பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், அன்பரசன் எத்திராஜன்
- பதவி, உலக விவகார செய்தியாளர்
-
சமீபத்திய ஆண்டுகளில் எழுச்சியால் தனது அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட இந்தியாவின் மூன்றாவது நெருங்கிய அண்டை நாடாக நேபாளம் மாறியுள்ளது.
சமூக ஊடகத் தடைக்கு எதிராக வெடித்த அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில், காவல்துறையினருடனான மோதல்களில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து, பிரதமர் கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்தார்.
தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்ததுடன், பல அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைத்ததை அடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ராணுவம் முயற்சிக்கிறது.
நேபாளத்தில் நடந்த சம்பவங்கள், கடந்த ஆண்டு வங்கதேசத்தையும், 2022 இல் இலங்கையையும் ஆட்டிப்படைத்த கொந்தளிப்பை பலருக்கும் நினைவூட்டின.
தெற்காசியாவில் வங்கதேசமும் இலங்கையும் இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளாக இருந்தாலும், வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் தொடர்புகள், பொருளாதார மற்றும் உத்தி சார்ந்த உறவுகளின் காரணமாக நேபாளத்துடனான இந்தியாவின் உறவு தனிச்சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.
உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், சிக்கிம், பிகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து இந்திய மாநிலங்களுடன் 1,750 கிலோமீட்டர் (466 மைல்) க்கும் அதிகமான எல்லையை, நேபாளம் பகிர்ந்து கொள்கிறது.
எல்லையைத் தாண்டி நடக்கும் நிகழ்வுகளை இந்தியா மிக நெருக்கமாகக் கவனித்து வருகிறது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, வேகமாக எதிர்வினையாற்றுகிறார்.
“நேபாளத்தில் நடக்கும் வன்முறை மனதைப் பிளக்கிறது. பல இளைஞர்கள் உயிரிழந்தது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது,” என்று மோதி செவ்வாயன்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
“நேபாளத்தின் நிலைத்தன்மை, அமைதி மற்றும் செழிப்பு மிக முக்கியமானவை” என்று வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோதி, “நேபாளத்தில் உள்ள எனது சகோதர சகோதரிகள் அனைவரும் அமைதியை ஆதரிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
செவ்வாயன்று, சூழலை மதிப்பீடு செய்வதற்காக தனது அமைச்சரவை உறுப்பினர்களுடன் நடைபெற்ற அவசர பாதுகாப்பு கூட்டத்திற்கும் மோதி தலைமையேற்றார்.
2022-ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கிளர்ச்சியால் அப்போதைய அதிபர் கோட்டபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதைப் போலவே, நேபாளத்தில் ஏற்பட்ட இச்சம்பவமும் இந்தியாவுக்கு அதிர்ச்சியளித்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக, டெல்லிக்குப் பயணம் செய்ய நேபாள பிரதமர் ஒலி திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவர் ராஜினாமா செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
நேபாளம் உத்தி ரீதியாக இந்தியாவுக்கு மிக முக்கியமான இடத்தில் இருப்பதால், ஏற்படும் எந்தவொரு பதற்றமும் இந்தியாவை கவலையில் ஆழ்த்துகிறது.
“சீனாவின் பெரிய ராணுவ தளமான Western Theatre Command நேபாளத்தின் மறுபக்கத்தில்தான் உள்ளது. இந்தோ – கங்கை சமவெளிகளுக்கான (வட இந்தியாவின் சமவெளி) நேரடி வழி நேபாளம்தான்,” என்று நேபாளம் தொடர்பான நிபுணரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா பிபிசி-க்கு தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் நேபாளத்தில் இருந்து புலம் பெயர்ந்தோர் அதிகளவில் உள்ளனர். அவர்களையும் இந்த அமைதியின்மை பாதிக்கிறது.
இந்தியாவில் சுமார் 3.5 மில்லியன் நேபாளிகள் வேலை செய்கிறார்கள் அல்லது வாழ்கிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நேபாளம் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு. எல்லையைத் தாண்டிய சமூகங்கள் நெருங்கிய குடும்ப உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன.
இரு நாடுகளுக்குமிடையே மக்கள் விசா அல்லது பாஸ்போர்ட் இல்லாமல் சுதந்திரமாகப் பயணம் செய்கிறார்கள். 1950 ஒப்பந்தத்தின் கீழ் நேபாளிகள் இந்தியாவில் எந்தத் தடையும் இன்றி வேலை செய்யலாம். இந்த ஏற்பாடு பூட்டானுடன் சேர்த்து இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் மட்டுமே உள்ளது.
மேலும், நேபாளத்தைச் சேர்ந்த 32,000 புகழ்பெற்ற கூர்க்கா வீரர்கள், பல ஆண்டுகளாக அமலில் உள்ள சிறப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர்.
“எல்லை திறந்திருப்பதால், சமூகங்கள் ஒருங்கிணைந்த வாழ்க்கையை அனுபவிக்கின்றன. இரு தரப்பிலும் உள்ள குடும்பங்கள் தினமும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கின்றன” என்கிறார் டெல்லியின் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் சங்கீதா தப்லியால்.
இமயமலைக்கு அப்பால் அமைந்துள்ள முக்திநாத் கோயில் உட்பட பல முக்கிய இந்து புனிதத் தலங்களும் நேபாளத்தில் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான இந்து யாத்திரிகர்கள் இந்தக் கோவிலுக்குச் செல்கின்றனர்.
இதற்கிடையில், நேபாளம் இந்திய ஏற்றுமதிகளை குறிப்பாக எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களை பெரிதும் சார்ந்துள்ளது.
இந்தியா– நேபாளத்தின் ஆண்டு இருதரப்பு வர்த்தகம் சுமார் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
புதன்கிழமை காத்மாண்டுவில் ஓரளவு அமைதி திரும்பியிருந்தாலும், நாட்டை ஆண்ட மூன்று முக்கிய அரசியல் கட்சிகளின் மீதும் போராட்டக்காரர்களிடையே கோபம் நிலவி வருவதால், இந்தியா மிக எச்சரிக்கையுடன் ஒரு ராஜ்ஜிய சமநிலையைப் பேண வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவுக்கு, ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (CPN–UML), ஷேர் பகதூர் தியூபாவின் நேபாள காங்கிரஸ், பிரசந்தா (புஷ்ப கமல் தஹால்) தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) ஆகிய மூன்று கட்சிகளுடனும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன.
இமயமலையால் பெரிதும் சூழப்பட்ட நாடான நேபாளத்தின் உத்தி சார்ந்த முக்கியத்துவத்தை முன்னிட்டு, இந்தியாவும் சீனாவும் அங்குள்ள செல்வாக்குக்காக போட்டியிடுகின்றன.
இதனால், வலிமையான இந்த இரண்டு ஆசிய நாடுகளும் நேபாளத்தின் உள்நாட்டுக் விவகாரங்களில் தலையிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஒலிக்குப் பதிலாக எந்த விதமான நிர்வாகம் உருவாகப்போகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது போராட்டக்காரர்களால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
புதிய அரசாங்கத்தின் வடிவம் நிச்சயமற்றதாக இருப்பதால், “இந்தியா எச்சரிக்கையாக இருக்கும்” என்றும் “நேபாளத்தில் வங்கதேசம் போன்ற இன்னொரு சூழ்நிலை அவர்கள் விரும்பவில்லை”என்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் சங்கீதா தப்லியால் கூறுகிறார்.
வங்கதேசத்தின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் இந்தியாவுக்கு நல்லுறவு இருந்தது.
ஆனால், ஹசீனாவுக்கு இந்தியா புகலிடம் வழங்கிய முடிவால், தற்போதைய வங்கதேச இடைக்கால நிர்வாகத்துடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் முன்பே சில வேறுபாடுகள் இருந்துள்ளன. அவற்றையும் இப்போது மிகுந்த கவனத்துடன் நிர்வகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில், சீன எல்லைக்கு அருகிலுள்ள மேற்குப் பகுதியில் நேபாளம் உரிமை கோரிய பகுதிகளை தனது வரைபடத்தில் இந்தியா இணைத்தது. இதனால் நேபாளம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
பின்னர், அந்த சர்ச்சைக்குரிய பகுதிகளை கொண்ட தனது சொந்த வரைபடத்தை நேபாளம் வெளியிட்டது. இதனால் இரு நாடுகளுக்குமிடையே ராஜ்ஜிய மோதல்கள் மேலும் தீவிரமடைந்தன.
சமீபத்தில், நேபாளம் உரிமை கோரும் எல்லைப் பகுதிகளில் ஒன்றான லிபுலேக் கணவாயில் இந்தியா – சீனா வர்த்தகத்தை மீண்டும் தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளன. கடந்த மாதம் சீனாவுக்கு சென்றிருந்தபோது, இந்தக் கணவாயை வர்த்தகப் பாதையாக பயன்படுத்துவதை எதிர்த்து, சீனத் தலைமையிடம் ஓலி இந்த பிரச்னையை எழுப்பியிருந்தார்.
எந்தவொரு முரண்பாடுகளையும் சரி செய்ய இந்தியா புதிய நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டியது அவசியம். மேலும், தங்கள் அரசியல் அமைப்பின் மீது கோபமாக இருக்கும் நேபாள இளைஞர்களுடன் இந்தியா இணைந்து செயல்பட வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
“நேபாளத்தில் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளன. நேபாள மாணவர்களுக்கு உதவித் திட்டங்களை அதிகரிப்பது, வேலை வாய்ப்புகளை வழங்குவது குறித்து இந்தியா தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்,” என்று பேராசிரியர் சங்கீதா தப்லியால் கூறுகிறார்.
இந்நிலையில், பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பான சார்க் (SAARC) பல ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருப்பது, அண்டை நாடுகளில் உருவாகும் அரசியல் மாற்றங்கள் மற்றும் உறுதியின்மையை கையாள்வதில் இந்தியாவுக்கு ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, இந்தியா ஏற்கனவே அண்டை நாடுகளுடன் சந்தித்து வரும் சிக்கல்களின் நடுவே வெடித்துள்ளது. பாகிஸ்தானுடனான உறவுகள் மோசமடைந்துள்ளன நிலையில், ஒருபுறம் வங்கதேசத்துடனான உறவுகள் பதற்றத்தில் உள்ளன, மறுபுறம் மியான்மர் உள்நாட்டுப் போரில் சிக்கியிருக்கிறது.
“இந்தியா தனது பெரும் அதிகாரக் கனவுகளில் கவனம் செலுத்தி, அண்டை நாடுகளை புறக்கணித்துவிட்டது. ஆனால் அந்த இலக்கை அடைய விரும்பினால், முதலில் ஒரு பாதுகாப்பான, நிலையான அண்டை நாட்டைக் கொண்டிருக்க வேண்டும்” என்கிறார் அசோக் மேத்தா.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு