பட மூலாதாரம், Reuters
-
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி
-
டாக்கா பல்கலைக்கழகத்தின் சுவர்கள் மீண்டும் பரபரப்பாக இருக்கின்றன.
கோபம், நகைச்சுவை மற்றும் கவித்துவமான சுவரோவியங்கள், சுவர்களிலும் தாழ்வாரங்களிலும் பரவிக் கிடக்கின்றன. ஷேக் ஹசீனாவின் 15 கால ஆட்சிக்கு முடிவு கட்டிய ஜூலை 2024-ன் ‘ஜென் ஸி ‘ மாணவர் எழுச்சியை அவை எதிரொலிக்கின்றன.
ஒரு காலத்தில் வங்கதேச ஜனநாயகத்தின் அடையாளமாகத் திகழ்ந்த ஹசீனா, பிறகு சர்வாதிகாரப் போக்குடையவராக மாறிவிட்டதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அவர் பதவி விலகிய பிறகு இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.
மாணவர்கள் குழுக்களாகத் திரண்டு அரசியல் விவாதம் செய்கின்றனர். ஒழுங்குபடுத்தப்படாத புல்வெளியில், சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகச் சிவப்பு விளக்குகள் தொங்கவிடப்பட்டுள்ளன. சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் தங்களின் செல்வாக்கை நிலைநாட்டப் போட்டி போடும் சூழலில், இது சிறிய ஆனால் முக்கியமான ஒரு விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
இங்குள்ள பலருக்கு, பிப்ரவரி 12 அன்று நடைபெறவுள்ள தேர்தல் தான் முதல் உண்மையான வாக்குப்பதிவு அனுபவமாக இருக்கும்.
ஷேக் ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முஹம்மது யூனுஸ் பொறுப்பேற்றார். ஹசீனா தற்போது டெல்லியில் வசிக்கிறார்.
2024-ல் நடந்த பாதுகாப்புப் படை ஒடுக்குமுறையில் சுமார் 1,400 பேர் (பெரும்பாலும் பாதுகாப்புப் படைகளால்) கொல்லப்பட்டதாக ஐநா கூறுகிறது. இந்த வன்முறை தொடர்பான வழக்கில் ஹசீனாவுக்குத் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரைத் திருப்பி அனுப்ப இந்தியா மறுத்துவிட்டது.
நாட்டின் மிகப் பழமையான கட்சியான ஹசீனாவின் அவாமி லீக், மக்கள் தொகையில் சுமார் 30% வாக்குகளைக் கொண்டிருந்தாலும், தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் காலியான தாராளவாத-மையவாத இடத்தைப் பிடிக்கப் பிரதான எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி (பி.என்.பி) முயன்று வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதேசமயம், பிரதான இஸ்லாமியக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி, மாணவர் எழுச்சியால் உருவான புதிய கட்சியுடன் கைகோர்த்துள்ளது.
ஆனால், பல்கலைக்கழக வளாகத்திலும் அதற்கு அப்பாலும் எழுப்பப்படும் முழக்கங்கள் உள்நாட்டு ஜனநாயகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை. அவை எல்லைக்கு அப்பாலுள்ள நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டத் தொடங்கியுள்ளன.
சுவர்களில் “டாக்கா, டெல்லி அல்ல” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. தெற்காசியப் பெண்களின் பாரம்பரிய உடையான புடவைகளிலும் இது தைக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களிடையே “மேலாதிக்கம்” என்ற சொல் அன்றாடப் பேச்சில் கலந்துவிட்டது. இது வங்கதேசத்தின் மீதான இந்தியாவின் நீண்டகாலத் தாக்கத்தைக் குறிக்கும் ஒரு சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.
பட மூலாதாரம், Anahita Sachdev/BBC
பல கட்ட பிரச்னை
“இந்தியா பல ஆண்டுகளாக எங்கள் நாட்டு விஷயங்களில் தலையிட்டு வருவதாக இளைய தலைமுறை கருதுகிறது,குறிப்பாக, அடிப்படையில் ஒரு கட்சித் தேர்தலாகவே அமைந்த 2014 தேர்தலுக்குப் பிறகு இது அதிகரித்துள்ளது” என்கிறார் 24 வயதான சமூகவியல் மாணவர் மொஷாரப் ஹொசைன்.
வங்கதேசத்தின் ஜனநாயகச் சிதைவுக்கு இந்தியாவுக்குப் பங்கு இருப்பதாகக் கருதப்படும் அந்த மனக்குறை, இந்தியாவுக்கு எதிரான உணர்வு தீவிரமடைய முக்கியக் காரணமாக உள்ளது.
இதன் விளைவாக, ஒரு காலத்தில் அண்டை நாட்டு உறவுகளுக்கு முன்மாதிரியாகக் கூறப்பட்ட இந்திய-வங்கதேச உறவு, இப்போது பல ஆண்டுகாலமாக இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலையில் உள்ளது.
“வங்கதேசத்தில் நிலவும் ஆழமான இந்திய எதிர்ப்பு உணர்வு மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ள கடுமையான போக்கு ஆகியவற்றால், இந்தியா தற்போது வங்கதேசத்தில் பெரும் சவால்களைச் சந்தித்து வருகிறது,” என்கிறார் லண்டன் எஸ்ஓஏஎஸ் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள் பேராசிரியர் அவினாஷ் பாலிவால்.
ஹசீனாவின் கடைசி காலங்களில் அவரது சர்வாதிகாரப் போக்கிற்கு இந்தியா ஆதரவு அளித்ததாகப் பலரும் குற்றம் சாட்டுகின்றனர். இந்தியாவை ஒரு ஆதிக்கம் செலுத்தும் அண்டை நாடாகவே அவர்கள் பார்க்கின்றனர்.
2014, 2018 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடந்த சர்ச்சைக்குரிய பொதுத் தேர்தல்களையும், அவற்றுக்கு இந்தியா “அளித்த ஆதரவையும்” மக்கள் இப்போதும் நினைவில் வைத்துள்ளனர்.
“எந்த அழுத்தமும் கேள்வியும் இன்றி ஹசீனாவின் ஆட்சிக்கு இந்தியா ஆதரவு அளித்தது, ஜனநாயகத்தின் அழிவுக்கு இந்தியா ஆதரவாக இருந்ததாக மக்கள் நினைக்கிறார்கள்” என்கிறார் ஹொசைன்.
இந்தக் துரோக உணர்வுடன் நீண்டகாலப் புகார்களான எல்லையில் நடக்கும் கொலைகள், நதி நீர் பங்கீடு சர்ச்சைகள், வர்த்தகக் கட்டுப்பாடுகள், இந்திய அரசியல்வாதிகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களின் ஆவேசமான பேச்சுகள் ஆகியவையும் இணைந்துள்ளன.
இந்தியா, வங்கதேசத்தைச் சமமான இறையாண்மை கொண்ட நாடாகப் பார்க்காமல், தனது கட்டுப்பாட்டில் உள்ள ஒரு இடமாகவே கருதுகிறது என்ற ஆழமான நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
வங்கதேசத்திற்கு மின்சாரம் வழங்கும் இந்தியத் தொழில் நிறுவனம் ஒன்று அந்நாட்டை ஏமாற்றி வருவதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் பரவுகின்றன. ஆனால் அந்த நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறது.
அரசியல் களமாகத் திகழும் பேஸ்புக்கில், “இந்திய ஏஜென்ட்” என்று முத்திரை குத்தப்பட்ட ஒரு முன்னணி நாளிதழைத் தடை செய்யக் கோரிப் பிரசாரங்கள் வலுக்கின்றன. இரு நாடுகளும் பெரும்பாலான விசா சேவைகளை நிறுத்தி வைத்துள்ளன.
இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) வங்கதேச கிரிக்கெட் வீரரைத் தடை செய்த இந்தியாவின் முடிவும், வங்கதேசத்தின் டி20 உலகக் கோப்பை போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற மறுத்ததும் எல்லையின் இருபுறமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பட மூலாதாரம், Reuters
இந்தியாவின் முயற்சி
“நிச்சயமாக, வங்கதேசத்தின் அனைத்துத் தரப்பினருடனும் இந்தியா தொடர்புகளைக் கொண்டுள்ளது. ஆனால், தற்போதைய அரசியல் சூழலில் இத்தகைய தொடர்புகளை சாதகமான அரசியல் முடிவுகளாக மாற்றுவது சவாலாகவே உள்ளது,” என்கிறார் பாலிவால்.
இந்தியா உண்மையில் தனது தொடர்புகளை விரிவுபடுத்தத் தொடங்கியுள்ளது.
கடந்த மாதம், முன்னாள் பிரதமரும் வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவருமான காலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் டாக்கா சென்றார். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அக்கட்சியின் செயல் தலைவர் தாரிக் ரஹ்மானைச் சந்தித்தார்.
ஜியாவின் மகனான ரஹ்மான், லண்டனில் 17 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு சமீபத்தில் நாடு திரும்பினார். இப்போது நடைபெறவுள்ள முக்கியத் தேர்தலில் அவர் முன்னணியில் இருப்பவராகத் தெரிகிறார்.
இந்தியா இஸ்லாமிய அமைப்புகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் இந்திய அதிகாரிகள் நான்கு முறை தங்களது கட்சித் தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், சமீபத்தில் டாக்காவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த இந்தியத் தூதரகத்தின் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த உத்தி சார்ந்த மாற்றங்கள் உறவில் ஏற்பட்டுள்ள பெரும் சரிவைத் தடுக்கப் பெரிதாக உதவவில்லை. ‘தி டெய்லி ஸ்டார்’ நாளிதழின் ஆலோசனையாசிரியர் கமல் அகமது கூறுகையில், தற்போதைய அமைதியின்மை முந்தைய நெருக்கடிக் காலங்களில் கூடக் கண்டிராத ஒன்று என்கிறார்.
“இருதரப்பு உறவில் இதுவே மிக மோசமான வீழ்ச்சி என்பதில் சந்தேகமில்லை,” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஷேக் ஹசீனாவின் ஆட்சிக் காலத்துடன் ஒப்பிடும்போது இது மிகப்பெரிய மாற்றமாகும்.
கடந்த 17 ஆண்டுகளில் வங்கதேசம், “இந்தியாவிற்காகப் பாதுகாப்பு ஒத்துழைப்பு, போக்குவரத்து, வர்த்தகம், கலாசாரப் பரிமாற்றம் மற்றும் மக்கள் இடையிலான உறவுகள் எனப் பல முனைகளைத் திறந்துவிட்டது”.
ஆனால் இன்று, “எதுவும் நகரவில்லை. மக்களும் நகரவில்லை, நல்லிணக்கமும் இல்லை” என்கிறார் அகமது.
பட மூலாதாரம், Anahita Sachdev/BBC
கடந்த ஆகஸ்ட் மாதம் ஹசீனா பதவியிலிருந்து அகற்றப்பட்ட பிறகு, இந்தியாவின் எதிர்வினைதான் சந்தேகத்தை கோபமாக மாற்றியதாகத் தெரிகிறது.
ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டுமே ஆதரித்து வந்த தனது வங்கதேசக் கொள்கையை இந்தியா மாற்றியமைக்கும் என்று வங்கதேசத்தைச் சேர்ந்த பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால், அதற்குப் பதிலாக ஹசீனாவுக்குத் தஞ்சம் அளித்ததுடன், விசா மற்றும் வர்த்தகக் கட்டுப்பாடுகளை இந்தியா தீவிரப்படுத்தியது.
“வங்கதேசத்தினர் அண்டை நாட்டினராக மதிக்கப்படவில்லை” என்ற செய்தியே இதன் மூலம் வங்கதேசத்துக்குக் கிடைத்தது என்கிறார் அகமது.
இதுகுறித்த விவாதமும் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
இந்திய அரசியல்வாதிகள் வங்கதேசக் குடியேறிகளை “கறையான்கள்” என்று அழைக்கும்போதோ, அல்லது “காஸாவில் இஸ்ரேல் செய்தது போல” வங்கதேசத்திற்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று பேசும்போதோ, “வங்கதேச மக்கள் எப்படிப் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்?” என அகமது கேட்கிறார்.
இதனைத் தொடர்ந்து கலாசார ரீதியான பதிலடிகளும் கொடுக்கப்பட்டன. இந்தியப் பொருட்களைப் புறக்கணிக்கக் கோருதல், ஐபிஎல் ஒளிபரப்பை நிறுத்துதல் போன்றவை வெறுப்பால் நிகழ்ந்தன.
“கலாசாரம், வர்த்தகம், மரியாதை இரு வழியாக இருக்க வேண்டும் துரதிர்ஷ்டவசமாக, தற்போதைய இந்தியத் தலைமை அப்படி நடந்துக்கொள்ளவில்லை” என்கிறார் அகமது.
இருப்பினும், இந்த உறவை நெருக்கடிகள் மூலமாக மட்டுமே பார்க்க வேண்டாம் என டாக்காவில் உள்ள அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
யூனுஸின் செய்தித் தொடர்பாளரான ஷபீகுல் ஆலம், இந்தியாவுடன் உள்ள உறவுகளை அரசியலைப் போலவே நிலவியல் அடிப்படையிலும் வேரூன்றிய “பன்முகத்தன்மையுடையவை” என வர்ணிக்கிறார்.
“நாங்கள் 54 நதிகளைப் பகிர்ந்து கொள்கிறோம்…மொழியையும் பகிர்கிறோம், ஒரே வரலாறையும் பகிர்கிறோம்,” என்று அவர் கூறுகிறார்.
4,096 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லை வழியாக நடைபெறும் வர்த்தகப் பரிவர்த்தனைகளையும், அன்றாட மக்கள் நடமாட்டத்தையும் மேற்கோள் காட்டினார் அவர். அப்படியிருந்தும், பொதுமக்களின் உணர்வு கடுமையாக மாறியிருப்பதை ஆலம் ஒப்புக்கொள்கிறார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஏன் தங்களால் சுதந்திரமாக வாக்களிக்க முடியவில்லை என்று வங்கதேசத்தினரிடம் கேட்டால், ஷேக் ஹசீனாவின் சர்வாதிகாரம் மற்றும் அதற்கு இந்தியாவின் “ஆதரவு” என பலரும் ஒரே பதிலையே தருகின்றனர். “ஹசீனாவுக்கு எப்போதும் இந்தியா ஆதரவளித்து வந்ததாகவே அவர்கள் கூறுகிறார்கள்,” என்கிறார் ஆலம்.
2024 வன்முறைக்குப் பிறகு ஹசீனா இந்தியாவுக்குத் தப்பிச் சென்றது இப்போதும் ஒரு கசப்பான விஷயமாகவே இருந்து வருகிறது.
பட மூலாதாரம், Reuters
சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையா?
“நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டனர்… அதன் பிறகு அவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்,” என்கிறார் ஆலம்.
அவர் ஒரு வீழ்த்தப்பட்ட தலைவராகப் பார்க்கப்படாமல், “அரசாங்கத்தின் தலைவர்” போல நடத்தப்பட்ட விதம் மக்களின் கோபத்தை அதிகப்படுத்தியது.
இந்திய ஊடகங்களின் செய்திகள் அச்சமூட்டும் வகையில் இருப்பதாகவும் ஆலம் விமர்சிக்கிறார்.
சிறுபான்மை இந்துக்கள் திட்டமிட்டத் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் புகார்களை “ஒரு மிகப்பெரிய தவறான தகவல் பிரசாரம்” என்று அவர் விமர்சிக்கிறார்.
ஆங்காங்கே சில சம்பவங்கள் நடக்கின்றன, ஆனால் அவை வழக்கமாக மத வன்முறையாகச் சித்தரிக்கப்படுகின்றன என்று அவர் கூறுகிறார். “இங்கு வந்து பாருங்கள். மக்களைச் சந்தித்து உண்மையில் என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ளுங்கள்,” என்று அவர் இந்தியப் பத்திரிகையாளர்களை வலியுறுத்துகிறார்.
இதற்கிடையில், இடைக்கால அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராகக் கொலைகள், தீவைப்பு மற்றும் நில அபகரிப்பு உள்ளிட்ட 2,900-க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகத் சுயாதீன வட்டாரங்கள் ஆவணப்படுத்தியுள்ளதாக இந்தியா கூறுகிறது.
இவை அனைத்தையும் “ஊடக மிகைப்படுத்தல் அல்லது அரசியல் வன்முறை” என்று கூறி நிராகரிக்க முடியாது என்றும் இந்தியா கூறியுள்ளது.
தற்போது யூனுஸின் சிறப்பு உதவியாளராகப் பணியாற்றி வரும் கல்வியாளர் அலி ரியாஸ், இந்த விரிசல் வெறும் தவறான புரிதலை விட ஆழமானது என்று கருதுகிறார்.
பட மூலாதாரம், ANAHITA SACHDEV/BBC
“முற்றிலும் உறவு சீர்குலைந்துவிட்டது ” என்கிறார் அலி ரியாஸ்.
காலப்போக்கில் இந்த உறவானது “வங்கதேசத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவாக இல்லாமல், ஒரு கட்சி அல்லது தனிநபருக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவாகச் சுருங்கிவிட்டது” என்று அவர் கருதுகிறார்.
நீண்டகாலமாக நிலவும் சர்ச்சைகள் பாதிப்பை மேலும் அதிகமாக்கியுள்ளன. நதி நீர் பங்கீடு ஒரு படிநிலை அதிகாரத்தை உருவாக்குவதாக ரியாஸ் குறிப்பிடுகிறார். “நீங்கள் தண்ணீரைக் கட்டுப்படுத்தினால், அந்த உறவு உடனடியாகச் சமமற்றதாகிவிடும்”என்கிறார் ரியாஸ்.
எல்லையில் நடக்கும் கொலைகள் இன்னும் ஆழமான பிளவை ஏற்படுத்துகின்றன. “வங்கதேச மக்களின் உயிரை இந்திய அரசு எப்படிப் பார்க்கிறது என்பதற்கான அடையாளமாகவே இது கருதப்படுகிறது.”
எல்லையில் நடந்த குறிப்பிட்ட மரணங்களில் தனது படைகள் சட்டவிரோதக் கொலைகளில் ஈடுபட்டதை இந்தியா மறுத்துள்ளது.
இந்தப் பிரச்னைகள் எப்போதாவது நடக்கும் எரிச்சலூட்டும் விஷயங்கள் அல்ல, மாறாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சமமற்ற நிலையின் அடையாளங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தச் சமமற்ற நிலை மேலும் வலுவடைந்ததாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இடைக்கால அரசுடன் உறவுகளை மறுசீரமைக்க வேண்டிய வாய்ப்பை இந்தியா தவறவிட்டது என்று யூனுஸின் வெளியுறவு விவகார ஆலோசகர் முகமது தௌகித் ஹொசைன் கூறுகிறார்.
“நாங்கள் பல சந்தர்ப்பங்களில் முன்னேறிச் செல்ல முயன்றோம், ஆனால் இந்தியாவின் எதிர்வினை நிலையற்றதாகவே இருந்தது,” என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.
இந்தியா தனது தரப்பில், வங்கதேசத்தின் “சீர்குலைந்து வரும் பாதுகாப்புச் சூழல்” குறித்துக் கவலை தெரிவித்துள்ளது. மேலும், அமைதியான முறையில் “சுதந்திரமான, நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நம்பகமான தேர்தல்களை” நடத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது.
அரசியல் பதற்றம் இப்போது பொருளாதார உறவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
வரி மற்றும் வரி அல்லாத தடைகள் தளர்த்தப்பட்டு, ராஜீய உறவுகள் மேம்பட்டால் 13.5 பில்லியன் டாலர் மதிப்பிலான இருதரப்பு வர்த்தகம் இன்னும் அதிகமாக இருக்கக்கூடும் என்றும், ஆனால் “அரசியல் பதற்றம் பொருளாதாரப் பதற்றத்திற்கு வழிவகுத்துள்ளது,” என்றும் கொள்கை உரையாடல் மையம் சிந்தனைக் குழுவைச் சேர்ந்த ஃபஹ்மிதா கதுன் கூறுகிறார்.
இருப்பினும், அரசாங்க மட்டத்தில் நிலவும் இந்தக் கடுமையான போக்கு, எப்போதும் சாமானிய மக்களின் உணர்வுகளுடன் ஒத்துப்போவதில்லை.
“இந்தியா என்று கேட்கும்போதெல்லாம் அது எனது எதிரி என்றே நினைக்கிறேன்,” என்கிறார் இந்தியாவுக்கு எதிரான தேசியவாதக் கருத்துகளைப் பரப்பும் ‘இன்குலாப் மஞ்சா’ கலாசார அமைப்பைச் சேர்ந்த பாத்திமா தஸ்னிம் ஜுமா.
“ஆனால் மக்களைப் பொறுத்தவரை, அது அப்படிச் செயல்படுவதில்லை.”
ஜுமா தான் இந்துக்கள் அதிகம் வாழும் பகுதியில் வளர்ந்ததாகவும், உறவினர்கள் எளிதாக எல்லையைக் கடந்து சென்று வருவதாகவும் கூறுகிறார். “எங்கள் மோதல் இந்திய அரசாங்கம் அல்லது அதன் கட்டமைப்போடுதான். மக்களுடன் அல்ல”என்கிறார் ஜுமா.
பட மூலாதாரம், Hindustan Times via Getty Images
விரிசலைச் சரிசெய்ய முடியுமா?
தேர்தல் பிரசாரங்களில் இந்தியாவுக்கு எதிரான போக்கு குறிப்பிடும் படியாகக் குறைந்துள்ளது.
இது அந்த உணர்வு மறைந்துவிட்டதால் அல்ல, மாறாக இந்தியாவுடனான உறவைச் சீரமைப்பதைத் தவிர்க்க முடியாது என்பதை ஒவ்வொரு அரசியல் போட்டியாளரும் அறிந்திருப்பதாலேயே ஆகும்.
இருப்பினும், இந்திய-வங்கதேச உறவைச் சரிசெய்வது என்பது விரைவானதாகவோ அல்லது மேம்போக்கானதாகவோ இருக்காது.
“ஒரு தேர்தல் நடப்பதாலோ அல்லது புதிய அரசாங்கம் அமைவதாலோ மட்டும் உறவைச் சீரமைப்பது எளிதாக இருக்காது. அதன் பின்னணியில் உள்ள அடிப்படைப் பிரச்னைகள் அப்படியேதான் இருக்கும்,” என்கிறார் ஆலம்.
இருப்பினும், இந்த விரிசலைச் சரிசெய்யவே முடியாது என்று அர்த்தம் அல்ல.
“எந்த நாட்டு உறவுமே அப்படிப்பட்டதல்ல,” என்கிறார் ரியாஸ்.
ஆனால், உறவைச் சீரமைக்கும் பொறுப்பு பெரும்பாலும் இந்தியாவிடமே உள்ளது என்றும், தங்களுக்கு விருப்பமான இடைத்தரகர்கள் மூலம் வங்கதேசத்தை ஆள நினைக்கும் பழக்கத்திலிருந்து இந்தியா வெளியே வர வேண்டும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
வங்கதேசம் உறவுகளை இயல்பாக்கத் தயாராக உள்ளது, ஆனால் வங்கதேசத்தில் யார் அதிகாரத்தில் இருந்தாலும் அவர்களுடன் இணைந்து செயல்படும் வகையில் இந்தியா தனது கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்று அகமது கூறுகிறார்.
அரசியல் பிரமுகர்கள் இந்த மாற்றத்தை உத்தி சார்ந்த விஷயமாக மட்டுமல்லாமல், ஒரு தார்மீகப் பொறுப்பாகவும் பார்க்கின்றனர்.
பி.என்.பி தலைவர் ரஹ்மானின் முக்கிய ஆலோசகரான மஹ்தி அமீன் இதனைக் குறித்துக் கூறும்போது, “தேசம் எவ்வளவு பெரியதோ, அந்தளவுக்குப் பொறுப்பும் அதிகம்”என்று வெளிப்படையாகக் கூறுகிறார்.
அரசாங்கங்களின் விருப்பங்களுக்கு மட்டுமல்லாமல், வங்கதேச மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இந்தியா தனது கொள்கையை அமைத்துக்கொண்டால் மட்டுமே இரு நாட்டு மக்களிடையேயான உறவு வளரும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் உதவி பொதுச்செயலாளர் அஹ்சானுல் மெஹ்பூப் ஜுபைர் எச்சரிக்கையுடன் இதே கருத்தை எதிரொலிக்கிறார்.
“இரு நாடுகளிலும் பொறுப்பில் இருப்பவர்கள் உண்மையான அக்கறையுடனும், தற்போதைய யதார்த்தங்களை ஏற்றுக்கொண்டும், ஒருவரை ஒருவர் பரஸ்பர மரியாதை மற்றும் கண்ணியத்துடன் நடத்தினால், ஒரு ஆக்கபூர்வமான உறவு சாத்தியமாகும்” என்கிறார்.
உறவைச் சரிசெய்வதற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது. புதிய அரசாங்கம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
“தற்போதைய சூழ்நிலை என்பது ஒரு ராஜீய அமைதியின்மைக்கு அப்பாற்பட்டது. அதே நேரத்தில், முழுமையான கட்டமைப்பு முறிவு என்று சொல்ல முடியாத அளவுக்கே உள்ளது” என்று கூறும் பாலிவால்,
“நிலவியல், வரலாறு மற்றும் பகிரப்பட்ட கலாசார பாரம்பரியம் ஆகியவை இந்தியாவும் வங்கதேசமும் ஒன்றையொன்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது என்பதையே உணர்த்துகின்றன”என்றும் குறிப்பிடுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு