பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் மதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. பின்னர் மொழி அடிப்படையில் அதிலிருந்து வங்கதேசம் பிரிந்தது. வங்கதேசத்தின் சுதந்திரத்திற்கு அடித்தளம் வங்காள தேசியவாதம். ஆனால், இந்த தேசியவாதம் இஸ்லாத்திற்கு எதிரானது இல்லை.
முகமது அலி ஜின்னா மார்ச் 1948இல் உருது மொழியை பாகிஸ்தானின் தேசிய மொழியாக அறிவித்தபோது, வங்காள தேசியவாதத்திற்கான விதை விதைக்கப்பட்டது. இதன் விளைவாக, 1952இல் கிழக்கு பாகிஸ்தானில் மொழி இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டது.
வங்கதேசம் பிரிந்தபோது, மத அடிப்படையில் பாகிஸ்தான் உருவானது குறித்து மக்கள் கேள்வியெழுப்பத் தொடங்கினர். மத அடையாளம் மட்டுமே போதுமானது இல்லை என்று மக்கள் கூறத் தொடங்கினர். அத்தகைய சூழ்நிலையில், மத அடிப்படையில் ஒரு தேசத்தை உருவாக்கும் முடிவு தவறானது என்ற பேச்சு எழுந்தது. அதோடு, வங்காள அடையாளம் என்பது இஸ்லாமிய அடையாளத்தில் இருந்து வேறுபட்டது என்றும் மக்கள் கூறத் தொடங்கினர்.
வங்கதேசம் உருவாக்கப்பட்டபோது, வங்காள தேசியவாதத்தையும் மதச்சார்பற்ற குடியரசையும் அந்நாடு ஏற்றுக்கொண்டது. வங்கதேசம், மதச்சார்பின்மையை அடித்தளமாகக் கொண்ட ஒரு தேசமாக இருக்க வேண்டுமென்று ஷேக் முஜிபுர் ரஹ்மான் முடிவு செய்திருந்தார்.
பாகிஸ்தான் ஓர் இஸ்லாமிய நாடாக உருவாக்கப்பட்டதன் அனுபவத்திற்குப் பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகக் கருதப்பட்டதால், தீவிர இஸ்லாமிய குழுக்களும் வங்கதேசத்தில் தடை செய்யப்பட்டன.
ஆனால், வங்கதேசத்தின் மதச்சார்பற்ற தன்மை நீண்டகாலம் வலுவாக இருக்கவில்லை. கடந்த 1975ஆம் ஆண்டு வங்கதேசத்தை நிறுவிய ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டார். ஒரு ராணுவ ஆட்சிக்கழிவிப்பு நடந்தது. அது வங்கதேசத்தின் மதச்சார்பின்மைக்குப் பெரிய அடியாக விழுந்தது.
கடந்த 1977ஆம் ஆண்டு ராணுவ சர்வாதிகாரி ஜியா-உர் ரஹ்மான் வங்கதேச அரசியலமைப்பில் இருந்து மதச்சார்பின்மை என்ற அம்சத்தை நீக்கினார். அத்துடன், இஸ்லாமிய கட்சிகள் மீதிருந்த தடையையும் அவர் நீக்கினார். 1988ஆம் ஆண்டு, ஜெனரல் ஹுசைன் முகமது எர்ஷாத் இஸ்லாத்தை அரசு மதமாக்கினார்.
இருப்பினும், 2009ஆம் ஆண்டு ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசாங்கம், அரசியலமைப்பில் மதச்சார்பின்மையைச் சேர்ப்பதாக உறுதியளித்தது. கடந்த 2011ஆம் ஆண்டு, வங்கதேச அரசியலமைப்பில் அந்த அம்சம் மீண்டும் இணைக்கப்பட்டது. ஆனால், இஸ்லாம், அரசு மதமாகவே இருந்தது.
அரசு மதமாக இஸ்லாம்
பட மூலாதாரம், Getty Images
வங்கதேச அரசியலமைப்பின் பிரிவு 2இன் படி, இஸ்லாம் அரசு மதம். ஆனால் அதேநேரத்தில், பிரிவு 12 வங்கதேசம் ஒரு மதச்சார்பற்ற நாடு என்றும் மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அங்கு சம உரிமை உண்டு என்றும் கூறுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டது முதல் வங்கதேசம் வங்காள தேசியவாதத்தில் இருந்து இஸ்லாமிய தேசியவாதத்திற்கு மாறுகிறதா என்ற கேள்வி மீண்டும் எழுப்பப்படுகிறது.
வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முகமது யூனுஸ், பல சீர்திருத்த ஆணையங்களை அமைத்திருந்தார். அவற்றில் ஒன்று, அரசியலமைப்பு சீர்திருத்த ஆணையம். இந்த ஆணையம் வங்கதேச அரசியமைப்பில் இருந்து மதச்சார்பின்மை என்ற வார்த்தையை நீக்குவதற்குப் பரிந்துரைத்தது.
வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பும் முகமது யூனுஸின் அரசாங்கத்தை ஆதரிக்கிறது. வங்கதேச விடுதலைப் போரின்போது ஜமாத்-இ-இஸ்லாமி பாகிஸ்தானுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு வகையில், ஜமாத் சுதந்திர வங்கதேசத்தை எதிர்த்து வருகிறது.
வங்கதேச செய்தி ஊடகமான ப்ரோதம் அலோவுக்கு இந்த மாதம் அளித்த பேட்டியில், வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் ஹஃபிகுர் ரஹ்மான், “1971ஆம் ஆண்டில் எங்கள் நிலைப்பாடு கொள்கை அடிப்படையிலானது. இந்தியா பலனடையும் வகையில் ஒரு சுதந்திர நாடு உருவாவதை நாங்கள் விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.
மேற்கொண்டு பேசியவர், “நாம் யாரோ ஒருவர் மூலமாகவோ அல்லது ஒருவருக்கு ஆதரவாகவோ சுதந்திரம் பெற்றிருந்தால், அது ஒரு சுமையை நீக்கிவிட்டு நம் மீது இன்னொரு சுமையைச் சுமத்திக்கொள்வதைப் போன்றது,” என்று என்றார்.
மேலும், “கடந்த 53 ஆண்டுக்கால வங்கதேச வரலாற்றில் இது உண்மையென்று தெரியவில்லையா? ஒரு குறிப்பிட்ட நாடு ஒரு குறிப்பிட்ட கட்சியை விரும்பவில்லை என்பதை நாம் ஏன் கேட்க வேண்டும். இதுதான் ஒரு நாட்டின் சுதந்திர மனப்பான்மையா? வங்கதேச இளைஞர்கள் இனி இதையெல்லாம் கேட்க விரும்பவில்லை,” என்றும் குறிப்பிட்டார்.
கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் ஹிமாத்ரி சாட்டர்ஜி, வங்கதேசம் எப்போதும் கலப்பின தேசியவாதத்தைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.
வங்காள தேசியவாதம் vs இஸ்லாமிய தேசியவாதம்
பட மூலாதாரம், Getty Images
வங்காள தேசியவாதத்தின் மூலமாக வங்கதேசம் உருவாக்கப்பட்டது, ஆனால் இஸ்லாம் அதைவிட்டுச் செல்லவில்லை என்கிறார் பேராசிரியர் சாட்டர்ஜி.
“வங்காள தேசியவாதத்தை ஆதரித்தவர்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆரம்பத்தில் இருந்தே வங்கதேசத்தில் கலப்பின தேசியவாதம் இருந்தது. வங்காள தேசியவாதத்தின் மூலம் மட்டுமே வங்கதேசத்தைக் கையாள முடியும் என்று ஷேக் ஹசீனா நினைத்தார். அதுதான் அவர் செய்த தவறு. வங்க விடுதலைப் போரின் மீதான ஈர்ப்பில் இருந்து வங்கதேசம் நீண்டகாலத்திற்கு முன்பே வெளிவந்துவிட்டது. ஷேக் ஹசீனாவால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை,” என்று விளக்குகிறார்.
மேற்கொண்டு பேசியவர், “இப்போது வங்கதேசத்தைப் பார்க்கும்போது, இஸ்லாமிய தேசியவாதம் வங்காள தேசியவாதத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதைப் போலத் தெரிகிறது. ஆனால், அங்குள்ள மக்கள் அதற்கு விடமாட்டார்கள். வங்கதேச மக்கள், பாகிஸ்தானை பார்த்திருக்கிறார்கள். அதை மேலும் கவனிப்பார்கள். அவர்கள் அத்தகைய தவறைச் செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை,” என்றும் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் இந்தியா-அமெரிக்கா உறவுகள் குறித்த ஹன்டிங்டன் திட்டத்தில், சுமித் கங்குலி மூத்த ஆய்வாளராக உள்ளார். பிப்ரவரி 12ஆம் தேதியன்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில், வங்காள தேசியவாதம் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து ஒரு கட்டுரை எழுதினார்.
சுமித் கங்குலி அந்தக் கட்டுரையில், “1980களில் ஏராளமான வங்காள தேசியவாதிகள் வளைகுடா நாடுகளில் வேலைக்குச் சென்றனர். அவர்களில் பலர் சௌதி அரேபியாவில் வேலை செய்தனர். வங்கதேச மக்கள் சௌதி அரேபியாவில் முற்றிலும் மாறுபட்ட இஸ்லாத்தைக் கண்டனர். அதேநேரத்தில், வங்கதேச அரசியலில் இஸ்லாத்தின் பங்களிப்பு அதிகரித்து வந்தது. வங்கதேசத்தில் மதரஸாக்களுக்கு சௌதி அரேபியா நிதியளிக்கத் தொடங்கியது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
“இந்த மதரஸாக்களின் இஸ்லாம் வங்காள இஸ்லாத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இந்த இஸ்லாத்தின் வேர் வங்கதேச சமூகத்தில் வலுப்பெற்றன. ஆனால் வெளிப்படையாக, வங்காள தேசியவாதம் தீவிர இஸ்லாத்தை ஆதரிக்கவில்லை. ஷேக் ஹசீனா வெளியேறிய பிறகு, வங்காள தேசியவாதத்தின் அசௌகரியம் மேலும் அதிகரித்துள்ளது. ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வீட்டின் மீதான தாக்குதல் இந்த அசௌகரியத்தின் பிரதிபலிப்பாகும். இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஜமாத்-இ-இஸ்லாமி மக்கள் இருந்தனர்,” என்று சுமித் கங்குலி தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.
பாகிஸ்தானின் பிரபல அரசியல் ஆய்வாளர் பர்வேஸ் ஹூட்பாய், கடந்த ஆண்டு நவம்பரில் வங்கதேசத்திற்குப் பயணம் செய்தார். அப்போது, அங்கு வங்காள தேசியவாதம் ஆதிக்கம் செலுத்துவதாகவும் பர்வேஸ் ஹூட்பாய் உணர்ந்தார்.
வங்கதேசத்தின் எதிரி பாகிஸ்தானா? இந்தியாவா?
பட மூலாதாரம், Getty Images
வங்கதேசத்தில் நிலவும் சூழல் குறித்துப் பேசிய பர்வேஸ் ஹூட்பாய், “வங்கதேசத்தில் ஓர் அமைதியின்மை நிலவுகிறது. இப்போது ஒரு பக்கம் மதச்சார்பற்ற தேசியவாதம் இருக்கிறது. அது மொழியியல் அடையாளத்தைப் பற்றிப் பேசுகிறது. வங்கதேச மக்கள் நீண்டகாலமாக அதுகுறித்துப் பெருமை கொள்கிறார்கள்.
மறுபுறம், வங்கதேசத்திற்குள் மத சக்திகளும் தலை தூக்குகின்றன. அவர்கள் வங்கதேசத்திற்கு இஸ்லாமிய சாயம் பூச முயல்கிறார்கள். ஆனால், வங்கதேச சமூகத்திற்குள் வலிமை இருப்பதாக நான் நம்புகிறேன். வங்கதேச பெண்கள் பர்தா அணிய மாட்டார்கள். ஆண்களுடன் வேலை செய்கிறார்கள். பாகிஸ்தான் பெண்களைவிட நவீனமாக இருக்கிறார்கள்” என்று கூறுகிறார்.
இந்த இரண்டு மனப்பான்மைகளால், வங்கதேசத்தில் ஒரு குழப்பம் இருப்பதாக பர்வேஸ் நினைக்கிறார். ஆனால், இஸ்லாமிய சக்திகள் வெற்றி பெறாது எனவும் அவர் கூறுகிறார். “1971இல் இஸ்லாத்தின் பெயரால் எவ்வளவு அட்டூழியங்கள் நடந்தன என்பதை வங்கதேச மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்.”
ஷேக் ஹசீனாவின் ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு, இஸ்லாமிய சக்திகள் ஓர் உத்வேகத்தைப் பெற்றுள்ளதாகக் கூறுகிறார் அவர். ஆனால், வங்கதேச மக்கள் கடந்த காலத்தை அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள் என்று அவர் கருதுகிறார்.
“மத தேசியவாதம் பாகிஸ்தானை எந்தப் பாதையில் வழிநடத்தியது என்பதையும் அவர்கள் பார்க்க வேண்டும். வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆனால், இப்போதும்கூட இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றாக வேலை செய்கிறார்கள். ஆனால், அது பாகிஸ்தானில் சாத்தியமில்லை,” என்று பர்வேஸ் ஹூட்பாய் கூறுகிறார்.
வங்கதேசத்தில் வங்காள தேசியவாதத்தைவிட இஸ்லாமிய தேசியவாதம் ஆதிக்கம் செலுத்தினால், அந்த நாடு சிதைவை நோக்கிச் செல்லும் என்று பர்வேஸ் ஹூட்பாய் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
“சமீபத்தில் நான் டாக்கா சென்றிருந்தபோது, டாக்கா பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸின் பிறந்தநாளை மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். பாகிஸ்தானில் இது ஒருபோதும் நடக்காது. இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முகமது யூனுஸும் இந்த நிகழ்ச்சிக்கு வந்தார்” என்று ஹூட்பாய் கூறுகிறார்.
தேசியவாதம் குறித்து வங்கதேசத்தில் நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. வங்கதேசத்தில், பாகிஸ்தான் அல்லது இந்தியா யாரை எதிரியாகக் கருத வேண்டும் என்பது குறித்தும் விவாதம் நடந்து வருகிறது. ஆனால், பாகிஸ்தானை பற்றிய சிந்தனையும் பழைய கோபமும் வங்கதேசத்தில் மாறி வருவதாக பர்வேஸ் ஹூட்பாய் கூறுகிறார். விடுதலைப் போரில் இந்தியாவின் பங்கு குறித்தும் வங்கதேச அரசியல் கட்சிகள் கேள்விகளை எழுப்புகின்றன.
வங்க தேசியவாத கட்சியின் நிலைக்குழு உறுப்பினரான மிர்சா அப்பாஸ் கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதியன்று, “இந்தியா இரண்டு இந்து நாடுகளை உருவாக்க விரும்புகிறது. அவர்கள் சிட்டகாங்கை கைப்பற்ற விரும்புகிறார்கள். அனைவரும் வங்கதேசம் ஒரு சிறிய, ஏழை நாடு என்று கூறுகிறார்கள். ஆனால், வங்கதேசம் தாராளவாதம் மிக்க, வலுவான நாடு என்று நான் நம்புகிறேன். எங்களிடம் ஒரு சிறிய ராணுவம் உள்ளது என்பதை இந்தியா நினைவில் கொள்ள வேண்டும். அதோடு, எங்களிடம் 20 கோடி வீரர்களாக மக்கள் இருக்கிறார்கள்,” என்று பேசினார்.
மேலும், “இந்த ஆண்டிலும்கூட, சர்வாதிகாரி ஹசீனாவை ஆயுதங்களின்றி எங்கள் மகன்களும் மகள்களும் அதிகாரத்தில் இருந்து அகற்றினார்கள். ராகுல் காந்தி இந்தியா வங்கதேசத்தை விடுவித்ததாகக் கூறியிருந்தார். ஆனால், இந்தியா வங்கதேசத்தை உருவாக்கவில்லை. நாங்கள்தான் வங்கதேசத்தை விடுவித்தோம். இந்தியா பாகிஸ்தானை பிரித்தது. நமது நலனுக்காக அல்ல, அதன் சொந்த நலனுக்காகவே இந்தியா அதைச் செய்தது,” என்று மிர்சா அப்பாஸ் கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு