பட மூலாதாரம், Getty Images
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) தலைவருமான காலிதா ஜியா, டாக்காவின் ஷெர்-இ-பங்களா நகரில் உள்ள அவரது கணவர் ஜியாவுர் ரஹ்மானின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார்.
வங்கதேசத்தின் முன்னாள் அதிபரும் விடுதலைப் போரின் போது முக்கிய தளபதியாக இருந்தவருமான ஜியாவுர் ரஹ்மான், 1981 மே 30 அன்று சிட்டகாங்கில் படுகொலை செய்யப்பட்டார்.
அதன் பிறகு அவரது உடல் முதலில் சிட்டகாங்கின் ரங்குனியா மலைப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
பின்னர், அப்போதைய அரசாங்கத்தின் முயற்சியின் பேரில், அவரது உடல் டாக்காவிற்கு கொண்டு வரப்பட்டு, அப்போதைய ஷெர்-இ-பங்களா பூங்காவில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
பின்னர், ஹுசைன் முகமது எர்ஷாத் அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், ஷெர் -இ-பங்களா நகரில் நாடாளுமன்றத்தை ஒட்டிய இந்தப் பூங்கா ‘சந்திரிமா உதயன்’ என்று பெயரிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிஎன்பி அரசாங்கம் அதன் பெயரை ‘ஜியா உதயன்’ என்று மாற்றியது.
பின்னர், ஆட்சிக்கு வந்த அவாமி லீக் அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், அந்த இடத்தின் பெயர் ‘சந்திரிமா உதயன்’ என்று மறுபெயரிடப்பட்டது. இருப்பினும், அவாமி லீக் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, இப்போது பலகையில் ‘ஜியா உதயன்’ என்ற பெயர் காட்டப்பட்டுள்ளது.
“இந்தப் பூங்காவின் பெயரை மாற்றியதற்கான காரணம் எதுவாக இருந்தாலும், ஜியாவுர் ரஹ்மானை அங்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்வதற்கான முடிவு அப்போதைய இடைக்கால அதிபர் நீதிபதி அப்துஸ் சத்தார் தலைமையிலான அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது” என்று அரசியல் வரலாற்று ஆராய்ச்சியாளரும் எழுத்தாளருமான மொஹியுதீன் அகமது விளக்குகிறார்.
அப்துஸ் சத்தார் அமைச்சரவையில் துணை அமைச்சராக இருந்த ஏ.பி.எம். ருஹுல் ஹவலதார் அமீன், ஜியாவுர் ரஹ்மானின் இறுதிச் சடங்கு மற்றும் அடக்கத்தின் போது உடனிருந்தார்.
“இந்த முன்மொழிவை நீதிபதி அப்துஸ் சத்தார் முன்வைத்தார். அமைச்சரவை ஒருமனதாக ஒப்புதல் அளித்தது. பின்னர், ராணுவத் தளபதி எர்ஷாத்தும் அதை ஆதரித்தார். ஜியாவுர் ரஹ்மான் நாட்டில் பல கட்சி ஜனநாயகத்தை நிறுவினார். அதனால்தான் அவரை நாடாளுமன்ற கட்டடத்திற்கு அருகில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது” என்று அமீன் பிபிசி வங்க சேவையிடம் கூறினார்.
இப்போது, தனது கணவர் ஜியாவுர் ரஹ்மானின் கல்லறைக்கு அருகிலேயே காலிதா ஜியாவை அடக்கம் செய்யலாம் என அவர்களது கட்சி முடிவு செய்தபடி, இறுதிச் சடங்குகள் நிறைவேற்றப்பட்டன. நாட்டின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியா, அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார்.
நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்த காலிதா, செவ்வாய்க்கிழமையன்று காலமானார்.
பட மூலாதாரம், BNP
ஜியாவுர் ரஹ்மானின் மரணம்
வங்கதேசத்தின் அப்போதைய அதிபர் ஜியாவுர் ரஹ்மான் தனது கட்சியின் உள்ளூர் தலைவர்களுடனான கருத்து வேறுபாடுகளைத் தீர்க்க 1981 மே 29 அன்று இரண்டு நாள் பயணமாக சிட்டகாங்கிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
அவருடன் இருந்த கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடமிருந்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பெறப்பட்ட விவரங்களின்படி, தனது பயணத்தின் முதல் நாளன்று, ஜியாவுர் ரஹ்மான் நாள் முழுவதும் வெவ்வேறு கூட்டங்களை நடத்திய பிறகு நள்ளிரவில் தூங்கச் சென்றார்.
சில மணி நேரங்களுக்குள், ராணுவ அதிகாரிகள் குழு ஒன்று சிட்டகாங் சர்க்யூட் ஹவுஸில் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில், ஜியாவுர் ரஹ்மான் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். மே 30ஆம் தேதி காலை, ரஹ்மானின் மரணச் செய்தி முதலில் வானொலியில் ஒலிபரப்பானது.
நாட்டு அதிபரின் படுகொலையைத் தொடர்ந்து, அப்போதைய துணை அதிபர் நீதிபதி அப்துஸ் சத்தார் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றார்.
மே 30ஆம் தேதி மதியம் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ஜியாவுர் ரஹ்மானின் மரணச் செய்தியை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதற்கிடையில், கொலை நடந்த சில மணி நேரங்களுக்குள், ஜியாவுர் ரஹ்மானின் உடல் சிட்டகாங்கில் உள்ள மலைப்பாங்கான பகுதியான ரங்குனியாவுக்கு ரகசியமாக எடுத்துச் செல்லப்பட்டது.
அந்த நேரத்தில் பல செய்தித்தாள்களில் வெளியான செய்திகளின்படி, ஜியாவுர் ரஹ்மானின் சடலம், ரங்குனியா பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
1981 ஜூன் 2 அன்று வெளியான ஒரு செய்தியில், மே 30 அன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை சிட்டகாங் சர்க்யூட் ஹவுஸுக்கு ராணுவ வீரர்கள் குழு ஒன்று வந்ததை நேரில் கண்ட சாட்சிகளை மேற்கோள் காட்டி, அதிபர் ஜியாவுர் ரஹ்மான் உட்பட மூன்று பேரின் உடல்களை வாகனத்தில் ஏற்றப்பட்டு யாருக்கும் தெரியாத இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு மே 30 ஆம் தேதி காலை அப்போதைய ராணுவ மேஜர் ரெசால் கரீம் ராசா, சர்க்யூட் ஹவுஸுக்குச் சென்றிருந்தார். அவர் பிபிசியிடம் சம்பவம் குறித்த விவரங்களையும் தெரிவித்தார்.
மறுபுறம், படுகொலை பற்றிய தகவல் கிடைத்த பிறகு, அதே நாளில் அதிபர் ஜியாவுர் ரஹ்மானின் உடலை டாக்காவிற்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அப்போதைய அரசாங்கம் கூறியது.
உள்ளூர் அதிகாரிகளுடன் நேரடி தொடர்பு இல்லாததால், சர்வதேச அமைப்பான செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அதிபரின் உடலை டாக்காவிற்கு அனுப்ப கோரிக்கை விடுக்கப்பட்டதாக அப்போதைய பிரதமர் ஷா அசிசுர் ரஹ்மான் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால் அரசாங்கம் பின்னர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், சிட்டகாங் கன்டோன்மென்ட்டின் அப்போதைய ஜிஓசி மேஜர் ஜெனரல் அபுல் மன்சூர் அந்தக் கோரிக்கையை நிராகரித்ததாகக் கூறியது.
1981 மே 31 அன்று டெய்லி சம்வாத்தில் வெளியிடப்பட்ட செய்தி ஒன்றின்படி, இடைக்கால அதிபர் நீதிபதி அப்துஸ் சத்தார் தலைமையிலான அமைச்சரவையின் முறையான முதல் கூட்டம் மே 30 அன்று நடைபெற்றது. அதில், ஜியாவுர் ரஹ்மானின் மரணத்திற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அன்று பேசிய அப்துஸ் சத்தார், “சிட்டகாங்கிலிருந்து அதிபரின் உடலை செஞ்சிலுவைச் சங்கம் மூலம் டாக்காவுக்குக் கொண்டு வர பலமுறை முயற்சித்தோம். ஆனால் அவர்கள் எந்தப் பதிலும் அளிக்கவில்லை.” என்றார்.
மே 31 அன்று, ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றின. சிலர், இடைக்கால அதிபர் அப்துஸ் சத்தார் அரசாங்கத்திற்கு ஆதரவாக மாறினார்கள்.
அதே நேரத்தில், கலகத்தில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களை சரணடையுமாறு அரசாங்கம் உத்தரவிட்டது.
நிலைமை திடீரென்று மாறியதை அடுத்து, மேஜர் ஜெனரல் மன்சூர் மற்றும் கர்னல் மதியூர் ரஹ்மான் உட்பட ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மே 31-ஆம் நாள் இரவு சிட்டகாங் கன்டோன்மென்ட்டை விட்டு வெளியேறினர்.
மேஜர் ஜெனரல் மன்சூர் தப்பித்ததைத் தொடர்ந்து, சிட்டகாங் ராணுவப் படைப் பிரிவு மீண்டும் அரசாங்கக் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. காவல்துறையினர் மன்சூரைக் கைது செய்தனர். பின்னர் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கணவரின் அருகே அடக்கம் செய்யப்பட்ட காலிதா ஜியா
அப்போதைய பிரிகேடியர் ஹன்னன் ஷா ஜூன் மாதம் முதல் நாளன்று ஜியாவுர் ரஹ்மானின் உடலைக் கண்டுபிடித்தார்.
பின்னர், பிபிசி வங்க சேவைவுடனான உரையாடலில், ஜியாவுர் ரஹ்மானின் உடலைத் தேடுவதற்காக அவர்கள் கப்தாய் சாலைக்குச் சென்றதாகவும், யூகத்தின் அடிப்படையில் ஏற்பட்ட நடவடிக்கைகளில் ஜியாவுர் ரஹ்மான் புதைக்கப்பட்டிருந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பிரிகேடியர் ஹன்னன் மற்றும் அவரது குழுவினர் உள்ளூர் கிராமவாசிகளிடம் விசாரித்தபோது, அவர்கள் சிறிய மலை ஒன்றைச் சுட்டிக்காட்டி,சில நாட்களுக்கு முன்பு ராணுவ அதிகாரிகள் அங்கு வந்திருந்ததையும், சடலத்தைப் புதைத்ததாகவும் தெரிவித்தனர்.
கிராமவாசிகளிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹன்னன் ஷா ராணுவ வீரர்களுடன் அந்தப் பகுதியில் தேடிப் பார்த்தபோது, அதிபர் ஜியாவுர் ரஹ்மான் மற்றும் ராணுவ அதிகாரிகள் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. முதலில் சிட்டகாங்கில் உள்ள ராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட ரஹ்மானின் சடலம், பின்னர் ஜூன் 1 ஆம் தேதி ஹெலிகாப்டர் மூலம் தலைநகர் டாக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது.
மறுநாள், ஜூன் 2-ஆம் தேதியன்று, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஜியாவுர் ரஹ்மானின் சடலம் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டது.

அடுத்த நாள், ஜூன் 3ஆம் தேதி டைனிக் இட்டெஃபாக் வெளியிட்ட செய்தியில், “முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மான், ஷெர்-இ-பங்களா நகர் பூங்காவில் அடக்கம் செய்யப்பட்டார். இந்தப் பூங்கா புதிய நாடாளுமன்றக் கட்டடம் மற்றும் ஏரிக்கு வடக்கேயும், கணபபனுக்கு கிழக்கேயும் அமைந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
“அந்த நேரத்தில், நீதிபதி சத்தாரின் இடைக்கால அரசாங்கம் ஜியாவுர் ரஹ்மானை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்வது உட்பட பல முடிவுகளை எடுத்திருந்தது. அடக்கம் செய்ய வேண்டிய இடத்தையும் அவர் முடிவு செய்திருந்தார்” என்று ஆராய்ச்சியாளர் மொஹியுதீன் அகமது பிபிசி வங்க சேவையிடம் தெரிவித்தார்.
“ஜியாவுர் ரஹ்மானை அங்கு அடக்கம் செய்யும் முடிவில் ஒருமித்த கருத்து இருந்தது. அப்போதைய அவாமி லீக் எம்.பி.க்களும் இறுதிச் சடங்கிலும் அடக்கத்திலும் கலந்து கொண்டனர். கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்” என்று ஏபிஎம் ருஹுல் அமின் ஹவலதார் விளக்குகிறார்.
இப்போது, சுமார் 44 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜியாவுர் ரஹ்மானின் மனைவி காலிதா ஜியா தனது கணவரின் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு