• Thu. Aug 28th, 2025

24×7 Live News

Apdin News

வங்கிக் கடன் மோசடி: ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 50,000 அபராதம் | Bank Loan Fraud: Film Production Company Fined

Byadmin

Aug 28, 2025


சென்னை: போலி ஆவணங்கள் மூலம், 10 கோடியே 54 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையில் ஜி.வி.பிலிம்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தவர் ஜி.வெங்கடேஸ்வரன். இவர், இயக்குனர் மணி ரத்னத்தின் சகோதரர். கடந்த 1988 முதல் 1992ம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனம், நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 10 கோடியே 54 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளது.

போலி ஆவணங்கள் மூலம் இந்நிறுவனம் கடன் பெற்றிருப்பதாக வந்த புகாரை தொடர்ந்து விசாரணை நடத்திய சி.பி.ஐ, தயாரிப்பாளர் ஜி.வெங்கடேஸ்வரன், வங்கி அதிகாரிகள் என 9 பேர் மீது 1996ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், கடந்த 2003ம் ஆண்டு வெங்கடேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். வங்கி அதிகாரிகள் 3 பேர் மரணமடைந்தனர். இதனால், அவர்கள் 4 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

மற்றவர்கள் மீதான வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி வடிவேலு, வங்கி கிளை மேலாளர்கள் வெங்கட்ராமன், சுவாமிநாதன், தனிநபர் ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை, மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்ட நீதிபதி, அபராத தொகையை செலுத்த தவறினால், தற்போது அந்நிறுவனத்தின் பிரதிநிதியாக உள்ள அப்துல் ஹமீது ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.



By admin