பட மூலாதாரம், @hamidullah_riaz
-
- எழுதியவர், சஜல் தாஸ்
- பதவி, பிபிசி
வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) தலைவர் காலிதா ஜியாவுக்கு அஞ்சலி செலுத்த வங்கதேசம் சென்றிருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும், இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகருக்கும் இடையே முறையான சந்திப்பு எதுவும் நடைபெறாதது குறித்து பல விவாதங்கள் எழுந்துள்ளன.
இந்திய அரசாங்கம் அனுப்பிய இரங்கல் செய்தியின் மொழி நடை குறித்தும் பரவலாகப் பேசப்படுகின்றது.
காலிதா ஜியாவின் மறைவுக்குப் பிறகு, பல நாடுகளின் அரசாங்கப் பிரதிநிதிகள் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டனர்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தவிர, பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக், பூட்டான் வெளியுறவுத்துறை அமைச்சர், நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் மாலத்தீவு கல்வி அமைச்சர் ஆகியோரும் வங்கதேசம் சென்றடைந்தனர்.
வருகை தந்த தலைவர்களில் பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் நேபாள வெளியுறவு அமைச்சர் ஆகியோருடன் வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் பேராசிரியர் முகமது யூனுஸ் முறையான சந்திப்புகளை நடத்தினார் என தலைமை ஆலோசகரின் ஊடகப் பிரிவு மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அளித்த தகவல்கள் கூறுகின்றன.
இருப்பினும், இந்தியா, பூட்டான், இலங்கை மற்றும் மாலத்தீவு பிரதிநிதிகளுடன் அத்தகைய சந்திப்புகள் எதுவும் நடைபெறவில்லை.
மற்ற நாடுகளைப் பற்றி பெரிய அளவில் விவாதங்கள் எழவில்லை என்றாலும், இந்திய வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு நடைபெறாதது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்திய வெளியுறவு அமைச்சர், தலைமை ஆலோசகரைச் சந்திக்கவில்லை என்றாலும் சட்ட ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரைச் சந்தித்ததாக வங்கதேச வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மஹ்புபுல் ஆலம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், @hamidullah_riaz
எதிர்கால உறவுகளை எதிர்நோக்குதல்
இதற்கிடையில், இடைக்கால அரசாங்கத்தின் வெளியுறவு விவகார ஆலோசகர் தௌஹித் ஹுசைன், இந்திய வெளியுறவு அமைச்சரின் வருகையை இருதரப்பு உறவுகள் அல்லது அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல் இருப்பது நல்லது என்று தெரிவித்தார்.
காலிதா ஜியாவுக்கு அஞ்சலி செலுத்த இந்திய வெளியுறவு அமைச்சர் வந்தது “ஒரு நேர்மறையான அறிகுறி” என்று அவர் விவரித்தார், ஆனால் இந்த வருகை இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தை எவ்வளவு தீர்க்கும் என்பதை “காலம் தான் சொல்லும்” என்றும் அவர் கூறினார்.
பிஎன்பி தலைவருக்கு அஞ்சலி செலுத்த உயர்மட்ட இந்திய அதிகாரி வருகை தந்ததும், இந்திய அரசாங்கத்தின் இரங்கல் செய்தியும், எதிர்கால உறவுகளை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெளிவாகக் காட்டும் ஒரு அறிகுறி என சர்வதேச உறவுகளை ஆய்வு செய்யும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், தற்போதைய வங்கதேச அரசாங்கத்துடனான இந்தியாவின் ராஜ்ஜீய இடைவெளியை இது இன்னும் தெளிவாக்கியுள்ளதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.
காலிதா ஜியாவின் இறுதிச் சடங்கு மற்றும் அடக்கம் நடைபெற்ற புதன்கிழமை அன்று இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் தங்கள் அரசாங்கங்களின் சார்பாக இரங்கல் செய்திகளை காலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மானிடம் வழங்கினர்.
இந்த நேரத்தில், வங்கதேச சட்ட ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலிலூர் ரஹ்மான் ஆகியோர் இந்திய வெளியுறவு அமைச்சருடன் பேசிக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது.
மறுபுறம், பாகிஸ்தான் சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக், வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸைச் சந்தித்துப் பேசினார்.
பட மூலாதாரம், @DrSJaishankar
வங்கதேச வெளியுறவு அமைச்சகம் கூறியது என்ன?
இதனைத் தொடர்ந்து, எஸ். ஜெய்சங்கர் ஏன் தலைமை ஆலோசகரைச் சந்திக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.
வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு விவகார ஆலோசகர் தௌஹித் ஹுசைன் இந்தக் கேள்விக்குப் பதிலளித்தார்.
இந்திய வெளியுறவு அமைச்சரின் வருகையை இருதரப்பு உறவுகள் அல்லது அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது சரியாக இருக்காது என்று அவர் கூறினார்.
“இந்திய வெளியுறவு அமைச்சர் குறுகிய கால பயணமாக வந்திருந்தார். ஆனால் அவர் முழு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுவிட்டுப் பிறகு கிளம்பினார்,” என்று அவர் தெரிவித்தார்.
ஜெய்சங்கருடன் தனிப்பட்ட சந்திப்பு எதுவும் நடைபெறாதது பற்றி குறிப்பிடுகையில், “அதற்கான வாய்ப்பு எதுவும் அமையவில்லை. பாகிஸ்தான் சபாநாயகர் உட்பட மற்ற வெளிநாட்டு விருந்தினர்களும் இருந்தனர், அவர் அவர்களுடனும் கைகுலுக்கினார். இது அனைவரும் கடைபிடிக்கும் ஒரு மரியாதை நிமித்தமான செயல்” என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “அவருடன் நான் நடத்திய உரையாடல் அரசியல் சார்ந்தது அல்ல. அது முற்றிலும் மரியாதை நிமித்தமானது. அனைவர் முன்னிலையிலும் நடைபெற்றது. எனவே, இருதரப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்க அங்கு வாய்ப்பு இருக்கவில்லை”என்று குறிப்பிட்டார்.
காலிதா ஜியாவின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோதி அனுப்பிய இரங்கல் செய்தியும், இந்திய வெளியுறவு அமைச்சரின் வருகையும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான படிகள் என்று டாக்கா பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் பேராசிரியர் லைலுஃபர் யாஸ்மின் நம்புகிறார்.
“கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வங்கதேசத்தின் உள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளத் தவறிய இந்தியா, இறுதியாக அதைப் புரிந்து கொண்டுவிட்டது என்பதற்கான அடையாளம் இது” என்று அவர் பிபிசி வங்க சேவையிடம் தெரிவித்தார்.
இருப்பினும், தலைமை ஆலோசகரைச் சந்திக்காததை எதிர்மறையாகப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றும் யாஸ்மின் கருதுகிறார்.
பட மூலாதாரம், @hamidullah_riaz
சந்திக்காமல் இருப்பது யாருடைய முடிவு?
“இந்தச் சந்திப்பு ஏன் நடைபெறவில்லை என்பது குறித்துப் பல ஊகங்கள் எழலாம். இது நேரமின்மையால் ஏற்பட்ட விஷயமாக இருக்கலாம். இது தவிர, ஜெய்சங்கர் யாரைச் சந்தித்தார், அவருக்கு நேரம் இருந்ததா இல்லையா என்பதை இரு தரப்பிலிருந்தும் பார்க்க வேண்டும்” என்றார் பேராசிரியர் லைலுஃபர் யாஸ்மின்.
அதே வேளையில், தற்போதைய வங்கதேச அரசாங்கத்துடன் இந்தியாவுக்கு நல்லுறவு இல்லை என்பதை இந்த வருகை இன்னும் தெளிவாக்கியுள்ளதாக முன்னாள் தூதர் முன்ஷி ஃபயஸ் அகமது கருதுகிறார்.
அதேசமயம் இந்த வருகையின் மூலம் வங்கதேசத்துடன் நல்லுறவை இந்தியா விரும்புகிறது என்ற செய்தியை இந்தியா வழங்க விரும்பியுள்ளது என்கிறார் அவர்.
தலைமை ஆலோசகரைச் சந்திக்காததற்குக் காரணம், இந்தியா எதிர்காலத்தை நோக்கிப் பார்ப்பதுதான் என்று அவர் கருதுகிறார்.
மேலும், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், எந்தவொரு நாடும் இருதரப்பு உறவுகளில் கூடுதல் விவாதங்களை விரும்புவதில்லை என்றும் முன்ஷி ஃபயஸ் அகமது கூறுகிறார்.
“ஜெய்சங்கர் சந்திக்க விரும்பாமல் இருந்திருக்கலாம் அல்லது வங்கதேசமும் இதில் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்திருக்கலாம். அவர் என்ன வேலைக்காக வந்தாரோ அதை முடித்துவிட்டுச் சென்றுவிட்டார். இதில் கவலைப்பட எதுவுமில்லை,” என்றார் முன்ஷி ஃபயஸ் அகமது.
காலிதா ஜியாவின் மறைவுக்குப் பிறகு பல தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் வருகை தந்தது, பிராந்திய அரசியலில் வங்கதேசத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளதாக முன்னாள் தூதர்களும் , சர்வதேச உறவுகளை ஆய்வு செய்யும் நிபுணர்களும் நம்புகின்றனர்.
இருப்பினும், அவாமி லீக் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு அண்டை நாடான இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நிலவும் கடினமான உறவு விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவது கடினம் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
ஜெய்சங்கர் தாரிக் ரஹ்மானைச் சந்தித்ததையும், தலைமை ஆலோசகருடன் நேரடி சந்திப்பைத் தவிர்த்ததையும் பல ஆய்வாளர்கள் “எதிர்கால அரசியலுக்கான தயாரிப்பு” என்று கருதுகின்றனர்.
பட மூலாதாரம், @ChiefAdviserGoB
இந்தியாவிற்கு பிஎன்பி மட்டுமே ஒரே வழியா?
வரவிருக்கும் தேர்தல்களில் பிஎன்பி ஆட்சிக்கு வரக்கூடும் என்று நம்புவதால், இந்தியா அதனுடன் உறவுகளை உருவாக்க முயற்சிப்பதாக முன்னாள் தூதர் முன்ஷி ஃபயஸ் அகமது தெரிவித்தார்.
“இப்போது அவர்களுக்கு வேறு வழியில்லை, இந்த நேரத்தில் இந்தியாவின் முதல் தேர்வாக பிஎன்பி உள்ளது,” என்று அவர் கூறினார்.
இந்தியாவுக்கும் பிஎன்பி-க்கும் இடையே நீண்ட காலமாக ஒருவித ‘இடைவெளி’ அல்லது ‘அவநம்பிக்கை’ நிலவி வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், காலிதா ஜியாவின் மறைவுக்கு நரேந்திர மோதி அனுப்பிய அதிகாரப்பூர்வ மற்றும் தனிப்பட்ட இரங்கல் செய்திகள், இந்தியா இப்போது பிஎன்பி-யுடன் உறவுகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வரவும், அரசியல் ரீதியான ஈடுபாட்டை அதிகரிக்கவும் ஆர்வமாக இருப்பதை நிரூபிக்கின்றன என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இடைக்கால அரசாங்கத்துடனான தனது அசௌகரியத்தை ஓரளவிற்கு குறைத்துக் கொள்ளவும் இந்தியா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்திய அரசாங்கத்தின் இரங்கல் செய்தி, வங்கதேசம் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான நீண்டகால வரலாற்று உறவுகளைக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்தச் செய்தி வங்கதேசத்தில் ஜனநாயகத் தொடர்ச்சியையும் வலியுறுத்தியுள்ளது.

காலிதா ஜியா போன்ற ஒரு மூத்த தலைவரை கௌரவிப்பதன் மூலம், வங்கதேசத்தின் உள்நாட்டு அரசியலில் தனது பங்களிப்பையும், நட்புக் கரத்தையும் இந்தியா வழங்கியுள்ளது.
நரேந்திர மோதி அனுப்பிய அந்த செய்தியில், “வங்கதேச தேசியவாத கட்சியில் உங்கள் (தாரிக் ரஹ்மான்) திறமையான தலைமையின் கீழ், அவரது (காலிதா ஜியா) லட்சியங்கள் முன்னோக்கி கொண்டு செல்லப்படும் என்றும், ஆழ்ந்த மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா-வங்கதேச கூட்டாண்மையை மேலும் செழுமைப்படுத்த வழிகாட்டும் என்றும், ஒரு புதிய தொடக்கத்தை உறுதி செய்யும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
சர்வதேச உறவு ஆய்வாளர்கள் இந்தப் பகுதியை மிகவும் முக்கியமானதாகக் கருதுகின்றனர்.
இருப்பினும், டாக்கா பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறை பேராசிரியர் லைலுஃபர் யாஸ்மின், தூதரகக் கண்ணோட்டத்தில் இந்தச் செய்தியைப் பெரிய அளவில் வித்தியாசமானதாகக் கருதவில்லை.
“எந்தவொரு கட்சியின் தலைவருக்கும் ஒரு செய்தி வழங்கப்படும்போது, ‘தலைமை’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதற்காக பிஎன்பி தான் தேர்தலில் வெற்றி பெறும் என்று அவர் (நரேந்திர மோதி) கூறியதாக அர்த்தமில்லை. அவ்வளவு எளிதாக இதனைப் பொருள் கொள்வது சரியாக இருக்காது,” என்று அவர் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு