வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தி, புல்டோசர் கொண்டு இடித்தனர். அவரது வீடு மட்டுமல்லாமல், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் தலைவர்கள் பலரது வீடுகளை புதன்கிழமை இரவு தாக்கினர்.
இந்தியாவில் இருக்கும் ஷேக் ஹசீனா இணையம் வாயிலாக பேசவிருந்த நிகழ்ச்சி ஒன்று தொடங்குவதற்கு சற்று முன்பு இந்த போராட்டமும் தாக்குதல் சம்பவங்களும் தொடங்கின. ஷேக் ஹசீனாவின், “வங்கதேச விரோத” நடவடிக்கைகள் தான் இந்த போராட்டத்துக்குக் காரணம் என்று வங்கதேசத்தின் முன்னணி செய்தித்தாளான தி டெய்லி ஸ்டார் குறிப்பிடுகிறது.
கடந்த ஆண்டு நாடு முழுவதும் நடைபெற்ற தீவிரமான மாணவர் போராட்டங்களுக்குப் பிறகு ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி இந்தியாவுக்கு வந்தார்.
என்ன நடந்தது?
அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பு ஒருங்கிணைத்த ஆன்லைன் நிகழ்ச்சியில் புதன்கிழமை இரவு 9 மணிக்கு முகநூல் மூலம் ஷேக் ஹசீனா பேசவிருந்தார். அதே நேரத்தில், “புல்டோசர் இடிப்பு”க்கான அறிவிப்பை போராட்டக்காரர்கள் வெளியிட்டனர்.
ஆனால், இரவு எட்டு மணிக்கு, பாகுபாடுக்கு எதிரான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹஸ்னத் அப்துல்லா அழைப்பு விடுத்ததன் காரணமாக, நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ஆயுதங்கள் ஏந்தி, மறைந்த ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வீட்டுக்குள் நுழைந்து தாக்கினர்.
அங்கிருந்த முஜிபுர் ரஹ்மானின் படங்களை சேதப்படுத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர் என்று தி டெய்லி ஸ்டார் பத்திரிகை கூறியுள்ளது. அந்த செய்தியில், “இரவு 9.30 மணிக்குக் கட்டடம் தீயிட்டு எரிக்கப்பட்டது. கிரேன் மற்றும் பிற இயந்திரங்கள் சிறிது நேரத்தில் அங்கு வந்தன. இரவு 2 மணியளவில் வீட்டின் ஒரு பகுதி இடித்து நொறுக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
‘பாசிசத்தின் அடையாளம்’ என்பதால் கொளுத்தினோம் என்று கூறும் போராட்டக்காரர்கள்
“அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ள அந்த வீடு பாசிசத்தின் அடையாளமாக இருப்பதால் வீட்டை கொளுத்த வேண்டும் என்று நினைத்ததாக,” போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
பாகுபாடுக்கு எதிரான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹஸ்னத் அப்துல்லா மற்றும் வேறு சிலர் இதே கருத்தை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் தெரிவித்திருந்தனர். “இந்த வீட்டை காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை. இது ஷேக் ஹசீனா அரசின் கட்டுப்பாட்டில் இருந்த அருங்காட்சியகம், மாணவர்களான நாங்கள் புரட்சியின் மூலம் புதிய அரசை அமைத்திருப்பதால், இதனை அடித்து நொறுக்குவதில் தவறில்லை” என்று ஒருவர் பதிவிட்டிருந்தார்.
ஷேக் முஜிபுர் ரஹ்மான் வங்கதேசத்தின் நிறுவனர் என்று அழைக்கப்படுபவர். பாகிஸ்தானிடமிருந்து பிரிந்து 1971ம் ஆண்டு வங்கதேசம் உருவானது. முஜிபுர் ரஹ்மான் 1975ம் ஆண்டு கொல்லப்பட்டார்.
வங்கதேசத்தில் அரசியல் கொலைகளும் பெரிய அளவிலான மனித உரிமை மீறல்களும் ஷேக் ஹசீனாவால் நிகழ்த்தப்பட்டது என்று அவரது எதிர்ப்பாளர்கள் அவர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
இடைக்கால அரசின் உத்தரவின் அடிப்படையில், இந்த தாக்குதல் நடைபெற்றதாக கூறப்பட்டாலும், இது குறித்து எந்த தகவலும் இல்லை என்று டாக்கா நகர் காவல் செய்தித் தொடர்பாளர் தலிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்ட தாரிகுல் இஸ்லாம் என்ற மாணவர், முதலில் அவர்கள் வீட்டுக்குள் நுழையும் போது, காவல்துறையினர் அவர்களை தடுத்ததாகவும், ஆனால் அவர்கள் வீட்டை இடித்துக் கொண்டிருந்த போது, காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
ஷேக் ஹசீனா கட்சியின் தலைவர்கள் வீடுகளில் தாக்குதல்
முஜிபுர் ரஹ்மானின் வீடு கொளுத்தப்பட்ட அதே நேரத்தில், வேறு பகுதிகளில் இருந்த ஷேக் ஹசீனாவின் உறவினர்கள் மற்றும் கட்சி தலைவர்களின் வீடுகளும் தாக்கப்பட்டன.
“டாக்காவா டெல்லி டாக்காவா” என்ற முழக்கங்களை நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் எழுப்பியதாக டெய்லி ஸ்டார் பத்திரிகை கூறுகிறது. நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மற்றும் அவாமி லீக் கட்சியின் இணை பொதுச் செயலாளர் மஹ்புப் அலாம் ஹனிஃப், அவாமி லீக் கட்சியின் தலைவர் சதர் கான் ஆகியோரின் வீடுகளும் தாக்கப்பட்டன.
ஷேக் ஹசீனாவின் ஆன்லைன் பேச்சை எதிர்த்து சிட்டகாங்கில் டார்ச் லைட் ஏந்திய போராட்டத்தில் சிலர் ஈடுபட்டனர். சிட்டகாங் மருத்துவக் கல்லூரி மற்ரும் ஜமால் கான் பகுதியில் இருந்த முஜிபுர் ரஹ்மானின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஷேக் ஹசீனா
இந்த தாக்குதல் சம்பவங்களுக்கு ஷேக் ஹசீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது கட்சி அவாமி லீக்கின் முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட அவர், “நாட்டின் சுதந்திரத்தை சில புல்டோசர்களை கொண்டு முடிவுக்குக் கொண்டு வர அவர்களால் முடியாது. கட்டடங்களை இடிக்கலாம், ஆனால் வரலாற்றை சேதப்படுத்த முடியாது” என்று அவர் பேசியிருந்தார்.
கொளுத்தப்பட்ட வீட்டில் அவரது தந்தை மற்றும் வங்கதேச சுதந்திர இயக்கம் குறித்த நினைவுகளை பகிர்ந்துகொண்ட அவர், “அந்த வீடு ஏன் தாக்கப்படுகிறது? நாட்டு மக்களிடமிருந்து நான் நியாயம் கேட்கிறேன்” என்றார்.
ஷேக் ஹசீனாவை வங்கதேசம் அழைத்து வர விரும்பும் இடைக்கால அரசு
வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக இருக்கும் முகமது யூனுஸ், புதிய அரசில் பொறுப்பு வகித்து 100 நாட்கள் முடிந்துள்ள நிலையில், தொலைக்காட்சியில் பேசும்போது, ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு கொண்டுவர விரும்புவதாக தெரிவித்தார்.
மாணவர் இயக்க போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பொறுப்பானவர்கள் மற்றும் ஷேக் ஹசீனாவை இடைக்கால அரசு விசாரணைக்கு உட்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் கடந்த ஆறு மாதங்களாக இருக்கும் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்பிமாறு, வங்கதேச இடைக்கால அரசு இந்தியாவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும் இந்தியா இதில் தெளிவான பதிலை வழங்கவில்லை.
இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பதட்டம் நிலவுவதை காண முடிகிறது. எனினும், இரு நாடுகளும் உறவுகளை மேம்படுத்த முயற்சி எடுப்போம் என்று கூறுகின்றன.