வங்கதேசத்திற்கு வழங்கிய கடனை திரும்ப செலுத்துவற்கான அவகாசத்தை 20 ஆண்டுகளில் இருந்து 30 ஆண்டுகளாக உயர்ந்த சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
வங்கதேசத்தின் இடைக்கால அரசின் வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசகர் தவ்ஹீத் ஹுசைன், சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயுடனான சந்திப்பின்போது அவர் கடன் குறித்து பேசினார்.
சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக இருநாடுகளும் தெரிவித்தன.
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பிற்கு பிறகு அமைக்கப்பட்ட இடைக்கால அரசு சீனாவுடன் நெருக்கமாக இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன.
கடனை திருப்பி செலுத்த வங்கதேசத்திற்கு கூடுதல் அவகாசம்
சீனா- வங்கதேசம் இடையே தூதரக உறவுகள் தொடங்கி இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
சீனாவுடனான பொருளாதார வர்த்தக உறவுகள் முக்கியமானவை என சீனாவுக்கு செல்வதற்கு முன்பாக வங்கதேசத்தின் வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசகர் தவ்ஹீத் ஹுசைன் தெரிவித்தார்.
கடன்களைத் திருப்பி செலுத்துவதில் வங்கதேசத்தின் சிறந்த செயல்பாட்டை கருத்தில் கொண்டு, கடனை திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டிக்க சீனா ‘கொள்கை ரீதியான அனுமதியை’ அளித்திருப்பதாக வங்கதேச நாளிதழ் டாக்கா டிரிபியூன் கூறியுள்ளது.
சீன வெளியுறவுத்துறை அமைச்சருடனான சந்திப்பின்போது தவ்ஹீத் ஹுசைன் மூன்று விவகாரங்களை எழுப்பியதாக அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
கடன் மீதான வட்டியை 2 முதல் 3 விழுக்காட்டிலிருந்து ஒரு விழுக்காடாக குறைக்கவேண்டும், உறுதிக் கட்டணத்தை தள்ளுபடி செய்யவேண்டும் மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் காலத்தை 30 ஆண்டுகளாக அதிகரிக்கவேண்டும் என சீனாவிடம் அவர் கோரிக்கை வைத்தார்.
இரு தரப்பு பேச்சுவார்த்தையின்போது, விரிவான ஒத்துழைப்பு கூட்டுறவை தொடர்வதற்கு வங்கதேசமும், சீனாவும் உறுதி அளித்தன.
பரவலான போராட்டங்களைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி அப்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியா வந்தார். அதன் பின்னர் அமைக்கப்பட்ட இடைக்கால அரசை முகமது யூனுஸ் நடத்திவருகிறார்.
யூனுஸ் மற்றும் அவரது அலோசகர்கள் அதிகாரத்திற்கு வந்த பிறகு வங்கதேம் மற்றும் இந்தியா இடையில் உறவுகள் இறுக்கமாக இருக்கின்றன.
அதற்கு நேர்மாறாக, பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான உறவுகளை வங்கதேசம் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
சீனாவுடன் நெருக்கம்
வங்கதேசத்தில் அரசியல் நெருக்கடி நிலவியபோதும், சீனா தனது உறவுகளை மேம்படுத்தியே வந்தது
அந்த காலகட்டத்தில், ஷேக் ஹசீனாவின் அரசை கவிழ்ப்பதில் முக்கிய பங்காற்றிய மாணவ தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சீன பிரதிநிதிகள் சந்தித்துக்கொண்டிருந்தனர்.
தவ்ஹீத் ஹுசைனும் வங்கதேசத்தின் வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசகரான பிறகு முதல் முறையாக சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இதையும் குறிப்பிட்டார்.
சைனா டெய்லி நாளிதழின்படி, “பதவியேற்றப் பின் ஹுசைன் தனது முதல் வெளிநாட்டு பயணத்திற்கு சீனாவை தேர்ந்தெடுத்தார் என்பது உண்மைதான். இது சீனாவுடனான உறவுக்கு வங்கதேச இடைக்கால அரசு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை காட்டுகிறது.” என வாங்யீ தெரிவித்தார்.
“அண்டை நாடுகளுடனான தனது உறவுகளில் சீனா எப்போதும் வங்கதேசத்திற்கு முன்னுரிமை அளித்துள்ளதுடன், வங்கதேச மக்களுடன் நல்ல அண்டை நாடு கொள்கையைப் பின்பற்றி வருகிறது,” என வாங் யீ கூறினார்.
வங்கதேசத்தின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் நிலப்பகுதிகளை பாதுகாப்பதில் உதவியதற்காக சீனாவிற்கு தவ்ஹீத் நன்றி தெரிவித்ததாக வங்கதேச செய்தித்தாள் தி டெய்லி ஸ்டார் குறிப்பிட்டுள்ளது.
‘இந்தியாவின் இழப்பு, சீனாவின் வரவு’
சீனாவுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கு வங்கதேசம் முக்கியத்துவம் அளிப்பதாகவும், மற்றொருபுறம் இந்தியாவுடனான அதன் உறவில் இறுக்கங்கள் அதிகரித்து வருவதாக புளூம்பர்க் ஒரு செய்தியில் தெரிவித்துள்ளது.
“சீனா மற்றும் வங்கதேசம் இடையிலான உறவில் மேலும் வளர்ச்சியை நாம் காணலாம்,” என புளூம்பர்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பொருளாதார நிபுணரும், சர்வதேச விவகாரங்களில் வங்கதேச இடைக்கால அரசிற்கு சிறப்பு தூதருமான லுட்ஃபீ சித்திக்கி கூறினார்.
பாரம்பரியமாக இந்தியாவுக்கு நெருக்கமாக இருந்த வங்கதேசம் தற்போது கிழக்காசிய நாடுகளுடனான உறவில் ஆர்வம் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
“நாங்கள் பல நாடுகளுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருப்போம். இன்றைய காலகட்டத்தில் பலதரப்பு தொடர்புகளுடன் இருப்பது அவசியம்,” என சித்திக்கி குறிப்பிட்டார்.
“சீனாவிலிருந்து வங்கதேசத்தில் கூடுதல் முதலீடுகள் இருக்கும்,” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் பல விவகாரங்களில் கருத்துவேறுபாடுகள் இருக்கும் சூழ்நிலையில் சித்திக்கி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். ஷேக் ஹசீனாவின் பதவிக் காலத்தில் இருந்ததைப் போல இருநாடுகளிடையே நல்லுறவு இல்லை.
ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்பவேண்டும் என வங்கதேச இடைக்கால அரசு விரும்புகிறது. அதே நேரம், இந்து சிறுபான்மையினர் பாதுகாப்பை வங்கதேச அரசிடம் இந்தியா எழுப்பியுள்ளது.
இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் கடந்த மாதம் வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டார். ஆனால் இரு நாடுகளுக்கிடையிலான இறுக்கம் தளரவில்லை.
சர்வதேச எல்லையில் முள் கம்பிகளை கொண்டு வேலி அமைப்பதில் தற்போது இரண்டு நாடுகள் இடையில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
வங்கதேசத்திற்கு சீனா தற்போது அளித்துள்ள சலுகைகளை இந்தியாவுடன் தொடர்புபடுத்துகிறார் பாதுகாப்புத்துறை வல்லுநர் டெரக் ஜே. கிராஸ்மேன்.
“இந்தியாவின் இழப்பு, சீனாவின் வரவு” என அவர் சமூக வலைதள பதிவில் அவர் கூறியுள்ளார்.
சீனா மற்றும் இந்தியாவிற்கு வங்கதேசத்தின் கடன்
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு இடைக்கால அரசு பதவியேற்றப் பின்னர் சீனாவிற்கு தவ்ஹீத் ஹுசைன் பயணம் மேற்கொண்டிருப்பது அந்நாட்டின் வெளியுறவு கொள்கை மாற்றத்தை பிரதிபலிக்கிறது.
இதற்கு முன் வங்கதேசத்தின் எல்லா வெளியுறவு அமைச்சர்களின் முதல் வெளிநாட்டு பயணம் இந்தியாவுக்குத்தான்.
வங்கதேசத்தின் நிலையற்றதன்மை காரணமாக இந்தியாவின் ஏற்றுமதிகள் சரிந்துள்ளன. இந்தியாவின் வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி 2023, ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதத்தில் வங்கதேசத்திற்கு இந்தியாவின் ஏற்றுமதி 28 விழுக்காடு குறைந்துள்ளது.
ஆனால் சீனாவுடனான வங்கதேசத்தின் நெருக்கம் ஷேக் ஹசீனாவின் பதவிக் காலத்திலேயே தொடங்கிவிட்டது.
“சீனா வங்கதேசத்தின் புதிய நண்பன் அல்ல. மாறாக 2006ஆம் ஆண்டு முதலே சீனா, வங்கதேசத்தின் ஒரு பெரிய வர்த்தக நட்பு நாடாக இருந்து வருகிறது,” என டாக்கா பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் பாடம் நடத்தும் பேராசிரியர் டாக்டர், லாய்லுபர் யாஸ்மீன் குறிப்பிட்டதாக ‘தி பிஸினஸ் ஸ்டாண்டர் பங்களாதேஷ்’, ஒரு செய்தியில் மேற்கோள் காட்டியிருந்தது.
பெங்களூரு தக்ஷசீலா நிறுவனத்தில் ஆய்வு பகுப்பாய்வாளராக இருப்பவர் ரக்ஷித் ஷெட்டி.
ஓர் அமெரிக்க சிந்தனைக்குழுவின், இணைய கொள்கை தளமான சவுத் ஏசியன் வாய்ஸுக்கு அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
வங்கதேசத்தின் புதிய அரசியல் களத்தில் வேகமாக அதிகரிக்கும் சீனாவின் நடவடிக்கைகளுக்கு இணையான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கவேண்டும் என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
ரக்ஷித் ஷெட்டியின் கூற்றுப்படி, ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்காலத்தில் 2016 முதல் 2022ஆம் ஆண்டு வரை சீனா வங்கதேசத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது.
சீன நிறுவனங்கள் வங்கதேசத்தில் 26 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளன. வங்கதேசத்தில் சுமார் 700 சீன நிறுவனங்கள் 5,50,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன .
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 21 பில்லியன் டாலருக்கு மேல் மதிப்புள்ள பொருட்களை வங்கதேசம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. சீன ஆயுதங்களை அதிகபட்சமாக வாங்கும் நாடும் அதுதான்.
ஸ்டாக்ஹோம் இண்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் என்ற அமைப்பின் கூற்றின்படி, 2010 முதல் 2020 வரை வங்கதேசம் இறக்குமதி செய்த ராணுவ தளவாடங்களில் 73 விழுக்காடு சீனாவிடம் வாங்கப்பட்டவை.
வங்கதேசம், சீனாவுக்கு 6 பில்லியன் டாலருக்கு மேல் கடன் தொகையை திருப்பி செலுத்தவேண்டியுள்ளது.
இடைகால அரசு காலத்தில் சீன நிறுவனங்கள் 85 மில்லியன் டாலர்களை முதலீடு செய்திருப்பதாக, வங்கதேசத்திற்கான சீன தூதர் ஆவ் வென், டாக்காவிலிருந்து வெளியாகும் தி டெய்லி ஸ்டார் என்ற நாளிதழில் அக்டோபர் ஒன்றாம் தேதி எழுதியிருந்தார்.
சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் முன்னெடுப்புக்கும் வங்கதேசம் முக்கியமானது. இந்த முன்னெடுப்பின் கீழ் கடந்த பத்து ஆண்டுகளில் வங்கதேசத்தில் சுமார் 4.45 பில்லியன் டாலர்களை சீனா முதலீடு செய்துள்ளது.
இந்தியா வங்கதேசம் இடையேயான வர்த்தகம்
வங்கதேசம், தெற்காசியாவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளர். அதேபோல வங்கதேசத்திற்கு இந்தியா ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளர்.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூற்றின்படி 2023-2024 காலத்தில் 1.97 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பொருட்களை வங்கதேசம் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதே நேரம் இந்த நிதியாண்டில் இவ்விரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் 14.01 பில்லியன் டாலராக இருந்தது.
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே மின்சாரத்துறையில் ஒத்துழைப்பு வேகமாக வளர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, வங்கதேசம் இந்தியாவிடமிருந்து 1160 மெகாவாட் மின்சாரத்தை வாங்குவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
ஆனால், கடந்த ஆண்டு மின்சார நிறுவனங்களான பிடிசி மற்றும் எஸ்இஐஎல் எனர்ஜி இண்டியா ஆகியவை விநியோகிக்கப்பட்ட மின்சாரத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்தும்படி வங்கதேச மின்சார மேம்பாட்டு வாரியத்திற்கு கடிதம் எழுதியதாக ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டிருந்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.