• Thu. Nov 14th, 2024

24×7 Live News

Apdin News

வங்க கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: தமிழகத்தில் நவ. 14 வரை கனமழை பெய்ய வாய்ப்பு | A new low pressure area is forming over the Bay of Bengal today

Byadmin

Nov 9, 2024


சென்னை: வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (நவ. 9) தென்மேற்குவங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அதற்கடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில், தமிழக–இலங்கை கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். அதேபோல, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவுப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், வரும் 11-ம் தேதி கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், வரும் 12-ம் தேதி சில இடங்களிலும், வரும் 13, 14-ம் தேதிகளில்பெரும்பாலான இடங்களிலும் இடி,மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்றும், நாளையும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 11-ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 12-ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 13-ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 14-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வரும் 14-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் நவ. 8-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை மணலியில் 11 செ.மீ., மாதவரத்தில் 10செ.மீ., மயிலாடுதுறை செம்பனார் கோவில், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் 9 செ.மீ., சென்னை கொளத்தூர், திருவொற்றியூர், வில்லிவாக்கம், கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இன்று வட தமிழக, தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்தி லும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



By admin