அதானி குழுமம் `அதானி பவர்’ நிறுவனம் வாயிலாக வங்கதேசத்தில் மின் விநியோகம் செய்து வந்தது. அங்கு விநியோகிக்கப்படும் மின்சாரத்தில் 10% அதானி பவர் நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.
வங்கதேசம் செலுத்த வேண்டிய 800 மில்லியன் டாலர் தொகை நிலுவையில் இருப்பதால், அதானி பவர் நிறுவனம் தற்போது அதன் மின்சார விநியோகத்தைப் பாதியாகக் குறைத்துள்ளது. இதையடுத்து வங்கதேச அரசு நிலுவைத் தொகையைச் செலுத்தும் நடவடிக்கையை விரைவுப்படுத்தியுள்ளது.
பிபிசியிடம் பேசிய இரண்டு மூத்த அரசு அதிகாரிகள், அதானியின் நிலுவைத் தொகையை ஓரளவு செலுத்துவதற்கான செயல்முறையை ஏற்கெனவே தொடங்கிவிட்டதாகக் கூறியுள்ளனர்.
அதானி வங்கதேசத்திற்கு கிழக்கு இந்தியாவில் உள்ள அதன் 1600 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் விநியோகிக்கிறது. மின் பற்றாக்குறையால் அவதிப்படும் வங்கதேசத்திற்கான விநியோகத்தைக் குறைப்பது பற்றிய பிபிசி கேள்விகளுக்கு அதானி நிறுவனம் பதிலளிக்கவில்லை.
வங்கதேச மின் மேம்பாட்டு வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் பேசியபோது, “நாங்கள் ஏற்கெனவே அதானி குழுமத்திற்கு 170 மில்லியன் டாலருக்கு கடன் கடிதம் (Letter of Credit – விற்பனையாளருக்கு வாங்குபவர் பணம் செலுத்த உத்தரவாதம் அளிக்கும் ஓர் ஆவணம்) வழங்கியுள்ளோம்” என்றார்.
நவம்பர் 7ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்தாவிட்டால், அனைத்து விநியோகங்களையும் நிறுத்தி வைப்பதாக அதானி பவர் நிறுவனம் மிரட்டியதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் வங்கதேச மின் மேம்பாட்டு வாரிய அதிகாரி கூறுகையில், “முழு விநியோகம் துண்டிக்கப்படும் நிலை ஏற்படாது” என்று தான் நம்புவதாகக் கூறினார்.
வங்கதேச அதிகாரிகள் பிபிசியிடம், தாங்கள் படிப்படியாகவும் முறையாகவும் பணம் செலுத்தி வருவதாகவும், பணம் செலுத்தும் நெருக்கடியை சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தனர்.
“நாங்கள் பணம் செலுத்துவதை விரைவுபடுத்திய போதிலும், மின் விநியோகங்கள் குறைக்கப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. நாங்கள் திருப்பிச் செலுத்தத் தயாராக இருக்கிறோம், மாற்று ஏற்பாடுகளைச் செய்வோம்.
ஆனால் எந்த மின் உற்பத்தியாளரும் எங்களை பணயக் கைதிகளாக வைத்திருக்கவோ மிரட்டவோ அனுமதிக்க மாட்டோம்” என்று இடைக்கால அரசின் மின்சாரம் மற்றும் எரிசக்தி ஆலோசகர் ஃபவுசுல் கபீர் கான் கூறினார்.
“வங்கதேசம் ஜூலையில் நிலுவைத் தொகையில், 35 மில்லியன் டாலர் செலுத்தியது. செப்டம்பரில் அந்தத் தொகையை அதிகரித்து 68 மில்லியன் டாலராக செலுத்தியது, அக்டோபரில் 97 மில்லியன் டாலர் செலுத்தியது,” என்று அவர் கூறினார்.
வங்கதேசத்தில் ஏற்கெனவே கிராமப்புறங்களில் மின் பற்றாக்குறை தலைதூக்கியுள்ளது.
அரசியல் குழப்பம்
வங்கதேசம் டாலர் நெருக்கடியில் உள்ளது. மின்சாரம், நிலக்கரி, எண்ணெய் போன்ற விலையுயர்ந்த அத்தியாவசிய இறக்குமதிகளுக்குப் பணம் செலுத்துவதற்கு டாலர் வருவாய் ஈட்டப் போராடி வருகிறது.
ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களால் ஷேக் ஹசீனா அரசாங்கம் கவிழ்ந்தது. அப்போது ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பின் போது வெளிநாட்டு நாணய கையிருப்பும் வீழ்ச்சியடைந்தது.
அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட இடைக்கால அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கடன் கோரியுள்ளது. அதன்படி, தற்போதுள்ள 4.7 பில்லியன் டாலர் கடனுடன் கூடுதலாக 3 பில்லியன் டாலர் கடனை கோரியுள்ளது.
அதானி பவர் நிறுவனம் 2015இல் `வங்கதேச பவர் டெவலப்மெண்ட்’ நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஷேக் ஹசீனா ஒப்புதல் அளித்த பல ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்று. தற்போதுள்ள இடைக்கால அரசு இந்த மின் விநியோகம் தொடர்பான ஒப்பந்தத்தை வெளிப்படைத்தன்மை இல்லாத ஒப்பந்தம் என்று விமர்சித்துள்ளது.
தற்போது ஒரு தேசியக் குழு 11 முந்தைய ஒப்பந்தங்களை மறுமதிப்பீடு செய்து வருகிறது. அதானி உடனான ஒப்பந்தம் உள்பட, பல ஒப்பந்தங்கள் பெரும்பாலும் விலை உயர்ந்ததாக விமர்சிக்கப்படுகிறது.
அதானி பவர் நிறுவனம் மட்டுமின்றி சில இந்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களும் வங்கதேசத்திற்கு மின்சாரத்தை விற்கின்றன. இதில் என்.டி.பி.சி லிமிடெட், பி.டி.சி இந்தியா லிமிடெட் ஆகியவை அடங்கும். மற்ற இந்திய மின் விநியோக நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையும் பகுதியளவு செலுத்தப்பட்டு வருவதை மின் மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
வங்கதேசம் சில எரிவாயு மற்றும் எண்ணெய் அடிப்படையிலான (gas-fired and oil-fired) மின் உற்பத்தி நிலையங்களை, விநியோகப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காக மீண்டும் இயக்க முடிவு செய்துள்ளது. இருப்பினும் இது மின்சார செலவை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
குளிர்காலம் நெருங்கி வருவதால், ஏ.சி தேவையும் குறையும் என்பதால், மின் தேவை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“மற்ற நிலக்கரி மின் உற்பத்தி ஆலைகள் 50% திறனில் இயங்குகின்றன. மேலும் டாலர் நெருக்கடி காரணமாக நாடு போதுமான நிலக்கரியை வாங்க முடியவில்லை. எனவே அதானி பவர் வழங்கும் மின் விநியோகம் முக்கியம். இது உள்ளூர் உற்பத்தியாளர்களைவிட சற்று விலை அதிகம் ஆனால் இது முக்கியம்” என எரிசக்தி நிபுணரும் ஓய்வுபெற்ற பேராசிரியருமான முனைவர் அஜாஜ் ஹொசைன் கூறினார்.
வங்கதேசம் தனது முதல் அணுமின் நிலையத்தை டிசம்பரில் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. ரஷ்ய உதவியுடன் கட்டப்படும் இந்த நிலையத்திற்கு 12.65 பில்லியன் டாலர் வரை செலவாகும். இந்தத் திட்டம் பெரும்பாலும் நீண்ட கால ரஷ்ய கடன் சேவையால் நிதியளிக்கப்படுகிறது.