்டும். இதுவே தேர்தலின் மிகச் சாத்தியமான முடிவாகக் கருதப்படுகிறது”என்று அதில் கூறப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி ஒரு வலிமையான சக்தியாக உருவெடுத்து வருகிறது.
இது ஷேக் ஹசீனாவை எதிர்க்கும் கட்சியான தேசிய குடிமக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.
என்சிபி மற்றும் ஜமாத் ஆகிய இரு கட்சிகளுமே இந்தியாவுக்கு சாதகமான அணுகுமுறையைக் கொண்டிருக்கவில்லை. இந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், இந்தியா அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்வது கடினமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் தலைவர் ஷஃபிகுர் ரஹ்மான், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “டாக்காவிலிருந்து தப்பிச் சென்ற பிறகு ஹசீனா தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருப்பது கவலைக்குரிய விஷயம். ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பல ஆண்டுகாலங்களில் இல்லாத அளவு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது,” என்று கூறினார்.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.
“கடந்த ஆண்டு தொடக்கத்தில் தனது பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு இந்திய தூதரைச் சந்தித்ததை ரஹ்மான் உறுதிப்படுத்தினார். ரஹ்மானின் கூற்றுப்படி, பிற நாட்டு தூதர்கள் அவரை வெளிப்டையாகச் சந்தித்து மரியாதை நிமித்தமான அழைப்புகளை விடுத்தனர், ஆனால் இந்திய அதிகாரி மட்டும் இந்தச் சந்திப்பை ரகசியமாக வைக்குமாறு கோரினார். அதற்கு ரஹ்மான், ‘ஏன்? பல தூதர்கள் என்னைச் சந்திக்க வந்தனர், அது பகிரங்கப்படுத்தப்பட்டது. இதில் என்ன பிரச்னை உள்ளது? எனவே நாம் அனைவருக்கும் மற்றும் ஒருவருக்கொருவர் வெளிப்படையாக இருக்க வேண்டும்,’ என்று கேள்வி எழுப்பினார்.”
“ரஹ்மானின் அறிக்கை குறித்தோ அல்லது சந்திப்பை ரகசியமாக வைக்கக் கோரியது குறித்தோ இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் உடனடியாகப் பதிலளிக்கவில்லை,” என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுடன் ஜமாத் அமைப்பு வரலாற்று ரீதியாகக் கொண்டுள்ள நெருங்கிய உறவுகள் குறித்துக் கேட்டபோது, ரஹ்மான் கூறுகையில், “நாங்கள் அனைவருடனும் சமநிலையான உறவைப் பேணி வருகிறோம். நாங்கள் ஒருபோதும் ஒரு நாட்டைச் சார்ந்து இருக்க விரும்புவதில்லை. மாறாக, நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம் மற்றும் நாடுகளுக்கு இடையே சமநிலையான உறவை விரும்புகிறோம்,” என்று தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு