படக்குறிப்பு, கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஷேக் ஹசீனா வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு வந்தார்
வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், (Bangladesh International Crimes Tribunal) முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் குற்றவாளி எனக் கண்டறிந்ததாகவும், அவருக்கு மரண தண்டனை விதிப்பதாகவும் தீர்ப்பளித்துள்ளது.
தாக்கா நீதிமன்ற உத்தரவுக்கு வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார், அந்த உத்தரவு “ஒருதலைப்பட்சமானது மற்றும் அரசியல் ரீதியாக உந்தப்பட்டது” என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்டில் வங்கதேசத்தில் நடந்த இளைஞர்கள் போராட்டத்தின் போது, ஷேக் ஹசீனா மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் இந்தியாவில் தஞ்சமடைந்த நிலையில், அவர் மீதான வழக்கு அவர் இல்லாத நேரத்தில் (in absentia) நடத்தப்பட்டது.
விசாரணைகள் முடிவடைந்த நிலையில் 453 பக்க தீர்ப்பை வாசித்த நீதிபதி முகமது குலாம் முர்தாசா மஜும்தார், இது ஆறு பகுதிகளாக வழங்கப்படும் என்று கூறினார்.
தீர்ப்பின் அறிவிப்பு வங்கதேச தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
ஜூன் மாதம் வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் ஷேக் ஹசீனா உட்பட மூன்று பேர் மீது அரசு தரப்பு அதிகாரப்பூர்வமாக ஐந்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.
இதன் அடிப்படையில், ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகியோருக்கு எதிராகவும் தீர்ப்பாயம் கைது வாரண்டுகளை பிறப்பித்தது.
கடந்த ஆண்டு, வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்களின் போது தொடர்ச்சியான வன்முறைகள் நடந்தன. அப்போது, பிரதமர் ஷேக் ஹசீனா மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனால், ஷேக் ஹசீனா ஆட்சியை இழக்க வேண்டியிருந்தது, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நாட்டிலிருந்து தப்பிக்க நேர்ந்தது. அப்போதிலிருந்து அவர் இந்தியாவில் வசித்து வருகிறார்.
படக்குறிப்பு, திங்கள் கிழமை தீர்ப்பின் போது நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
‘உடனடியாக ஷேக் ஹசீனாவை அனுப்புக’ – இந்தியாவுக்கு கோரிக்கை
தற்போது இந்தியாவில் வசித்து வரும் ஷேக் ஹசீனா மற்றும் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகியோரை நாடு கடத்துமாறு வங்கதேசம் கோரியுள்ளது.
வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்துள்ளது.
இந்த முடிவைத் தொடர்ந்து, வங்கதேச வெளியுறவு அமைச்சகம் திங்களன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது .
அதில், “சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தீர்ப்பில் தப்பியோடிய ஷேக் ஹசீனா மற்றும் அசாதுஸ்ஸாமான் கான் கமல் ஆகியோர் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டது” என்று எழுதப்பட்டுள்ளது.
“மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட இந்த நபர்களுக்கு அடைக்கலம் வழங்கும் எந்தவொரு நாடும் நட்பற்ற நடத்தை மற்றும் நீதியை அவமதிக்கும் ஒரு செயலாகும்.”
“இந்திய அரசாங்கம் உடனடியாக இரு குற்றவாளிகளையும் வங்கதேச அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இரு நாடுகளுக்கும் இடையிலான நாடுகடத்தல் ஒப்பந்தத்தின்படி இது இந்தியாவின் பொறுப்பாகும்” என்று வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஷேக் ஹசீனாவை நாடு கடத்தக் கோரி வங்கதேசம் அதிகாரப்பூர்வமாக பல கடிதங்களை அனுப்பியுள்ளது. இருப்பினும், இந்த கோரிக்கைகளுக்கு இந்தியா பதிலளிக்கவில்லை.
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த வங்கதேச வெளியுறவு ஆலோசகர், அவர்களை திருப்பி அனுப்பக் கோரி வங்கதேசம் பலமுறை கடிதங்களை அனுப்பியதாகவும், ஆனால் இந்தியாவிடமிருந்து எந்த நேர்மறையான பதிலும் கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
நீதிமன்றத்தில் நிலவிய சூழல்
தாக்காவில் உள்ள பிபிசி செய்தியாளர் அருணோதய் முகர்ஜி நீதிமன்றத்தில் நிலவிய சூழல் குறித்து விவரித்துள்ளார். அதன்படி, ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்பு, நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இருந்த பலர் கொண்டாடியுள்ளன.
சிலர் அவரை “தூக்கில் போட வேண்டும்” என முழக்கமிட்டதை பிபிசி செய்தியாளர் பார்த்துள்ளார். இது சில நொடிகள் நீடித்த நிலையில், பின்னர் அவர்கள் கண்ணியம் காக்குமாறு நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
ஷேக் ஹசீனா மீதான குற்றச்சாட்டுகள்
கடந்த ஜூன் மாதத்தில் ஷேக் ஹசீனா மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதில் அரசின் தலைமை வழக்கறிஞர் தாஜுல் இஸ்லாம், “கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் 1,400 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 25,000 பேர் காயமடைந்தனர்” என வாதிட்டார். இறந்தவர்களின் பட்டியலையும் அரசு தரப்பு தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்தது.
ஷேக் ஹசீனா உட்பட குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக 747 பக்க ஆவணமும் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மூன்று பேரின் மீதும் கொலை, கொலை முயற்சி, சதி, உதவி செய்தல், உடந்தையாக இருத்தல் என ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
“ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியில் இருந்தபோது, கடந்த ஆண்டு ஜூலை 14 அன்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், மாணவர்களை ‘ரசாக்கர்களின் மகன்கள் மற்றும் பேரன்கள்’ என்று கூறி ஆத்திரமூட்டும் கருத்துக்களை வெளியிட்டார்” என்று அரசு வழக்கறிஞர் கூறினார்.
வங்கதேசத்தில், ரசாக்கர் என்பது தேசதுரோகி அல்லது துரோகி என்று பொருள்படும் ஒரு இழிவான வார்த்தையாகப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் 1971 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின் போது பாகிஸ்தான் ராணுவத்துடன் ஒத்துழைத்து கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை குறிப்பிட பயன்படுகிறது.
படக்குறிப்பு, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அதே தீர்ப்பாயத்தில் இந்த விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கின் குற்றப் பத்திரிகையில், “குற்றம் சாட்டப்பட்ட அசாதுஸ்ஸாமான் கான் கமல் மற்றும் சவுத்ரி அப்துல்லா அல் மாமூல் உள்ளிட்ட உயர் அரசு அதிகாரிகளின் தூண்டுதலின் பேரிலும், உதவியுடனும், சட்ட அமலாக்க முகமைகளும் அவாமி லீக்கின் ஆயுதமேந்திய ஆட்களும் கொலைகள், கொலை முயற்சிகள் மற்றும் அப்பாவி மற்றும் நிராயுதபாணியான மாணவர்கள் மற்றும் பொதுமக்களை பெரியளவில் மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட முறையில் துன்புறுத்த உதவினர்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் சதி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது, மேலும் இந்தக் குற்றங்கள் அனைத்தும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தெரிந்தே செய்யப்பட்டவை என்று கூறுகிறது.
ஷேக் ஹசீனா உட்பட மூன்று பேர் மீது, ரங்பூரில் உள்ள பேகம் ரோகையா பல்கலைக்கழக மாணவர் அபு சயீத்தை தூண்டுதலின்றி கொலை செய்ததாகவும், தலைநகரில் உள்ள சங்கர் புல்லில் ஆறு பேரைக் கொலை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இது தவிர, அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய நாளில் அஷுலியாவில் ஐந்து பேரை சுட்டுக் கொன்றதாகவும், அவர்களின் உடல்களை எரித்ததாகவும், ஒருவரை உயிருடன் எரித்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ஷேக் ஹசீனா ஐந்து பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
“அவாமி லீக்கை ஒரு அரசியல் சக்தியாக அங்கீகரிக்காமல் இருப்பதற்கு இடைக்கால அரசாங்கம் பயன்படுத்தும் வழிமுறையே மரண தண்டனை” என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த வழக்கு ஓர் ‘கேலிக்கூத்து’ என்று கூறி, தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்தார்.
மேலும், “சாட்சியங்களை உண்மையின் அடிப்படையில் மதிப்பீடு செய்து சோதிக்கக்கூடிய ஒரு முறையான நீதிமன்றத்தில் என் மீது குற்றம் சாட்டுபவர்களை எதிர்கொள்வதில் எனக்கு எந்த பயமும் இல்லை.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெதர்லாந்தின் ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court) இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்குமாறும் அவர் இடைக்கால அரசுக்கு சவால் விடுத்தார்.