பட மூலாதாரம், Getty Images
பிரதமர் நரேந்திர மோதியின் மூன்றாவது பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. ஒரு மாதத்திற்குப் பிறகு, ஜூலை மாதத்தில், வங்கதேச மக்கள் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடினர்.
இந்தப் போராட்டங்கள் வன்முறையாக மாறியதால், ஆகஸ்ட் 5ஆம் தேதி, ஷேக் ஹசீனா தனது உயிரைக் காப்பற்றிக் கொள்ள இந்தியாவுக்கு வர வேண்டியிருந்தது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
வங்கதேசத்தின் நிறுவனரான ஷேக் ஹசீனாவின் தந்தை முஜிபுர் ரஹ்மான், இந்தியாவுடன் வரலாற்று ரீதியான உறவைக் கொண்டிருந்தவர். ஷேக் ஹசீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவும் அதே தொடர்ச்சியைக் கொண்டிருந்தது.
இருப்பினும், வங்கதேசத்தின் எதிர்க்கட்சிகளும் ஷேக் ஹசீனாவின் எதிர்ப்பாளர்களும், இந்தியாவின் ஆதரவுடனேயே அவர் அதிகாரத்தில் நீடித்ததாக நம்பினர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தபோது, வங்கதேசத்தில் இந்திய எதிர்ப்பு உணர்வு மேலும் தூண்டப்பட்டது.
வங்கதேசம் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்துள்ளதுடன், அவரை இந்தியாவில் இருந்து நாடு கடத்தவும் கோரி வருகிறது.
இந்தியா எப்போதும் வங்கதேசத்தை ஷேக் ஹசீனா குடும்பத்தின் கண்ணாடியின் வழியாகவே பார்த்து வருவதாகவும், அதற்கு அப்பால் பார்க்க ஒருபோதும் முயலவில்லை என்றும் வங்கதேச ஊடகங்களில் கூறப்படுகிறது.
இந்த மாதம் டிசம்பர் 23ஆம் தேதி, பிரஸ்ஸல்ஸில் இருந்து இயங்கும் ‘இன்டர்நேஷனல் கிரைசிஸ் குரூப்’ (ஐ.சி.ஜி-ICG) என்ற லாப நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனம், இந்தியா-வங்கதேச உறவுகள் குறித்து “ஆப்ஃடர் தி கோல்டன் எரா: கெட்டிங் பங்களாதேஷ்-இந்தியா டைஸ் பேக் ஆன் டிராக்” (After the Golden Era: Getting Bangladesh-India Ties Back on Track) என்ற தலைப்பில் 51 பக்க ஆய்வறிக்கையை வெளியிட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டது இந்தியாவுக்கு ஒரு பலத்த அடி என்று அந்த அறிக்கை கூறுகிறது.
இந்தியா-வங்கதேச உறவுகள் குறித்த தனது சமீபத்திய அறிக்கையில், வில்லியம் வான் ஷெண்டலின் ‘வங்கதேச வரலாறு’ (‘A History of Bangladesh’) என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விஷயத்தை ஐ.சி.ஜி மேற்கோளாகச் சேர்த்துள்ளது. இது இரு நாடுகளும் ஒன்றையொன்று எவ்வாறு பார்க்கின்றன என்பதை வெளிப்படுத்துகிறது.
பட மூலாதாரம், Getty Images
இரு நாடுகளிலும் உள்ள பொதுவான உணர்வு
வில்லியம் வான் ஷெண்டல் தனது “வங்கதேசத்தின் வரலாறு” எனும் புத்தகத்தில் பின்வருமாறு எழுதியுள்ளார்: “வங்கதேசத்தின் சுதந்திரத்திற்கு இந்தியா ஆதரவளித்த போதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் பெரும்பாலும் பதற்றமாகவே இருக்கின்றன. சில நேரங்களில் வெளிப்படையான பகைமையுடனேயே இருந்துள்ளன. வங்கதேசம் ஒரு சுதந்திர நாடாக உருவெடுத்ததில் ஒன்றுக்கொன்று ஆற்றிய பங்கைக் குறைத்து மதிப்பிடும் கதைகளையே இரு நாடுகளும் முன்னிறுத்தியுள்ளன.”
“சுதந்திரப் போராட்டத்தில் இந்தியாவின் பங்களிப்புக்கு வங்கதேசம் போதுமான நன்றியைக் காட்டவில்லை என்ற பொதுவான கருத்து இந்தியாவில் நிலவுகிறது. அதேநேரம், இந்தியா தனது சொந்த உத்தி சார்ந்த நலன்களுக்காக மட்டுமே தலையிட்டது என்றும், சுதந்திர வங்கதேசத்தை தன்னால் கட்டுப்படுத்தப்படும் நாடு போல் அலட்சியமாக நடத்தியதாகவும் வங்கதேசத்தில் பரவலான நம்பிக்கை உள்ளது.”
இதே அறிக்கையானது, ‘இந்தியன் ஃபாரின் அஃபர்ஸ் ஜர்னலில்’ (Indian Foreign Affairs Journal) என்ற தலைப்பில் ஸ்மிருதி எஸ். பட்நாயக் எழுதிய ஒரு கட்டுரையையும் மேற்கோள் காட்டுகிறது. அதில் அவர், “வங்கதேசத்தில் அவாமி லீக் அதிகாரத்தில் இருக்கிறதா என்பதுதான் இருதரப்பு உறவுகளின் நிலையைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாக உள்ளது. ஏனெனில், வங்கதேசத்தில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாப்பதற்கு இந்தக் கட்சி மிகவும் முக்கியமானது என்று இந்தியா நீண்டகாலமாகக் கருதுகிறது. மற்ற நேரங்களில், இந்தியாவும் வங்கதேசமும் ஒரு சமநிலையான உறவைப் பேணுவதில் சிரமங்களைச் சந்திக்கின்றன. மேலும் தொடர்ந்து பரஸ்பர சந்தேகம், தூண்டுதல் மற்றும் எரிச்சலடையும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன” என்று கூறுகிறது.
பட மூலாதாரம், Getty Images
வங்கதேசத்தின் முன்னணி ஆங்கில நாளிதழான ‘தி டெய்லி ஸ்டார்’ , இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சீர்குலைந்து வருவது குறித்து டிசம்பர் 22 அன்று ஒரு தலையங்கம் எழுதியது.
அதில், “பல ஆண்டுகளாக இந்தியா, வங்கதேசம் இடையிலான உறவின் அடித்தளம், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு இந்தியா அளித்த அசைக்க முடியாத ஆதரவால் பலப்படுத்தப்பட்டது என்பதை மீண்டும் வலியுறுத்துவது அவசியம். இப்போது அந்த கட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டு, நாட்டைவிட்டு வெளியேறிய அதன் தலைவர் எரிச்சலூட்டும் விதமான கருத்துகளைக் கூறி வருவதால், அந்த அடித்தளம் கடுமையாகச் சேதமடைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
“அதற்குப் பதிலாக இப்போது பரஸ்பர சந்தேகங்களால் நிறைந்த ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது. வங்கதேசத்திற்கு எதிராகச் சதி செய்பவர்களுக்கு இந்தியா ஒரு பாதுகாப்பான புகலிடமாக இருப்பதாக வங்கதேசம் கருதுகிறது. மறுபுறம், அண்டை நாடு பெரும்பான்மைவாத அராஜகத்திற்குள் சென்று கொண்டிருப்பதாக இந்தியா கருதுகிறது. சிறுபான்மையினர் பாதுகாப்பு விஷயத்தில் இடைக்கால அரசின் அணுகுமுறையை இந்தியா சந்தேகத்துடன் பார்க்கிறது மற்றும் வங்கதேசத்தின் உறுதிமொழிகள் போதுமானதாக இல்லை என்று நிராகரிக்கிறது.”
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் தெற்காசிய ஆய்வுகளுக்கான மையத்தின் பேராசிரியர் மகேந்திர பி. லாமா, ஜியாவுர் ரஹ்மான், கலிதா ஜியா ஆகியோர் இந்தியாவின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதால், ஆரம்பத்தில் இந்தியா ஷேக் ஹசீனாவை ஒரு கட்டாயத்தின் பேரில் ஆதரித்ததாகக் கருதுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
மொத்த நம்பிக்கையும் ஒரே கட்சியின் மீதே வைக்கப்பட்டதா?
“கிழக்கு பாகிஸ்தான் காரணமாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தன. வங்கதேசத்தின் உருவாக்கம் ஒரு நம்பிக்கையைத் தந்தது. இந்த நம்பிக்கை ஷேக் முஜிபுர் ரஹ்மான் மற்றும் ஷேக் ஹசீனாவின் பதவிக்காலத்தில் உயிர்ப்புடன் இருந்தது. இருப்பினும், வங்கதேசத்தில் ஜியாவுர் ரஹ்மான், எர்ஷாத் ஆகியோரின் எழுச்சி இந்தியாவின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே, ஷேக் ஹசீனாவையும் அவாமி லீக்கையும் வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டது” என்று பேராசிரியர் லாமா கூறுகிறார்.
“ஆனால், ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் தனது செல்வாக்கை இழந்தபோது, இந்தியா தனது கொள்கையை மாற்றியிருக்க வேண்டும். 2023 தேர்தலில் இந்தியா ஷேக் ஹசீனாவை ஆதரித்திருக்கக் கூடாது. சரிவு ஏற்படும் அபாயம் இருந்தபோதிலும், இந்தியா தனது அனைத்து நம்பிக்கைகளையும் அவாமி லீக் மீதே வைத்தது. வங்கதேசத்தில் மட்டுமல்ல, மாலத்தீவு மற்றும் நேபாளத்திலும் இதையே செய்தது.”
இந்தியா, வங்கதேசம் இடையிலான உறவுகளில் அவநம்பிக்கை ஏற்பட்டதற்கான வரலாற்றுக் காரணங்களையும் ஐ.சி.ஜி அறிக்கை குறிப்பிடுகிறது.
ஐ.சி.ஜி தனது அறிக்கையில், “ஆகஸ்ட் 1975இல், சுதந்திரப் போராட்டத் தலைவரும் வங்கதேசத்தின் முதல் பிரதமருமான ஷேக் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும்பாலானோர், அதிருப்தி கொண்ட ராணுவ அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த நிகழ்வு நாட்டின் திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படுகொலைகளைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் ராணுவ ஆட்சிக் காலம் தொடங்கியது. குறிப்பாக 1976 முதல் 1981 வரை ஜியாவுர் ரஹ்மான் தலைமையிலும் (இவரும் பின்னர் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார்), பின்னர் 1982 முதல் 1990 வரை ஹுசைன் முகமது எர்ஷாத் தலைமையிலும் ராணுவ ஆட்சி நீடித்தது.”
பட மூலாதாரம், @DrSJaishankar
மேலும், “இந்த அரசாங்கங்கள் இந்தியாவுக்கு எதிரான சமநிலை கொள்கையின் ஒரு பகுதியாக, வங்கதேசத்தை பாகிஸ்தான், பிற இஸ்லாமிய பெரும்பான்மை கொண்ட நாடுகள், சீனா மற்றும் அமெரிக்காவுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்ல முயன்றன. ஜியாவுர் ரஹ்மான், எர்ஷாத் ஆகிய இருவரும் தங்கள் ஆட்சிகளை நியாயப்படுத்தவும் அவாமி லீக்கை எதிர்க்கவும் வங்கதேச தேசியவாத கட்சி (BNP), ஜாதியா கட்சி ஆகிய அரசியல் கட்சிகளை நிறுவினர்.
ஜமாத்-இ-இஸ்லாமி மீண்டும் அரசியலுக்கு வர அனுமதிப்பது உள்பட ஷேக் முஜிபுர் ரஹ்மான் அரசாங்கத்தின் மதச்சார்பற்ற கொள்கைகளையும் அவர்கள் மாற்றியமைத்தனர். மேலும் அரசியல் லாபத்திற்காக இந்திய எதிர்ப்பு உணர்வைத் தூண்டினர்” என்று ஐசிஜி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரின் எஸ். ராஜரத்தினம் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் ஸ்டடீஸுக்காக பூமித்ரா சக்மா மேற்கொண்ட ஆய்வை ஐசிஜி தனது அறிக்கையில் மேற்கோள் காட்டியுள்ளது.
அதில் பூமித்ரா சக்மா பின்வருமாறு எழுதியுள்ளார்: “1975க்குப் பிறகு, ராணுவ ஆட்சிகள் பல அவாமி லீக் தலைவர்களைப் படுகொலை செய்தன அல்லது சிறையில் அடைத்தன. இதனால் அக்கட்சி அரசியலில் ஓரங்கட்டப்பட்டது. ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனா, 1975 ஆகஸ்டில் தனது குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்டபோது வெளிநாட்டில் இருந்ததால் தப்பினார்.”
ஷேக் ஹசீனா 1981இல் நாடு திரும்பும் வரை இந்தியாவில் தஞ்சம் புகுந்து அங்கிருந்தே கட்சியை வழிநடத்தினார். இந்தியாவின் ஆதரவு அவாமி லீக் மற்றும் இந்திய அரசுக்கு இடையிலான நெருக்கமான உறவை வலுப்படுத்தியது.
இந்த உறவு ஷேக் ஹசீனாவுக்கும், சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்திய இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட உறவுகளின் அடிப்படையில் அமைந்திருந்தது.
பட மூலாதாரம், @ChiefAdviserGoB
இரு நாட்டு உறவில் இருக்கும் அவநம்பிக்கை
ஐ.சி.ஜி அறிக்கை, “வங்கதேசத்தில் நடந்த 15 ஆண்டுக்கால ராணுவ ஆட்சியின்போது, இந்தியாவும் வங்கதேசமும் ஒன்றையொன்று முதன்மையாகப் பாதுகாப்பு கண்ணோட்டத்திலேயே பார்த்தன. இரு நாடுகளும் தங்கள் எல்லைக்குள் செயல்படும் கிளர்ச்சிக் குழுக்களுக்கு மறைமுக ஆதரவை வழங்கின. வங்கதேசத்தின் சிட்டகாங் மலைப் பகுதிகளில் செயல்பட்ட ‘சாந்தி பாஹினி’ குழுவுக்கு இந்தியா ஆதரவு அளித்தது” என்று குறிப்பிட்டது.
“அதேநேரம், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் செயல்படும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்க வங்கதேசம் உதவியதுடன், வங்கதேச மண்ணில் அவர்கள் முகாம்களை அமைக்கவும் அனுமதித்தது.
கடந்த 1980களில், வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறுவது இந்தியாவில் ஓர் அரசியல் பிரச்னையாக மாறியது. இதற்குப் பதிலடியாக, இந்தியா எல்லையில் வேலி அமைக்கத் தொடங்கியதுடன் எல்லைப் பாதுகாப்பு சோதனைகளையும் தீவிரப்படுத்தியது.”
கடந்த 1990-1991இல் வங்கதேசத்தில் ஜனநாயகம் திரும்பியபோது, இருதரப்பு உறவுகள் மேம்படும் என்ற நம்பிக்கை இந்தியாவில் உருவானது. ஆனால், வங்கதேசத்தில் புதிதாக பி.என்.பி தலைமையிலான அரசு புதிய அரசாங்கத்தை அமைத்தது.
கடந்த 1992இல் பிரதமர் கலிதா ஜியாவின் இந்திய வருகை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய வர்த்தக ஒப்பந்தம் போன்ற ஆரம்பக்கால நேர்மறை அறிகுறிகள் இருந்தபோதிலும், உறவுகள் மேம்படும் என்ற நம்பிக்கை விரைவில் தகர்ந்தது.
பட மூலாதாரம், Getty Images
ஜமாத்-இ-இஸ்லாமி ஆதரவு பெற்ற பிஎன்பி அரசாங்கத்தின் மீதான இந்தியாவின் நீண்டகால அவநம்பிக்கை படிப்படியாகப் பகையாக மாறியது. வங்கதேசம், தொடர்ந்து கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய அதிகாரிகள் குற்றம் சாட்டினர். மேலும் நதி நீர் பங்கீடு, எல்லை நிர்ணயம் போன்ற முக்கிய இருதரப்பு விவகாரங்களில் மிகக் குறைந்த முன்னேற்றமே ஏற்பட்டது.
இந்தியாவின் உள்நாட்டு அரசியலும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சியின் எழுச்சி, 1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது ஆகியவை வங்கதேசத்தில் இந்திய எதிர்ப்பு உணர்வைத் தூண்டின.
பாபர் மசூதி இடிப்புக்கு உடனடி எதிர்வினையாக வங்கதேசத்தில் இந்து சமூகங்கள் தாக்கப்பட்டன, அதே நேரத்தில் இந்தியாவிலும் இந்து-முஸ்லிம் மதக் கலவரங்கள் வெடித்தன.
இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் இருந்தால், அது வங்கதேசத்தையும் பாதிக்கும் என்றும், அங்கு தாராளவாத ஜனநாயகத்தை நாம் எதிர்பார்க்க முடியாது என்றும் பேராசிரியர் லாமா கூறுகிறார்.
கடந்த 16 மாதங்களாக வங்கதேசம் இந்தியா இடையிலான இருதரப்பு உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 10 நாட்களில், இந்தப் பதற்றம் ஒரு கடுமையான நெருக்கடியாக மாறியுள்ளது.
இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று தூதர்களை மீண்டும் மீண்டும் வரவழைத்து எதிர்ப்பு தெரிவிப்பதோடு, எதிர் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றன.
பாதுகாப்பு காரணங்களைக் கூறி, டெல்லி உள்ளிட்ட நான்கு இடங்களில் இந்தியாவுக்கான விசா சேவைகளை வங்கதேசம் நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவும் டாக்கா உள்ளிட்ட நான்கு இடங்களில் விசா சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
பட மூலாதாரம், @ChiefAdviserGoB
வங்கதேச ஊடகங்களில் எழும் விவாதம்
டிசம்பர் 25 அன்று, வங்கதேசத்தின் முன்னணி நாளிதழான ‘புரதோம் ஆலோ’ ஆங்கில பதிப்பில், ‘இந்தியா தனது அவாமி லீக் சார்பு நிலையைக் கடந்து நகருமா?’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது.
“செல்வாக்கிழந்த ஆட்சியாளருடன் இந்தியாவின் நெருங்கிய உறவு, வங்கதேசத்தில் இந்திய எதிர்ப்பு உணர்வை மேலும் அதிகரித்தது. வெகுஜன இயக்கத்தின் மூலம் ஷேக் ஹசீனா அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்ட பிறகு, சூழல் இந்தியாவுக்கு பாதகமாக மாறியது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
“ஷேக் ஹசீனாவின் 15 ஆண்டுக்கால சர்வாதிகார ஆட்சியின்போது ‘பொற்காலம்’ என்று அழைக்கப்பட்ட வங்கதேசம் -இந்தியா உறவின் எதிர்காலம் இப்போது கடுமையான நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்கிறது.
ஜூலை 2024இல் மக்கள் போராட்டங்களுக்கு மத்தியில் பதவியில் இருந்து அகற்றப்பட்ட ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பிச் சென்றார். அதன் பிறகு ஒரு இடைக்கால அரசாங்கம் பதவியேற்றது, இது இருதரப்பு உறவுகளில் கசப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு டிசம்பரிலும் உறவுகள் பாதிக்கப்பட்டன, ஆனால் இந்த அளவுக்கு இல்லை.”

வங்கதேசத்துக்கான முன்னாள் அமெரிக்க தூதர் எம். ஹுமாயூன் கபீர், புரதோம் ஆலோவிடம் பேசுகையில், “வங்கதேசம், இந்தியா இடையே இவ்வளவு பெரிய அளவிலான சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் நான் இதுவரை பார்த்ததில்லை. சர்வதேச நெறிமுறைகளின்படி, இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் தூதரகப் பணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இரு அண்டை நாடுகளும் ஒன்றையொன்று சார்ந்து இருப்பதால், இந்தியா எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, வங்கதேசத்துடனான உறவில் நம்பிக்கையை மீட்டெடுக்க முன்முயற்சி எடுக்க வேண்டும்,” எனத் தெரிவித்தார்.
பி.என்.பி (BNP) செயல் தலைவர் தாரிக் ரஹ்மான், 17 ஆண்டுகளுக்குப் பிறகு, டிசம்பர் 25 அன்று லண்டனில் இருந்து வங்கதேசத்திற்குத் திரும்பினார். பி.என்.பி ஆட்சிக்கு வந்தால், அவர் வங்கதேசத்தின் புதிய பிரதமராக வாய்ப்புள்ளது. பி.என்.பி உடனான இந்தியாவின் உறவு இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது.
இருப்பினும், கடந்த வாரம் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, கலிதா ஜியாவின் உடல்நலனுக்காக பிரார்த்தனை செய்து, உதவி செய்வதாக உறுதியளித்தார்.
இந்தச் செயலை பி.என்.பி வரவேற்றுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு