முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தீபாவளி செய்தியில், வங்கதேச இந்துக்கள் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த வாக்காளர்களைக் கவர ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் இருவரும் கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.
டிரம்பின் சமீபத்திய பதிவு இதற்கான முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் கூட ஏற்கனவே தனது இந்திய மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளி வேர்களைப் பற்றி பேசி தனக்கான ஆதரவை அதிகரிக்க முயற்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப் கூறியது என்ன?
சமூக வலைதளமான எக்ஸ்-இல் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவித்த டொனால்ட் டிரம்ப், “வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான காட்டுமிராண்டித்தனமான வன்முறையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். கும்பலாக அவர்களை தாக்குவது, கொள்ளையடிப்பது என்பன போன்ற நிகழ்வுகள் முற்றிலும் கண்டிக்கத்தக்கவை.” என்று தெரிவித்திருந்தார்.
ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் மற்றும் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோரை தனது பதிவில் விமர்சித்த டிரம்ப், “எனது பதவிக்காலத்தில் இது ஒருபோதும் நடந்திருக்காது. கமலா மற்றும் ஜோ (ஜோ பைடன்) அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் உள்ள இந்துக்களை புறக்கணித்துள்ளனர். அவர்கள் இஸ்ரேலில் இருந்து யுக்ரேன் வரை மட்டுமல்லாது, நமது தெற்கு எல்லை வரை பேரழிவை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால் நாங்கள் அமெரிக்காவை மீண்டும் பலப்படுத்துவோம், வலிமையின் மூலம் அமைதியை மீண்டும் கொண்டு வருவோம்.” என்று கூறியிருந்தார்.
மேலும் அந்தப் பதிவில், “தீவிர இடதுசாரிகளின் மத எதிர்ப்பு கொள்கைக்கு எதிராக அமெரிக்க இந்துக்களையும் பாதுகாப்போம். உங்கள் சுதந்திரத்திற்காக நாங்கள் போராடுவோம். எனது நிர்வாகத்தின் கீழ், இந்தியாவுடனும் எனது நல்ல நண்பருமான பிரதமர் மோதியுடனுமான நமது சிறந்த கூட்டாண்மையையும் வலுப்படுத்துவோம்.” என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.
“தீமையின் மீதான நன்மையின் வெற்றிக்கு தீபத் திருவிழா வழிவகுக்கும் என்று நம்புகிறேன்” என்றும் அவர் அந்தப் பதிவில் கூறியிருந்தார்.
வங்கதேசத்தில் மாணவர் போராட்டங்கள் காரணமாக, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று நாட்டை விட்டு வெளியேறினார். அதன் பிறகு இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் தாக்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுகுறித்து அறிக்கை வெளியிட அமெரிக்க நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
டிரம்பின் அறிக்கைக்கான எதிர்வினைகள்
இந்தியாவில் திரிபுரா மாநில அமைச்சர் சுதாங்ஷு தாஸ், டிரம்பின் பதிவைப் பாராட்டி எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், “வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் துன்பங்களைப் புரிந்துகொண்டு, இந்துத்துவாவின் மதிப்புகளை உலக அரங்கில் கொண்டு வந்ததற்காக டொனால்ட் டிரம்ப்பை நான் பாராட்டுகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
“அமைதி, இரக்கம் மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் மரியாதை ஆகியவற்றிற்கான இந்து மதத்தின் தெளிவான அர்ப்பணிப்புக்கு அவரது வார்த்தைகள் நற்சான்றாக விளங்குகின்றன.” என்றும் சுதாங்ஷு தாஸ் பதிவிட்டுள்ளார்.
பாதுகாப்பு நிபுணர் பிரம்ம செல்லனி எக்ஸ் தளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார், “டிரம்ப் இந்திய அமெரிக்க வாக்காளர்களை கவர முயற்சிக்கலாம், ஆனால் வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து கருத்து கூறிய முதல் முக்கிய அமெரிக்க அரசியல்வாதி அவர்தான். இந்து மதத்தின் வேர்களைக் கொண்டிருந்தாலும் கூட, ஹாரிஸ் இதுகுறித்து மவுனம் காத்தார். டிரம்ப் வெற்றி பெற்றால், பைடனின் தூண்டுதலின் பேரில் நடக்கும் யூனுஸின் வெளிப்படையான ஆட்டம் முடிவுக்கு வரலாம்.”
பிரபல பத்திரிகையாளர் ராணா அய்யூப் எக்ஸ் தளத்தில் டிரம்பின் பதிவை கிண்டல் செய்துள்ளார். டிரம்ப் பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ள அவர், “டிரம்பின் தீவிர ஆதரவாளர்கள், மோதி-டிரம்ப் ஜோடிக்காக ஆவலுடன் காத்திருக்கும் இந்தியாவில் உள்ள இந்து தேசியவாதிகள் தான் இந்த ட்வீட்டைப் பார்த்து அதிகம் மகிழ்வார்கள்” என்று கூறியுள்ளார்.
‘ஸ்டாப் இந்து ஜெனோசைட்’ (Stop Hindu Genocide) என்ற எக்ஸ் தள கணக்கின் பக்கத்தில், “வங்கதேசத்தில் காட்டுமிராண்டித்தனமான வன்முறையை எதிர்கொண்டுள்ள இந்துக்களின் அவல நிலையைப் பற்றிப் பேசியதற்காக உலக இந்து சமூகம் அதிபர் டிரம்பிற்கு நன்றி தெரிவிக்கிறது. அமெரிக்க இந்துக்களுக்கு மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள இந்துக்களுக்கும் அதிபர் டிரம்ப் அளித்துள்ள மாபெரும் தீபாவளிப் பரிசு இது” என்று பதிவிடப்பட்டுள்ளது.
மறுபுறம், வங்கதேசத்தில் இருந்தும் எதிர்வினை வந்துள்ளது. தங்களை ஒரு உண்மைச் சரிபார்ப்பு குழு என விவரிக்கும் ‘ஷாதின் பங்களா பெதார் கேந்திராவின்’ எக்ஸ் தள பக்கத்தில்,
“மிஸ்டர் டிரம்ப், நீங்கள் வங்கதேசத்தைப் பற்றிய ஒரு தவறான பிம்பத்தை முன்வைக்கிறீர்கள். தாக்குதல்கள் குறித்த கூற்றுக்கள், சரிபார்க்கப்படாத பிரசாரத்தின் அங்கமாகும். இந்த நாடு தனது குடிமக்கள் அனைவரையும் பாதுகாக்கிறது. இந்து வாக்குகள் மீதான உங்களது கவனம், தவறான தகவலைப் பரப்புகிறது. இது அமெரிக்காவில் குழப்பம் ஏற்பட வழிவகுக்கும்.” என பதிவிடப்பட்டுள்ளது.
‘மோதி மற்றும் இந்தியா’ என்ற புத்தகத்தின் எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ராகுல் சிவசங்கர், “தீபாவளி தினத்தன்றும் தேர்தலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பும் வந்திருக்கும் டிரம்பின் செய்தி தெளிவாக உள்ளது. ஸ்விங் மாநிலங்களில் இந்திய அமெரிக்கர்களின் வாக்குகள் மிகவும் முக்கியம். 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில், ஒன்பது மாநிலங்களில் ஐந்தில் வெற்றி அல்லது தோல்வியின் சதவீதத்தை விட இந்திய அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இந்த ஐந்து மாநிலங்களில் நான்கு மாநிலங்கள் ஜோ பைடனுக்கு ஆதரவாக இருந்தன.” என பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவில் இந்து அமைப்புகளின் பிரசாரம்
அமெரிக்காவில் வசிக்கும் பல இந்து அமைப்புகள் வங்கதேச இந்துக்களுக்கு எதிரான வன்முறையை பொது மேடைகளில் எழுப்பி வருகின்றன. ‘ஸ்டாப் இந்து ஜெனோசைட்’ என்ற அமைப்பு, வங்கதேசத்துக்கு எதிரான பொருளாதாரப் புறக்கணிப்பைக் கோரியுள்ளது.
சமீபத்தில், இந்த அமைப்பு நியூயார்க்கில் ஒரு விமானத்தின் உதவியுடன் ஒரு பேனரை பறக்க விட்டது, அதில் ‘வங்கதேச அரசு இந்துக்களைப் பாதுகாக்கக் வேண்டும்’ என கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் இணையதளத்தைப் பார்த்தால், பாரதிய ஜனதா கட்சியின் தாய் அமைப்பான சங் பரிவாரின் ஒரு அங்கமாக இருக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்துடன் இந்த அமைப்பு தொடர்புடையது என்பதைக் காட்டுகிறது.
இந்து அமெரிக்கன் அறக்கட்டளையும் வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் அட்டூழியங்கள் தொடர்பாக அமெரிக்க அரசியல் பிரமுகர்களின் ஆதரவைப் பெறுவதற்கான பிரசாரத்தை நடத்தி வருகிறது.
இந்த அமைப்புக்கு இந்திய இந்து அமைப்புகள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் உதவி தொடர்ந்து கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அறக்கட்டளை இந்த கூற்றுக்களை மறுத்து வருகிறது.
இந்திய வம்சாவளி வாக்காளர்கள் எவ்வளவு முக்கியம்?
அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகத்தின் கூற்றுப்படி, 2020ஆம் ஆண்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை சுமார் 44 லட்சமாக இருந்தது. அதே சமயம், இந்திய வம்சாவளி வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு சதவீதமாக உள்ளது.
அமெரிக்காவின் தேர்தல் கணக்குகளின்படி, இந்த ஒரு சதவீத வாக்காளர்கள் மிகவும் முக்கியமானவர்கள்.
‘ஸ்விங் ஸ்டேட்ஸ்’ என அழைக்கப்படும் அமெரிக்காவின் ஏழு மாநிலங்களின் முடிவுகள் தான் வெற்றி அல்லது தோல்வியைத் தீர்மானிக்கின்றன, எனவே அவற்றின் பங்கு அங்கு மிகவும் முக்கியமானது.
பென்சில்வேனியாவில் டிரம்ப் மற்றும் ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவுவதாகவும், சிறு குழுக்களின் போக்கு கூட இந்த வரலாற்றுத் தேர்தலில் தீர்க்கமானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த (2024) ஆண்டிற்கான AAPI தரவு வாக்காளர் கணக்கெடுப்பின்படி, இந்திய அமெரிக்க வாக்காளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அதாவது 55 சதவீதம் பேர் ஜனநாயகக் கட்சியை ஆதரிக்கின்றனர், 26 சதவீதம் பேர் குடியரசுக் கட்சியை ஆதரிக்கின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோவ்மென்ட் எனும் சிந்தனைக் குழுவும் மற்றும் யூகோவ் எனும் தரவு பகுப்பாய்வு நிறுவனமும் ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது.
அதன்படி பதிவு செய்யப்பட்ட இந்திய அமெரிக்க வாக்காளர்களில் 61 சதவீதம் பேர் கமலா ஹாரிஸுக்கு வாக்களிக்க திட்டமிட்டுள்ளனர்.
அதேசமயம் 32 சதவீத வாக்காளர்கள் டிரம்பிற்கு வாக்களிக்க விரும்புகிறார்கள்.
இருப்பினும், 2020 முதல், இந்திய அமெரிக்கர்களிடையே ஜனநாயகக் கட்சிக்கான ஆதரவு குறைந்து வருகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.